திருநெல்வேலி மாவட்டம் விளாத்திகுள வட்டம் நாகலாபுரத்தை அடுத்த இரெட்டியப்பட்டியில் வேளாளர் மரபில், வீரபத்திரப் பிள்ளைக்கும் ஆவுடையம்மாளுக்கும் ஏழாம் மகனாக கி.பி. 1856 செப்டம்பர் 16–ஆம் நாள் பிறந்தவர் சுப்பிரமணியம் ஆவார். இவரே பின்னர் இரெட்டியப்பட்டி சுவாமிகள் என்று பலராலும் வணங்கிப் போற்றும் அருல்நிலையைப் பெற்றவர். இவர் பள்ளியில் படித்த கல்வி சிறிதே. யாயினும் இளமையிலேயே அருளுணர்வும் அருட்சித்தியும் இயல்பாகப் பெற்று விளங்கினார். வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்ட பொழுது இவர் கால் பட்ட நிலங்கள் மிகுதியாக விளைவைக் கொடுத்தன அவ்வட்டாரத்தில் ஏழைகளுக்கு உணவுப்பொருள்கள் நியாய விலைக்குக் கிடைப்பதில்லை. அதனால் அவர்களுள் பலர் சில சமயங்களில் பட்டினியும் கிடக்க நேரிட்டது. அவர்கள் துயரைத் தீர்க்க இவர் தூத்துக்குடி நகருக்குச் சென்று பண்டங்களை வாங்கி வந்து அடக்க விலைக்கே ஏழைகளுக்குப் பகுத்துக் கொடுத்தார். அது பயனற்ற வேலை என்று பெற்றோர் கண்டித்தனர். அதனைப் பொறாது இவர் யாரும் அறியாமல் வீட்டை விட்டு வெளியேறினார். இரெட்டியப்பட்டி சுவாமிகள் சுவாமிகள் திருச்செந்தூர் சென்று முருகனை வழிபட்டு, அங்கிருந்து மதுரைக்குக் கால்நடையாக வந்து அன்னை மீனாட்சியிடம் அடைக்கலமானார். அந்நகரில் பெரிய வணிகரான ஒரு முகமதியரின் அங்காடியில் கணக்கு எழுதும் பணியை மேற்கொண்டார். இவர் அங்குப் பணியை ஏற்ற நாள் முதல் அங்காடி வாணிகம் பெருகிற்று. நாள்தோறும் விடியுமுன் வைகை நதிக்குச் சென்று ஓடுகாலில் நீராடித் திருக்கோயிலில் மீனாட்சி–சொக்கரை வழிபட்ட பின்பே அங்காடிக்குச் செல்வார். எந்த நேரத்திலும் எப்பணியில் ஈடுபடினும் இவர் சிந்தை இறை நினைவிலேயே ஒன்றியிருந்தது. மகன் மதுரையில் இருப்பதை அறித்து பெற்றோர் அங்கு வந்து அவருக்குத் திருமணம் செய்து வைத்தனர். இவரோ இல்லறத்திலும் ஒரு பற்றற்ற துறவியாகவே வாழ்க்கை நடத்தினார். ஒருநாள் இவர் வழக்கம்போல் வைகையில் நீராடி இறைவனைத் துதித்துப் பாடி நிற்கும் பொழுது, வானளாவிய ஒரு பெரும் சோதி இவர்முன் தோன்றியது. மெய்ம்மறந்த நிலையில் அச்சோதியை மார்புடன் அணைத்துக் கொண்டார். நினைவு பெற்றபொழுது தம் கழுத்தில் ஒரு மாலையையும் கைகளில் விநாயகர் கற்சிலை ஒன்றையும் கண்டார்; ஆடிப்பாடி மகிழ்ந்தார். நண்பர்களின் உதவியுடன் வைகை ஆற்றின் தென் கரையில் இரயில் பாலத்திற்கு மேற்கில் ஒரு கோயில் அமைத்து, அதில் அவ்விநாயகர் சிலையை எழுந்தருளச்செய்து குடமுழுக்கும் நடத்தினார். அக்கோயில் இன்று பரிபூரண விநாயகர் கோயில் என்னும் பெயரில் மதுரை மீனாட்சி கோயில் நிருவாகத்திலுள்ளது. அங்காடிப் பணியாக இவர் பம்பாய் சென்று சில காலம் இருந்தார். எனினும், மனம் மதுரை மீனாட்சி அன்னையையே நாடியது; அருளாற்றல் பெற வேண்டுமென்ற எண்ணமே மேலோங்கி நின்றது. மதுரை திரும்பினார். மக்கள் இவரைச் சுவாமி என்றே பணிந்து வந்தனர். திடீரென்று பேசா விரதத்தை மேற்கொண்டார். இவர் செயல்களைக்கண்டு எல்லோரும் வியப்புற்றுத் திரள் திரளாக இவரது இருப்பிடத்திற்கு வரத் தொடங்கினர். அதனால் இவருக்கு மன அமைதிக் குறைவு ஏற்பட்டது. ஒரு நாள் யாரும் அறியாமல் மதுரையை விட்டு அகன்று குற்றாலம் சென்றடைந்தார். அங்கு மலைமேல் உள்ள சண்பகாடவி அருவிக்கு அருகில் ஒரு குகையில் அமர்ந்து ஊண் உறக்கமின்றித் தவம்புரியலானார். தம் அன்னையின் இறுதி நாளைத் திருவருள் உணர்த்தவே, சுவாமிகள் இரெட்டியப்பட்டி வந்து அன்னைக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்துமுடித்தார். பின்னர் மீளவும் குற்றாலம் சென்று தொடர்ந்து பத்தாண்டுகள் அருந்தவம் புரிந்தார். ஒருநாள் அவருக்குப் பரிபூரணர் காட்சி கிடைத்தது. ‘தவம் செய்தது போதும், மக்களுக்கு அருள் வழியைக் காட்டச்செல்க’ என்ற ஆணையும் கிடைத்தது. சீடர்களுக்குப் பரிபூரணர் அருள்கிட்டும் என்ற அருள்வாக்கும் பெற்றார். நாடெங்கும் அன்பர்களை நாடிச் சென்று தாம் கண்ட அருள்நெறியை அருட்சட்டங்கள் என்று கூறி விளக்கி, அவற்றைப் பின்பற்றச் செய்தார். சீடர்கள் எண்ணிக்கை பெருகிற்று. அவர்களிடையே இவர் நடமாடும் தெய்வமாகவே விளங்கினார். பலருக்கு இடுக்கண் வந்த பொழுதெல்லாம் நேரிலோ கனவிலோ தோன்றி அருள் பாலித்தார். தாம் மேற்கொண்ட பணிகளை இனித் தொடர்ந்து சீடர்களே செய்து வருவர் என்ற நிலை ஏற்பட்டதும், இரெட்டியப்பட்டி சென்று தாம் பிறந்த இடத்திலேயே 1923–இல் வீடுபேறு அடைந்தார். சுவாமிகள் வீடுபேறு அடைந்து திருக்காப்பிட்ட இடத்தில் ஒரு பெருங்கோயில் அடியார்களால் எழுப்பப் பெற்றுள்ளது. அடியார்கள் சிலர் இரெட்டியப்பட்டியில் அறக்கூடங்கள் பல அமைத்துள்ளனர். அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களுக்கும் நாடெங்குமிருந்து திரளாக மக்கள் பக்தியுடன் வந்து கலந்து கொள்கின்றனர். சுவாமிகளின் அருட்சட்ட நெறிகளில் சில வருமாறு 1. நாள்தோறும் இருவேளை விடியுமுன்னும் மாலையிலும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். 2. குளிக்கவோ குடிக்கவோ வெந்நீரைப் பயன்படுத்துதல் கூடாது. 3. நீராடியபின் அவரவர் மதத்திற்கு உரிய முறையில் இறைவனை வழிபட வேண்டும். 4. சிறிது திருநீறும் துளசியும் நீரிலிட்டுப் பருகவேண்டும். 5. புலால் உண்ணல், புகைபிடித்தல் முதலிய தீய பழக்கங்கள் கூடா. 6. நோய் காணின், மருந்து உட்கொள்ளாது இறைவனையே நம்பியிருத்தல் வேண்டும். 7. வைத்தியம், சோதிடம், மந்திரம் இவற்றில் நம்பிக்கை வைத்தல் கூடாது. 8. வாரம் ஒருநாள் ஒருவேளையாவது உணவருந்தாதிருத்தல் வேண்டும். 9. இறந்தவர்களைச் சமாதியாகவே அடக்கம் செய்தல் வேண்டும். 10. எல்லாம் இறைவன் செயல் என்று எதனையும் கருதுதல் வேண்டும். கி.ப.