மண்டலச் சிரையிலிருந்தோ (Systemic vein) மிக அரிதாக இதயத்தின் வலப் பகுதியிலிருந்தோ உருவாகும் குருதிப் படுகையின் (thrombus) ஒரு பகுதி பிரிவுற்று, குருதி ஓட்டத்தில் வெளியிடப் படும் போது, நுரையீரல் தமனித் தடுக்கை (Pulmonary embolism) ஏற்படுகிறது. முதன்மை நுரையீரல் தமனியை இவ்விதம் தடுக்கை அடைக்கும் போது, திடீர் மரணம் ஏற்படுகிறது. நுரையீரலின் சிறிய தமனிகள் அடைபட்டால், நுரையீரல் குருதி ஓட்டத் தடை, திசு அழிவு ஆகியவை ஏற்படுகின்றன. நுரையீரல் மிகைக் குருதி அழுத்தம், வல இதயத் திறன், நாட்பட்ட தளர்வு போன்ற சிக்கல்கள் தோன்றும் போதே, மீண்டும், மீண்டும் நிகழும் அறிகுறியற்ற நுரையீரல் தமனித் தடுக்கை, பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று உணர்த்துகிறது. காரணவியல். பெரும்பாலும் கூபகச் சிரை (pelvic vein) அல்லது கால்களின் ஆழ் சிரைகள் போன்றவற்றிலேயே சிரைக் குருதிப் படுகை உருவாகிறது. இவ்வகைக் குருதிப் படுகை பெரும்பாலும் குருதி ஓட்டத் தேக்கத்தால் ஏற்படுவதால், நெடு நாள் படுக்கையிலிருந்த நோயாளிகளுக்கே நுரையீரல் தமனித் தடுக்கைப் பாதிப்பு நிகழ்கிறது. பத்து விழுக்காட்டுக்கும் குறைவான நோயாளிகள், இதய மேலறை விரைவுச் சிலிர்ப்பு (atrial fibrillation) உள்ளோராக இருக்கின்றனர். இந்நிலையில், இதயத் திறன் குன்றலும் சேர்ந்து, இதய வல மேலறையில் (right atrium) குருதிப் படுகை உருவாகித் தடுக்கை காரணமாகிறது. நோயின் தன்மை. மிகவும் கடுமையான குறு நுரையீரல் தமனித் தடுக்கை நிலையில், நோயாளி திடீரென மூச்சுத் திணறலுடன் நிலை குலைந்து விட வாய்ப்புண்டு. இதய மிகு துடிப்பு, கழுத்துச் சிரையழுத்த அதிகரிப்பு போன்ற அறிகுறிகள் பெரும்பாலும் காணப் படும். மிதமான தடுக்கை நிலையில் தற்காலிக மூச்சுத் திணறல் (dyspnoea), மயக்கம், இதய மிகு துடிப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும். நுரையீரலின் சிறிய புறத் தடுக்கையால், பெரும்பாலும் நுரையீரல் குருதி ஓட்டத் தடைத் திசு அழிவு ஏற்படும். இந்நிலையில், நுரையீரல் உறை வலி, தீவிரமான அல்லது மீண்டும், மீண்டும் ஏற்படும் இருமல், குருதி ஒழுக்கு. மைய நீல ஏற்றம் (central cyanosis), இதய மிகு துடிப்பு, மூச்சுத் திணறல், காய்ச்சல், வெள்ளை அணுக்கள் அதிகரிப்பு போன்றவை ஏற்படும். ஆய்வு. எக்ஸ் கதிர் வரைபட ஆய்வில் நுரையீரல்கள் இயல்பாகத் தோன்றும். சில சமயம் அடைப்புக்கு உள்ளவதால், இயல்பாகக் காணப் பட வேண்டிய தமனியில் நாளக் குறிகள் (vascular maskings) தெளிவுறத் தெரியா. நோய் அறுதியிட உதவும் நம்பகமான ஆய்வு, நுரையீரல் குருதி நாள் வரைபட (angiography) ஆய்வாகும். நுரையீரல் குருதி ஓட்டத் தடைத் திசு அழிவுற்ற நிலையில், பாதிக்கப்பட்ட நுரையீரல் பகுதி எக்ஸ் கதிர் ஊடுருவல் தன்மையிழந்து காணப் படுவதுடன் புளுரக நீர்ம நிலையும் காணப் படும். ஊடு அணு ஆய்வு (radionucleide scanning). இம்முறை சாதாரண எக்ஸ் கதிர் வரைபடத்தின் மூலம் கண்டறிய இயலாத, குருதி ஓட்டம் குறைந்த, நுரையீரல் பகுதிகளைக் கண்டு கொள்ள இயல்வதால், நுரையீரல் தமனித் தடுக்கை நிலையை அறுதியிட உதவும். நோயின் போக்கும், நோய் முன் கணிப்பும். நோய்க் கடுமையான நுரையீரல் தமனித் தடுக்கை நிலை பெரும்பாலும் மரணத்தில் ஆழ்த்தி விடும். மிதமான தடுக்கை நிலை உயிருக்கு ஊறு விளைவிக்க வில்லையெனினும், பிற்காலத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட இருப்பதையே அது உணர்த்துகிறது. மீண்டும், மீண்டும் ஏற்படும் தடுக்கை (recurrent emboli). நுரையீரல் மிகைக் குருதி அழுத்தம் மற்றும் வல இதயச் செயலிழப்பு ஆகிய சிக்கல்கள் தோன்றக் காரணமாகிறது. பெரும்பாலான சமயங்களில், நுரையீரல் குருதி ஓட்டத் தடையழிவு கரைந்து, இயல்பு நிலையை அடைந்து விடும். ஆனால், சில சமயங்களில் அழிவுற்ற பகுதியில், இரண்டாம் தர நோய்த் தொற்றுக்கு (secondary infection) உள்ளாகிச் சீழ்க் கட்டியாக மாறலாம். மருத்துவம். தடுக்கை நிலைக்கு உட்பட்ட உடனே, சிரை வழியாக ஹெப்பாரின் என்னும் குருதி உறைவு எதிர் மருந்தை, மூன்று நாள்களுக்குச் செலுத்த வேண்டும். அதன் பிறகு, வாய் வழிக் குருதி உறைவு எதிர் மருந்தைக் கொடுக்க வேண்டும். இதன் மூலம், சிரையில் குருதிப் படுகை தோன்றாமல் தடுக்கலாம். மைய நீல ஏற்றம் இருப்பின், ஆக்சிஜனைச் செலுத்த வேண்டும். படுக்கையில் இருக்கும் நோயாளிகளை அறுவைக்குப் பிறகோ, வேறு நோய் நிலைகளாலோ விரைவில் எழுந்து நடமாடுமாறும், உடற்பயிற்சி செய்யுமாறும் அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு இயலாத நிலையில், கால்களை அடிக்கடி நீட்டி மடக்குமாறு அறிவுறுத்த வேண்டும். மேற்கூறிய முறைகளில் சிரைக் குருதிப் படுகை தோன்றுவதைத் தடுக்கலாம். மீண்டும், மீண்டும் நிகழும் நுரையீரல் தமனித் தடுக்கை நோயில் குருதி உறைவு எதிர் மருந்து மருத்துவத்தோடு, அறுவையையும் கையாள வேண்டும். அறுவை முறையில் கீழ்ப் பெருஞ்சிரையில் வடிப்பான் பொருத்துவதன் மூலமாகக் குருதிப் படுகை பிரிவுற்ற இதயம் மூலமாக நுரையீரலை அடைந்து தடுக்கையாக மாறாமல் தடுக்கலாம். —சி. ஆதித்தன் துணை நூல். John Mcleod, Davidson's Principles and Practice of Medicine, Fourteenth Edition, ELBS, London, 1985.