சாந்தீன் சாயம்
cāntīṉ cāyam
சாந்தீன் அல்லது டைபென்சோ-7- பைரான் என்ற பல்வினை அணு வளையச் சேர்மத்திலிருந்து தயார் செய்யப்பட்ட சாயங்களே சாந்தீன் சாயங்கள் (xanthene dyes) எனப்படும்.
சாந்தீன் அல்லது டைபென்சோ-7- பைரான் என்ற பல்வினை அணு வளையச் சேர்மத்திலிருந்து தயார் செய்யப்பட்ட சாயங்களே சாந்தீன் சாயங்கள் (xanthene dyes) எனப்படும். வேதி அமைப்பில் சாந்தீன் என்பது ஒரு டைஹைட்ராக்சி டைஃபினைல் மெத்தேன் உள்நீரிலியே ஆகும். இதன் வாய்ப்பாடு:
இதை ஆக்சிஜனேற்றம் அடையச் செய்தால் சாந்தோன் கிடைக்கும். சாலிசைலிக் அமிலத்துடன் அசெட்டிக் நீரிலியைச் சேர்த்துச் சூடு செய்தும் சாந்தோனைத் தயார் செய்யலாம்.
முதன்முதலாகத் தொகுப்பு முறையில் தயாரிக்கப்பட்ட சாந்தீன் சாயம், ஃப்தாலீன் (phthalein) வகைச் சாயங்களே ஆகும். குறிப்பாக ஃபுளூரசீன், கேலின், கோரியூலின் முதலியவற்றை முறையே ரிசார்சினால், பைரோகலால், கேலிக் அமிலம் ஆகியவற்றுடன் தாலிக் நீரிலியைச் சேர்த்துக் குறுக்க வினைக்கு (condensation reaction) உட்படுத்தித் தயாரிக்கலாம்.
சாந்தீன் சாயங்கள் இரு பெரும் பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பைரோனைன்கள் (டைஃபினைல் மெத்தேன் வழிச் சாயங்கள்) சாந்தீனை நேரடியாக அடிப்படையாகக் கொண்டவை; தாலீன்கள் (டிரைஃ பினைல் மெத்தேன் வழிச் சாயங்கள்) 9—ஃபினைல் சாந்தீனை அடிப்படையாகக் கொண்டவை. தாலீன் சாயங்கள் பின்வரும் உட்பிரிவுகளைக் கொண்டவை. அ) ஃபுளூரசின்கள்—ஹைட்ராக்சில் தொகுதியைக் கொண்டவை. ஆ) ரோடமீன்கள்—அல்க்கைல் அமினோ அல்லது அரைல் அமினோ தொகுதியைக் கொண்டவை. இ) கலப்பு வகையில் இருவகைத் தொகுதிகளும் சேர்ந்து காணப்படும்.
பைரோனைன்கள். அடர் சல்ஃப்யூரிக் அமிலத்தின் முன்னிலையில், m-டைஅல்க்கைல் அமினோ ஃபினால்களை, ஃபார்மால்டிஹைடுடன் குறுக்கவினைக்கு உட்படுத்தினால், சாந்தீன் வழிச் சேர்மம் கிடைக்கும். இதை ஆக்சிஜனேற்றமடையச் செய்தால், சாந்ஹைட்ரால் கிடைக்கும். இந்த ஆல்கஹாலை அமிலத்தில் கரைத்தால், பைரோனைன் வகைச் சாயம் கிடைக்கும்.
பைரோனைன் G (பெண்டர் 1889) என்பது சிவப்புக் காரச் சாயம். இது மஞ்சள் நிற உடனொளிர் (fluorescence) தன்மையைப் பெற்றுள்ளது. பருத்தி இழைத் துணிகளுக்குச் சாயமேற்றப் பயன்படுகிறது. இதைப் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கொண்டு ஆக்சிஜனேற்றம் அடையச் செய்து, அக்ரிடின் சிவப்பு 3 B என்ற சாயத்தைப் பெறலாம்.
இரண்டு மூலக்கூறுகள் m-டைஅல்க்கைல் அமீனோ ஃபீனால்களை, சக்சினிக் அமிலம் அல்லது தாலிக் அமிலம் போன்ற இரட்டைக் கார்பாக்சலிக் அமிலங்களின் நீரிலிகளுடன் குறுக்க வினைக்கு உட்படுத்தினால், நேரடியாகச் சாந்தீன் சாயங்களைத் தரும். சக்சினிக் நீரிலியைப் பயன்படுத்தும் போது, பைரோனைன் தொகுதிச் சாயங்களையும், தாலிக் நீரிலியைப் பயன்படுத்தும் போது, தாலீன் தொகுதிச் சாயங்களையும் பெறலாம்.
m-டைமெத்தில் அமீனோஃபீனாலைச் சக்சினிக் நீரிலியுடன், துத்தநாகக் குளோரைடு நீர் நீக்கியின் முன்னிலையில் குறுக்க வினைக்கு உட்படுத்தினால், ரோடமீன்-S என்ற சாயம் கிடைக்கும். பருத்தி இழைகளுக்குப் பின் நிறமேற்றவும், காகிதம், மரம் முதலியவற்றிற்கு நிறமூட்டவும், ஏனைய பைரோனைன் சாயங்களை விட இது சிறந்தது.
தாலீன்கள். இவ்வகைச் சாயங்களில் அடிப்படைப் பொருளாக ஃப்ளூரேன் அமைகிறது. இது பினால்ஃப்தலீன் தயாரிப்பின் போது, துணைப் பொருளாக முதலில் பெறப்பட்டது. தாலிக் நீரிலி யுடன் ஃபினால், ஆர்த்தோ இடத்தில் குறுக்க வினை நடை பெறும் போது, ஃபுளூரேன் கிடைக்கிறது.
இச்சேர்மம் தாலீன் வழிச் சேர்மங்களுக்கு நிறக் கரு (chromogen) எனக் கருதப்படுகிறது. ஏனெனில், இச்சேர்மத்தில் ஒரு நிறம்பெருக்கித் (auxochrome) தொகுதியை இணையச் செய்து, அமில அல்லது காரச் சாயங்களைப் பெறலாம். இவற்றை உப்பாக மாற்றியே ரோடமீன்கள், இயோசின்கள் முதலிய சாயங்கள் பெறப்படுகின்றன. கம்பளி, பட்டு முதலியவற்றில் தூய சிவப்பு நிறத்தை ஏற்ற இயோசின் சாயங்களே பெருமளவில் பயன்படுகின்றன. சிவப்பு மை என்பது நீர்த்த இயோசின் சாயக் கரைசலே ஆகும்.
ரோடமீன்கள். இவை ஃபுளூரேன்களின் அல்க்கைல் அமினோ வழிச் சேர்மங்கள் ஆகும். m-அமினோஃபினால்களைத் தாலிக் நீரிலியுடன் சேர்த்து வினைப்படுத்தி, இவற்றைப் பெறலாம். மெத்தில் வழிச் சேர்மங்களை விட, எத்தில் வழிச் சேர்மங்கள் கரை திறன் மிகுந்தவை. எனவே, எத்தில் வழிச் சாயங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
ரோடமீன்கள் காரச் சாயப் பொருள்கள் சிலவற்றைப் பயன்படுத்திக் கம்பளி, பட்டு முதலியவற்றில் நேரடியாக, ஒளிரும் தன்மையுடைய நீலம் கலந்த சிவப்புச் சாயமேற்றலாம். பருத்தி இழைகளில் சாயமேற்றும் போது, ஒளிரும் பண்பை இழந்து விடும்.
ரோடமீன்-B ஆன்ட்டிமனி உப்புகளுடன் நிறமுடைய அணைவுச் சேர்மங்களைத் தருவதால், உயிரியல் நீர்மங்களில் இத்தனிமம் இருப்பதை எளிதில் கண்டறியலாம். சல்ஃபோனிக் அமில வழிச் சேர்மம் ஒரு முக்கியச் சாய வகையாகும். ஏனெனில், இவ்வகைச் சாயங்கள் எளிதில் நிறம் நீங்கப் பெறுவதில்லை; ஊதா நிறத்திலிருந்து நீல நிறம் வரை பல வண்ணங்களில் பெறலாம். —பி ஈ.எம்.லியாகத் அலிகான் நூலோதி. I.L. Finar, Organic Chemistry. Vol.II. Sixth Edition, ELBS, 1982.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 50)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kh74bmjp/
தமிழ்“சாந்தீன் சாயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kh74bmjp/APA
Oliyon Research. (2026). சாந்தீன் சாயம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kh74bmjp/MLA
"சாந்தீன் சாயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kh74bmjp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment