என்பார் சிங்கப்பூரை உருவாக்கிய பிரிட்டிசுக் குடியேற்ற நிருவாகி. இவர் கி.பி. 1781–ஆம் ஆண்டு சமைக்கா (Jamaica)விற்கு அண்மையில் பிறந்தார். தம் 14–ஆம் வயதில் இராபில்சு (Raffles, Sir Thomas Stamford) இலண்டன் சென்று, கிழக்கிந்திய வணிகக் குழுவில் பணியாற்றத் தொடங்கினார். இவ்வணிகக் குழுவினால் கி.பி. 1805–ஆம் ஆண்டில் மலேசியாவிலுள்ள பினாங்கு என்னும் நகருக்குத் துணைச் செயவராக அனுப்பப் பெற்றார். ஓரளவே பயிற்சி பெற்றிருந்த இவர் மலேசியா, இந்தோனேசியா நாடுகளின் இயற்கை வரலாற்றையும் பண்பாடுகளையும் மொழிகளையும் ஆராயத் தொடங்கினார். காலப்போக்கில் இவரே இப்பகுதிகளின் தலைசிறந்த வல்லுநராகக் கருதப் பெற்றார். இவர்தம் திறமைகளை அப்போது இந்தியாவின் அரசப் பேராளராக இருந்த மிண்டோ பிரபு கண்ணுற்றார். சாவா மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றத் தேவையான செய்திகளைத் திரட்டும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்தார். இவருடைய திறமையால் சாவா ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. ஆங்கிலேயரின் சார்பாகச் சாவாவையும், இந்தோனேசியாவில் தச்சுக்கு (Dutch) உரிமையாக இருந்த இடங்களையும் நிருவகிக்கும் பொறுப்பை இராபில்சு ஏற்றார். இவர் பல தீவிரச் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். நிலச் சொந்தம், வரி விதிப்பு போன்றவற்றில் இவர் செய்த மாற்றங்கள் இந்தோனேசியா மக்களுக்கு நலம் பயப்பனவாயிருந்தன. ஆனால், அவை கிழக்கிந்திய வணிகக் குழுவிற்குப் பெருத்த பொருள் நட்டத்தை விளைவித்தன. இவர் கி.பி. 1815–ஆம் ஆண்டில் மேற்கூறிய பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டுத் திரும்பி அழைக்கப்பெற்றார். வணிகக் குழுவின் இயக்குநர்களால் விலக்கப்பட்டாரெனினும், அறிவியல் துறையைச் சார்ந்த பெரியோர்கள் இவருக்கு நைட் (Knight) பட்டம் வழங்கிப் பாராட்டினார்கள். இராபில்சு மீண்டும் கி.பி. 1818–ஆம் ஆண்டில் இந்தோனேசியாவுக்குப் போய்ச்சேர்ந்தார். இம்முறை வணிகக் குழுவினருக்கு உரிய பெங்குலு (Bengkulu) என்னும் ஊருக்கு அனுப்பப்பட்டார். இவ்வூர் மேற்குச் சுமத்திராவிலுள்ளது. இவரும் இயற்கையியல் அறிஞரான சோசப்பு ஆர்னால்டு (Joseph Arnold) என்பாரும், ‘இராபிலேசியா ஆர்னால்டி’ (Rafflesia Arnoldi) என்னும் பெயர் கொண்ட மிகப் பெரிய மலர் ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். இத்தருணத்தில் இராபில்சு சிங்கப்பூர்த் தீவின் வாணிகச் சிறப்பையும், அதற்குகந்த அமைவிடச் சிறப்பையும், அதன் எதிர்காலம் சீரியதாக இருக்கும் வாய்ப்புண்டு என்பதையும் ஆய்ந்தறிந்தார். அப்போது அத்தீவு சோகூர் சுல்தானுக்குச் (Johore Sultan) சொந்தமாயிருந்தது. இத்தீவினைச் சுல்தானிடமிருந்து கி.பி. 1819–இல் விலைக்கு வாங்கும்படி கிழக்கிந்திய வாணிகக் குழுவை இராபில்சு தூண்டினார். இவருடைய கருத்துப்படி சிங்கப்பூர் விலைக்கு வாங்கப்பட்டது. சிங்கப்பூர் திறமையாக நிருவகிக்கப்பட்டுப் பொருளாதார மேம்பாடடைவதற்கான வழி வகைகளை இவர் மேற்கொண்டார். காலப்போக்கில் சிங்கப்பூர் சீரிய வாணிக மையமாகவும், கப்பற்படைத் தளமாகவும் மாறி, இராபில்சின் நெடுநோக்கினை மெய்ப்பித்தது. நோய்வாய்ப்பட்ட இராபில்சு கி.பி. 1824–ஆம் ஆண்டில் இங்கிலாந்து திரும்ப வேண்டியவரானார். இலண்டனில் இராபில்சு விலங்கியல் கழகத்தை நிலைநாட்ட உறுதுணையாக இருந்ததுடன், அதன் முதல் தலைவராகவும் விளங்கினார். இவ்விலங்கியல் கழகமே இலண்டன் விலங்குக் காட்சிச் சாலை என்று இன்று கூறப்படுகிறது. இராபில்சு கி.பி. 1826–ஆம் ஆண்டு சூலை மாதம் 5–ஆம் நாள் இங்கிலாந்தில் பார்னெட்டு (Barnet) என்னுமிடத்தில் காலமானார்.