இந்தியாவில் காணப் படும் நொணலை மீனை மத்தி, எண்ணெய் சார்டைன் எனவும் குறிப்பிடுவர். இந்தியாவில் ஓர் ஆண்டில் பிடிக்கப் படும் மொத்த கடல் மீன்களின் அளவில், மூன்றில் ஒரு பங்கு இம்மீனேயாகும். இம்மீனை மக்கள் பெரிதும் விரும்பி உண்கின்றனர். இம்மீனிலிருந்து எடுக்கப் படும் சார்டைன் எண்ணெய் பல தொழில்களுக்கும் பயன் படும். இம்மீன் தூள் (fish meal) கோழி மற்றும் மாட்டுத் தீவனங்கள் தயாரிப்பதற்குப் பயன் படுகிறது. சார்டைன் எண்ணெய் தயாரிக்கும் போது கிடைக்கும் நைட்ரஜன் பாஸ்பேட் அடங்கிய குவானோ (guano) என்னும் கழிவுப் பொருள், காபி, டீ, தென்னை, கரும்பு, புகையிலை போன்ற தாவரங்களுக்கு உரமாகிறது. வகைப்பாடு குளுப்பியா லாங்கிசெப்ஸ் (Clupia longiceps) இந்நொணலை மீன் முள்ளெலும்பு மீன் வகுப்பில் ஆக்டினோடேரிஜி துணை வகுப்பில், குளுப்பி ஃபார்மிஸ் வரிசையில் வகைப் படுத்தப் பட்டுள்ளது. இதற்குச் சார்டினெல்லா லாங்கிசெப்ஸ் (Sardinella longiceps) என்றும், சார்டினெல்லா நியோகோவி (S/newhowii) என்றும், குளுப்பியா ஸ்கம்பிரினா (C/scombrina) என்றும் வேறு பெயர்கள் வழங்கப் படுகின்றன. பரவல். இம்மீன் உலகின் பெரும்பாலான கடல் பகுதிகளில் வசித்தாலும், இந்தியக் கடலில் மிகுந்து காணப் படுகிறது. இது பொதுவாகச் சோழ மண்டலக் கடற் பகுதியை விடக் கேரளக் கடற்பகுதியில் கூடுதலாகக் காணப் படும். இம்மீனின் முட்டை, பெரும்பாலும் ஆகஸ்டு–நவம்பரில் கோழிக்கோடு பகுதியில், நீரின் மேற்பரப்பில் மிதப்பதைக் காணலாம். குஞ்சுகளும், வளர்ச்சியுற்ற மீன்களும் கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரக் கடற்கரைப் பகுதிகளில் காணப் படுகின்றன. புற அமைப்பு. இம்மீனின் வயிற்றுப் பகுதி மருங்கு வாக்கில் தட்டையாகவும், கூர்மையான விளிம்புடனும் இருக்கும். இவ்விளிம்புகளில் சாதாரணமாக ரம்பப் பல் போன்ற முள்களையுடைய செதில்கள் (scales) உள்ளன. செவுள் மூடி நான்கு பகுதிகளாலானது. செவுள் திறப்புகள் பொதுவாக மிகப் பெரியனவாக இருக்கும். பொய்ச் செவுள்கள் காணப் பட்டால், அவை நன்கு வளர்ச்சியுற்றிருக்கும். பக்கவாட்டில் இடம் பெற்றிருக்கும் கண்களுக்குக் கொழுப்பாலான இமைகள் உள்ளன. மேல் தாடையின் விளிம்பு, முன் நடுப் பகுதியில் முன் மேல் தாடை எலும்புகளாலும், பக்கவாட்டில் மேல் தாடை எலும்புகளாலும் ஆனது. வாய் அகலமாகவும், மேல் தாடை அல்லது கீழ்த் தாடை வெளியே நீட்டிக் கொண்டுமிருக்கும். உணர் நீட்சிகள் இல்லை. இம்மீனின் துடுப்பாரைகள் அசையக் கூடியவை. முதுகுத் தடுப்பில் (dorsal fit) நடுத்தரம் அல்லது குறைந்த எண்ணிக்கை கொண்ட வலிமையற்ற ஆரைகள் (fin rays) காணப் படுகின்றன. மலப் புழைத் துடுப்பில் (anal fin) சில சமயங்களில், பல ஆரைகள் உடலின் மேற்பரப்பில் காணப் படுகின்றன. தலைப் பகுதியில் செதில்கள் காணப் படுவதில்லை.பக்கக் கோடு பெரும்பாலும் அமைந்திருப்பதில்லை. ஏறக் குறைய, எளிய அமைப்புடைய காற்றுப் பை ஒன்றுண்டு. இம்மீனின் தலை சற்றே நீளமானது. பற்கள் நன்கு வளர்ச்சியுற்றிருப்பதில்லை. இம்மீனின் முதுகு, பச்சையும், நீலமும் கலந்த நிறத்துடன் தங்கம் போல மினுமினுக்கிறது. வயிற்றில் பச்சை நிறம் கலந்த தங்க நிறத்தாலான புள்ளி காணப் படும். உணவும் உணவுப் பழக்க வழக்கமும். அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலங்களில், இது கடல் அடிப் பரப்பில் காணப் படும் சகதியை உணவாகக் கொள்கிறது. ஏனைய காலங்களில், பெரும்பாலும் இது தாவர மிதவை உயிரிகளை விரும்பி உண்கிறது. நீரின் மேற்பரப்பில் காணப் படும் இத்தாவர மிதவை உயிரிகளின் அளவைக் கொண்டே இம்மீன் இருக்குமிடத்தை மீனவர்கள் அறிவர். கோப்பி போட், டையனோ பிளாஜல்லேட், ஆஸ்ட்ராகோட், இறாலின் வேற்றிளவுயிரி, இரு ஓடுடைய மெல்லுடலிகளின் வேற்றிளவுயிரி, மீன் முட்டை, நாக்டிலுக்கா, ரேடியோலேசியன், நண்டுகளின் வேற்றிளவுயிரி போன்ற விலங்கு மிதவைஉயிரிகளையும் இது உணவாகக் கொள்கிறது. இம்மீன் குஞ்சாக உள்ள போது, ஊணுண்ணியாகவும் (carnivore) முதிர்ச்சியடைந்த பின்னர், தாவரவுண்ணியாகவும் (herbivore) வாழ்கிறது. மிதவை உயிரிகளை வடி கட்டுவதற்கு ஏற்றவாறு, குஞ்சுகளின் செவுள்கள் நன்கு வளர்ச்சியுற்றுக் காணப் படாமையே, இதற்குக் காரணம் என்று கருதப் படுகிறது. தொடக்க கால வாழ்க்கை வரலாறு. இம்மீனின் முட்டைகள், 24 மணிக்குள்ளாகக் கரு வளர்ச்சியடைந்து, 2.75 மி.மீ. நீளமுடைய வேற்றிளவுயிரிகளாக வெளி வருகின்றன. இவை, தம்மிடமுள்ள எண்ணெய் உருண்டை மற்றும் கருவுணவின் உதவியால் நீரில் மிதக்கின்றன. இவற்றின் மேற்புறத்தில் கறுப்பு நிறமிச் செல்கள் (chromotophores) ஆங்காங்கே காணப் படுகின்றன. இவை ஒரு நாளுக்குள் தன்னிடமுள்ள கருவுணவையும், எண்ணெய் உருண்டையையும் உணவாக உட்கொண்டு, 3.35 மி.மீ. நீளம் வரை வளர்ந்து விடுகின்றன. அப்போது, மேற்புறத்திலுள்ள கறுப்பு நிறமிச் செல்கள் பக்கவாட்டிற்கும், கீழ்ப் புறத்திற்கும், இடம் பெயர்கின்றன. இரண்டு நாள்கள் வயதுடைய வேற்றிளவுயிரிகள் மிகவும் சுறுசுறுப்புடனும், நன்கு வளர்ச்சியடைந்த வாயுடன் 3.7 மி.மீ. நீளம் வளர்ந்து காணப் படுகின்றன. செவியுறுப்பு, மார்புத் துடுப்பு, கண், உணவுக் குழாய் போன்ற உறுப்புகள் முழு வளர்ச்சியடைந்துள்ளன. இனப்பெருக்கம். ஆண், பெண் இனங்கள் 14 செ.மீ. நீளத்திற்கு மேல் வளரும் போது, புறத் தோற்றத்தில் வேறு படுகின்றன. ஆண் இனத்தில், தசையாலான ஒரு முகிழ்ப்பு (papilla) பொதுப் புழைக்கு (cloaca) உள்ளே அமைந்திருக்கும். ஆனால், பெண் இனத்தில் இம்முகிழ்ப்பு சவ்வால் ஆக்கப் பட்டு, மலப் புழைக்குப் (anus) பின் புறம் அமைந்திருக்கும். இரு பால்களிலும், இவ்வறுப்பு வயது முதிர்ந்த நிலையில் வெளிப்படையாகவும், முதல் முதலாக வளர்ச்சியுறும் நிலையில் தெளிவாகத் தெரியாமலும் இருக்கும். முட்டையிடும் காலம். தக்க சூழ்நிலை அமையும் போது, குறிப்பாக