அரிகதை காலட்சேபம் என்பது அரியின் பெருமைகளைக் கேட்டுப் பொழுதைப் போக்குதல் எனப்படும். கதா காலட்சேபம் எனப்படும் இக்கலை தெய்வத் தொடர்புடையதாகும். இதன்கண் இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று கலைகளின் இயல்பும் விளக்கமுறும். ஆயினும் இங்கு இசைக்கு முதன்மை கொடுக்கப்பட்டுள்ளது. மராட்டிய மாநிலத்தில் பிறந்த இந்தக் காலட்சேபக் கலை தமிழகம் வந்து முழுவடிவை அடைந்துள்ளது. அம்மாநிலத்தில் இக்கலையைக் “கீர்த்தன்”, என்றும், இக்கலையினை மேற்கொண்டவர்களைக் “கீர்த்தன் கார்”, என்றும் குறிப்பிட்டனர். தமிழகத்தில் இக்கலை, “கதா காலட்சேபம், சங்கீத உபன்யாசம் இசைச் சொற்பொழிவு, கதைப் பிரசங்கம்” முதலிய பெயர்களைப் பெற்றுள்ளது. இதனை மேற்கொண்டவர்கள் “பாகவதர்கள்” என்று சொல்லப் பெற்றனர். மராட்டியர்கள் விட்டுணுத் தொடர்பான பாடல்களைப் பாடிப் பொருள் மட்டுமே கூறி வந்துள்ளனர். பன்மொழிப் புலமை பெற்றவர்களாகப் பாகவதர்கள் விளங்கியதால் பன்மொழிகளின் கூட்டுறவை ஒருவர் வாய்மூலமாகக் கேட்பதற்கு இக்கலை வழி செய்கிறது. கல்வி அறிவு இல்லாத பாமர மக்களுக்குக் கேள்வி மூலமாக அறிவைப் புகட்ட இக்கலை பயன்பட்டு வந்துள்ளது. உலக இயல்புகளையும், புராண, இதிகாச உண்மைகளையும் மக்களுக்குத் தெரிவிப்பதால் இக்கலை ஒரு விளம்பரமாகவே கருதப்படும். இக்கலையோடு பேரள- வில் வைணவமும் சைவமும், சிறிய அளவில் கிறித்துவமும் தொடர்பு கொண்டுள்ளன. கி.பி. 1864–ஆம் ஆண்டு மராட்டிய பாகவதரான இராமச்சந்திர மூர்கூர் பாவா என்பவர், இராமேசுவர யாத்திரையின் பொழுது தஞ்சையில் தங்கினார். அப்பொழுது தஞ்சையைக் காமாட்சிபாய் சாகேபு என்னும் மராட்டிய அரசி ஆட்சி செய்தார். இவர் காலத்தில்தான் கதை காலட்சேபம் தஞ்சையில் பரவத் தொடங்கியது. இந்நிகழ்ச்சியின் போது பொது மக்கள் திரளாக அமர்ந்திருப்பர்; பாகவதரும் பக்க வாத்தியக்காரரும் பின்பாட்டுக்காரரும் தாளமிடுபவரும் முன்னும் பின்னும் நடந்துகொண்டே மெய்ப்பாட்டுடன் இக்கலையை நிகழ்த்தியுள்ளனர். மராட்டிய மொழியில் தான் பாடியும் பேசியும் வந்தனர். தஞ்சையில் அன்று மிகுதியான மராட்டியர்கள் வாழ்ந்து வந்ததால் இக்கலைக்கு ஆதரவு பெருகிற்று. மராட்டியக் கதை காலட்சேபங்களில் சாகி, திண்டி, ஓவி, அஞ்சனா கீதம், பஞ்சசாமரம், கட்கா, அபங்கம், மத்தகோகிலம் போன்ற பாடல் வகைகளைப் பயன்படுத்தினர். தமிழகத்துப் பாகவதர்களாலும் இப்பாடல் வகைகள் தொடக்கக் காலத்தில் பாடப்பட்டு வந்தன. இராமசந்திர மூர்சூர் பாவா நாற்பது ஆண்டுக் காலம் இக்கலையை நடத்தி மறைந்தார். இவருக்குப்பின் இவர் மகன் விட்டுணு பாவா கதை காலட்சேபக் கலையை மேற்கொண்டார். தெலுங்கர் ஆட்சியிலும் மராட்டியர் ஆட்சியிலும் அமைச்சராக இருந்த பெரியண்ணா (வேங்கடசாமி நாயுடு) தமது ஓய்வுக் காலத்தை இறை சிந்தனையில் கழிக்க எண்ணினார். கிருட்டிண மடம் ஒன்றை நிறுவினார். பன்மொழிப் புலமை பெற்ற பெரியண்ணா தம்மிடத்து அடைக்கலமாக வந்த சிறுவனுக்குப் பலவிதமான கலைகளைக் கற்பித்துக் கதை காலட்சேபத்தையும் கற்பித்தார். அச்சிறுவனே பின்னர்த் தஞ்சைக் கிருட்டிண பாகவதர் என்று மற்றவர்களால் போற்றப்பட்டார். இவருடைய கதை காலட்சேபம் பார்க்கவும் கேட்கவும் சிறப்பாயிருக்கும் என்பர். மராட்டிய பாகவதர்கள் காலில் சலங்கை கட்டி இருந்தாலும் ஆடுவதில்லை. கிருட்டிண பாகவதர் மெய்ப்பாட்டோடு ஆடவும் செய்தார். முதன் முதலில் நின்றுகொண்டே கதை காலட்சேபம் நடத்தும் முறையைத் தொடங்கினார். மராட்டிய முறையிலிருந்து சற்று மாற்றி இக்கலையை நடத்தி இதில் புதிய அமைப்பைத் தோற்றுவித்தார். இவர் நிகழ்ச்சிகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைக் கலந்தே கதை காலட்சேபத்தை நடத்தினார். இவரது காலம் கி.பி. 1847–1903 ஆகும். கிருட்டிண பாகவதருக்குப் பின்பாட்டு பாடி வந்த கரந்தைக் கோவிந்தசாமி பாகவதர், வேற்றுமொழிக் கலப்பு இன்றி முதன்முறையாகத் தமிழில் கதை காலட்சேபத்தை நடத்தினார். தஞ்சைக் கிருட்டிண பாகவதரின் முறையைப் பின்பற்றித் தில்லைத்தானம் நரசிம்ம பாகவதர், இலக்குமணாச்சாரியார், திருப்பழனம் பஞ்சாபகேச சாத்திரியார், தஞ்சைப் பஞ்சாபகேச பாகவதர், சூல மங்கலம் வைத்தியநாத பாகவதர், மாங்குடி சிதம்பர பாகவதர், அரிகேச நல்லூர் முத்தையா பாகவதர் போன்றோர் இக்கலையை மேற்கொண்டவர்களுள் குறிப்பிடத்தக்கவராவர். இக்கதை காலட்சேபக்கலையாம் உலகில் நுழைந்த முதல் பெண்மணி திருமதி. சீ. சரசுவதியாவர். இவரைத் தொடர்ந்தவர்களில் பண்ணிபாய், பத்மாசனி, திருக்கோகர்ணம் கனகாம்புசம் போன்ற பெண்கள் குறிப்பிடத் தக்கவர்களாவர். கதை காலட்சேபக்கலையையும் பாகவதர்களையும், தமிழகச் சைவ மடங்களும், சமசுதானங்களும் சமீன்தார்களும் ஆதரித்து வந்துள்ளனர். திருவாவடுதுறை ஆதீனத்தின் பொருள் உதவியோடு தமிழ்நாடு, இந்துசமய அறநிலைய ஆட்சித் துறையினரால் தஞ்சையில் 1963–ஆம் ஆண்டு மூன்றாண்டுப் பாடத்திட்டத்தோடு இக்கலைப் பயிற்சிக்கூடம் ஒன்று தொடங்கப் பெற்று ஆறு ஆண்டுகள் நடைபெற்ற பின் இயங்காது போயிற்று. குவாலியர் சமசுதானத்தில் அரிகதை காலட்சேபப் பள்ளி ஒன்று இருந்துள்ளது. இன்று சில பாகவதர்கள் தம் வீட்டிலேயே ஒரு கதைக்கு ஆறு மாதக்காலத்தைப் பயிற்சிக் காலமாக அமைத்துப் பயிற்றி வருகின்றனர். அரிகதை காலட்சேபக் கலையை நடத்துபவர்கள் நின்றுகொண்டு நிகழ்ச்சியை நடத்துதல் மரபாகும். சுருதியும் (தம்பூரா) மிருதங்கமும் இக்கலைக்கான பின்னிசைக்குரிய இன்றிமையாத கருவிகளாகும். பிற்காலத்தில் ‘வயலின்’ அல்லது ‘ஆர்மோனியம்’ பயன்படுத்தப்பட்டுள்ளது. பாகவதர் தம் கையில் வைத்திருக்கும் இசைக்கருவியின் பெயர் ‘சிப்ளா’ என்பதாகும். அரிகதை காலட்சேபம் வெற்றி அடைவதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பவர் பின் பாட்டுக்காரராவர். இவர் பாகவதருக்கு நெருங்கிய உறவாகவோ மாணவராகவோ இருப்பார். பயிற்சிக் காலத்தும் பின் பாட்டுக்காரராக இருந்த பின்புதான் தாமே கதை காலட்சேபத்தை நடத்துத் திறம் பெறுவார். பாகவதரின் பொருள்நிலைக்கேற்ப ஒருவரோ அல்லது இருவரோ பின்பாட்டுக்கு அமைவர். இப்போது பின்பாட்டுக்காரர் இன்றியே கதை காலட்சேபம் நடைபெறுகிறது. அரிகதை காலட்சேப நிகழ்ச்சி தொடக்கக் காலத்தில் பாரதம், இராமாயணம், பாகவதம், அடியவர் பெருமைகள் ஆகியவற்றையே சொல்லி வந்தனர். இந்திய நாட்டுச் சுதந்திரப் போராட்ட எழுச்சிக்குரியதாக இக்கலை பயன்பட்டுள்ளது. இராமாயணம், பாரதம் போன்ற இதிகாசங்களை இன்று தொடர் நிகழ்ச்சியாகச் செய்து வருகின்றனர். அரசாங்கக் கொள்கைகளை மக்களிடம் பரப்புவதற்கும் இக்கலை பயன்படுகிறது. பெருந்தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் கதை காலட்சேப முறைக்கு ஏற்ப அமைத்துச் சொல்லி வருகின்றனர். சுவாதித் திருநாள் மகாராசர் குசேலரின் கதையைக் காலட்சேப முறைக்கேற்ப அமைத்தார். நந்தனார் வரலாற்றைக் கோபால கிருட்டிண பாரதி, கதை காலட்சேப முறைக்கு ஏற்ப அமைத்துள்ளார். கதை காலட்சேபம் தமிழகத்தில் நான்கு பிரிவாக அமைந்து நடைபெறுவது மரபாகும். முதலில் பஞ்சபதி பாடுவர். (விநாயகர், சிவன், திருமால், ஆசான், அனுமன் ஆகிய ஐவரைப் பற்றிய பாடல்கள்). இரண்டாவது நாம சித்தாந்தம். (தலைப்பைத் தெளிவு செய்தல்). மூன்றாவது சரித்திர-பிராரம்பம். (தொடக்கம்). நான்காவது உபசம்காரம். (கதை காலட்சேபத்தின் தொடக்கத்தில் பாடிய பாடலைப் பாடி முடித்தல்) இந்த அமைப்பே மரபாகும். பஞ்சபதி பாடும் முறையை ஒருசில பெரிய பாகவதர்கள் பின்பற்றாமல் விநாயகர், சரசுவதி ஆகியோரைப் பற்றி மட்டும் பாடத் தொடங்குகின்றனர். கதை காலட்சேபத்தின் தொடக்கத்தில் கானடா, நாட்டை தன்யாசி, ஆரபி, வராளி, சிரிராகம் ஆகிய இராகங்கள் பாடப்படும். முடிவில் சௌராட்டிரம், சுருட்டி, மத்தியமாவதி ஆகிய இராகங்களைப் பாடுவர். மகாபாரதம் சொன்னால் வியாச பாரதத்தையும், இராமாயணம் சொன்னால் வால்மீகி இராமாயணத்தையும்தான் சொல்லுவர். இன்று வில்லிபுத்தூராழ்வார் பாரதத்தையும், கம்ப இராமாயணத்தையும் சொல்லுகின்ற நிலை உருவாகி வளர்ந்துள்ளது. தமிழகத்துக் கதை காலட்சேபங்களில் தமிழகத்திற்கே உரிய குறவஞ்சி, பள்ளு, கும்மி, தெம்மாங்கு முதலிய பாடல் வகைகளும் பாடப்படுகின்றன. அருணாசலக் கவிராயர், மழவை சிதம்பர பாரதி, பாபநாசம் சிவன் முதலியோர் பாடல்களும் இடையிடையே பாடப்படும். ஆதி, உரூபக, மிசுர சாபு, செம்பை, உசி ஆகிய தாள வகைகளையே கதை காலட்சேபங்களில் பயன்படுத்துவர். சிறுபான்மையாகச் சிர திரிபுடை, கண்ட திரிபுடை ஆகிய தாள வகைகளைக் கையாளுவர். கதையின் நடுவே மிருதங்கம் தனியே வாசிப்பதற்கு நேரம் ஒதுக்கப்படும். பின்பாட்டுக்காரரின் இராகக் கற்பனைக்கு ஒரு சில மணித்துளிகள் கொடுக்கப்படும். கதை சொல்லும் பாகவதருக்குச் சற்று ஓய்வு ஏற்படுத்துவதற்காகவே இம்முறையினை அமைப்பர். மருத்துவம், சோதிடம், நடப்பியல், அரசியல், குடும்பச்சூழல் பற்றிய செய்திகள், புதுமையான இராகங்கள், குட்டிக் கதைகள், பழமொழிகள், கடின சந்தப் பாடல்கள், நகைச்சுவை, பன்மொழிப் புலமை, நடிப்பு, நடனம், ஏற்ற இறக்கப் பேச்சு ஆகியவற்றைக் கதை காலட்சேபம் சிறப்புறுவதற்குச் சமயத்திற்கேற்ப அமைத்துக் கொள்வர். கதை காலட்சேபம் நடத்தும் பாகவதர்களுக்கு மக்களே பட்டங்கள் கொடுத்துச் சிறப்பித்தனர். அரிகதை திலகம், அரிகதை பூடணம், அரிகதை இரத்தினம், அரிகதை சாம்ராட்டுப் போன்றவை பொதுவான பட்டங்களாகும். அரிகதை கேசரி, கீர்த்தனை குலசேகர, அரிகதை கலைவாணி ஆகியவை சிறப்புப் பட்டங்களாகும். தமிழக அரசு கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டுக் “கலைமாமணிப்” பட்டத்தை நல்கி வருகிறது. அதில் பாகவதர்களும் இடம் பெற்றுள்ளனர். புதிய இராகங்களைக் கண்டறியும் திறனும் கவிபுனையும் ஆற்றலும் பாகவதர்கள் பெற்றிருந்தனர். கோவில்களில் மட்டும் நடைபெற்று வந்த இக்கலை பொது நிகழ்ச்சிகளிலும், அரசாங்க நிகழ்ச்சிகளிலும், பங்குபெறத் தொடங்கியது. தொடக்கக் காலத்தில் இரவு முழுவதும் நடைபெற்ற இக்கலை, இன்று இரண்டுமணி நேரத்திலிருந்து மூன்றுமணி நேரத்திற்குள் நிறைவுறும் நிலை அடைந்துள்ளது. இனிய குரல் வளம், தோற்றப் பொலிவு, நினைவாற்றல், வாக்குத்திறன் பெற்றவர்கள் யாவரும் இக்கலையை மேற்கொள்ளலாம். இன்று ஒன்பது அல்லது பத்து வயதுச் சிறுமியரும் இக்கலையைப் பயின்று நடத்தி வருகின்றனர். மராட்டிய கலையான கதை காலட்சேபக்கலை, தமிழகத்துக் கலைகளான, பாரதம் படித்தல், வில்லுப் பாட்டு, நாட்டிய நாடகம், தெருக்கூத்து ஆகியவற்றின் அடிப்படைக் கூறுகளோடு இணைந்துள்ளது.இரா. குரு.