சூல் ஒட்டு மாறுபாடுகள்
cūl oṭṭu māṟupāṭukaḷ
மகப் பேறு இயல்பாக இருந்தால், கருப்பைக் கழுத்து முழுமையாகத் திறந்தவுடன், பனிக் குடம் (amnion) உடைகிறது.
மகப் பேறு இயல்பாக இருந்தால், கருப்பைக் கழுத்து முழுமையாகத் திறந்தவுடன், பனிக் குடம் (amnion) உடைகிறது. பனிக் குடம் நீர்மங்கள் சார்ந்த பெருக்கியாகப் பணி புரிந்து கழுத்தைத் திறக்க உதவுகிறது. உரிய காலத்தில், பனிக் குடம் உடைந்தால், கருவுயிர்ப்புக்கும், கருப்பையுட் குழந்தைக்கும் நல்லது.
முறையான சுருக்கங்கள் தொடங்குவதற்கு முன்பே பனிக் குடம் உடைந்தால், முதிர்ச்சி முன் உடைவு என்பர். கூபக (pelvis) நுழை வாயிலில் உதயமாகும் பகுதி நிலை பெறாவிடில், உடையும் பனிக் குடம், முதிர்ச்சி முன்னதாகவோ, முன்கூட்டியதாகவோ இருக்கும். உதயமாகும் பகுதி, நிலை பெறு வளையத்தை உண்டாக்கவில்லை. பனிக் குட நீர்மமும் பிரியவில்லை. இந்நிலை குறுகலான கூபகம், குறுக்கு, சாய்வு, பிட்டத் (குறிப்பாகப் பாதத் தோற்றத்தில்) தோற்றங்கள், மிகு நீர்ப் பனிக் குடம் ஆகியவற்றில் உண்டாகிறது.
கருப்பைக் கழுத்து விறைப்பாக இருந்தாலோ, படலங்கள் வலிமையற்றிருந்தாலோ, நெகிழ் தன்மை குறைந்த நிலை, பனிக் குட நீர்ம முதிர்ச்சியின் பின்னதாகவோ, முன்கூட்டியோ வெளிப்படலாம். பனி நீர் இவ்வாறு வெளிப்படுவது, பேறு காலத்தில் ஆபத்தான சிக்கலாகும். பேறு கால முதல் கட்டம் (விரிவு நிலை) நீடித்து இருக்கிறது. சுருக்கங்கள் வலியுடன் உள்ளன; கருப்பையில் மந்த நிலை உருவாகிறது. நிலை பெற்ற வளையம் இல்லாதிருந்து, பனிக் குட நீர் கருப்பையிலிருந்து வெளிப்பட்டால், குழந்தை உடலின் சிறிய பகுதிகள் (குறிப்பாக கொப்பூழ்க் கொடி) பிதுக்கம் அடையலாம்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> நீண்ட நேரத்திற்குக் கருப்பைக் குழிவு யோனியுடன் தொடர்பு கொண்டிருப்பதால், நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. நீடித்த உலர்ந்த கட்டத்தில், கருப் பையக அழற்சி தோன்றுகிறது. காய்ச்சல், மிகையான நாடித் துடிப்பு,யோனியிலிருந்து கலங்கலான நீர்ம வெளிப்பாடு ஆகியவையும் காணப்படுகின்றன. முன் கூட்டிய பனிக் குட உடைவில் கருப்பையினுள் குழந்தைக்கு மூச்சுத் திணறல் தோன்றுகிறது.
முன் கூட்டிய பனிக் குட வெளிப்பாடு நிகழ்ந்தால், உடனடியாகச் சூலியை மருத்துவ மனைக்குக் கொண்டு சென்று, குழந்தையின் மூச்சுத் திணறலையும், நோய் தொற்றையும் தவிர்க்க முயற்சிகள் எடுக்க வேண்டும். பனிக் குட நீர்மம் வெளிப்பட்ட 6–8 மணி நேரத்திற்குள் கருப்பைச் சுருக்கங்கள் தொடங்கா விடில், கருப்பையைத் தூண்ட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். சுருக்கங்கள் வலிமையற்று இருந்தால், சுருப்பையின் சுருக்கத் தன்மையை ஊக்குவிக்க வேண்டும். சுருக்கங்கள் வலியுடன் இருந்தால், உணர்வு நீக்கி மருந்துகள் கொடுக்க வேண்டும்.
காலந் தாழ்த்திய பனிக் குட உடைவு. கருப்பைக் கழுத்துத் துளை முழுமையாகத் திறந்திருந்து, பனிக் குடம் உடையாமல் வெளியேற்றம் தொடங்கியிருந்தால், இந்நிலை காலந் தாழ்த்திய பனிக் குட உடைவு எனப்படுகிறது. படலத்தின் மிகையான வலிமை அல்லது படலங்களின் மிகையான விரிவடையும் தன்மை ஆகியவை இச்சிக்கலுக்குக் காரணமாகின்றன. இவை உரிய காலத்தில், பனிக் குடம் உடைவதைத் தடை செய்யும். கருப் படலங்கள் சிசுத் தலைக்கு அருகேயோ, அதனுடன் நெருக்கமாகவோ இருந்தால், மிகக் குறைவாக இருக்கும். நீர்மம், கால தாமதத்திற்குக் காரணமாகிறது.
காலந்தாழ்த்திப் பனிக் குடம் உடையும் போது, பேறு காலம் தாமதமாகிறது. கருப் பைச் சுருக்கங்கள் வலியுடன் இருக்கின்றன. உதயப் பகுதியின் முன்னேற்றம் மெதுவாக உள்ளது. கருப் பைக் கழுத்து முழுமையாகத் திறந்துள்ளது எனவும், பனிக் குடம் உடையாமல் இருக்கிறது எனவும் உறுதியானவுடன், பனிக் குடத்தைச் செயற்கை முறையில் உடைக்க வேண்டும். விறைப்பான பனிக் குடத்தை, ஒன்றிரண்டு விரல்களை உள்ளே செருகி உடைக்க வேண்டும். துணிக் கட்டுப் போடப் பயன்படும் இடுக்கியையோ, புல்லட் இடுக்கியையோ பயன்படுத்த வேண்டும். உதயமாகும் பகுதி, கூபக நுழை வாயிலில் நிலை பெறாவிடில், பனிக் குடத்திலிருந்து பீறிட்டு வரும் ஓட்டத்தைத் தடை செய்ய வேண்டும்.
பிறப்புறுப்புப் பிளவு வழியாகச் சிசுப் படலங்கள் துருத்திக் கொண்டிருந்தால், அவற்றையும் துளைக்க வேண்டும். இதன் பின், தலை, மகுட நிலையை அடையத் தொடங்குகிறது. படலத்தால் மூடப் பட்டுக் குழந்தை பிறந்தால், படலத்தை உடனடியாகச் சிசுவிலிருந்து அகற்ற வேண்டும். குறிப்பாக, சிசுவின் தலைப் பக்கமாகத் திறந்து விட்டால்தான் குழந்தையின் மூச்சுத் திணறலைத் தவிர்க்க முடியும்.
கருக் குடையின் முறை கேடுகள். கருக் குடை பொதுவாக வட்டமாகவோ, நீள் வட்டமாகவோ இருக்கும். சில போது, அது நீளமாக, அவரை வடிவமாக இரண்டு மடல்கள் கொண்டுமிருக்கலாம்.
