உதயசிங்கு
utayaciṅku
இராணா பிரதாபசிங்கின் தந்தை, இராசபுதன வரலாற்றில் சிறப்புப் பெற்றது மேவார்.
இராணா பிரதாபசிங்கின் தந்தை, இராசபுதன வரலாற்றில் சிறப்புப் பெற்றது மேவார். மேவார் இராணாக்கள் வீரச் செயல்களுக்குப் பெயர் பெற்றவர்கள். சித்தூர் மேவாரின் தலைநகராக விளங்கியது. இதனை இப்போது சித்தூர்கர் (Chitorgar) என்பர். உதயசிங்கு (Udai Singh) மேவாரின் இராணாவாக இருந்தகாலத்தில் மொகலாயப் பேரரசை அக்பர் ஆண்டுவந்தார். அக்பர் இராசபுதனத்தின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்ட போதும், அவரால் மேவாரைக் கைப்பற்ற இயலவில்லை.
அக்பர் சித்தூர்க் கோட்டையை கி.பி. 1567–ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முற்றுகையிட்டார். முற்றுகையை எதிர்க்க வகையறியாத உதயசிங்கு சித்தூரை விட்டு அருகிலிருந்த குன்றுகளுக்கு ஓடி விட்டார். சித்தூரை அத்தருணத்தில் செய்மால் (Jaimall), பட்டா (Patta) என்னும் வீரர் இருவர் காவல் புரிந்தனர். இவ்விருவரும் மொகலாயர்களின் முற்றுகையை எதிர்த்து நின்றனர். நான்கு மாதங்கள் தொடர்ந்த இம்முற்றுகை வரலாற்றுச் சிறப்புப் பெற்றது. மொகலாயரின் பெரும்படையை இராசபுத்திரரின் சிறுபடை நான்கு மாதங்கள் எதிர்த்துச் சமாளித்தது.
அக்பரின் துப்பாக்கிச் சூட்டிற்குச் செய்மால் இரையானார். பின்னர்ப் பட்டாவும் போரில் இறந்து பட்டார். திறன்மிக்க இவ்விரு வீரர்களின் சாவு இராசபுத்திரப் படை வீரர்களிடையே கலக்கத்தைக் தோற்றுவித்தது. கைகளில் உடைவாளேந்தி இராசபுத்திர வீரர்கள் மொகலாயப் படையைத் தாக்கினர். அவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். இராசபுத்திரப் பெண்கள் சவ்கர் (Jauhar) என்னும் தீமூட்டி அதில் குளித்துத் தம் உயிரினை மாய்த்துக் கொண்டனர். அக்பர் பின்னர்ச் சித்தூர்க் கோட்டையைத் தகர்த்து முன்னேறினார். இப்போரில் 30,000 பேர் இறந்துபட்டதாக அபுல் பசல் குறிப்பிட்டுள்ளார். எனினும் அவ்வளவு பேர் கொல்லப்பட்டதாகக் குறிக்கப்படுவது உண்மைக்குப் புறம்பானது என்பது வரலாற்றாசிரியர்களின் கூற்றாகும். சித்தூர் வீழ்ச்சியுற்றது. உதயசிங்கு சிந்தூரை இழந்து விட்ட போதிலும் மேவாரைத் தொடர்ந்து ஆண்டு வந்தார். இவர் மொகலாயருக்கு அடிபணிய மறுத்து விட்டார்.
இணையற்ற இம்மாவீர மன்னர் 3–3–1572–இல் கோகுண்டா (Gogunda) என்னுமிடத்தில் காலமானார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 902)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/k3587ntd/
தமிழ்“உதயசிங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/k3587ntd/APA
Oliyon Research. (2026). உதயசிங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/k3587ntd/MLA
"உதயசிங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/k3587ntd/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment