சிங்கிறால்
ciṅkiṟāl
கடின ஒட்டுக் கணுக்காலி வகுப்பில் ஹோமரிடே குடும்பத்தைச் சார்ந்த சிங்கிறால் (lobster) கடல் வாழ் விலங்காகும்.
கடின ஒட்டுக் கணுக்காலி வகுப்பில் ஹோமரிடே குடும்பத்தைச் சார்ந்த சிங்கிறால் (lobster) கடல் வாழ் விலங்காகும். சுவையான இறைச்சிக்காக இவற்றை நல்ல விலைக்கு வாங்குவர். சில பெரிய சிங்கிறால்கள் 13—15 கி. எடையும், 60 செ.மீ. நீளமும் உடையவை. தலை முன் பகுதியிலுள்ள கிடுக்கிகள் (pincers) 35-40 செ.மீ. நீளமிருக்கும். பொதுவாக 1—2 கி.கி. எடையுள்ளவையே விற்பனைக்கு வரும்.
இயல்பாக, கடலின் ஆழமற்ற பகுதியிலேயே சிங்கிறால் வாழ்கின்றது. நீர் வெப்பம் குறையும் காலத்தில், இடம் பெயர்ந்து ஆழ் பகுதிகளுக்குச் சென்று விடும். பெரும்பாலும், பாறை மிகுந்த அடித்தளத்திலேயே வாழும். உடலில் காணப்படும் வண்ண வேறுபாடுகள், வால் பகுதியில் உள்ள மாறுபட்ட அடையாளம் இவற்றைக் கொண்டு இனம் பிரிக்கப்படும்.
உரிய பருவத்தில் பெண் சிங்கிறால் பல ஆயிரம் முட்டைகளிடும். முட்டைகள் வயிற்றின் கீழ்ப்பகுதியிலுள்ள நீந்து கால்களில் (swimmerets) இணைந்திருக்கும். முட்டைகளிலிருந்து வரும் இளவுயிரிகள் நீரின் மேற்பரப்பில் 3—4 வாரம் வாழ்ந்து வளர்கின்றன. நீர்ப் பரப்பில் உள்ள உயிரிகளை உண்ணும் மீன்கள் பெரும்பாலான சிறு சிங்கிறால்களை விழுங்கி விடுகின்றன. தப்பியவையே கடலடிக்குச் சென்று வாழ்ந்து முதிர் நிலை அடைகின்றன.
இயற்கையாக முதிர் நிலையடையும் சிங்கிறால் மிகக் குறைவே. இதற்காக, மேலை நாடுகளில் சிங்கிறால் பண்ணையில் சிறிது காலம் வளர்த்துப் பின்னர், கடலில் விட்டு விடுகின்றனர். மேலை நாடுகளில் சிங்கிறால் உண்போர் பெருகி விட்டமையால், இதன் விலையும் மிகுதியாகி விட்டது.
ஐரோப்பியக்கடல் பகுதிகளில் பல வகைச் சிங்கிறால்கள் கிடைக்கின்றன. ஹோமாரஸ் கம்மாரஸ் (Homarus gammarus), மத்திய தரைக் கடலிலிருந்து நார்வே வரையிலும் கிடைக்கிறது. இது 32 செ.மீ. வளரக் கூடியது. நார்வேயைச் சுற்றி ஆழ்பகுதிகளில் நெஃப்ராப்ஸ் நார்வேஜிகஸ் (Nephrops norvegicus) என்னும் இனமும் கிடைக்கிறது. பா. பாலிபாகஸ் இனச் சிங்கிறால் அரபிக் கடலில் பம்பாய், குஜராத் பகுதிகளிலும் வங்காள விரிகுடாவில் பெங்கால் பகுதியிலும் பெருமளவு கிடைக்கிறது. ஆண் சிங்கிறால் 45 செ.மீ. நீளம் வளரும். மஞ்சள், நீல வண்ணப் புள்ளிகள் நிறைந்து காணப்படும்.
பாலினூரஸ் ஓர்னாட்டஸ் சிங்கிறால் தென் கிழக்குக் கடலோரங்களில் மிகுதியாகக் காணப்படும். அண்மைக் காலத்தில் கேரளத்தை அடுத்த ஆழ் கடல் பகுதியில், பியூருலஸ் சீவலி, பா. மொசாம்பிகஸ் இனச் சிங்கிறால் பெருமளவில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியாவில் தென் மேற்குக் கடற்கரையில் திருவனந்தபுரம், குளச்சல், முட்டம், கன்னியாகுமரி போன்ற பகுதிகளில், நவம்பர் மாதம் தொடங்கி ஏப்ரல் வரையிலும், கோழிக்கோடு, கண்ணனூர் கடற்பகுதியில் ஆகஸ்டு—அக்டோபர் வரையிலும், சிங்கிறால் பெருமளவில் கிடைக்கின்றது.
