பொருளணி வகைகளுள் ஒன்று. ஒரு பொருள் அதற்குரிய சொல்லால் சொல்லப்படாமல் கேட்போரை மகிழ்விக்கும் வகையில் சொல்லப்படுவதும் அது அப்பொருள் அன்று எனத் தெரிந்திருந்தும் தன் விருப்பத்தினால் ஆகும் என்று கொள்ளப்படுவதும் ஆகிய ஆரோப (ஒன்றின் மேல் ஏற்றிக் கூறல்) நிச்சியத்திற்குப் பொருளாவதும் ஆகும் என்று விசாகப் பெருமாளையர் இவ்வணியை விளக்கியுள்ளார். ஒன்றனை மிகவும் உயர்த்திக் கூறுவது என்பது சொற்பொருளாகும். இவ்வணியை வடநூலார் அதிசயோக்தியவங்காரமென்பர். இந்த அணி உருவக உயர்வு நவிற்சி, ஒழிப்புயர்வு நவிற்சி, பிரிநிலை உயர்வு நவிற்சி, தொடர்புயர்வு நவிற்சி, முறையிலுயர்வு நவிற்சி, விரைவு உயர்வு நவிற்சி, மிகையுயர்வு நவிற்சி என ஏழு வகைப்படும். உருவக உயர்வு நவிற்சி என்பது பொருளைச் (உவமேயத்தை) சொல்லால் சொல்லாமல், உவமானச் சொல்லினால் இலக்கணையாகச் சொல்லுவதாகும். ‘புயலே சுமந்து பிறையே அணிந்து பொருவிலுடன், கயலே மணந்த கமல மலர்ந்தொரு கற்பகத்தின், அயலே பசும்பொற் கொடி நின்றதால்’ என்னும் செய்யுட் பகுதியில் புயல் முதலிய உவமானச் சொற்களால், கூந்தல் முதலிய உவமேயங்கள் இலக்கணையாகச் சொல்லப்பட்டுள்ளன. பைங்கொடி போன்ற ஒரு தலைவி சோலையில் கற்பக மரத்தின் நிழலில், புயல் போன்ற கூந்தலையும் பிறைபோன்ற நுதலையும் வில்போன்ற புருவத்தையும் கயல் போன்ற கண்ணையும் மலர்ந்த தாமரை போன்ற முகத்தையுங் கொண்டு நின்றாள் என்பதனை இவ்வாறு கூறாமல், புயலைச் சுமந்தும் பிறையை அணிந்தும் வில்லுடன் கயலை மணந்ததுமாகிய தாமரை மலர்ந்த ஒரு பசுங்கொடி கற்பகத்தின் அயலிலே நின்றது என்று கூறியுள்ளார். தலைவியின் கூந்தல், நுதல் முதலியன இலக்கண வகையால் புயல் பிறை முதலியனவாகக் கற்போர் அதிசயிக்குமாறு கற்பனை நயம்படக் கூறப்பட்டிருத்தலால் இது உருவக உயர்வு நவிற்சி அணியின்பாற்படும்.