ஜுன்–அக்டோபரில் இவை முட்டையிடுகின்றன. இருப்பினும், இவை தென் மேற்குப் பருவக் காற்று வீசும் இரண்டு, மூன்று மாதங்களில் மட்டுமே மிகுதியாக முட்டையிடுகின்றன. இப்பருவக் காற்று தொடங்குவதில் சற்றுக் காலதாமதம் ஏற்பட்டாலும், முட்டையிடும் கால அளவு தள்ளிப் போவதாகத்தெரிகிறது. இம்மீன் பொதுவாக, இருள்மதிக்கு ஒரு சில நாள்களுக்கு முன்னால் அல்லது பின்னால் முட்டையிடுகிறது. இனப் பெருக்க வளம். ஒரு மீன் தன்னுடைய உடலளவு, வயது, சினையகம் (ovary) ஆகியவற்றைப் பொறுத்து 38,000–80,000 முட்டைகள் இடுவதாகக் கருதப் படுகிறது. பால் விகிதம். குஞ்சுகளாக இருக்கும் போது, ஆண்களை விடப் பெண்களின் எண்ணிக்கை மிகுந்து இருப்பதாகவும், முட்டையிடும் போது, பெண் மீன்கள் பெரும் எண்ணிக்கையில் இறப்பதால், வளர்ச்சியடைந்த நிலையில் ஆண்களின் எண்ணிக்கை, பெண்களை விட மிகுந்து இருப்பதாகவும், முதுமை நிலையை அடையும் போது, பெண் மீன்களே மீண்டும் கூடுதலாக இருப்பதாகவும் அறியப் பட்டுள்ளது. வயதும், வளர்ச்சியும். இம்மீன் 4 ஆண்டுகள் வரை உயிருடன் இருப்பதாகவும், 220–229 மி.மீ. வளர்வதாகவும் கண்டறிந்துள்ளனர். முதல் ஆண்டில் 100 மி.மீ. வரையும், இரண்டாம் ஆண்டில் 150 மி.மீ. வரையும், மூன்றாம் ஆண்டில் 190 மி.மீ. வரையும், நான்காம் ஆண்டில் 210 மி.மீ. வரையும் வளரும். முன் பருவத்தில் (ஜுன், ஜூலை மாதங்களில்) இடும் முட்டைகள் பின்பருவத்தில் (ஜுலை, ஆகஸ்டு மாதங்களில்) இடப்படும் முட்டைகளை விட, மிக விரைவாக வளர்ச்சியடைகின்றன. ஒன்று கூடும் பழக்கம். ஒரே சிறப்பு இனத்தைச் சேர்ந்த ஒரே அளவுள்ள, ஒரே வயதுள்ள, ஒத்த வேகத்தில் நீந்தக் கூடிய பல உயிரிகள் பெரும் எண்ணிக்கையில் கூடுவதையே, ஒன்று கூடும் பழக்கம் என்பர். இம்மீன்களில் பல வகையான கூடும் பழக்கங்களைக் காணலாம். வளைந்து, வளைந்து செல்லும் போது, நீரில் ஏற்படும் ஒலியை வைத்துப் பகல் மற்றும் இரவு வேளைகளிலும், எதிரிகளிடமிருந்தும் தப்பித்துக் கொள்வதற்கு நீரிலிருந்து சிறிது தொலைவு வெளியில் துள்ளும் போதும், உடல் நிறத்தைக் கொண்டும், இரவு வேளைகளில் ஒளியை உண்டாக்கியும், நீரின் மேற்பரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியும், ஒன்று கூடுகின்றன. நீரின் அடித் தளத்தில் தொடர்ச்சியாக இவை வெளியிடும் காற்றுக் குமிழ்களைக் கொண்டும், இவை சுரக்கும் கோழைகளின் மணத்தைக் கொண்டும், இவை கூடும் பழக்கத்தை மீனவர்கள் அறிந்து, அங்கு வலை வீசி மீன்களைப் பிடிக்கின்றனர். ஒட்டுண்ணிகளும், எதிரிகளும். மீன் வகையில் ஒட்டுண்ணிகள் காணப் படுவதில்லை. இருப்பினும், 4 உறிஞ்சுகளைக் கொண்ட பிளாட்டி போத்திரியம் சார்டினெல்லே (Platybothrium Sardinellae) என்னும் செஸ்டோடு (cestode) ஒட்டுண்ணியின் வேற்றிவுயிரிகள் குடற்பையில் காணப் படுகின்றன. டால்பின், சுறா, மத்திக்காக்கா, கடல் காக்கா போன்றவை இம்மீனின் எதிரிகளாகும். —இரா. பக்தவச்சலம்