பாலினியூரிடே குடும்பத்தைச் சார்ந்த கிடுக்கிகளில்லாத சிங்கிறால், ஃப்ளோரிடா, மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆஃப்ரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசீலாந்து ஆகிய வெப்பக் கடல் பகுதிகளிலும், இந்தியாவில் மேற்கு, கிழக்குக் கடற்பகுதிகளிலும் கிடைக்கின்றது. இதன் தலை முன் பகுதியிலுள்ள முள், இரையைக் குத்தி மயக்கமடையச் செய்வதற்கும் எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கும் பயன்படுகிறது.
நவம்பர்—டிசம்பர் மாதங்களில் முட்டைகளுடன் கூடிய சிங்கிறால் பெருமளவில் காணப்படுவதிலிருந்து, இதன் இனப்பெருக்க காலங்களைக் கணிக்கலாம். இனப் பெருக்க காலம் இடத்திற்குத் தகுந்தவாறு மாறுபடுவதும் உண்டு. தென் இந்தியாவில் முட்டம் கடற்பகுதியில் இனப் பெருக்கத்திற்குரிய இயற்கைத் தளங்கள் உள்ளமை அறியப்பட்டுள்ளது. ஒரு முறை முட்டையிடும் போது, 2.4 லட்சம் கருத்தரித்த முட்டைகள் மீனின் மெல்லிய வயிற்று மயிர்ப் பகுதியில் அடர்த்தியாக ஒட்டிக் கொண்டிருக்கும். சிங்கிறாலின் வயதிற்குத் தக்கவாறு முட்டைகளின் எண்ணிக்கை மாறுபடும். நீரின் தட்ப வெப்ப நிலைகளுக்கேற்ப 15—20 நாள் வரை அடை காத்த பின்னர், இளம் குஞ்சுகள் வெளி வரும். ஆண் சிங்கிறால் 200 மி.மீ. அளவிலும், பெண் சிங்கிறால் 220 மி.மீ. அளவிலும் வளர்ச்சியடைந்த பின், இனப் பெருக்கத்திற்குரிய பருவத்தை இரண்டாம் ஆண்டில் அடையும். 10மீ ஆழத்திற்கும் மேற்பட்ட கடல் தளங்களில் இனப் பெருக்கத்திற்குரிய சிங்கிறால் நடமாடும். இனச் சேர்க்கை, ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே நிகழும்.
பா. பாலிபாகஸ் இனத்தைச் சார்ந்தவை சற்று ஆழ் கடலில் நகர்ந்து சென்று, இனப் பெருக்கம் செய்யும். முட்டையிலிருந்து வெளியேறும் இளம் குஞ்சுகள் ஃபில்லோசோமா இளவுயிரி எனப்படும். பார்ப்பதற்குச் சிறிய சிலந்திப் பூச்சியின் வடிவத்தில் தட்டையாக, மெல்லிய உடலோடு காணப்படும். சுமார் 15 முறை தோடு நீக்கி, மெதுவாக வளர்ச்சியடைந்து, பியூருலஸ் எனும் இளம் சிங்கிறால் உருவத்தை அடையும். இந்த அளவை அடையும் வரை, கடலின் மேற்பரப்பில் நீந்திக் கொண்டேயிருக்கும். ஏறத்தாழ, ஓர் ஆண்டு வளர்ச்சிக்குப் பின்னரே, தோற்றத்தில் சிங்கிறாலாக உருப் பெற்றுக் கடலின் அடியில் வாழத் தொடங்கும். ஆண் சிங்கிறால் சற்று விரைவாக வளரும் தன்மையுடையது. அடையாளமிடல் முறையில் அதன் வளர்ச்சி வேகம் மற்றும் நகருமிடம் இவற்றைக் கண்டறிந்துள்ளனர். கடல் நண்டுகளைப் போல், சிங்கிறாலும் ஆபத்துக் காலங்களில் தன் உடல் உறுப்புகளை, முக்கியமாகக் கால்களை உதிர்த்துக் கொள்ளவும், பின்னர் சில நாளில் தோடு நீக்கும் முறை வரும் போது, இழந்த கால்களைப் புதிதாகப் பெற்றுக் கொள்ளவும் ஏற்ற தன்மைகள் கொண்டுள்ளது.
வெளிச்சம் குறைவான இரவு நேரங்களில் சிங்கிறால் இரை தேடக் கிளம்பும். அழுகிப்போன பிற உயிர்கள் இதன் முக்கிய உணவாகும். வண்ணத்துப் பூச்சியின் தலையில் இருக்கும் உணர் தண்டுகளைப் போல் சிங்கிறாலுக்கும் இரண்டு இணை உண்டு. உணவு இருக்கும் இடத்தை உணர் தண்டுகள் மூலம் தெரிந்து கொள்ளும் ஆற்றல் இதற்கு உண்டு. மார்புப் பகுதியில் உள்ள 5 இணையான கால்கள் மூலம் உணவைக் கவ்வி எடுத்துக் கொண்டு, வாய்ப் பகுதியில் அமைந்துள்ள தகடு போன்ற உறுப்புகளின் உதவியால் அரைத்து உட்கொள்ளும். பெரும்பாலும், உயிருள்ள சிறிய உயிரிகளையே விரும்பி உண்ணும். பல காலிகள் இனத்தைச் சார்ந்த புழு, பூச்சி, சிறிய நண்டு, இறால் மீன், மெல்லுடலி உயிரினத்தைச் சார்ந்த லேசான ஓடுகளைக் கொண்ட போலாஸ், சோலன், காட்லீசியா, கள்ளிக்கா எனப்படும் மைடிலஸ் போன்ற சிப்பி ஆகியவை இதன் முக்கிய உணவாகும்.
அண்மைக் காலத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சித் திட்டங்களின் வாயிலாகச் சிங்கிறால் வளர்ப்பில் காணப்படும் பல்வேறு இடர்ப்பாடுகளைக் கண்டறிந்துள்ளனர். முட்டையிலிருந்து வெடித்து, வெளி வரும் சிங்கிறால் குஞ்சுகள் முழு வளர்ச்சியடைந்து இளமைப் பருவமடைய பல மாதங்கள் ஆகும். இளம் குஞ்சுகளுக்குத் தேவையான ஊட்டச் சத்து உணவுகளை அறிந்து கொள்ள வேண்டும். வளர்ப்பு முறையில் முக்கியமாகத் தேவைப்படும் தரமான நீர், நோய் தடுக்கும் முறை, பராமரிப்பு ஆகியவற்றில் முழு அளவிலான விவரங்களைச் சேகரிக்க வேண்டும். இவற்றைக் கருத்தில் கொண்டு, மைய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையம் அண்மைக் காலத்தில் சிங்கிறால் வளர்ப்பில் முக்கியத்துவம் அளித்துச் சில புதிய முறைகளைக் கண்டறிந்துள்ளது. இனப் பெருக்க முறைகளை மேற்கொள்ளப் பருவமடைந்த சிங்கிறால்களைச் சேகரித்து நிலையாக அவற்றைப் பேணுவதும், தூண்டுதல் முறையில் கருவடையச் செய்வதும், இளங்குஞ்சுகளை வளர்ப்பதும், அறுவடைக் காலம் வரை சிங்கிறால்களை வளர்ப்பதும் ஆராய்ச்சித் திட்டத்தில் உள்ள பல்வேறு நிலைகளாகும்.
சிங்கிறாலின் கண்களைத் துண்டிப்பது அல்லது சுடுவதன் மூலம் அதன் உடம்பில் வியத்தகு மாற்றங்கள் நிகழ்கின்றன. தோடு சுழற்றும் இடைக் காலம் குறைகிறது. மிகு வளர்ச்சி ஏற்பட்டு எடை கூடுதலாகிறது. சிங்கிறாலின் அளவைப் பொறுத்து, நாளொன்றுக்கு 4 கிராம் வரை எடை அதிகரிக்கும். இயற்கையாக நிகழும் வளர்ச்சித் திறனுடன் ஒப்பிடும் போது, இம்முறையில் 4 அல்லது 7 மடங்கு மிகுதியாக வளர்கிறது. எதிர் காலத்தில் சிங்கிறால் வளர்ப்பில் நல்ல சாதனைகளை ஏற்படுத்த கண்களைச் சேதப்படுத்தாமலே, வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்களைச் சுரக்கும் நாளமில்லாச் சுரப்பிகளைக் கண்டறிந்து, மாற்று வழியில் அவற்றை இயக்கும் முறைகளை ஆராயும் திட்டம் முன்னேறி வருகிறது. —இரா.மாரிசாமி
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 195)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k3z96xym/
தமிழ்“சிங்கிறால்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/k3z96xym/APA
Oliyon Research. (2026). சிங்கிறால். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k3z96xym/MLA
"சிங்கிறால்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/k3z96xym/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment