உயர்கல்வி நுழைவு
uyarkalvi nuḻaivu
மேல்நிலைப் பள்ளிக் கல்விக்குப் பின்னர்க் கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களில் வழங்கப்படும் கல்வியானது உயர்கல்வி (Higher Education) எனச் சொல்லப்படும்.
மேல்நிலைப் பள்ளிக் கல்விக்குப் பின்னர்க் கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகிய நிறுவனங்களில் வழங்கப்படும் கல்வியானது உயர்கல்வி (Higher Education) எனச் சொல்லப்படும். கல்லூரி, பல்கலைக்கழகம் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் நுழைவதற்குச் (Access) சில முறைகள் பின்பற்றப்படுகின்றன, அம்முறைகளைப் பொதுவாக மூவகைப்படுத்தலாம். i) மேல்நிலைப் பள்ளிக் கல்வியில் வெற்றி பெற்றிருத்தல், ii) மேல்நிலைப் பள்ளித் தகுதியுடன் நுழைவுத் தேர்வில் (Entrance Test) வெற்றி பெறுதல், iii) மேல்நிலைப் பள்ளி மதிப்பெண்களுடன் ஆர்வம் (Interest), நாட்டம் (Aptitude), பணியனுபவம் (Work Experience) போன்றவற்றிலும் தகுதி பெறுதல் ஆகிய ஏதாவதொரு முறையில் மாணவர்கள் உயர்கல்வியில் நுழைவுரிமை (Admission) பெறுகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளான இசுபெயின், இத்தாலி, பிரான்சு, செருமனி (கூட்டாட்சிக் குடியரசு) போன்ற நாடுகளில் உள்ள மாணவர்களின் மேல்நிலைக் கல்வி வெற்றியே அவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு அடிப்படையாக அமைகின்றது. துருக்கி, கிரீசு, தாய்லாந்து போன்ற நாடுகளில் பள்ளி மாணவர்களுக்குத் தேசிய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் வெற்றிபெறும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களே உயர்கல்வியில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். சோவியத்து நாட்டில் நுழைவுத் தேர்வு தேசிய அளவில் நடைபெறுவதில்லை; ஒவ்வொரு நிறுவனமும் நுழைவுத் தேர்வு நடத்தி, அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாய்மொழித் தேர்வும் (Oral Test) நடத்துகிறது. இத்தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களை மட்டுமே அந்நிறுவனம் சேர்த்துக் கொள்கிறது. சீன மக்கள் குடியரசில் (People's Republic of China) தேசிய அளவில் நடத்தப் பெறும் நுழைவுத் தேர்வுக்குப் பின்னரே, மாணவர்கள் உயர்கல்வியில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கியக் குடியரசு (USA) ஆகிய நாடுகளில் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண்களுடன் உயர்கல்விக்கான மாணவரின் ஆர்வம், நாட்டம், பணியனுபவம் ஆகியனவும் கருத்திற் கொள்ளப்படுகின்றன.
மாணவர்களுக்கான உயர்கல்வி நுழைவுரிமை, இப்பொழுது பலநாடுகளில் அந்நாட்டிற்கு ஏற்ற வகையில் மாற்றம் பெற்று வருகிறது. தான்சானியா (TanZania), கியூபா போன்ற நாடுகளில் உயர்கல்வியானது சமுதாயத்தின் வளர்ச்சிநோக்கில் கருதப்படுகின்றது. எனவே, இந்நாடுகளில் பணியனுபவம் உள்ளவர்களுக்கு உயர்கல்வியில் முன்னுரிமை வழங்கப்படுகின்றது. சுவீடன் நாட்டிலுள்ள ஒருவர் 25 வயது நிறைவுற்று நான்காண்டுப் பணியனுபவம் பெற்று இருந்தால், வழக்கமான பள்ளிச் சான்றிதழ்கள் இன்றியே உயர்கல்வியில் நுழைவுரிமை பெற்றுக் கல்வி பயில முடிகின்றது. இங்கிலாந்தின் வெளிப் பல்கலைக் கழகத்திலும் (United Kingdom's Open University) இப்பல்கலைக் கழகத்தைப் பின்பற்றி இந்தியா போன்ற பிறநாடுகளில் தோன்றியுள்ள வெளிப் பல்கலைக் கழகங்களிலும் முதலில் உயர்கல்வி வாய்ப்பினை இழந்தவர்களுக்கு இரண்டாம் முறையாக வாய்ப்புத் தரப்படுகின்றது. வெளிப்பல்கலைக் கழகங்களில் நுழைவிற்குத் தேவையான பட்டங்களும், வகுப்பு வருகையும் உயர்கல்வி பெறுவதற்குத் தடையாக இருப்பதில்லை.
இந்தியாவில் உயர் கல்வி நுழைவுக்கு மேல்நிலைப் பள்ளிக் கல்வியின் வெற்றிச் சான்றிதழே அடிப்படையாகும். மருத்துவம், பொறியியல், சட்டவியல், வேளாண்மை போன்ற தொழில்துறை சார்ந்த உயர்கல்விக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படுகின்றது. மேல்நிலைப் பள்ளி மதிப்பெண், நுழைவுத் தேர்வு மதிப்பெண் ஆகியவற்றோடு மாணவரின் சமுதாயப் பொருளாதாரப் பின்னணியும் கருத்தில் கொள்ளப்படுகின்றது. பெற்றோரின் ஆண்டு வருமானம், மாணவரின் வகுப்பு (Casts) ஆகியனவும் உயர் கல்வி நுழைவு முறையில் கணக்கில் கொள்ளப்படுகின்றன.
துணை நூல்கள்
Bowles; F., The International Study of University Aministrations: Access to Higher Education, Vol.1, UNESCO, Paris, 1963.
Ceych, L., Acess and Structure of Post–Secondary Education, Institute of Education, European Cultural Foundation, Paris, 1975.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 954)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jjrsgjcp/
தமிழ்“உயர்கல்வி நுழைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jjrsgjcp/APA
Oliyon Research. (2026). உயர்கல்வி நுழைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jjrsgjcp/MLA
"உயர்கல்வி நுழைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jjrsgjcp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment