பதினைந்து வயதிலிருந்து இருபத்துநான்கு வயது வரை உள்ள இளைஞர்களே வேலையின்மையால் மிகுதியும் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர் வேலையின்மைக்குக் (Youth Unemployment) கூறப்படும் காரணங்கள் பல. இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது அரிதாக இருப்பதற்குக் கூறப்படும் முதல் காரணம், அவர்கள் பணித்திறன் உடையவர்களாக இல்லாதிருத்தலேயாம். பணித்திறன்களை இளைஞர்கள் பெறாமல் இருப்பதற்குக் காரணம், அவர்கள் போதிய பணிப்பயிற்சியும் கல்வியும் பெறாமையேயாகும். எனவே இளைஞர் வேலையின்மைச் சிக்கலைத் தீர்வு செய்தில் முதலிடம் பெறுவது கல்வி என்பது தெளிவு. வட அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் மட்டும் 20 மிலியன் (200 இலட்சம்) இனைஞர்கள் 1982–ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வேலையின்றி இருந்தனர். இந்நாடுகளில் வேலையில்லாத இளைஞர்கள் நாற்பதிலிருந்து ஐம்பது விழுக்காடு ஆவா, இசுபெயின், இத்தாலி போன்ற நாடுகளில் ஐந்து இளைஞர்களுள் ஒருவர் வேலையின்றி இருக்கிறார். செருமானியக் குடியரசு (Federal Republic of Germany), சுவீடன் போன்ற நாடுகளில் வேலையில்லாத இளைஞர்கள் 10 விழுக்காட்டுக்கும் குறைவே. சோவியத்து நாட்டில் வேலையில்லாத படித்த இளைஞர்கள் இல்லை. இந்நாட்டில் இருந்த கடைசி வேலைவாய்ப்புத் தேடித் தரும் அலுவலகம் 1929–ஆம் ஆண்டிலேயே மூடப்பட்டு விட்டது. இந்தியாவில் படித்த இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம் பெருகியுள்ளது. இந்நாட்டில் ஏறத்தாழ 10 மிலியன் படித்த இளைஞர்கள் வேலையின்றி இருக்கின்றனர். கல்லூரிப் பட்டம்பெற்ற இளைஞர்களுள் மட்டும் 1982–ஆம் ஆண்டுக் கணக்கின்படி வேலையில்லாதவர்கள் 27 விழுக்காடாகும் வேலையில்லாமல் இருக்கும் இந்தியர்களுள் மூன்றில் ஒரு பங்கினர் படித்த இளைஞர்கள் ஆவர். வேலையின்மையால் இளைஞர்களை விட இளம்பெண்களே மிகுதியான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். பிரான்சு, இத்தாலி, இசுபெயின் போன்ற நாடுகளில் வேலையின்மையால் 40 விழுக்காட்டுக்கும் மேலான இளம் பெண்கள் அல்லலுறுகின்றனர். கல்வியின் பங்கு பொருளாதார வளர்ச்சியின்மை, மக்கள் தொகைப் பெருக்கம், பணித்திறன் மிக்க கல்வியின்மை, வேலையின் மீது இளைஞர்கள் கொண்டுள்ள சுய விருப்பு வெறுப்புகள் ஆகியவை வேலையின்மையின் முதன்மையான காரணங்களாகக் கூறப்படுகின்றன. வேலையின்மையை ஒழிப்பது கல்வியும் பயிற்சியும் (Education and Training) தாம் என வளர்ச்சியடைந்த நாடுகள் கருதுகின்றன. உயர் கல்வி அளித்தல் கல்வியின் தரத்தை உயர்த்துதல், தொழிற்பயிற்சி அளித்தல் ஆகிய மூவகைக் கல்வித் திட்டத்தின் மூலம் இளைஞர்களின் பணித்திறனை (Employability) உயர்த்த முடியும். இப்பணித்திறனே இளைஞர்களிடம் வேலையின்மையை ஒழிக்க உதவும். பொதுவாக, உயர்கல்வி பெற்றவர்களுள் வேலையின்மை விகிதம் குறைந்தே காணப்படுகிறது. உயர் கல்வியானது வேலையைப் பெறுவதற்கான வாய்ப்புகளை மிகுதிப்படுத்துகிறது. அனைத்துக் கல்வியும் வேலை வாய்ப்புகளைத் தேடித் தந்துவிடுவதில்லை. எவ்வளவு காலம் ஒருவன் பள்ளியில் இருந்தான் (schooling) என்பதைவிடப் அவன் பள்ளியில் என்ன கற்றான் (Learning) என்பதே வேலைவாய்ப்புகள் அடைவதை உறுதிப்படுத்துகிறது. பள்ளியில் பெறப்படும் பொதுக் கல்வி யாரையும் ஒரு குறிப்பிட்ட வேலைக்கு முழுத் தகுதியுடையவராக (Finished Product) ஆக்கிவிடுவதில்லை. ஒவ்வொரு தொழிலுக்கென்றும் உரிய சிறப்புத் திறன்களைப் (Specifie Skills) பயிற்சி பெறுவதன் மூலம் அடைய இயலும். பள்ளியோ தொழில் நிறுவனமோ மட்டும் தனித்து நின்று வேலையின்மையை ஒழித்து விட இயலாது. இவ்விரண்டும் இணைந்து திட்டமிட்டுச் செயற்படும் போதுதான் இளைஞர் வேலையின்மைச் சிக்கலை ஒழிக்க இயலும். பள்ளியும் தொழில் நிறுவனமும் இணைந்து திட்டமிடுதல் சோவியத்து நாட்டில் நடைமுறையில் உள்ளது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. கல்வியானது இளைஞர்களின் தகுதிகளையும் பணித்திறன்களையும் உயர்த்த உதவுவதோடு, ஆர்வம், விருப்பம், திறன் ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில் பொருத்தமான தொழில் வகைகளை அவர்களே தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதலுக்கும் (Guidance) தொழில் மீது நல்ல மனப்பான்மையை வளர்ப்பதற்கும் உதவி செய்கிறது.