குருதி நாளங்களால் இணைக்கப்பட்ட பல பகுதிகள் கருக் குடையில் இருக்கும். கருக் குடை மெல்லியதாகக் கருப் பைச் சுவரின் பெரும் பரப்பில் விரிந்து கிடக்கிறது. முதன்மைக் கருக் குடையுடன் சில சமயம், மிகையான பகுதிகளும் இணைக்கப் பட்டிருக்கும். படலங்களுக்கிடையே செல்லும் தமனிகள், சிரைகள் ஆகியவற்றுடனும் இணைக்கப்பட்டிருக்கும். கருவுயிர்த்த பின், கருக் குடையின் மிகைப் பகுதிகள் கருப் பையின் உள்ளேயே தேங்கிக் கிடக்கலாம். இதனால், கருவுயிர்ப்பிற்குப் பிறகு, குருதிப் பெருக்கும், சீழ்த் தொற்றும் நிகழலாம். கருக் குடை வெளிப்பட்டவுடன், அதில் உடைந்த குருதி நாளங்கள் உள்ளனவா எனப் பார்க்க வேண்டும். இவை காணப்பட்டால், கருக் குடையின் மிகை மடல் கருப்பையில் தங்கி விட்டது என உறுதி செய்து, உடனடியாக அதைக் கை கொண்டு அகற்ற வேண்டும்.
அரிதாக, வெண்மையான விளிம்புடன் ஒழுங்காக இருக்கும் கருக் குடையிலிருந்து படலங்கள் வெளிப் படுகின்றன. கருப்பைச் சிலேட்டுமத்தையும், கருக் குடை ஒட்டிக் கொண்டிருக்கும் இடத்தையும் பொறுத்துக் கருக் குடையின் வடிவம் அமையும்.
கருவகக் கோளங்களில் கருக் குடை பொருந்தியிருப்பது அல்லது வாட்டக் குறைவு அல்லது அழற்சி நிகழ்வுகளால், கருப்பையகம் பாதிக்கப்படுவது கருக் குடையைப் பாதிக்கும். விரல்களின் சிதைவாலும், சீர் குலைந்த குருதி ஓட்டத்தின் விளைவாலும், கருக் குடை நசிவுகள் உருவாகின்றன. இம்மாற்றங்களைத் தொடர்ந்து ஃபைப்ரின் படிகிறது. நசிவுகள் வெண்மையான வட்டமான பட்டைகளாக 15–20 மி.மீ. அளவில் கருக் குடையின் இரண்டு பக்கங்களிலும் (தாய், சேய்ப் பரப்பு) காணப்படுகின்றன. சில போது நசிவுகள் பெருமளவில் இருந்து, கருக் குடை முழுதும் காணப்படும். சிறுநீரக அழற்சியிலும், பேறு கால நச்சு நிலையிலும் பெரிய நசிவுகள் தோன்றுகின்றன. சிறிய நசிவுகளால் தீமை இல்லை. கருக் குடையின் பரப்பு முழுதும் காணப்படும் நசிவுகளால் குழந்தையின் இயல்பு மீறிய வளர்ச்சிகள் தோன்றுகின்றன. அவை, கருப்பையுள் குழந்தையின் மரணத்திற்கும் காரணமாகின்றன.
நிறை மாதச் சிசுக்களின் தாய்ப் பரப்பில், வெண்மையான, திண்மையான புள்ளிகள் காணப்படுகின்றன. அவை நசிவடைந்த விரலிகளில் காணப்படும் கால்சிய உப்புப் படிவுகளாகும். கருப்பையுள் சிசுவின் வளர்ச்சி மீது எவ்விளைவையும் இவை ஏற்படுத்துவதில்லை.
கருக்குடை ஒட்டிக் கொள்ளல். கருப்பையகம், கருவகத் தசையின் (myometrium) பொஞ்சடுக்கினுள் நுழையாது விரலிகள் உதிர் படலத்தின் இறுக்கு அடுக்குள் வளரும். குழந்தை பிறந்த பின்பு, பொஞ்சடுக்கிலிருந்து, கருக் குடையை எளிதில் பிரிக்க முடிகிறது. ஆனால், கருப்பைச் சுவருடன் கருக் குடை ஒட்டிக் கொள்வது மிகவும் நெருக்கமாக இருக்கிறது.
ஒட்டிக் கொள்வதில் உண்மை வகை, போலி வகை என இரண்டு வகைகள் பிரித்தறியப் படுகின்றன. போலி ஒட்டலில் (placenta adherent) விரலிகள் கருப் பையகத்தினுள் வளர்ச்சியடைகின்றன. ஆனால், கருவகத் தசையை அடைவதில்லை. கருக் குடையைக் கையாலேயே பிரிக்க முடியும்.
உண்மை வகையில் (placenta accreta) விரலிகள் கருவகத் தசையினுள் சென்று வளர்ச்சி அடைகின்றன. இதனால், கருப் பைச் சுவரிலிருந்து கருக் குடையைப் பிரிக்க முடிவதில்லை. இது மிகவும் அரிது. தன் முழுப் பரப்புக் கொண்டோ, ஒரு பகுதி மட்டும் கொண்டோ கருக் குடை கருப்பைச் சுவரின் மேல் முட்டிக் கொள்ள முடியும். கருக் குடையில் ஒட்டிக் கொள்ளல் பின் வருவனவற்றால் நிகழும். அழற்சி நோயால், கருப் பையில் ஏற்படும் மாற்றங்கள் (கருப் பையக அழற்சி) கருப்பை ஃபைப்பேராமையோமா ஆகியவற்றைச் சுரண்டிய பின் உண்டாகும் தழும்புகள், கருப் பையின் விகார வளர்ச்சிகள் (குறை வளர்ச்சி, இரு கொம்புக் கருப்பை முதலியன) கருச் சிதைவின் பின்னர், பெண்களில் கருக் குடை ஒட்டிக் கொள்ளல் ஆகியன உண்டாகும். பேறு கால முதல், இரண்டாம் நிலைகளிலோ, மகப் பேற்றின் போதோ, ஒட்டியிருக்கும் கருக் குடை நிலைகளிலோ வெளித் தெரிவதில்லை. மூன்றாம் கட்டத்தில், குருதிப் பெருக்கு தொடங்குகிறது. விரைவாக அது மிகையாகிறது. தன் முழுப் பரப்புக் கொண்டு கருப்பைச் சுவரில் ஒட்டிக் கொண்டிருந்தால், குருதிப் பெருக்கு இல்லை. கருக் குடையின் ஒரு பகுதி பிரியத் தொடங்கியவுடன், கருக் குடை பிரிந்து வெளிப்படுவதை, ஒட்டியுள்ள கருக் குடை தடுத்தால், குருதிப் பெருக்கு தொடங்குகிறது. கருக் குடை தேங்கி விட்டால், கருப்பை சுருங்குவதில்லை.
கருக் குடை பொருந்தியிருக்கும் இடத்திலுள்ள நாளங்கள் திறந்து, அது உள்ளிருக்கும் வரை குருதிப் பெருக்கு தொடர்கிறது. ஒட்டியுள்ள கருக் குடைக்கு உடனடி அறுவை செய்ய வேண்டும். போலி ஒட்டலைக் கை கொண்டு, பிரித்துக் கருப் பையிலிருந்து அகற்றி விடலாம். உண்மை ஒட்டலின் போது, கருப் பையை அகற்றி விடுவதே சிறந்தது. —அ. கதிரேசன் நூலோதி. Alexander Rosinkin, Text Book of Obstetrics, First Edition, Mir Publishers, Moscow, 1983: Gillian Turner et. al. Undergraduate Obstetrics and Gynaecology, John wright and Sons, Bristol, 1980.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 652)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jgrhfcfa/
தமிழ்“சூல் ஒட்டு மாறுபாடுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jgrhfcfa/APA
Oliyon Research. (2026). சூல் ஒட்டு மாறுபாடுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jgrhfcfa/MLA
"சூல் ஒட்டு மாறுபாடுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/jgrhfcfa/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment