என்பார் கி.பி. 1623–ஆம் ஆண்டு முதல் 1656–ஆம் ஆண்டு வரை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரிடம் தளவாயாக விளங்கியவர். இவர் மதுரையை அடுத்துள்ள கூத்தியார்குண்டு என்னுமூரில் பிறந்தார். அந்தண மரபினைச் சார்ந்த இவர் இராமையன், இராமப்பையன் எனவும் அழைக்கப்பட்டார். இவர் காலத்தில் இராமநபுரத்தை ஆண்ட மன்னர் சேதுபதி சடைக்கத் தேவர் ஆவார். இச்சேதுபதி மீது திருமலை நாயக்கர் போர் தொடுத்த போது, இராமையர் சேனாதிபதியாக அணிவகுத்துச் சென்று, மன்னரைச் சிறைசெய்து கொண்டு வந்தார். சேதுபதி, முன்னமே திருமலை நாயக்கருடைய சேனையை முறியடித்து வெற்றி கண்டவர். இருந்தும், இவர்மீது போர் தொடுக்க நாயக்கரிடமும், தன் தமையன் வைத்திய நாதனிடமும் இராமையர் அனுமதி கேட்டார். அவர்கள் முன்னர் மறுத்துப் பிறகு மிகவும் எச்சரித்து, அனுமதி வழங்கினார்கள். இராமையர், மதுரை மீனாட்சி அம்மையையும் சொக்கலிங்கப் பெருமானையும் வணங்கிப் பாளையக்காரர்களுடன் புறப்பட்டுச் சென்று, மானாமதுரையில் தங்கியிருக்குங்கால், இச்செய்தி அறிந்த சேதுபதி மிகச் சினந்து, தம் மருமகன் வன்னியனைப் படையுடன் அனுப்பினார். அரியாணிக் கோட்டையில் போர் நடந்தது. வன்னியன் படையே முதலில் வெற்றியடைந்தது. போகலூர்க் கோட்டைப் போரிலும் வன்னியனே வெற்றி பெற்றான். ஆனால், அயர்வுறாத இராமையர் அரியாசையாபுரத்தை முற்றுகையிட்டார். இதில் சேதுபதி காயமுற்று இராமேச்சுரத் தீவினை அடைந்தார். அப்போது திருமலை நாயக்கரிடமிருந்து வந்த ஓலையின்படி இராமையர் மதுரை அடைந்து, அவர் ஆணைப்படி வடக்கே விசயநகரத்தே இராயருக்கு உதவியாகப் படையுடன் சென்று, போர்புரிந்து, வெற்றி தேடித் தந்தார், பரிசுகள் பெற்று, மதுரை வந்து, மறுபடியும் சேது நாடு சென்று, போகலூர்க் கோட்டையை முற்றுகை இட்டார். அப்போது மன்னர் மகனைச் சித்திரவதை செய்து கொன்று விட்டார். பிறகு, இராமேசுவரத் தீவிற்கும் பாம்பனுக்கும் அணைகட்டி, வெள்ளையரின் உதவியுடன் இராமையர் போரிட்டார். அப்போது வன்னியனுக்கு அம்மை நோய் கண்டது. அதுகண்டு கோபமடைந்த சடைக்கன் அபிசார வேள்வி செய்து, இராமையருக்குப் பிளவை தோன்றச் செய்ததாகக் கூறப்படுகிறது. இருந்தும், இராமையரும் அம்மை நோயுடன் வன்னியனும் போரிட்டனர். வன்னியன் வெற்றி பெற்று அரண்மனை சென்று உயிர்விட்டான். பிறகு சேதுபதி சடைக்கத்தேவர் இராமப்பையரிடம் சரணடைந்தார். இராமப்பையர் அவரைச் சிறை செய்து மதுரைக்குக் கொண்டுவந்தார். இதற்காக ராமையர் பரிசுகள் பெற்றார். சடைக்கன் சிறையில் கடவுளை வேண்டத் தளைகள் அறுபடக்கண்ட திருமலை நாயக்கர், அவரை விடுதலை செய்தார். சேதுபதி சடைக்கத்தேவர் மீண்டும் சேதுநாட்டிற்கு அரசரானார். இராமப்பையர் தாம் பிறந்த ஊரில் ஒரு சிவன் கோயில் கட்டியுள்ளார். இவரது உருவம் அச்சிவன் கோயில் கற்றூண் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ளது இவ்வரலாறு தஞ்சைச் சரசுவதி மகால் வெளியீடான ‘இராமையன் அம்மானை’ என்னும் நூலில் காணப்படுகிறது. வீ.சொ.