இளநாகனார்
iḷanākaṉār
சங்க காலப் புலவர்களுள் ஒருவர்.
சங்க காலப் புலவர்களுள் ஒருவர். நாகன் என்பது இவர் இயற்பெயர். நாகனார் எனப் பெயரிய பலரினின்றும் வேறுபடுத்தி உணர இவர் இளநாகனார் என அழைக்கப்பட்டனராதல் வேண்டும். இளநாகன் என்னும் பெயரே இயற்பெயராகவும் வழங்கப்பட்டிருக்கலாம். இவர் தம் மூன்று பாடல்கள் நற்றிணையில் இடம் பெற்றுள்ளன (151, 205, 231). அவற்றுள், குறிஞ்சித் திணையில் அமைந்த பாடல் (151) இரவுக் குறியில் சிறைப்புறமாகத் தோழி கூறுவதாக உள்ளது. அதில் கடுவனால் புணரப்பட்ட பெண் குரங்கு, புணர்ச்சியால் உற்ற வேறுபாட்டினைத் தன்னுடைய சுற்றம் அறியாமைப் பொருட்டுச் சுனை நீரில் கவிழ்ந்து நோக்கிக் கலைந்த தன் உச்சி முடியினைத் திருத்திக் கொள்ளும் காட்சியினைக் கவினுறக் காட்டியுள்ளார். பாலைத் திணையிலமைந்த பாடல் (205) செலவழுங்கும் தலைவன் தன் நெஞ்சோடு கூறியதாகவும் செலவழுங்குமாறு தலைவன்பால் கூறியதாகவும் அமைந்துள்ளது. இதன்கண் மலைப்பக்கத்தில் புலியால் அடிக்கப்பட்ட வலிய யானையை ஆளி என்னும் விலங்கு இழுத்துச் செல்லும் காட்சியினைக் குறிப்பிட்டுள்ளார். தோழி சிறைப்புறமாகத் தலைவனிடம் கூறி, வரைவு கடாவும் பாங்கிலமைந்த நெய்தல் திணைப்பாடலில் (231) கரிய அடிமரத்தையுடைய புன்னைமரத்தின் பேரரும்பு மலர்ந்துள்ளமைக்கு, மலையிலுள்ள ஊர்க்குருவியின் முட்டையை உடைத்தாலமையும் தோற்றத்தை உவமையாகக் கூறியிருப்பது நயமிக்கதாகும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 485)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jyusgpay/
தமிழ்“இளநாகனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jyusgpay/APA
Oliyon Research. (2026). இளநாகனார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jyusgpay/MLA
"இளநாகனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jyusgpay/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment