கிழக்கு ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள குடியரசு நாடு, வடக்கில் சூடானும் (Sudan), தெற்கில் தான்சானியாவும் (Tanzania) உரூவாண்டாவும் (Rwanda), கிழக்கில் கென்யாவும் (Kenya), மேற்கில் செய்ரேவும் (Zaire) இதன் எல்லைகள். உகாண்டாவின் (Uganda) பெரும்பகுதி உலக நடுக்கோட்டிற்கு வடபால் அக்கோட்டினை ஒட்டினாற் போல் உள்ளது. உகாண்டா இயற்கையமைப்பு உகாண்டா செழித்த மேட்டு நிலங்களைக் கொண்ட நாடு, கடல்மட்டத்திற்கு மேல் 1200 மீ. வரை இந்நாடு உயர்ந்துள்ளமையால் இதன் தட்பவெப்பநிலை நல்வாழ்வுக்கேற்றது. இந்நாட்டின் மையத்தில் கோயோகா (Kyoga) என்னும் ஏரியுள்ளது. உகாண்டா மேட்டு நிலத்தின் மேற்கில் பெரும் பிளவுப் பள்ளத்தாக்கின் மேற்குக் கிளை எல்லை போல் உள்ளது. ஆல்பர்ட்டு, எட்வர்டு போன்ற ஏரிகளும் ஆல்பர்ட்டு நைல் ஆறும் இங்கு உள்ளன. தென்மேற்கில் உரூவன்சோரி மலைத்தொடரும் (Ruwenzori Range) மர்கிரிட்டா மலையுச்சியும் (Margherita Peak) உள்ளன. இவ்வுச்சியே உகாண்டாவின் மிக உயர்ந்த இடம். தெற்கில் விக்டோரியா ஏரியையும் கிழக்கிலும் வடக்கிலும் பல மலைத் தொடர்களையும் காணலாம். உகாண்டாவின் நிலப்பரப்பில் ஆறிலொரு பங்கு நீர்நிலைகள்; ஏறத்தாழ 7 விழுக்காடு நிலம் 1520 மீட்டருக்கும் மிகுதியான உயரமுடைய மலைத் தொடர்களைக் கொண்டுள்ளது. உலகிலேயே இரண்டாம் நன்னீர் ஏரியாகக் கருதப்படும் விக்டோரியா ஏரியின் ஒரு பகுதி உகாண்டாவில் உள்ளது. காட்டு விலங்குகள் பல இங்குள்ள பரந்த தேசியப் பூங்காக்களில் சுற்றித் திரிகின்றன. பரப்பு உகாண்டாவின் மொத்தப் பரப்பு 2,41,140 ச.கி.மீ. இவற்றுள் 39,459 ச.கி.மீ. சதுப்பு நிலங்களாலும் நீர் நிலைகளாலும் சூழப்பட்டுள்ளது. மக்கள்தொகை இந்நாட்டின் மக்கள்தொகை 1,26,30,076 (1980). உகாண்டாவின் மக்களுன் பெரும்பாலோர் கறுப்பு ஆப்பிரிக்கர்கள், அவர்களுள் 90 விழுக்காட்டு மக்கள் சிற்றூர்களில் வாழ்கிறார்கள். ஏறத்தாழ மூன்றிலிரண்டு பங்கு மக்கள் பண்டூ (Bantu) மொழி பேசுகிறார்கள். இம்மொழி பேசும் இனத்தவர்களுள் கண்டா (Ganda), சோகா (Soga), அங்கோல் (Angol), நியோரோ (Nyoro), தோரோ (Toro) போன்றவர்கள் இந்நாட்டின் தென் பாதியில் வாழ்கிறார்கள். வடக்கில் வாழும் நிலோட்டியரும் (Nilotic), வடகிழக்கில் வாழும் நிலோ–அமித்தியரும் (Nilo–Hamitic) ஏனைய மொழி பேசுவோர். சூடானி மொழி பேசுவோர் வடமேற்கில் வாழ்கிறார்கள். ஆங்கில மொழியே உகாண்டாவின் ஆட்சிமொழி. வாணிக மையங்களில் பரவலாக சுவாகிலி (Swahili) மொழியைப் பேசுகிறார்கள். 30 விழுக்காடு மக்கள் கிறித்தவர்கள்; ஏறத்தாழ 5 விழுக்காடு மக்கள் முசுலிம்கள். உகாண்டா மக்களுள் பகாண்டா (Baganda) எனப்படுவோர் எண்ணிக்கையிலும் செல்வச் செழிப்பிலும் திளைத்தவர்கள். இவர்கள் உகாண்டாவின் மையப் பகுதியிலும் தெற்கிலும் வாழ்கிறார்கள். இவர்களின் அரசியல் சமூக அமைப்புகள் மத்திய ஆப்பிரிக்காவிலேயே முன்னேறியவையாகக் கருதப்படுகின்றன. பகாண்டாக்களுக்கு 1967 வரை சொந்த அரசர்கள் இருந்தனர். இவர்கள் கபகா (Kabaka) எனப்பட்டனர். இவர்களின் நாடாளுமன்றம் உலுக்கிகோ (Lukiko) எனப்பட்டது. பகாண்டா மக்களுள் பெரும்பாலோர் உழவர்கள். காப்பி, பருத்தி, தேயிலை போன்ற பணப்பயிர்களை இவர்கள் சாகுபடி செய்கிறார்கள். வாழையும் காய்கறிகளும் சிறப்பான உணவுப்பொருள்கள். பண்ணைகளில் பெரும்பாலான பணிகளைப் பெண்களே செய்கிறார்கள். மண்சுவர்களையும் இரும்புத் தகட்டுக் கூரைகளையும் கொண்ட வீடுகளில் பகண்டாக்கள் வாழ்கிறார்கள். கரமோசோங்கு (Karamojong) என்னும் இனத்தவர்கள் ஆட்டிடையர்கள். இவர்கள் வடகிழக்குப் பகுதியில் வாழ்கிறார்கள். இவர்கள் வாழும்பகுதி வறட்சிமிக்கது. இவர்கள் எருதின் குருதியைப் பாலுடன் கலந்து அருந்தும் பழக்கம் கொண்டவர்கள். உகாண்டாவின் பெரும்பாலான மக்கள் மரபுவழியாக வந்த ஆப்பிரிக்கச் சமயங்களைப் பின்பற்றுகிறார்கள். வயது முதிர்ந்தோர்களுள் பெரும்பாலோருக்கு எழுதப்படிக்கத் தெரியாது. குழந்தைகளுள் நான்கில் மூவர் தொடக்க கல்வி பயில்கின்றனர். கம்பாலாவிலுள்ள மக்கிரிரி பல்கலைக் கழகம் (Makerere University) கல்வித் தொண்டில் ஈடுபட்டுள்ளது. பொருளாதாரம் உகாண்டாவின் பொருளாதாரம் வேளாண்மை அடிப்படையில் அமைந்துள்ளது. நூற்றுக்குத் தொண்ணூறு பங்கு மக்கள் பண்ணைகளில் பணியாற்றுகிறார்கள். கூவைக் கிழங்கு, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, வாழைப்பழம், சோளம், மக்காச்சோளம், பயறுவகைகள் போன்றவை சிறப்பான உணவுப் பயிர்கள். பருத்தி, காப்பி, தேயிலை, புகையிலை, கரும்பு, வேர்க்கடலை போன்றவை செல்வம் கொடுக்கும் பணப்பயிர்கள். இந்நாட்டில் கோழிகள், கால்நடைகள், செம்மறியாடுகள், ஆடுகள் போன்றவை வளர்க்கப்படுகின்றன. மீன் பிடித்தலும் முக்கியத் தொழில்களுள் ஒன்று. மகாகனி (Mahogany) என்னும் உறுதியான மரங்களை அறுக்கும் தொழிலிலும் பலர் ஈடுபட்டுள்ளனர். உகாண்டாவில் செம்புத் தாதுக்கள் மிகுதியாகக் கிடைக்கின்றன. தகரம், இரும்புத் தாதுக்கள், மாங்கனீசு, மரகதம், குரோமைட்டு, ஓல்புரம் (Wolfram) ஆகிய கனிமப் பொருள்களும் கிடைக்கின்றன. இந்நாட்டின் கைத்தொழில்கள் மிகக் குறைந்தவையே. அவற்றுள் வேளாண்மைப் பொருள்களைப் பதப்படுத்துதல் (குறிப்பாக, காப்பியைப் பதப்படுத்துதல், பருத்திக்கொட்டை எடுத்தல்) முக்கியமானது. மேலும், மக்கள் நாள்தோறும் பயன்படுத்தும் பொருள்களுக்கான தொழில்கள் சிலவும் நடைபெறுகின்றன. ஆடை நெய்தல், சிமிண்டு உற்பத்தி செய்தல், செயற்கை உரம் தயாரித்தல், பூச்சிக்கொல்லி மருந்து தயாரித்தல், உலோகப் பொருள்கள் செய்தல் போன்றவை அத்தகைய தொழில்கள். விக்டோரியா நைல் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஒவன் நீர்வீழ்ச்சி (Owen Falls) நீர்மின்திட்டம் மின்சக்தி உற்பத்தி செய்யும் பெருந்திட்டமாகும். இத்திட்டம் சிஞ்சா (Jinja) நகரத்தில் செயற்படுகிறது. உகாண்டா நாட்டில் இரு இருப்புப் பாதைத் தொடர்கள் சிறப்பானவை. ஒன்று இந்நாட்டின் தென்பாகத்தில் போடப்பட்டுள்ளது. மற்றொன்று கென்யா எல்லையிலுள்ள தோரோரோ (Toraro) என்னும் ஊரையும் வடக்கிலுள்ள கூலூ (Gulu) என்னும் ஊரையும் இணைக்கிறது. இந்தியப் பெருங்கடல் நகரமான மொம்பாசாவுடன் (Mombasa) இருப்புப் பாதை இணைப்பும் உண்டு. உகாண்டாவின் வாணிகம் இங்கிலாந்து, அமெரிக்கா, சப்பான், மேற்குச் செருமனி போன்ற நாடுகளுடன் நடைபெறுகிறது. கிழக்கு ஆப்பிரிக்கச் சமுதாய (East African Community) உறுப்பு நாடுகளுள் உகாண்டாவும் ஒன்று. உகாண்டாவின் நகரங்கள் உகாண்டாவின் சிற்றூர்களில் வாழும் நாட்டுப்புறமக்கள் நகரங்களுக்குக் குடிபெயர்கிறார்கள்; எனினும், நகர்ப்புறத்தில் சிறுபான்மையோரே வாழ்கின்றனர். இந்நாட்டின் தலைநகர் கம்பாலா (Kampala) ஏழு மலைகளின் மீது அமைந்துள்ளது. இதன் மக்கள்தொகை 5,00,000க்கும் மேலாகும். இதுவே உகாண்டாவின் பெருநகரமும் வாணிகம், தொழிற்சாலைகள், அரசு போன்றவற்றின் மையமுமாகும். இதுவே புகாண்டாவின் (Buganda) மரபுவழித் தலைநகராகக் கருதப்படுகிறது. கம்பாலாவிலிருந்து சில கி.மீ. தொலைவில் விக்டோரியா ஏரிக்கரையில் அமைந்துள்ள எண்டபி (Entebbe) நகரம் பழைய குடியேற்ற ஆங்கிலேயர்களின் தலைநகராக இருந்தது. உகாண்டா நாட்டின் பன்னாட்டு வானவூர்தி நிலையம் எண்டபியில் அமைக்கப்பட்டுள்ளது. சிஞ்சா என்னும் நகரம் உகாண்டாவின் இரண்டாம் பெருநகரம், விக்டோரியா நைல் ஆற்றங்கரையின்மீது இந்நகரம் அமைந்துள்ளது. ஒவன் நீர்வீழ்ச்சி அணைக்கட்டு 1954–இல் தொடங்கப் பெற்றதிலிருந்து சிஞ்சாவும் தொழிற்சாலை மையமாக உருவாகி வருகிறது. வரலாறு உகாண்டாவில் பழைய கற்காலம், புதிய கற்காலம் போன்ற நாகரிகங்களின் தொல்லியல் சுவடுகளைக் காணலாம். இந்நாட்டின் மக்கள் கி.பி. 8–9–ஆம் நூற்றாண்டுகளில் வேளாண்மையைச் செய்தும் இரும்பைப் பயன்படுத்தியும் வந்தார்கள். இம்மக்கள் தம் இனத்தலைவர்களைக் கொண்டு கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டளவில் ஆட்சி செய்தனர். இவர்களின் ஆட்சி சிக்கலின்றி எலிமையானதாக நடைபெற்றது. பின்னர், கி.பி. 13–ஆம் நூற்றாண்டில் பல சுதேச அரசுகள் வளர்ந்து உருவாயின. பழங்கால அரசுகளுள் கிட்டாராவும் (Kitara), புன்யோரோவும் (Bunyoro) முக்கியமானவை. வட உகாண்டாவை கி.பி. பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலோ (Lwo) மொழி பேசும் மக்கள் வென்றார்கள். இலாங்கோ (Lango), தெசோ (Teso) மரபு மக்கள் கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் உகாண்டாவில் குடியேறினர். தென் உகாண்டாவில் கி.பி. பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் பன்யோரோ அரசு சிறந்து விளங்கியது. புகாண்டா மக்கள் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து பெருகி வளரலாயினர். அவர்கள் கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குள் விக்டோரியா நைல் ஆற்றங்கரையிலிருந்து ககேரா (Kagera) வரையிலுள்ள பகுதிகளை ஆண்டனர். கபகாக்கள் (அரசர்கள்) வல்லாட்சி நடத்தி புகாண்டாவினரைச் சீராக அமைத்தனர். புகண்டா மக்கள் கால்நடை, தந்தம், அடிமைகள் போன்றவற்றைக் கொள்ளை அடித்தனர். இந்தியப் பெருங்கடலின் கடற்கரைப் பகுதியிலிருந்து முசுலிம் வணிகர்கள் கி.பி. 1840–ஆம் ஆண்டளவில் புகாண்டா வந்து சேர்ந்தார்கள்; அவர்களுடன் துப்பாக்கிக் குண்டுகள், ஆடைகள், தந்தத்தினாலான மணிகள், அடிமைகள் போன்றவற்றைப் பரிமாறிக் கொண்டார்கள். கபரேகா (Kabarega) என்னும் பன்யோரோவின் தலைவர் கி.பி. 1869–ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புகாண்டாவினரை எதிர்த்தார். எனினும், கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மீண்டும் புகாண்டாக்களே தென் உகாண்டாவில் செல்வாக்குப் பெற்றார்கள். நைல் ஆற்றின் தொடக்கத்தைக் காணவந்த சான் ஏனிங் இசுபெக்கு (John Hanning Speke), சேம்சு கிராண்டு (James Grant) என்னும் இரு ஆங்கில ஆய்வாளர்களே உகாண்டாவில் முதன் முதலில் (கி.பி. 1862) அடிவைத்த ஐரோப்பியர்கள். சர் சாமுவேல் பேக்கர் (Sir Samuel Baker) என்னும் மற்றோர் ஆங்கில ஆய்வாளர் கி.பி. 1864–இல் உகாண்டாவுக்கு வருகை புரிந்தார். அவரே ஆல்பர்ட்டு ஏரியைக் கண்டுபிடித்தவர். அவர் விக்டோரியா பேரரசியின் கணவர் ஆல்பர்ட்டு இளவரசரின் பெயரை இவ்வேரிக்குச் சூட்டினார். உகாண்டாவிற்கு முதலில் வந்த ஐரோப்பியர்கள் இங்கு உருவாக்கப் பெற்றிருந்த தொடக்ககால அரசுகளின் சிக்கல் நிறைந்த சூழ்நிலையால் பெரிதும் கவரப்பட்டார்கள். புகாண்டாவை ஆண்ட முதலாம் முத்தேசா (Mutesa I) என்பார் ஐரோப்பிய அயலார்களின் தொழில்நுட்பத் திறனால் கவரப்பெற்றார். ஆய்வாளரும் நாளிதழாருமாகிய என்றி மார்ட்டன் இசுடான்லி (Henry Morton Stanley) கி.பி. 