என்பார், இரிப்பன் பிரபு இந்தியாவின் அரசப்பேராளராக இருந்தபோது அவருக்கு உதவிய ஓர் ஆங்கிலேயர். இவருடைய முழுப்பெயர் சர் கோட்டினே பிரிக்ரைன் இல்பர்ட்டு என்பதாகும். இவர் பிரிக்ரைன் ஆர்தர் இல்பர்ட்டு என்ற சமயகுருவுக்கும் உரோசு அண்ணி என்ற அம்மையாருக்கும் தெவன்சயர் என்னும் மாவட்டத்திலுள்ள கிங்சு பிரிட்சு என்னுமிடத்தில் கி.பி. 1841–ஆம் ஆண்டு சூன் திங்கள் 12–ஆம் நாள் பிறந்தார். இவருக்கு உடன்பிறந்தவர்கள் ஐவர். தெவன் சயர் மாவட்டத்தின் மிகப் பழங்குடியே இல்பர்ட்டின் வமிசமாகும். இவருடைய மூதாதையர் கி.பி. 17–ஆம் நூற்றாண்டின் இறுதியில் பலிரிங்கலெளி, ஆர்சுவெல் பகுதிகளில் மிகுதியான நிலச் சொத்துகளைப் பெற்றிருந்தனர். இல்பர்ட்டு கி.பி. 1852–ஆம் ஆண்டில் கல்வி பயிலப் பார்வ்பரோ நகருக்கு அனுப்பப்பட்டார். எட்டு ஆண்டுகள் அந்நகரில் தங்கி, சார்சு எட்வர்டு வின்சு காட்டன், சார்சு கிரன்வில்லி பிராட்லி ஆகிய தலைமை ஆசிரியர்களின் கண்காணிப்பில் சிறக்கக் கல்வி பயின்று, கி.பி. 1861–ஆம் ஆண்டில் பொதுக் கல்விக்கான பட்டத்தையும், கி.பி. 1867–ஆம் ஆண்டில் சட்டக் கல்விக்கான பட்டத்தையும் பெற்றார். பின்னர்ப் பாலியால் கல்லூரியில் பணிபுரிந்து, கி.பி. 1871–ஆம் ஆண்டு முதல் 1874–ஆம் ஆண்டு வரை அக்கல்லூரியின் தொடர்பைப் பெற்று இலக்கிய அறிவையும் பெற்றார். அதே ஆண்டில் வின் சார்லசு பிராட்லி என்ற சமய குருவின் மகளாகிய செசி என்பவரை மணந்தார். இவருக்கு ஐந்து பெண் மக்கள் பிறந்தனர். இல்பர்ட்டுக்கு கி.பி. 1896–ஆம் ஆண்டிலேயே வழக்குரைஞர் பதவிக்கு அழைப்பு வந்தது, அந்நேரத்தில்தான் இங்கிலாந்து நாடாளுமன்றம் தன்னுடைய மசோதாக்கனை வரைவு செய்யத் தொடங்கியது. அதற்காகச் சர் என்றி, திரிங்கு ஆகியவர்களின் தலைமையிலே தனியாக ஒரு துறையே தொடங்கப்பட்டது. இச்சட்டத் துறையில் இல்பர்ட்டு ஓர் உதவியாளராகச் சேர்க்கப்பட்டுத், தம் விசாலமான சட்ட நுட்பத்தைப் பயன்படுத்தினார். இவர் கி.பி. 1881–ஆம் ஆண்டின் சட்ட நீதித் திருத்தத்திற்கும், கி.பி. 1883–ஆம் ஆண்டில் குற்ற இயல் சாராத சட்டத் தொகுப்பை உருவாக்குவதற்கும் பெரும் பணியாற்றினார். ஆர்டிங்டன் பிரபு கி.பி. 1882–ஆம் ஆண்டில் இந்தியச் செயலராகப் பதவியேற்றபோது, தலைமை ஆளுநர் சபையில், இல்பர்ட்டையும் சட்டத்துறையில் ஓர் உறுப்பினராக அமர்த்தினார். தொடக்கத்தில் இல்பர்ட்டு சற்றுத் தயங்கினார் என்றாலும் இந்தியரின் மனவளம் அவரைப் பெரிதும் கவர்ந்த காரணத்தால் இறுதியில் இப்பதவியை ஏற்றுக்கொண்டார். இரிப்பன் பிரபு இந்தியாவில் அரசப் பேராளராக கி.பி. 1880–ஆம் ஆண்டு முதற்கொண்டு இந்தியர்களுக்குப் பல்லாற்றானும் நன்மை பயக்க எண்ணினார். அவர் கி.பி. 1873–ஆம் ஆண்டில் குற்றவியல் சட்டப்படி தலைமை மாநிலம் தவிர, ஏனைய மாநிலங்களில் ஓர் ஆங்கிலேயக் குற்றவாளியை ஓர் இந்திய நீதிபதி விசாரிக்கக் கூடாது என்பதை அடியோடு வெறுத்தார். அச்சமயத்தில் உயர் பதவிகளிலிருந்த இந்தியர்களும், ‘இந்திய நீதிபதிகளுக்கும் ஆங்கிலேய குற்றவாளிகளை விசாரிக்கும் உரிமை வேண்டும்’ என்று கிளர்ச்சியில் ஈடுபட்டனர். எனவே சட்டத்தை நிலைமைக்கு ஏற்றாற்போல் இந்தியர்களுக்குச் சாதகமாக உருவாக்கும் பொறுப்பு இல்பர்ட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. ‘இல்பர்ட்டு மசோதா’ 1883–ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டதும், ஆங்கிலேயர்கள் பெரும் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். எனவே, இம்மசோதாவை அமுலாக்குவது முற்றிலும் கைவிடப்பட்டது. நிலச்சுவான்தாரர்களுக்கும் நிலக் குத்தகைக்காரர்களுக்கும் இடையே உள்ள தொடர்பைச் சீர்திருத்தி அமைப்பதற்காக ‘வங்காளக் குத்தகைச் சட்டம்’ கொண்டு வந்தவரும் இவரே. இல்பர்ட்டு கி.பி. 1886–ஆம் ஆண்டின் இறுதிக் காலத்தில் இங்கிலாந்து திரும்பினார். அங்கு கருவூலத்தில் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் உதவியாளராகப் பணியில் அமர்ந்தார். இந்தியச் சட்டத் தொகுப்பில் பெரும் அக்கறை கொண்ட இவர் கி.பி. 1898–ஆம் ஆண்டில் வாரன் ஏசுடிங்சு காலத்திலிருந்து இந்தியச் சட்டங்களை விளக்கும் வகையில் ‘இந்திய அரசு’ என்ற நூலையும் வெளியிட்டார். பின்னர் கி.பி. 1899 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவின் தலைவரானார். அதன் பின்னர்க் கருவூலத்தின் கருத்துரையாளரானார். இல்பர்ட்டு 1902–இல் பொதுமக்கள் மன்றத்தின் கணக்கரானார். சட்டமன்ற நடவடிக்கைகளை நன்கு அறிந்தவராகையால், எளிதில் அனைத்து உறுப்பினர்களிடமும் நற்பெயரை ஈட்டினார். தம் பதவியை 1921–ஆம் ஆண்டில் துறந்து, காமன்சு அவையால் பாராட்டப்பெற்றார். இல்பர்ட்டு 1901–ஆம் ஆண்டில் ‘சட்ட மன்றச் செயல் முறைகள்’, 1911–ஆம் ஆண்டில் ‘நாடாளுமன்றம் - அதன் வரலாறும் அமைப்பும் நடைமுறைகளும்’, 1919–ஆம் ஆண்டில் ‘சட்டமியற்றுவதில் நுணுக்கங்கள்’ ஆகிய நூல்களைப் படைத்தார். இல்பர்ட்டு ஓர் அறிவாளி; எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை உடையவர்; தெளிய வைக்கும் பண்புடையவர்; புரட்சிகரமான கருத்துடையவர்; இத்தகைய சிறப்பியல்புகளைக் கொண்ட இல்பர்ட்டு 1924–ஆம் ஆண்டில் மே திங்கள் 14–ஆம் நாளன்று தம் சொந்த ஊரில் பக்கிங்காம்சயரிலுள்ள திரவுட்ருவல்சு பென் என்ற இடத்தில் காலமானார். பொன்.சு. துணை நூல்கள் Sathianathier, R., History of India, Vol. III, P. Viswanathan & Co, Madras, 1982. Majumdar, R.C., & others, An Advanced History of India, Macmilan & Co., Madras, 1982.