ஒரிசா மாநிலத்தின் முதலாம் பல்கலைக் கழகம். இப்பல்கலைக்கழகம் 1943–ஆம் ஆண்டில் நிறுவப் பெற்றது. ஓரிசா மாநிலத்தின் தலைநகரான புவனேசுவர் (Bhubaneswar) நகரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் வாணி விகார் (Vani Vihar) என்னுமிடத்தில் உட்கல் பல்கலைக்கழகம் (Utkal University) அமைந்துள்ளது. பட்ட மேற்படிப்பு வழங்கும் அனைத்துத் துறைகளும் பல்கலைக்கழகச் சட்டக் கல்லூரியும் வாணி விகார் வளாகத்தில் அமைந்துள்ளன. இப்பல்கலைக் கழகத்தைச் சார்ந்த மதுசூதன் சட்டக் கல்லூரி (Madhusudn Law College) கட்டாக்கு (Cuttak) நகரிலுள்ள பர்த்துவான் இல்லம் (Burdwan House) என்னும் 2 ஏக்கர் பரப்பளவுள்ள வளாகத்தில் அமைந்துள்ளது. உட்கல் பல்கலைக்கழகத்தில் மானிடவியல், தாவரவியல், வேதியியல், வணிகவியல், செயலறிவுப் பொருளியல் (Applied Economics), ஆங்கிலம், புவியியல், மண்ணியல் (Geology), வரலாறு, தொழிலாளர் நலவியல் (Labour Welfare), சட்டவியல், கணிதவியல், ஒரிய மொழி, தத்துவம், இயற்பியல், அரசியல், உளவியல், சமசுகிருதம், சமூகவியல், புள்ளியியல், விலங்கியல் ஆகிய 21 புலங்கள் உள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் கல்வியியல் புலம் இல்லை. பல்கலைக்கழகமே ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்துப் பணியமர்த்துகிறது. உட்கல் பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகள் (Affiliated Colleges) மொத்தம் 70 உள்- ளன. இவற்றுள் மிகுதியான கல்லூரிகள் புவனேசுவர், கட்டாக்கு, பூரி (Puri) ஆகிய நகரங்களில் அமைந்துள்ளன. உட்கல் பல்கலைக்கழகத்தில் 1974–ஆம் ஆண்டிலிருந்து அஞ்சல்வழித் தொடர் கல்வி நடைபெற்று வருகிறது. பள்ளிக் கல்வி முடித்தவர்களுக்கு இடைநிலைக் (Intermediate) கல்வியினை இப்பல்கலைக்கழகம் அஞ்சல்வழி வழங்குகிறது. வணிகவியல், கலையியல் பாடங்களில் இளநிலைப் பட்டக் கல்வியும் அஞ்சல்வழியே வழங்கப்படுகிறது. உட்கல் பல்கலைக்கழகத்தில் பயிற்று மொழியாகவும் தேர்வுமொழியாகவும் (Language of Instruction and Examination) ஆங்கிலமே இருந்து வருகிறது. உலகப் பல்கலைக்கழகப் பணிமையம் (World University Service Branch) இப்பல்கலைக்கழகத்தில் இயங்கி வருகிறது. இம்மையம் உலக நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கிடையே கல்வித் தொடர்பான உதவி, ஆராய்ச்சி, உறவு ஆகியவற்றை வளர்த்து வருகிறது. உட்கல் பல்கலைக்கழகத்தில் 1980–81–ஆம் கல்வியாண்டின்படி 70,215 மாணவர்களும், 16,955 மாணவியரும் கல்வி பயின்றனர். இவர்களுள் பட்ட மேற்படிப்பு மேற்கொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 3852 ஆகும். இக்கால ஐரோப்பிய மொழிகளான உருசியன் (Russian), பிரெஞ்சு (French}, செர்மன் (German) ஆகியவற்றில் ஈராண்டுப் பட்டச் சான்றிதழ் (Diploma), ஓராண்டுச் சான்றிதழ் (Certificate) பற்றிய வகுப்புகளும் உட்கல் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகின்றன. எம்.பில். (M.Phil.), பிஎச்.டி. (P.hD.). டி.லிட். (D.Litt), போன்ற பட்டங்கள் பெறுவதற்கும் உட்கல் பல்கலைக்கழகத்தில் வாய்ப்புகள் உண்டு. இப்பல்கலைக்கழகம் தகைமை மிக்க கல்வியாளர்களுக்கு பிஎச்.டி., டி.லிட்., டி.எசி. (D.Sc.) போன்ற மதிப்புப் பட்டங்களை (Honorary Degrees) வழங்கி வருகிறது.