1875–ஆம் ஆண்டு புகாண்டாவிற்கு வந்த போது அவர் முத்தேசாவைச் சந்தித்தார். புகாண்டாவில் கிறித்தவப் பாதிரிகளை வரவழைக்கும் கருத்தினைப் பரிந்துரைத்தவரும் அவரே. அவருடைய கருத்தினை முத்தேசா ஏற்றுக்கொண்டார். ஆனால், புகாண்டாவுக்கு வந்த கத்தோலிக்க, மறுப்புரைக்கிறித்தவ, முசுலிம் சமயப் பரப்பாளர்களிடையே பகைமை வளர்ந்தது. முத்தேசா கி.பி. 1884–இல் காலமானபோது, அவர்தம் மகன் முவாங்கா (Mwanga) மன்னரானார். அவர் கிறித்தவர்களை ஒறுத்தார். இதன் பயனாக உகாண்டாவில் பத்தாண்டுகன் உள்நாட்டுக் குழப்பமும் சமயச் சச்சரவுகளும் நிகழ்ந்தன. ஆப்பிரிக்கக் கண்டத்தைத் தமக்குள் பங்கு போட்டுக் கொள்ளும் நோக்கத்திற்காக கி.பி. 1884–ஆம் ஆண்டில் கூட்டப் பெற்ற பெர்லின் மாநாட்டில் (Berlin Conference) கூடிய ஐரோப்பிய நாடுகள் ஒரு திட்டத்தை ஏற்றுக் கொண்டன. இங்கிலாந்தும் செருமனியும் கிழக்கு ஆப்பிரிக்காவைப் பிரித்துக் கொள்வதென ஒப்புக் கொண்டன. சென்யாவும் உகாண்டாவும் இங்கிலாந்து நாட்டிற்கும், தங்கனீகா (Tanganyika) செருமனிக்கும் கொடுக்கப்பட்டன. உகாண்டாவின் பகுதியான புகாண்டாவில் ஆங்கிலக் காப்பரசு (Protectorate) அமைக்கப்பட்டது. ஆங்கிலேயரும் புகாண்டியரும் இணைந்து எஞ்சியிருந்த உகாண்டாவின் பகுதியிலும் ஆங்கில ஆதிக்கத்தை நிலைநாட்டினர். இங்கிலாந்தும் புகாண்டா அரசும் கி.பி. 1900–ஆம் ஆண்டில் ஓர் உடன்படிக்கையைச் செய்துகொண்டன. அதன்படி புகாண்டாவுக்கு ஓரளவு சுதந்திரத்திற்கான தகுதி வழங்கப்பட்டது. பின்னர்ப் புன்யோரோ, தோரோ (Toro), அங்கோல் (Ankole) ஆகிய அரசுகளுக்கும் புசோகா (Busoga) என்னும் மாவட்டத்திற்கும் அத்தகைய சுதந்திரம் அளிக்கப்பட்டது. உகாண்டாவில் வலிமை வாய்ந்த மத்திய அரசை 1950–ஆம் ஆண்டளவில் நிலைநாட்ட இங்கிலாந்து முயன்றபோது புகாண்டா அதனை வன்மையாக எதிர்த்தது. எனினும், 1962–ஆம் ஆண்டில் புதிய அரசியல் அமைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுக் கூட்டாட்சி முறை நிலைநாட்டப்பட்டது; புகாண்டாவும் ஏனைய அரசுகளும் அதனை ஏற்றுக் கொண்டன. புதிய அரசியல் அமைப்புத் திட்டத்தைப் புகாண்டா ஏற்றுக் கொண்டவுடன் சுதந்திரம் பெறுவதற்கிருந்த தடை நீக்கப்பட்டது. பொதுநல (Commonwealth) நாடுகளுள் ஒன்றாக, 9–10–1962–இல் உகாண்டா சுதந்திரம் பெற்றது. ஆங்கிலப் பேரரசியின் அரசப் பேராளராக ஒருவர் அரசின் தலைவராக அமர்த்தப்பட்டார். நடுவண அரசாங்கம் உகாண்டா 1962–ஆம் ஆண்டைய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஓர் இறைமையுள்ள குடியரசு என்றும் (Sovereign Republic) அது பொதுநல நாடுகள் கழகத்தின் உறுப்பு நாடு என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நாட்டின் நடுவண அரசாங்கத்தின் தலைவராகவும் நாட்டின் தலைவராகவும் படைகளின் தளபதியாகவும் இருப்பவர் நிருவாகத் தலைவர் (Executive President) ஆவார். இவருக்கு ஓர் அமைச்சரவை உதவி செய்யும். அமைச்சரவையின் உறுப்பினர்கள் நாட்டின் சட்ட மன்றமாகிய தேசிய மன்றத்தின் உறுப்பினர்களிலிருந்து அமர்த்தப்படுகிறார்கள். ஓர் ஒற்றைமன்றம் நாட்டின் சட்டமன்றமாகப் பணி செய்கிறது. இதன் உறுப்பினர்களாக 136 பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதில் 10 இராணுவ அலுவலர் உறுப்பினர்களாக அமர்த்தப்படுகின்றனர். மன்றத்தில் அதிக இடங்களைப் பெறும் கட்சிக்கு 10 வரை கூடுதல் பெரும்பான்மை இருக்கும் பொருட்டு, மேலும் சில உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மன்றத்தின் கூட்டங்கள் தலைவரால் நடத்தப்படுகின்றன. நிருவாகத் தலைவர் மன்ற விவாதங்களில் கலந்து கொள்ளுகிறார். தேசிய மன்றத்தின் பதவிக் காலம் 5 ஆண்டுகள். உள்ளாட்சி அமைப்பு நாடு 1962–ஆம் ஆண்டு அரசியமைப்பின்படி ஒரு கூட்டாட்சி அமைப்பில் இருந்தது; அங்கோல், புகாண்டா, புன்யோரோ, தோரோ முதலிய அரசுகளிருந்தன. இவை நடுவண் அரசாங்கத்தோடு கூட்டாட்சி முறையில் தொடர்பு கொண்டிருந்தன. மரபு வழியான முடியாட்சி 1967–ஆம் ஆண்டுவரை நிகழ்ந்தது. எல்லா அரசுகளும் 1967–இல் ஒரே நாடாக இணைக்கப்பட்டு, நாடு முழுவதும் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. பின்னர், அது மாற்றப்பட்டு, மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாகாணமும் மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. நடுவண் அரசாங்கத்தில் உள்ளாட்சி அரசாங்க அமைச்சகம் உள்ளாட்சி அரசாங்கங்களுக்குள்ள பொறுப்பை ஏற்றுள்ளது. நீதிமுறை இங்கிலாந்து நாட்டிலுள்ளது போன்றே ஒரு நீதித்துறை உகாண்டா நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதற்குமான தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தை உகாண்டாவின் நீதிமன்றம் (High Court of Justice of Uganda) பெற்றுள்ளது. ஒரு தலைமை நீதிபதியும் 8 துணை நீதிபதிகளும் அதில் இடம் பெற்றுள்ளனர்; மேலும், பதிவாளர்களும் சிறிய நீதிபதிகளும் (Magistrates) உள்ளனர். எல்லா நீதிபதிகளும் குடியரசுத் தலைவரால் அமைச்சரவையின் ஆலோசனையின்படி அமர்த்தப்படுகின்றனர். தீய நடத்தை, உடல்நலக் குறைவு முதலிய காரணங்களுக்காக உயர் நீதிமன்ற நீதிபதிகளைக் குடியரசுத் தலைவர் நீக்குதல் இயலும். குடியரசுத் தலைவரைத் தலைவராகவும் (Chairman), அரசாங்க வழக்கறிஞரையும் (Attorney General) தலைவருடைய ஆலோசனையின் பேரில் அமர்த்தப்பட்ட சில துணை நீதிபதிகளையும் உறுப்பினர்களாகவும் கொண்ட ஒரு நீதித்துறைப் பணி ஆணையம் (Judicial Service Commission) இருக்கிறது. நாடு முழுவதும் மாவட்ட நீதிமன்றங்கள் இருக்கின்றன. மேல் முறையீட்டு நீதிமன்றம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்திலிருந்து வரும் மேல் முறையீடுகளை இது ஆய்வு செய்கிறது. சுதந்திரம் பெற்ற சிறிது காலத்திற்குள் அரசுப் பேராளர் பதவி நீக்கப்பட்டது. புகாண்டாவின் அரசராக இருந்த சர் எட்வர்டு முத்தேசா (Sir Edward Mutesa) உகாண்டாவின் முதல் குடியரசுத் தலைவரானார். குடியரசுத் தலைவரான முத்தேசாவுக்கும் தலைமை அமைச்சராயிருந்த டாக்டர் அப்போலோ மில்ட்டன் ஓபோட்டே (Dr. Apolo Milton Obote) என்பாருக்குமிடையே 1966–இல் மோதல் ஏற்பட்டு போர் மூண்டது. போரில் குடியரசுத் தலைவரின் படைகள் தோற்றன. மில்ட்டன் ஓபோட்டே குடியரசுத் தலைவரானார். புதிய அரசியல் அமைப்புத் திட்டமொன்று செயல்முறைப்படுத்தப்பட்டது. அரசுகள் அனைத்தும் கலைக்கப்பட்டன. நாடு 18 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, மத்திய அரசால் நிருவகிக்கப்பட்டது. உகாண்டாவின் இராணுவம் ஓபோட்டேவைப் பதவி நீக்கம் செய்தது. இடி அமீன் என்னும் படைத்தலைவர் உகாண்டாவின் தலைவரானார். இடி அமீன் 1971–இல் பழைய அரசியல் அமைப்புத் திட்டத்தை ஒழித்தார்; தேசிய சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தம்மையே நாட்டின் தலைவராகவும் அரசின் பொறுப்பாளராகவும் ஆக்கிக் கொண்டதோடு, தம் வாழ்நாள் முழுவதும் தாமே குடியரசுத் தலைவரென அறிவித்தார். அவர்தம் எட்டாண்டுக்கால வல்லாட்சியில் 3,00,000 கிறித்தவர்கள் கொல்லப்பட்டனர். உகாண்டா மக்கள் பலர் நாட்டை விட்டு வெளியேறினர். பொருளாதாரம் சீர்குலைந்தது. தென் உகாண்டாவிலிருந்த இராணுவ அமைப்புகள் இடி அமீனுக்கெதிராகக் கலகஞ் செய்தன. கலகத்தை அடக்க இடி அமீன் பெரிதும் முயன்றார். தான்சானியாவின் பகுதிகள் சிலவற்றை அவர் கைப்பற்றிக் கொண்டார். தான்சானியா உகாண்டா கலகக்காரர்களுடன் இணைந்துகொண்டு, 1979–ஆம் ஆண்டில் அந்நாட்டின்மீது படையெடுத்தது. உகாண்டாவின் தலைநகர் கம்பாலா கைப்பற்றப்பட்டது. இடி அமீன் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றார். யூசுப்பு உலூலே (Yusufu Lule) என்பாரின் தலைமையில் தற்காலிக அரசு ஒன்று ஏற்படுத்தப்பட்டது. பின்னர்க் காட்பிரே பினாய்சா (Godfrey–Binaisa) என்பவர் பதவியில் அமர்ந்தார். அரசாங்கத்தை ஆளும் பொறுப்பை 1980–இல் படைத்தலைவர் குழுவொன்று மேற்கொண்டது. அவ்வாண்டு இறுதியில் தேர்தல் நடைபெற்றது. ஓபோட்டே மீண்டும் நாடு திரும்பிக் குடியரசுத் தலைவரானார். தொடர்ந்து குழப்பமான சூழ்நிலையே நீடித்தது. பொருளாதார நிலை சீர் குலைந்தது. வட உகாண்டாவில் வாழ்ந்த மக்கள் பட்டினியால் வாடினர். நாட்டில் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்ட முடியாமல் அரசு தவித்தது.