அச்சம்
accam
அச்சம் என்பது இன்னல் தரும் சூழ்நிலைகளின் காரணமாக எல்லா உயிரினங்களிடமும் இயல்பாகத் தோன்றும் ஒரு மனவெழுச்சி, இன்னலிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் அச்சம் வழி செய்கிறது.
அச்சம் என்பது இன்னல் தரும் சூழ்நிலைகளின் காரணமாக எல்லா உயிரினங்களிடமும் இயல்பாகத் தோன்றும் ஒரு மனவெழுச்சி, இன்னலிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும் அச்சம் வழி செய்கிறது. எல்லாப் பருவத்தினருக்கும் அச்சம் தோன்றலாம். பச்சிளம் குழவிக்கு அச்சம் தோன்றுவதில்லை. ஏறத்தாழ ஆறுமாதங்களுக்குப் பின்னரே குழந்தை அச்சத்தை உணர்கிறது. மூன்று மாதக் குழந்தை மகிழ்ச்சி போன்ற மனவெழுச்சிகளைக் காட்டமுடிகிறது. ஆனால், ஆறுமாதங்களுக்குப் பின்னரே குழந்தை பட்டறிவின் மூலமாக அச்சம் கொள்ளக் சுற்றுக் கொள்கிறது. காட்டாக, குழந்தை தன் தாய் பாம்பைக் கண்டு அச்சம் கொள்வதைப் பார்க்கிறது. இதனைப் பார்க்கும் குழந்தையும் அஞ்சக் கற்றுக் கொள்கிறது. இவ்வாறே காலப்போக்கில் அக்குழந்தை பிற பொருள்களையும் கண்டு அஞ்சத் தொடங்குகிறது.
அச்சம் மனிதர்களின் நடத்தையில் குறிப்பிடத்தக்க மாறுதல்களைத் தோற்றுவிக்கிறது. இன்னல் நீடித்து இருப்பதாக அறிந்தால், மனிதன் அச்ச நிலையை அடைகிறான். இந்நிலையில் “சஞ்சலமும் கிலியும் நிறைந்த கூக்குரல், அழுகை, அல்லது பெருஞ்சிரிப்புப் போன்ற கட்டுக்கு மீறிய நடத்தைகளில் அவன் ஈடுபடலாம். தீ விபத்துப்போன்ற சூழ்நிலைகளில் அச்சத்தின் காரணமாகச் செய்வதறியாது உயரமான இடத்திலிருந்து கீழே குதித்துவிடலாம் அல்லது செயலற்று நின்றுவிடலாம்.
வால்டர் கானன் (Walter Cannon) என்னும் அமெரிக்க உடற்கூற்று வல்லுநர் 1920–இல், உடல் மாற்றங்களைப் பற்றி ஆராய்ந்து “நெருக்கடிச் செயற் கோட்பாடு” (Emergency function theory) என்னும் விளக்கத்தைக் கொடுத்தார். மிகையான அச்சம் ஏற்படின் உடலில் உள்ள பரிவு நரம்பு மண்டலம் (Sympathetic Nervous System) மனிதர்களை எதிர்பாராத வன்முறையான செயல்களிலோ ஓட்டத்திலோ ஈடுபடச் செய்யும் என்று கானன் கூறினார். இந்நிலையில் உடலின் இயங்கு முறைகளைச் செயற்படுத்தும் துணைப் பரிவு நரம்பு மண்டலம் தடைப்பட்டு நிற்கிறது என்றும் கூறினார். வேறு சில ஆராய்ச்சியாளர்கள், தானியங்கு நரம்பு மண்டலப் பகுதியின் சமநிலை சீர்குலைந்து விடுவதால், மிகை அச்சம் கொண்டவர்கள் தடுமாறுகின்றனர் என்று விளக்கம் தருகின்றார்கள்.
எதனைக் குறித்த அச்சம் கொள்கிறோம் என்பது தெரியாமலே சிலர் அச்சம் கொள்கின்றனர். இதனை இனம்புரியாத அச்சம் அல்லது பதற்ற நிலை (Anxiety) என்றும் கூறுவர். சிக்மண்டு பிராய்டு (Sigmund Freud) என்பவரின் கோட்பாட்டின்படி கசப்பான உண்மைகளும் பட்டறிவுகளும் ஒடுக்கல்களாக (Repressions) நனவிலியில் (The Unconscious) புதைந்து கிடக்கின்றன. இவற்றுடன் இயைபு கொண்ட வேறு ஏதாவது அனுபவம் நனவிலியில் இருந்தால், புதைக்கப்பட்ட எண்ணங்கள் மனத் தடைகளை மீறி, நனவு உள்ளத்தை ஆட்கொள்ள முற்படலாம். இவ்வாறு வெளிப்படும் ஒடுக்கப்பட்ட நினைவுகள், உள்ளத்தில் எப்பொழுதும் அச்சத்தை ஏற்படுத்தக் கூடும். இறுதியில் ஏன் இந்த அச்சம் எழுந்தது என்று தெரியாமலேயே ஒருவர் பதற்ற நிலையை அடைகிறார். இத்தகைய அச்சம், இனம் புரியாத அச்சம் ஆகும். இந்நிலையிலிருந்து மீள்வவதற்கு இதற்கு அடிப்படைக் காரணத்தைக் கண்டுபிடித்து விளக்கி, அச்சம் கொண்டவரிடம் அதனை எடுத்துக் கூறுவதினாலேயே ஓரளவு பலன் கிட்டும். உளவியல் வல்லுநர், நோயாளியின் உள்ளத்தைச் சமன்படுத்த அவரிடம் சில வழிமுறைகளை எடுத்துரைத்தபின், நோயாளிக்கு அளிக்கப்படவேண்டிய மருந்துகளும் பயிற்சிகளும் இருக்கின்றன. இவற்றின் மூலமாகப் பதற்றநிலை எனப்படும் இவ்வச்சம் நீங்கக்கூடும்.
சிலருக்கு ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பொருளையோ சூழ்நிலையையோ காணநேரிடின், மிகையான அச்சம் ஏற்படும். இத்தகைய அச்சங்கள் கிலிகள் (Phobias) எனப்படும். கிலிகள் எந்தப் பொருள் அல்லது எந்தச் சூழ்நிலை பற்றியேனும் ஏற்படலாம். கோபுரம், மலையுச்சி போன்ற உயரமான இடங்கள், அடைபட்ட இடங்கள், இருள், வெட்டவெளி, நெருப்பு, கூட்டங்கள், ஆறு, குளங்கள், பூச்சிகள், எலி, பாம்பு, தவளை, பல்லி, புற்றுநோய், காசநோய் போன்ற எதனைப் பற்றியும் கிலிகள் ஏற்படலாம்.
கிலிக்குக் காரணமான பொருள் அற்பமானதாக இருந்தாலும் மனநல ஆய்வுப்படி இத்தகைய கிலி படைத்தவர்களுக்கு மருத்துவம் செய்ய முற்படும் போது அவர்களின் அச்சம், இடம் மாறிய உணர்வு என்று கண்டு கொள்ளலாம். பாலுணர்வு பற்றிய குழப்பங்கள், குழந்தைப் பருவத்து ஈடிபசு சிக்கல் (Oedipus Complex), ஏற்றுக்கொள்ள முடியாத கசப்பான உண்மைகள் ஆகியவை இவர்களின் அடிப்படை அச்சத்துக்குக் காரணமாயிருக்கலாம். அவற்றை உள்ளத்திலிருந்து வெளிக்கொணர்ந்து, நோயாளியை உணர வைப்பது ஒரு மருத்துவ முறையாகும். ஆனால், பலரும் இதுபோன்ற கிலியில் பீடிக்கப்பட்டவர்களைப் படிப்படியாக அவர்கள் பயப்படும் பொருளை உண்மையாக நெருங்கவோ கற்பனையில் நெருங்கவோ ஏற்பாடு செய்வது, நடத்தை மருத்துவம் (Behaviour Therapy) ஆகும். இதில் பலவித அணுகுமுறைகள் உள்ளன. மேற்கூறிய முறைகளைத் தவிர அச்சத்திற்குக் காரணமான சூழ்நிலைக்குப் பாதிக்கப்பட்டவரைத் தள்ளுவது என்னும் முறையும் (Implosive Therapy). முள்ளை முள்ளால் எடுப்பது போல் காரணமில்லா அச்சத்திற்குள்ளானோரை அந்த அச்சத்தை முழுவதும் உணர அல்லது எதிர்கொள்ள வைத்து மருத்துவம் செய்வது போன்ற முறைகளும் நடைமுறையில் உள்ளன. என்.மா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 158)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kf6pqnjs/
தமிழ்“அச்சம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kf6pqnjs/APA
Oliyon Research. (2026). அச்சம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kf6pqnjs/MLA
"அச்சம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/kf6pqnjs/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment