இலைபீரியாவில் கல்வி
ilaipīriyāvil kalvi
மனித ஆற்றல்களை நாட்டில் வளர்ப்பதும், ஊர்ப் புறங்களில் சமூக உறவுப் பள்ளிகளைப் (Community Schools) பெருக்குவதும், நாட்டின் தேவைகளை ஒட்டிய கல்வியை வழங்குவதும் இலைபீரிய (Liberia) நாட்டுக் கல்வியின் உயர்ந்த குறிக்கோள்களாகக் கருதப்படுகின்றன.
மனித ஆற்றல்களை நாட்டில் வளர்ப்பதும், ஊர்ப் புறங்களில் சமூக உறவுப் பள்ளிகளைப் (Community Schools) பெருக்குவதும், நாட்டின் தேவைகளை ஒட்டிய கல்வியை வழங்குவதும் இலைபீரிய (Liberia) நாட்டுக் கல்வியின் உயர்ந்த குறிக்கோள்களாகக் கருதப்படுகின்றன.
தொடக்கப் பள்ளிக் கல்வியின் கால அளவு ஆறு ஆண்டுகள், முதல் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளியில் உள்ளன. தொடக்கப் பள்ளிக் கல்விக்கு முன்பாக மழலையர் கல்வி வழங்கும் பள்ளிகளும் இங்கு உண்டு. தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 6 வயதிலிருந்து 11 வயது நிறைந்த மாணவர்களின் எண்ணிக்கை 36 விழுக்காடு.
இந்நாட்டில் உயர்நிலைப் பள்ளிக் கல்வி (Junior High School Education) மூன்று ஆண்டுகள். மேல்நிலைப் பள்ளிக் கல்வி (Senior–High School Education) யும் மூன்று ஆண்டுகளே. இலைபீரியாவில் 1980–ஆம் ஆண்டுக் கணக்கின்படி, ஏறத்தாழ 1,700 தொடக்கப் பள்ளிகளும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் இருந்தன. ஆங்கிலமே பள்ளிகளில் பயிற்று மொழியாகும். இங்கு அரசுப் பள்ளிகள் மட்டுமன்றித் தனியார் பள்ளிகளும் உள்ளன. தொடக்கப் பள்ளி, உயர் நிலைப் பள்ளிகளில் 35 விழுக்காடு பள்ளிகள் தனியாருக்குச் சொந்தமானவை.
இலைபீரியக் கல்வி அமைச்சகத்தின் கண்காணிப்பின்கீழ், வாழ்க்கைத் தொழில், தொழில் நுட்பப் பள்ளிகள் (Vocational and Technical Schools) செயற்பட்டு வருகின்றன. இவற்றில் 1,300 மாணவர்கள் (1980–ஆம் ஆண்டுக் கணக்கின்படி) பயின்றனர். இவற்றில் இயந்திரத் தொழில்நுட்பக் கல்வியிலிருந்து வேளாண்மைக் கல்வி உட்படச் செயலகப் பணிக் கல்வி (Secretarial Science) வரை கற்பிக்கப்படுகின்றன. இவை தவிர, நாட்டிலுள்ள பல தொழிற்சாலைகளுடன் இணைந்த தொழிற் பயிற்சிப்பள்ளிகளும் உள்ளன.
சோரார் (Zorror), ககாதா (Kakata) ஆகிய இடங்களில் மொத்தம் இரண்டு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இங்குச் சேருபவர்கள் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பயிற்சியோ உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் பயிற்சியோ பெறலாம். உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் பயிற்சி பெறுபவர்களுக்கு மட்டும் கணிதம், அறிவியல் பாடங்களில் அல்லது மொழி சமூகவியல் பாடங்களில் பயிற்சி பெறும் வசதியும் உண்டு.
உயர் கல்வியைப் பொறுத்தவரை இலைபீரியா இன்னும் முன்னேறவில்லை. இந்நாட்டு மக்கள் தொகையுள் 1974–ஆம் ஆண்டுக் கணக்கின்படி, ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான மாணவர்களே கல்லூரியிலோ பல்கலைக் கழகத்திலோ சேர்ந்து பயின்றனர். இலைபீரியப் பல்கலைக் கழகம் (University of Liberia), கட்டிங்டன் பல்கலைக் கழகக் கல்லூரி (Cuttington University College) ஆகிய இரண்டிலும் 1980 ஆம் ஆண்டுக் கணக்கின்படி, பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை நானூறு மாணவர்களுக்கும் சற்றுக் குறைவே. உயர் கல்வியில் வணிகவியல் தொடர்பான பாடங்களில் 40 விழுக்காடு மாணவர்களும், அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், கல்வியியல், வேளாண்மை மற்றும் வனவியல் (Forestry) போன்ற புலங்கள் ஒவ்வொன்றிலும் 10 விழுக்காடு மாணவர்களும் சேர்ந்து பயின்றனர். சட்டவியல், மருத்துவம், சமூக அறிவியல் பாடங்கள், செவிலிப் பணியியல் (Nursing), இறையியல் போன்ற புலங்கள் அனைத்திலும் 30 விழுக்காடு மாணவர்களே சேர்ந்திருந்தனர்.
வயது வந்தோர் கல்வி
இந்நாட்டின் முறைசாராக் கல்வியை விரிவுபடுத்தும் முயற்சிகள், ஆயிரத்துத் தொளாயிரத்து எழுபதுகளில் எடுக்கப்பட்டன. இப்பள்ளிகள் வேளாண்மைத் தொடர்பான பணித்திறன்கள், குடும்ப வாழ்க்கைப் பொருளியல், கலைப் பொருள், கைத்தொழில்கள் போன்றவற்றில் பயிற்சி தருகின்றன. இவற்றுடன் இப்பள்ளிகள் வழக்கமான பள்ளிப் பாடங்களையும் நடத்தி வருகின்றன.
இலைபீரியாவில் எழுதப் படிக்கத் தெரிந்த மக்கள் தொகை (1980–ஆம் ஆண்டுக் கணக்கின்படி) 70.5 விழுக்காடு; எழுதப்படிக்கத் தெரிந்த ஆண்கள் 58.4 விழுக்காடும் பெண்கள் 12.1 விழுக்காடும் ஆகும். இலைபீரியா தேசிய வயது வந்தோர் கல்விக்கழகம் (Liberian National Adult Education Association) 1977–ஆம் ஆண்டில், தொடங்கப் பெற்றது. இக்கழகம் வயது வந்தோர் கல்விப் பணிகளைச் செயற்படுத்துவதில் கல்வி அமைச்சகத்துக்கு உதவியாக இருந்து வருகிறது. வயது வந்தோர்க்குக் கல்வி கற்பிக்க 300 ஆசிரியர்களும், கல்வி பயில்வோர் 6,000க்கு மேற்பட்டோரும் உள்ளனர். ஒவ்வொரு மாவட்ட அளவிலும் (Counties) பணியமர்த்தப்பட்ட பல மேற்பார்வையாளர்கள் இப்பணியில் உள்ளனர்.
உலக வங்கி வயது வந்தோர் கல்விப் பணிப் போக்குவரத்துக்காகப் பயன்பாட்டு ஊர்திகள் (Jeeps) வாங்க நிதியுதவி செய்துள்ளது; மேலும், வயது வந்தோர் கல்வி பற்றி இந்நாட்டில் ஆய்வு செய்வதற்கும் அவ்வங்கி ஆய்வுதவித் தொகைகளையும் (Fellowships) வழங்கியுள்ளது.
நிருவாகம்
இலைபீரியாவின் கல்வி அமைச்சகமே கல்விச் செயல்களுக்கான உயர் அலுவலகமாகும். இந்நாட்டில் பொதுக் கண்காணிப்புச் செயலகம் (Bureau of General Supervision) ஒன்று முதல் பன்னிரண்டு வரையிலான கல்விப் பொறுப்புகளை மேற்பார்வை செய்து வருகிறது. வாழ்க்கைத் தொழில் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கனைத் தொழில் நுட்பக் கல்விச் செயலகம் (Bureau of Professional and Technical Education) மேற்பார்வை செய்து வருகிறது. இலைபீரிய அரசு 1980–ஆம் ஆண்டுக் கணக்கின்படி கல்விக்காகத் தேசிய வரவு செலவுத் திட்டத்தில் 12 விழுக்காடு நிதி மட்டுமே ஒதுக்கியுள்ளது. கல்விக்காகக் குறைந்த செலவு செய்யும் நாடுகளுள் இலைபீரியாவும் ஒன்று.
தொடக்கப் பள்ளிக் கல்வியும், 1972–ஆம் ஆண்டிலிருந்து மேல்நிலைப் பள்ளிக் கல்வியும் இந்நாட்டில் இலவசமாக்கப்பட்டுவிட்டன. பல்கலைக் கழக மாணவர்களுக்குப் பாடநூல் வாங்குதல், கல்விக் கட்டணம் போன்றவற்றிற்கும் அரசு நிதியுதவி செய்கிறது.
ஆசிரியர், ஆசிரியர் பயிற்சி
தொடக்கப் பள்ளிகளிலும் மேல்நிலைப் பள்ளிகளிலும் ஏறத்தாழ 9,000 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். ஆசிரியர் பட்டத்திற்கென்று உயர் கல்வி நிறுவனங்கள் 1979–ஆம் ஆண்டு வரை தொடங்கப் பெறாத காரணத்தால், இங்குப் பணிபுரியும் ஆசிரியர்கள் பலரும் ஆசிரியர் கல்வித்தகுதி பெறாதவர்களே, இப்போது இலைபீரியப் பல்கலைக் கழகம், கட்டிங்டன் பல்கலைக் கழகக் கல்லூரி ஆகியன மாணவர்களுக்குச் சிறிய அளவில் ஆசிரியர் கல்வியியலில் பயிற்சி அளித்து வருகின்றன.
கல்வித் திட்டம்
இலைபீரிய நாட்டின் தேவைகளை ஒட்டிக் கற்பித்தலைச் சீர்திருத்தும் திட்டம் ஒன்று 1973–ஆம் ஆண்டில் தொடங்கப் பெற்றது. புதிய கல்வித் திட்டம் தொடக்கப் பள்ளிகளில் 1980–ஆம் ஆண்டிலிருந்தும் மேல்நிலைப்பள்ளிகளில் 1981–ஆம் ஆண்டிலிருந்தும் நடைமுறைப் படுத்தப்பட்டது. கல்வித் திட்டத்தை உருவாக்குவதற்கென்றே இந்நாட்டில் பதினான்கு கல்வித் திட்ட மையங்கள் (Curriculum Centres) செயற்பட்டு வருகின்றன.
தேர்வு முறை
தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களை ஒரு வகுப்பிலிருந்து மேல் வகுப்பிற்கு அனுப்புவதை ஆசிரியர்களே முடிவு செய்கின்றனர்; உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் குழு இதை முடிவு செய்கிறது. ஒன்பதாம் வகுப்பிலும் பன்னிரண்டாம் வகுப்பிலும் மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் தேர்வுகளை எழுதுகின்றனர். இத்தேர்வுகளின் அடிப்படையிலேயே மாணவர்கள் உயர்கல்விக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
கல்வியாய்வு
இந்நாட்டில் கல்வியாய்வுகள் மிகக் குறைந்த அளவிலேயே இதுவரை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. சமூக உறவுப் பள்ளிகளைப் (Community Schools) பற்றிய ஆய்வும், வயது வந்தோர் கல்வி பற்றிய ஆய்வு மட்டுமே இதுவரை நடந்த ஆய்வுகளுள் குறிப்பிடத்தக்கன.
இலைபீரியக் கல்வி அமைப்பில், சில சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும். பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்பப் பள்ளிகள் பெருகவில்லை. பள்ளிகளின் எல்லா நிலைகளிலும் பயிற்சி பெறாத ஆசிரியர்களே கற்பிக்கின்றனர். கல்வியாளர்களுக்கு ஊதியம் குறைவாகத் தரப்படுகிறது. இங்கு வாழும் பழங்குடியினர் தகுந்த தாய் மொழி அறிவோடு பள்ளியில் சேர்ந்த போதிலும் ஆங்கிலமே பயிற்று மொழியாக இருப்பதால், மாணவர்கள் ஒரே வருப்பில் ஓராண்டுக்கு மேலே பயில வேண்டிய நிலை இன்றும் இலைபீரியாவில் உள்ளது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 456)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jst4srzm/
தமிழ்“இலைபீரியாவில் கல்வி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jst4srzm/APA
Oliyon Research. (2026). இலைபீரியாவில் கல்வி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jst4srzm/MLA
"இலைபீரியாவில் கல்வி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jst4srzm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment