இது ஒரு சிலிக்கேட் கனிமம். இக்கனிமம் நீர் கலந்த மெக்னீசியம் சிலிக்கேட் [Mg₆(OH)₈(Si₄O10)] ஆகும். இதில் சிறிதளவு இரும்பு இருக்கக் கூடும். சில சமயங்களில், நிக்கல் மிகக் குறைந்த அளவில் காணப் படும். பாம்பு போல் நீண்டு வளைந்த தாரைகளாகக் கிடைப்பதால், இக் கனிமம் செர்ப்பன்டைன் என்னும் பெயர் பெற்றது. செர்ப்பன்டைன் ஒற்றைச் சரிவுத் தொகுதியைச் சேர்ந்தது. இது செதில்கள், ஏடுகள் அல்லது இழைகளாகக் காணப் படும். இதன் ஏடுகளையும், இழைகளையும் எளிதில் பிரிக்கலாம். இக்கனிமம் திண்மங்களாகவும், நுண் துகள்களாகவும், தொடக்க நிலைப் படிகங்களாகவும், பலகைகளாகவும் காணப் படும். செர்ப்பன்டைன் கனிமத்தில் (010) கனிமப் பிளவு தெளிவாகக் காணப் படும். பட்டகப் பக்கத்திற்கு இணையான கனிமப் பிளவுகள் சிலவற்றில் உள்ளன. இதில் சங்கு முறிவு அல்லது முள் குச்சி முறிவு காணப் படும். இது வழவழப்பாக இருக்கும். இதில் குறை அரக்கு மிளிர்வு, நெய் மிளிர்வு, முத்து மிளிர்வு, (மங்கிய) மண் மிளிர்வு அல்லது மெழுகு மிளிர்வு காணப் படும். இழை போன்றவை பட்டு மிளிர்வுடையன. இதன் கடினத் தன்மை 2.5–5,0; ஒப்படர்த்தி 2.50–2.65; செர்ப்பன்டைன் பாசிப் பச்சை, சருகு நிறம் கலந்த பச்சை, அழுக்குப் பச்சை, சருகு நிறம் கலந்த சிவப்பு (கருஞ்சிவப்பு), சருகு நிறம் கலந்த மஞ்சள் அல்லது வெளிறிய நிறத்தில் காணப் படும். இதன் தூள் நிறம் வெண்மையாக இருக்கும். இக்கனிமம் சற்றுப் பளபளப்பான தோற்றம் உடையது. இது ஒளி கசியும் அல்லது ஒளி புகாத் தன்மை உடையது. செர்ப்பன்டைன் கனிமத்தில் பல வகைகள் உள்ளன. கிரைசோடைல், இழைகளாக இருக்கும். லிசார்டைட், மெல்லிய ஏடுகளைப் போன்றது. ஆண்டிகோரைட் என்னும் வகை, தகடுகளைப் போன்று இருக்கும். போவினைட், ரிக்கோலைட், மர்மோலைட், பிக்கோரெய்ட் முதலியனவும் செர்ப்பன்டைன் கனிம வகைகளாகும். செர்ப்பன்டைனில் அதிர்வுத் திசை நிற மாற்றம் மிகவும் குறைவாகக் காணப் படும். இது எதிர் மறை ஒளிக் குறி உடையது. சோடைல் நேர் ஒளிக் குறி உடையது. இரண்டு ஒளி அச்சுகளைக் கொண்டது. இதன் ஒளி அச்சுத் தளம் (100) தளத்திற்கு இணையாக உள்ளது. இதில் X–அதிர்வுத் திசை (010) கனிமப் பிளவின் தளத்திற்குச் செங்குத்தாக உள்ளது. இதன் ஒளி அச்சுகளுக்கு இடையேயான கோணம் (2V) 20°–90°. இக்கனிமத்தின் ஒளி விலகல் எண்கள் 1.490–1.571 வரை மாறு படுகின்றன. செர்ப்பன்டைன் பாறைகளாகக் கிடைக்கிறது. இது டூனைட், பைராக்சினைட் முதலிய (SiO₃ மிகக் குறைந்த) மிகு கார அனற் பாறைகளிலிருந்து வெப்ப நீர் மாற்றமடைவதால் உண்டாகிறது. ஆம்பிபோல், பைராக்சின், கிரைசோலைட் முதலிய கனிமங்கள் மாற்றமடைந்து, செர்ப்பன்டைனாகின்றன. டோலமைட், சுண்ணப் பாறை முதலியன வெப்பத்தினால் உருமாறியப் பாறைகளாக மாறி, செர்ப்பன்டைன் உள்ள பாறைகளாகின்றன. இப்பாறை, ஒஃபிகால்சைட், டோலமைட், குரோமைட் ஆகிய கனிமங்களுடன் சேர்ந்திருக்கும். செர்ப்பன்டைன் இங்கிலாந்து, அமெரிக்கா, கிரீஸ், இத்தாலி, இந்தியா ஆகிய நாடுகளில் கிடைக்கின்றது. இதன் வகைகளில் ஒன்றான பளபளப்பான கிரைசோடைல் அணிகலக் கற்களாகப் பயன் படுகிறது. இது கல் நாராகக் காணப் படுகின்றது. —இல, வைத்திலிங்கம்