அடிப்படைக் கல்வி
aṭippaṭaik kalvi
ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் (UNESCO) தொடங்கியவுடன், அது வகுத்த திட்டங்களுள் ஒன்று அடிப்படைக் கல்வித் திட்டமாகும்.
ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் (UNESCO) தொடங்கியவுடன், அது வகுத்த திட்டங்களுள் ஒன்று அடிப்படைக் கல்வித் திட்டமாகும். உலகின் சில நாடுகள் கல்வியிலும் வாழ்க்கை நிலையிலும் மிகவும் முன்னேறியிருக்க, பல நாடுகள் வறுமையில் உழல்வது மட்டுமன்றி, வளர்ச்சிக்கு வழிகோலும் கல்வி வாய்ப்பும் இல்லாது பின் தங்கிக் கிடக்கின்றன. 1946-ஆம் ஆண்டுக் கணக்கின்படி, வட ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் உள்ள நாடுகள் ஏறக்குறைய முழு எழுத்தறிவுள்ளவையாக இருந்தன. ஆனால், ஆப்பிரிக்காவில் 90 விழுக்காடும் ஆசியாவில் 80-90 விழுக்காடும் தென் அமெரிக்காவில் 50-70 விழுக்காடும். எழுத்தறியாமை பரவியிருந்தது. உலக அரங்கில் இத்தகைய ஏற்றத் தாழ்வைக் குறைக்கும் முயற்சிகளுள் ஒன்றாக அடிப்படைக் கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது.
வளர்ந்து முன்னேறிவரும் உலகில் வாழ்வதற்கு எண்ணறிவும் எழுத்தறிவும் இன்றியமையாதவை, ஆனால் இவை கருவிகளேயாகும்; அடிப்படைக் கல்வியாகா. சொந்த வாழ்க்கையையும் நாட்டின் நலத்தையும் முன்னேறச் செய்தலும் இயற்கைச் சூழலையும் சமூகச் சூழலையும் நன்கு புரிந்து கொண்டு அவற்றுடன் இணங்கி வாழக் கற்பித்தலும் தொழிற் பயிற்சி, பொருளாதார வளர்ச்சி, சமூகக் கல்வி, குடிமைப் பயிற்சி, அழகியற் கல்வி, ஒழுக்கக் கல்வி, ஆன்மிகக் கல்வி முதலியவற்றின் அடிப்படைக் கூறுகளும் அடிப்படைக் கல்வியுள் அடங்கும். அடிப்படைக் கல்வியினைப் பொதுமக்கள் கல்வி, அனைவர்க்கும் அளிக்கப்படும் தகுந்த கல்வி, மக்களாட்சிக்கு அடிகோலும் கல்வி என்றும் சொல்லலாம்.
நடைமுறையில் அடிப்படைக் கல்வியின் எல்லையை வரையறுப்பதும் எளிதன்று. முதலில் எந்த மொழியில் அடிப்படை எழுத்தறிவு அளிக்கப்பட வேண்டும் என்னும் கேள்வி எழுகிறது. பல ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் நூற்றுக்கணக்கான மொழிகளும் கிளைமொழிகளும் உள்ளன. இவற்றுட் பல வளம் பெறாத நிலையில் உள்ளமையால் இக்கால வாழ்க்கைக்குத் தேவையான அறிவை இவற்றின் இயல்பு நிலையின் மூலம் அளித்தல் அரிது. பல மொழிகளுக்கு எழுத்து வடிவமும் இலக்கண அமைப்பும் வளரவில்லை. இத்தகைய சூழல்களுட்சிலவற்றில் ஆங்கிலம், பிரெஞ்சு, இசுபானியம் (Spanish) போன்ற இக்கால வளம் பெற்ற மொழிகள், ஓரளவு பரவி அரசுப் பணிகளுக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கும் தேவையான ஆள்வலத் தேவைகளை (Manpower needs) நிறைவேற்றவும் நாட்டின் ஒருமைப்பாட்டை வளர்க்கவும் பயன்படுகின்றன. இரண்டாம் மொழி ஒன்று நாட்டு வளர்ச்சிக்கும் ஒருமைப்பாட்டிற்கும் வேண்டுமாயின், அம்மொழியின் பயன்படு கூறுகளைக் கற்பதும் அடிப்படைக் கல்வியுள் அடங்கும். இவ்வாறு குடிவந்தோர் புகுத்திய புதுமொழி பயன்பட்ட போதிலும், அது, பெரும்பாலும் நாட்டு மக்களிடையே ஓர் உயர்குடியினரை (Elite) வளர்த்து, கல்வியறிவற்ற மக்களின் பண்பாட்டு வேர்களை உலரச் செய்யவும் காரணமாகப் பல இடங்களில் அமைந்தது. ஆகையால், கூடியவரை பன்மொழிச் சூழல்களில் (Multilingual environments) கூடத் தாய்மொழியை வளர்த்துப் பிள்ளைகளின் தொடக்கக் கல்விக்கும் வயது வந்தோர் கல்விக்கும் பயன்படுத்த வேண்டும்.
வீடும் சமுதாயமும் அடிப்படைக் கல்வியின் அடிப்படைக் கூறுகளாகும். ஆகையால், எழுத்தறிவு குறைந்த சமூகங்களில் வயது வந்தோர் கல்வி முயற்சியும் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியும் பள்ளிப் படிப்பும் பள்ளிசாராக் கல்வியும் ஒருங்கே திட்டமிட்டு நடத்தப்படவேண்டும்.
அனைவரும் சமம், ஏற்றத்தாழ்வுகளைச் சமன் செய்ய முடியும் என்பன போன்ற குறிக்கோள்களை அடிப்படையாகக் கொண்டே அடிப்படைக் கல்வி திட்டமிடப்பட்ட போதிலும், திட்டம் தொடங்கும் நிலையில் நாட்டில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிய நுண்ணிய அறிவு நடைமுறைக்குத் தேவை. ஒரு நாட்டில் காணப்படும் சாதி சமயம், வகுப்பு வரிசை, வாழ்க்கை முறைகள் முதலியன சமூக அமைப்பையும் மற்ற ஏற்பாடுகளையும் எவ்வளவு தூரம் தாக்கக் கூடும் என்பதை உணர்ந்தே இத்திட்டத்தைச் செயற்படுத்த வேண்டும்.
பண்பாட்டின் ஊற்றுகளைப் பாதுகாத்தல் அடிப்படைக் கல்விக்கு இன்றியமையாதது. அறிவொளி வீசுவதற்கும் தனியாளின் விழுப்பொருள் உணர்வை வளர்ப்பதற்கும் ஆக்கமுறையாக அமையும் மாறுதல்களை வளர்ப்பதற்கும் பண்பாட்டின் அடித்தளம் இன்றியமையாததாகும்.
யுனெசுகோவின் (UNESCO) அணுகு முறைச் சிறப்புகளுள் ஒன்று, ஒரு திட்டத்தை மேலிடத்திலிருந்து அல்லது புறத்தேயிருந்து புகுத்தாது, ஒரு நாட்டின் பண்பாடு, வரலாறு முதலியவற்றின் அடிப்படையிலிருந்து, உள்நின்று ஊற்றெடுக்கு முறை (Endogenous method)யைக் கையாளுவதேயாகும். ஆகையால், அடிப்படைக் கல்வி சிந்தனையுருவம் கொண்ட போது, அது வளரும் நாடுகளுக்கு ஓர் உயிர் மருந்தைக் கண்டுபிடித்ததுபோல், ஒவ்- வொரு நாட்டிலும் அடிப்படைக் கல்விக் கருத்துகளை ஒத்த அனுபவங்கள் வித்து உருவத்திலேனும் உண்டோ என்று காணும் தனிக்கள ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. இலாபாக்கு (Laubach), காபெல்லெரோ (Cabellero), காபிரியேல், தோரெசு (Torres), சார்ட்டன் (Charton), போன்ற வல்லுநர்களால் எழுதப்பட்ட இவ்வாராய்ச்சிகள், அவர்களின் மிக்க மதி நுட்பத்தை வெளிப்படுத்துகின்றன. அவை இன்றைய நிலைக்கும் பொருந்தும் பாடங்களை உட்கொண்டவை; பலவேறுபட்ட சூழ்நிலைகளை அடக்கியுள்ளவை, பேட்டிரிசு கிங் (Beartice King) எழுதிய சோவியத்துக் கல்விப்புரட்சியைப் பற்றிய அறிக்கை அடிப்படைக்கல்வித் திட்டத்திற்குப் பத்து இருபது ஆண்டுகளுக்கு முற்பட்டது. சோவியத்து நாடு பெற்ற வெற்றி அனுபவம் இப்பொழுது வளரும் நாடுகளுக்கும் பொருந்துவதாகும். காந்தியடிகள் வகுத்த வார்தாத்திட்டமும் அடிப்படைக் கல்விக்குரிய ஓர் அணுகுமுறையாகும் என்பதும் யுனெசுகோவின் வெளியீட்டிலிருந்து புலனாகிறது.
பின்னோக்கு ஆய்வினைப் போலவே திட்டமுன்னோக்கிலும் மிகச் சிறந்த அறிஞரின் அனுபவமும் உட்காட்சிகளும் செறிந்து கிடக்கின்றன. குறிப்பாக இலாபாக்கு, சாவோ (Chao), ஆக்டென் (Ogden), இரிச்சர்ட்சு முதலியோர் வளரும் சூழல்களில் மொழி கற்பித்தலைப் பற்றி எழுதியுள்ளவை குறிப்பிடத்தக்கவை.
அடிப்படைக் கல்வித்திட்டம் பல்வேறு வடிவங்களில் பல்வேறு நாடுகளின் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் பரந்த ஆய்வும் உள்நின்று ஊற்றெடுக்கும் அணுகுமுறையும் இன்றும் எல்லா நாடுகட்கும் பொருந்துபவை, இவற்றைவிடுத்து, விரைவில் பலன் காண விரும்பிக் குறுகிய புகுத்துமுறைகளைப் பயன்படுத்திய சில திட்டங்கள், சில நாடுகளில் பலன் தராது போனதும் உண்டு.
UNESCO, “Fundamental Education”, The Macmillan Company, New York, 1947.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 247)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jj8xc5jr/
தமிழ்“அடிப்படைக் கல்வி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jj8xc5jr/APA
Oliyon Research. (2026). அடிப்படைக் கல்வி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jj8xc5jr/MLA
"அடிப்படைக் கல்வி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jj8xc5jr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment