பெரும்பாலும் நுரையூட்டிய நெகிழிகள் எனக் குறிப்பிடப் படும் செல் சார் நெகிழிகள் (cellulose plastics) சிறப்பு வாய்ந்தவை. இவற்றைக் கடற்பஞ்சு போன்ற மென்மை, குறைந்த விறைப்புத் திறன், விறைப்பு போன்ற பல நிலைகளில் பெறலாம். மென்மையான நெகிழித் திரைச் சீலை, தானியங்கு ஊர்திகளின் இருக்கை ஆகியவற்றைத் தயாரிக்க இவை உதவும். மிதக்கும் கருவி, மின் காப்பீடு போன்றவற்றை அரை விறைப்புச் செல் சார் நெகிழிகளிலிருந்து தயாரிக்கலாம். விமானம் கட்டுதல், படகு கட்டுதல், வீட்டுப் பயன் பாட்டுத் தளவாடங்கள் (furniture) தயாரிப்பில் விறைப்புச் செல் சார் நெகிழிகள் பங்கு பெறுகின்றன. நுரையூட்டிய நெகிழிகள் வெப்பம் கடத்தா. அவை சிறந்த ஒலி தடுப்பான்கள் ஆகும். இந்நெகிழிகளை வெப்ப உருவாக்கல் முறை (thermofarming), பீச்சி வார்த்தல் (injection moulding), பிழிந்து வார்த்தல் (extrusion) போன்ற பல்வேறு செயல் முறைகளால் வடிவமைக்கலாம். செல் சார் நெகிழிகளை வெப்ப மீள் (thermoplastic), வெப்ப மீளா ரெசின்களிலிருந்து (thermosetting resin) தயாரிக்கலாம். திண்ம நெகிழியின் ஒரு பகுதியைச் செல் சார் நெகிழியால் பதிலிடும் போது, அப்பகுதியை எடை குறைவானதாகவோ, விறைப்புத் தன்மையுடையதாகவோ, இரண்டும் ஒருங்கே அமைந்த பகுதியாகவோ மாற்ற முடியும். திண்ம நெகிழியை விடச் செல் சார் நெகிழியின் எடையும், தயாரிப்புச் செலவும் குறைவு. செல் சார் நெகிழித் தயாரிப்பில், பெரும் பங்கு வகிக்கும் நெகிழிகளில் பாலி யூரத்தேன், பாலிஸ்டைரீன், பாலிஎத்திலீன், பாலி புரோப்பிலீன். சிலிக்கோன்கள், எப்பாக்சி, பாலி வினைல் குளோரைடு ஆகியன குறிப்பிடத் தக்கன. செல் சார் நெகிழிகளைப் பல வகையாகப் பிரிக்கலாம். நுரையூட்டப்பட்ட விரிவாக்கப்பட்ட நெகிழி. செல் சார் அமைப்புடைய எந்த நெகிழியும் இவ்வகையில் அடங்கும். வெற்றுக் கோள நெகிழி. நுண்கோளங்கள் (micro-spheres) எனப் படும் மிகச் சிறிய வெற்றுக் கோளங்களைப் பாலிஎஸ்ட்டர் அல்லது எப்பாக்சி ரெசினில் விரவச் செய்து கிடைக்கும் நெகிழிகளை வெற்றுக் கோள நெகிழிகள் என்பர். இதற்கான நுண் கோளங்கள் ஃபீனாலிக் ரெசின்கள், களிமண் அல்லது கண்ணாடியில் ஆனவை. மூடிய செல்சார் நெகிழி (closed cell foam). இதில் அமைந்த செல்கள் ஒன்றோடொன்று இணைக்கப் படாமல் தனித்திருக்கும். இந்நெகிழியை நீரில் அமிழ்த்தும் போது, நெகிழியின் புறப் பரப்பில் உள்ள செல்கள் மட்டும் நீரை உறிஞ்சிக் கொள்ளும். மிதவைப் பொருள்கள் தயாரிக்க, இந்நெகிழிகள் ஏற்றவை. திறந்த செல் சார் நெகிழி (Open cell foam). இந்நெகிழியில் உள்ள பெரும்பாலான செல்கள் ஒன்றோடொன்று திறந்த வழியில் இணைக்கப் பட்டுள்ளன. நீரில் இந்நெகிழியை அமிழ்த்தும் போது, நெகிழி முழுவதும் நீரை உறிஞ்சும். ஒளி தடுப்பான் தயாரிக்க, இது மிகவும் ஏற்றது. இரு வகை ஊது பொருள்களை (blowing agent) அடிப்படையாகக் கொண்டு செல்சார் நெகிழிகளைத் தயாரிக்கலாம். (1) உருகிய அல்லது நீர்ம நிலையில் உள்ள நெகிழியின் வழியே, வளிமத்தைச் செலுத்தலாம். (2) நெகிழியோடு கலக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட சேர்மம், குறிப்பிட்ட வெப்ப நிலையில் சிதைந்து வெளி வரும் வளிமம் செல் சார்ந்த அமைப்பைத் தரும். ஏழு முறைகளைப் பின்பற்றிச் செல் சார் நெகிழிகளைத் தயாரிக்கலாம். (1) வேதி ஊது பொருள்களை நெகிழியோடு கலந்து, வெப்பமூட்டும் போது, வேதிப் பொருள் சிதைந்து, நைட்ரஜன் வளிமத்தை வெளியேற்றும். அசோடைகார்பமைடு அல்லது அசோபிஸ் ஃபார்மமமைடு போன்ற அசோ சேர்மங்கள் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்படும் வேதி ஊது சேர்மங்களாகும். இவ்வேதிச் சேர்மங்களின் தூளை நீர்ம நெகிழியில் நன்கு விரவச் செய்யலாம் அல்லது நெகிழியோடு கலந்து வார்ப்புக் கட்டித் (moulding pellet) தயாரிக்கலாம். 110–280°C வெப்ப நிலை வரம்புக்குள் சிதையக் கூடிய பல வேதி ஊது சேர்மங்கள் உள்ளன. எனவே, நெகிழியின் உருகு நிலை அல்லது செயல் முறையின் வெப்ப நிலைக்குப் பொருத்தமான வேதி ஊது சேர்மத்தைத் தேர்ந் தெடுக்கலாம். (2) வளிமத்தை (பெரும்பாலும் நைட்ரஜனை) உருகிய அல்லது பகுதி பக்குவப் படுத்தப் பட்ட ரெசினில் பீச்ச வேண்டும். வளிமத்தைச் செயல் முறைக் கலன் அல்லது அழுத்தக் கலனில் (autoclave) செலுத்தி, கலனின் அழுத்தத்தைக் குறைக்கும் போது, வளிமம் விரிவடைந்து, செல்கள் கொண்ட கூடு அமைப்பைத் தரும். (3) ஐசோசயனேட் போன்ற இரு வினைத் திறனுடைய (bifunctional) மூலக் கூறுகளைப் பாலிஎஸ்ட் டர் அல்லது ஏதேனும் ஒரு நீர்ம ரெசினோடு கலந்து, திண்ம நிலைக்கு மாற்ற நெகிழியைப் பல்லுறுப்பாக்கம் செய்தால், ஐசோசயனேட் வினையுற்று, வளிமத்தை வெளிப் படுத்தும். இவ்வளிமம் செல் அமைப்பைத் தர உதவுகிறது. இம்முறையைப் பின் பற்றிச் செல் சார் பாலியூரத்தேன் நெகிழி தயாரிக்கப் படுகிறது. (4) தாழ்வான கொதி நிலை பெற்ற சேர்மங்களை ஆவியாக்கிச் செல் அமைப்பைப் பெறலாம். இதன் பொருட்டு, ஃபிரியான் போன்ற ஃபுளுரோகார்பன் சேர்மங்கள் பெரிதும் பயன் படுகின்றன. (5) ரெசின் கூழ்மத்தில் காற்றைச் செலுத்தி, நன்கு சுழற்றிக் கலந்து கிடைக்கும் சேர்மத்தைக் களியாக மாற்றலாம். இம்முறையில் நுரைத்த ரப்பர் கிடைக்கிறது. (6) வேதி வினைப் படாத, ஆனால், வளிமத்தை வெளிப்படுத்தும் சேர்மங்களை ரெசினில் கலந்து வெப்பமூட்டும் போது, வளிமம் வெளிப்படும். நன்கு தூளாக்கப்பட்ட கார்பன் தூளின் மேற்பரப்பில் ஒட்டியுள்ள வளிமம் இதற்கு எடுத்துக் காட்டாகும். (7) ஊது பொருள் அடைக்கப்பட்ட இளக வல்ல நெகிழியின் சிறு முனைகளை வெப்பமூட்டும் போது, விரிவடையும். செல்சார் பாலிஸ்டைரீனை இம்முறையில் தயாரிக்கலாம். —என். அய்யாசாமி நூலோதி. Schwartz and Sidney A. Goodman. Plastics Materials and Processes, Van Nostrand Remhold Co., New York, 1982.