இரண்டு அளவைகளில், ஒன்றில் ஏற்படும் மாறுதல் மற்றொன்றில் நேர் விகிதப் பொருத்தமுள்ள மாறுதலை விளைவிக்கக் கூடுமானால், அவற்றிற்கிடையே உள்ள உறவு நேர் கோட்டியல்பு (linearity) என்று குறிப்பிடப் படும். அதன் உள்ளீட்டுக் குறிப்பை இரட்டித்தால், வெளியீட்டுக் குறிப்பு இரட்டிப்பாகும். இந்நிலையில் ஒரு மின் கம்பி நேர் கோட்டியல்புக் கொண்டிருக்கும். ஒரு திரிதடையத்தில் அதன் கன அடிப்படை அழுத்தத்தை இரட்டிப்பாக்கினால், அதன் சேகரிப்பான் மின்னோட்ட மதிப்பு இரட்டிப்பாகும். இந்நிலையில், நேர் கோட்டியல்பு கொண்டதாகக் கொள்ளப் படும். ஒரு வெற்றிடக் குழலில், வலை அழுத்தத்தை இரட்டிப்பாக்கும் போது, தகட்டு மின்னோட்டம் இரட்டிப்பாகுமானால், அதுவும் நேர் கோட்டியல்பு காட்டுவதேயாகும். தொலைக் காட்சிப் பெட்டியில், படத்தின் பகுதிகளைத் தக்க இடைவெளியிலிருக்குமாறு செய்வதற்கு வரிக் கண்ணோட்டம் (scanning) நேர் கோட்டியல்பு கொண்டதாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் செங்குத்து வழியிலும், இடைவெளி சரியாக இருக்கும். நேர் கோட்டியல்பு சரியாக அமையாவிடில், குறுகியோ, விரிந்தோ, வேறு திரிபுகள் கொண்டோ, படம் தோன்றும். —எஸ். சுந்தரசீனிவாசன்