இக்கால அரசுகளெல்லாம் இறைமை அல்லது தன்னாட்சி உடைய நாடுகள் (Sovereign of Free States) ஆகும். ஒவ்வோரரசும் தன் சமூக, பொருளாதார, அரசியலமைப்புகளை மற்றொன்று தாக்கி அழித்துவிடாதபடி தடுப்பதற்காகவும், ஓரரசு ஏதேனுமொரு வல்லரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்து, அதன் விளைவாக அவ்வல்லரசின் சமூக, அரசியல், பொருளாதார அமைப்புகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகாமல் தடுப்பதற்காகவும். முதலில் தனது படைவலிமையைப் பெருக்கி அதன் வாயிலாகத் தனது தன்னுரிமையைக் (Independence or Freedom) காத்துக் கொள்ளுகிறது. தனது படைவலி தற்காப்புக்குப் போதுமானதாக இல்லாவிட்டால் அது மற்ற நாடுகளின் உதவியை இராணுவக் கூட்டு ஒப்பந்தங்களைச் செய்து (Military Alliances) பெறுகிறது. ஆகையால், இக்கால நாடு ஒவ்வொன்றும் தனது படைவலியையும், தனது அரசியல் சூழ்வலியையும் (Diplomatic Strength) பெருக்கிக் கொள்ளும் நோக்கத்துடனேயே தனது பொருளாதார வளர்ச்சியையும், அயல்நாட்டுக் கொள்கையையும் உருவாக்குகிறது. அது தனது அரசியல் சூழ்வலியின் விளைவாகத் தனக்கு உதவக்கூடிய வலுவான நாடுகளை நண்பர்களாகப் பெற முயலுகிறது. ஐரோப்பிய நாடுகள் பலவும் கி.பி. 16–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே நிலமானிய முறையை நீக்கிவிட்டு (Feudal System), ஒவ்வொன்றாகத் தன்னாட்சி உரிமைபெற்ற தேசிய அரசாக (Nation States) ஆயிற்று. இச்சூழ்நிலையில்தான் இராணுவக் கூட்டு ஒப்பந்தங்கள் (Military Alliances) செய்யும் அயல்நாட்டுக் கொள்கை உருவாயிற்று. ஐரோப்பாவில் கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் பிரஞ்சு நாட்டிற்கெதிராக இங்கிலாந்து, ஆலந்து (Holland), ஆசுத்திரியா (Austria) முதலிய நாடுகளெல்லாம் இராணுவக் கூட்டு ஒப்பந்தங்கள் செய்து கொண்டு தற்காப்புப் போர்களைச் செய்தன. பிரஞ்சு மாவீரன் நெப்போலியனுக்கெதிராகப் பிரிட்டனின் தலைமையில் ஆசுத்திரியா (Austria), பிரசியா (Prussia) உருசியா (Russia), முதலியவை தம் படைகளை இணைத்துப் போரிட்டன. நெப்போலியன் தோற்கடிக்கப்பட்ட பின்னரும் வெற்றி பெற்ற ஐரோப்பிய நாடுகள் புனிதக் கூட்டு ஒப்பந்தம் (Holy Alliances) என்ற பெயரில் ஓர் இராணுவ ஒப்பந்தம் செய்துகொண்டன. இவ்வொப்பந்தம் நெடுநாள் நீடிக்கவில்லை. கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் பிரசியாவின் தலைமையில் செருமனி (Germany) ஒரு வல்லரசாக இணைந்து தோன்றியதால் அதற்கெதிராகப் பிரிட்டனும் பிரான்கம் ஒன்றுக்கொன்று படை உதவி செய்து காப்பதென்று நேச உடன்படிக்கை என்ற இருநாட்டு ஒப்பந்தம் (Entente Cordiaic) செய்து கொண்டன. பின்னர் உருசிய நாடும் ஆசுத்திரியாவுக்கு எதிரான இவ்வொப்பந்தத்தில் சேரவே, இது முக்கூட்டு ஒப்பந்தம் (Triple Entente) என்று ஆயிற்று. இவற்றுக்கு எதி- ராகச் செருமனியும் ஆசுத்திரியாவும் பின்னர்ப் பல்கேரியாவும் துருக்கியும் சேர்த்து ஒரு நாற்கூட்டு ஒப்பந்தம் (Quadruple Alliance) செய்து கொண்டன. இவையே முக்கூட்டு ஒப்பந்த நாடுகளுக்கெதிராக முதலாம் உலகப்போரை நடத்தித் (1914–18) தோல்வியுற்றன. இரண்டு உலகப்போர்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் செருமனியிலும் இத்தாலியிலும் நாசிச, பாசிச சருவாதிகார ஆட்சிகளும் சப்பான் நாட்டில் இராணுவச் சருவாதிகார ஆட்சியும் தோன்றின. இவை மூன்றும் நாடுபிடிக்கும் நோக்கத்தோடு செய்து கொண்ட ஓர் இராணுவக் கூட்டு ஒப்பந்தமே உரோம்–தோக்கியோ அச்சுப் பெர்லின் ஒப்பந்தம் (Rome Berlin Tokyo Axis) என்று கூறப்படும். இவ்வச்சு நாடுகளே இரண்டாம் உலகப்போரைத் தொடங்கி, நடத்தித் தோற்றன. இவற்றின் படைத் தாக்குதலைத் தடுத்துத் தங்களுடைய குடியாட்சி அரசியலமைப்பையும், தன்முயற்சிப் பொருளாதாரத்தையும் (Economy of Free Enterprise) பாதுகாத்துக் கொள்ளுதற்காக ஐக்கிய அமெரிக்க நாடு (U.S.A.), பிரிட்டன், பிரான்சு முதலிய மேற்பகுதிய நாடுகள் தம் படைகளை ஒன்று சேர்த்தன; இவையே ஐக்கிய நாடுகள் (United Nations) என அழைக்கப்பட்டன; போரில் செருமனி உருசியாவைத் தாக்கவே, உருசியா தனது பொதுவுடைமைப் பொருளாதார அமைப்பையும், அதை ஆதாரமாக உடைய அரசியலமைப்பையும் பாதுகாக்கும் பொருட்டு ஐக்கிய நாடுகளுடன் சேர்ந்து போரிட்டது. இரண்டாம் உலகப்போரில் ஐக்கிய நாடுகள் வெற்றி பெற்றாலும் அவற்றின் குறிக்கோள்களெல்லாம். நிறைவேறக் கூடிய வாய்ப்புத் தோன்றவில்லை. பொதுவுடைமை நாடான சோவியத்து உருசியா நாட்டிற்கு உலகத்தில் பல நாடுகளின் ஆதரவு பெருகலாயிற்று. இது கண்ட மேலைஐரோப்பிய நாடுகளும், ஐக்கிய அமெரிக்க நாடும் தத்தம் அரசியல், பொருளாதார அமைப்புகளுக்கு ஆதாரமாக இருக்கும் தனியார் உரிமைக் கோட்பாட்டைப் பாதுகாப்பதற்காகவும், உருசியாவின் படைவலியைத் தடுப்பதற்காகவும் ஒப்பந்தம் செய்து கொண்டன. இக்காலப்போர் முறை அணு ஆற்றல் முதலிய பேரழிவைத் தரவல்ல கொடிய கருவிகளை உடையதாகையாலும், மேற்கத்திய நாடுகளும் உருசியாவும் அணுக்கருவி செய்யும் தொழிலியலில் முன்னேறியிருப்பதாலும், இருவகை நாடுகளும் அதிலும் சிறப்பாக ஐக்கிய அமெரிக்க நாடும், சோவியத்துப் பேரிணையமும் (Sovit Union) வல்லரசு (Super Power) என்ற நிலையை எய்தி இருப்பதாலும், – ஒன்றை மற்றொன்றும், இரண்டுமே உவகத்தையும் அச்சுறுத்திச் கொண்டிருக்கின்றன. இத்தகைய அஞ்சத்தக்க சூழ்நிலையில் உருவானவைதாம் ஐக்கிய அமெரிக்க நாட்டின் முயற்சியால் தோன்றிய வட அட்லாண்டிக்குக் கூட்டு ஒப்பந்தம் (North Atlantic Treaty Organisation or NATO) என்ற இராணுவக் கூட்டு ஒப்பந்தமும், சோவியத்துப் பேரிணையத்தின் முயற்சியால் தோன்றிய வார்சா ஒப்பந்தமெனப்படும் (Warsaw Pact) எதிர் இராணுவக் கூட்டு ஒப்பந்தமும் ஆகும். வடஅட்லாண்டிக்கு ஒப்பந்தம் எனப்படும் ஒரு கூட்டுத் தற்காப்பு ஒப்பந்தத்தை (A Collective Defence Treaty) ஆதாரமாகக் கொண்டு பெல்சியம், கனடா தென்மார்க்கு, பிரான்சு, மேற்குச் செருமனி, கிரீசு, ஐசுலண்டு, இத்தாலி, இலக்சம்பர்க்கு, நெதர்லாந்து, நார்வே, போர்ச்சுகல், இசுபெயின் (Spain), துருக்கி, ஆங்கிலப் பேரரசு, ஐக்கிய அமெரிக்க நாடு முதலிய நாடுகளால் அமைக்கப்பட்டதுதான் வடஅட்லாண்டிக்குக் கூட்டு ஒப்பந்த இராணுவ அமைப்பு ஆகும். ஐரோப்பாவில் சோவியத்து நாட்டினால் நிறுவப்பட்டிருக்கும் படை வலிமைக்கு எதிராக ஓர் இராணுவ அணியை நிறுவுவதே இதனுடைய சிறப்பான நோக்கமாகும். பிரான்சு நாடு இராணுவத் தலைமையிலிருந்து 1982 ஆம் ஆண்டிலிருந்து விலகிற்று. ஆயினும், அது இவ்வமைப்பின் ஓர் உறுப்பினராகத் தொடர்ந்து இருக்கிறது. இக்கூட்டின் நோக்கம் இவ்வொப்பந்தத்தின் 5–ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ளது. இவ்வொப்பந்தக்காரர்களுள் (Parties), எவர் மீதோ, அவருள் பலர் மீதோ நடத்தப்படும் தாக்குதல் அவர் யாவர் மீதும் நடத்தப்படும் தாக்குதலாகக் கருதப்படும். ஆகையால் அவர்கள் யாவரும் அத்தகைய தாக்குதலுக்கு உள்ளான நாட்டிற்கு அல்லது நாடுகளுக்கு உதவி செய்தல் வேண்டுமென்றும், வட அட்லாண்டிக்குப் பகுதியில் பாதுகாப்பை மீண்டும் நிறுவிப் பாதுகாத்தல் வேண்டுமென்றும் ஒத்துக்கொள்ளுகின்றனர். இவ்வொப்பந்தத்தின்படி பாதுகாக்கப்பட வேண்டிய இடங்கள் ஐரோப்பாவும், வடஅமெரிக்காவும், வட அயனக் கோட்டிற்கு (Tropic of Cancer) வடக்கே உள்ள அட்லாண்டிக்குப் பகுதியும், மத்திய தரைக் கடற் பகுதியும் ஆகும். இவ்வொப்பந்தப்படி ஐக்கிய அமெரிக்க நாடு 1949–1955–ஆம் ஆண்டுகளில் மேற்குச் செருமனி நாட்டிற்குப் பெருமளவில் பொருளாதார, இராணுவ உதவிகளை அளித்தது. பின்னர் 1955–1967–இல் இவ்வொப்பந்தத்தின் முன்னணி நாடாகிய ஐக்கிய அமெரிக்க நாடு ஐரோப்பாவில் படைவலியைப் பெருக்கி, சக்தி சமநிலையை உருவாக்கி, அணு ஆற்றலின் அடிப்படையில் இராணுவ வலிமையைச் சீர்படுத்திற்று. இதனால், சோவியத்து ஆதிக்கம் பரவுதல் தடைப்படுத்தப்பட்டது. இரு வல்லரசுகளுக்கு- மிடையே உள்ள நெருக்கடி நிலைமை சிறிதும் குறையவில்லை. இவ்வொப்பந்தம் தொடர்ந்து செயற்படுதலில், படைச்செலவுகளைப் பகிர்ந்து கொள்ளுதல், உறுப்பு நாடுகளில் நீண்ட தொலைவு அணுக்கருவி நிலையங்களை ஏற்படுத்துதல் முதலியவை பற்றிச் சில சிக்கல்கள் எழுந்தன. இவ்வொப்பந்தத்தைச் செயற்படுத்துதற்கு ஒரு குழுவும் (Council) ஒரு தற்காப்புத்திட்டக் குழுவும் (Defence Planning, Committee), ஓர் அனைத்து நாடுகள் செயலகமும் (International Secretariat), நேச நாடுகளின் படைத்தளபதிகளை உறுப்பினர்களாக உடைய ஓர் இராணுவக் குழுவும் இருக்கின்றன. இதன் இராணுவத் தலைமையகம் பெல்சிய நாட்டிலுள்ள காசிட்டு (Casteau) என்ற நகரத்தில் உள்ளது. இவ்வொப்பந்தத்தின் பாதுகாப்புக்கு உட்பட்ட அட்லாண்டிக்கு ஆங்கிலக் கால்வாய், வடஅமெரிக்கா ஆகிய பகுதிகளுக்குரிய படைத் தலைமையகங்கள் இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்க நாடு ஆகியவற்றில் அமைக்கப்பட்டிருந்தன. வார்சா ஒப்பந்தம் (Warsaw Pact) என்பதைச் சோவியத்துப் பேரிணையமும், அதனுடைய சார்பு நாடுகளாகிய (Satellites) பல்கேரியா, செக்கோசுலேவேகியா, கிழக்குச் செருமனி, அங்கேரி, போலந்து, உருமேனியா முதலியனவும் சேர்ந்து 1955–ஆம் ஆண்டு மே 14–ஆம் நாளன்று ஏற்படுத்தின. இதற்கு நட்பு, ஒத்துழைப்பு, ஒருவருக்கொருவர் உதவிசெய்தல் ஆகியவற்றுக்கான ஒப்பந்தம் என்று பெயர். இந்நாடுகளின் ஒருங்கிணைக்கப்பட்ட இராணுவத் தலைமையை ஏற்படுத்தவும், இவ்வொப்பந்த நாடுகளிலே சோவியத்து இராணுவத்தை நிறுத்தவும் இவ்வொப்பந்தம் வழி செய்கிறது. வார்சா ஒப்பந்த இராணுவத்தில் இப்போது 4,750,000 போர் வீரர்களுள்ளனரென்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த இராணுவ ஒப்பந்தத்தைச் சோவியத்துப் பேரிணையம் தோற்றுவித்ததற்குக் காரணம் மேலை நாடுகள் மேற்குச் செருமனியை 1955–ஆம் ஆண்டில் வடஅட்லாண்டிக்கு ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொண்டதேயாகும். இதன் வாயிலாகச் சோவியத்துப் பேரிணையம் தனது பிடியைத் சார்பு நாடுகளின் மீது வலுவாக்க முயலுகிறது. பன்னாட்டு அரசியல் சூழ்வலியிலே (International Diplomacy) சோவியத்தும் பேரிணையத்துக்கு இருக்கக்கூடிய பேரம் பேசும் நிலையை (Bargaining Position) வலுப்படுத்துவதற்கு ஒரு நெம்புகோலாக (Lever) இவ்வொப்பந்தம் கையாளப்படுதல் வேண்டுமென்பது இவ்வொப்பந்தத்தின் கடைசிப் பிரிவிலிருந்தே தெரிய வருகிறது. கீழை நாடுகளுக்கும் மேற்பகுதிய நாடுகளுக்குமிடையே ஒரு பொதுவான பாதுகாப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தவுடனே, வார்சா உடன்படிக்கையானது நடைமுறைக்கு வாராமல் மறைந்துவிடும். சோவியத்துப் படைகளைச் சார்பு நாடுகளில் நிறுத்துதல் வேண்டுமென்ற வார்சா ஒப்பந்தத்தின் பிரிவை எதிர்த்து, 1956–ஆண்டில் போலந்திலும் அங்கேரியிலும் தேசியக் கிளர்ச்சிகள் நடந்தன. சோவியத்துப் படைகள் அக்கிளர்ச்சிகளை வார்சா ஒப்பந்தப்படைகள் என்ற பெயரில் ஒடுக்கின. செக்கோசுலேவேகிய அரசாங்கம் பேச்சுரிமையின் மீதுள்ள தடைகளை நீக்கி, மேற்குச் செருமனியோடு நட்புறவு ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்த அளவிலே, 1968–ஆம் ஆண்டு ஆகசுட்டு மாதத்தில் சோவியத்துப் பேரிணையம் வார்சா ஒப்பந்தப் படைகளை அந்நாட்டினுள் புகச்செய்தது, அதனைத் தனது கூட்டில் மீண்டும் கொண்டுவந்தது. பொதுவுடைமை நாடான சீனாவுக்கு எதிராக ஐக்கிய அமெரிக்க நாடு தென்கிழக்காசிய ஒப்பந்தம் (South East Asian Treaty Organisation) என்ற ஓர் இராணுவக் கூட்டு ஒப்பந்தத்தையும் அமைத்தது. ஆனால், ஐக்கிய அமெரிக்காவும் பொதுவுடைமைச் சீனாவும் நண்பர்களாக ஆகிவிட்டபடியால், மேற்படி ஒப்பந்தம் வலுவான ஒன்றாக இல்லை.