இதன் வேறு பெயர்கள் சிறு பீளை, கண் பீளை, சிறுக்கன் பீளை, பாஷாண பேதி, கற்பேதி என்பனவாகும். இதன் தாவரவியல் பெயர் ஏருவா லேனட்டா (Aeruva lanata). இதை ஏருவா ஃபுளோரிபண்டா (Aeruva florifunda) என்றும் கூறுவதுண்டு. நீண்ட நாள் வாழும் செடியான இது 30—60 செ.மீ உயரம் வளரும். உருண்டையான தண்டின் மீது சிறு மலர்கள் காணப்படும். தண்டில் சிறு காம்புடன் இலைகள் மாற்றடுக்கத்தில் தலை கீழ் முட்டை வடிவத்தில், மழுங்கிய நுனியைக் கொண்டிருக்கும். இலையின் அடிப் பகுதி குறுகியும், அடர்த்தியான மயிருடனும் காணப்படும். கிளைகளில் உள்ள இலைகள் சிறுத்திருக்கும். பூக்கள் சிறியவையாகக் காம்பற்றுப் பச்சை கலந்த வெள்ளை நிறத்தில் 0.4—13 செ.மீ நீளப் பூங்கொத்தாக இருக்கும். பூங்கொத்துத் தனியாகவோ, இரண்டு மூன்று சேர்ந்தோ இலைக் கக்கத்தில் காணப்படும். பூவடிச் செதில் ஒன்று. பூக்காம்புச் செதில்கள் சவ்வு போன்று இருக்கும். புல்லி இதழ்கள் 5 தனித் தனியாக நீள் சதுர வடிவிலும், முதுகுப் புறம் சிறு சிறு மயிர்களைக் கொண்டும் இருக்கும். மகரந்தத் தாள் ஐந்து, அடிப் பகுதியில் இணைந்து கிண்ணம் போலிருக்கும். சூல் பை மேல் மட்டச் சூல் பை வகையாகும். ஒற்றைத் திசுவறையைக் கொண்டிருக்கும். ஒரு சூல் இருக்கும். காய் ஊது பை (bladder) போன்றது. விதை அவரை விதை போன்று, வழவழப்பாகப் பளபளப்பான கருமை நிறத்தில் இருக்கும். மருத்துவக் குணங்கள். சிறு பீளை இலைச் சாறு, பெரும்பாடு, கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல் இவற்றைப் போக்கும். இதன் வேர்ப் பட்டை, பனை வெல்லம் இவற்றை மை போல் அரைத்துப் பாலில் கலக்கி, காலை, மாலை உட்கொள்ள மேற்கூறிய நோய்கள் நீங்கும். சிறு பீளை, சமூலம், சிறு நெருஞ்சில், மாவிலங்கை வேர், பேராமுட்டி வேர் ஆகியவற்றைச் சம அளவு எடுத்துப் போதிய அளவு நீர் சேர்த்து, எட்டில் ஒரு பங்காகச் சுண்டக் காய்ச்சி அருந்த, கல்லடைப்பு நீங்கும். —கோ. அர்ச்சுணன்