அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்
aḻakiya maṇavāḷap perumāḷ nāyaṉār
கி.பி. 13–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் கி.பி.
கி.பி. 13–ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் கி.பி. 14–ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்தவர்; திருவரங்கம் என்னும் ஊரைச் சேர்ந்தவர்; வடக்குத் திருவீதிப் பிள்ளையின் மகன்; அழகிய மணவாள நயினார் எனவும் அழைக்கப்பட்டார். பிள்ளை லோகாசாரியாரின் தம்பியான இவர் இளமையிலேயே துறவு மேற்கொண்டார். இவர் சிறந்த கல்வியாளரும் உரையாசிரியரும் ஆவார். திருப்பாவை உரை–ஆறாயிரப்படியும், திருவந்தாதி, அமலனாதிப்பிரான், கண்ணினுண் சிறுத்தாம்பு ஆகிய நூல்களுக்கு உரையும் எழுதியுள்ளார். மேலும் மாணிக்க மாலை, ஆசாரிய இருதயம், அருளிச் செயல் இரகசியம் என்னும் நூல்களையும் இயற்றியுள்ளார். மாறன் மனம் எனப் பொருள்படும் ஆசாரிய இருதயம் என்றும் நூல் இவர் எழுதியவற்றுள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நூல் திருவரங்கத்தில் இறைவன்முன் அரங்கேற்றப்பெற்றது. இது நம்மாழ்வாருடைய பெருமை, அவர் அருளிய திருவாய்மொழி முதலிய நூல்கள், மற்றைய ஆழ்வார்களின் நூல்கள், அவர்களுடைய பெருமை முதலியவற்றை விளக்கியுரைப்பதாகும். ஆராய்ச்சி நூல் போன்று அமைந்துள்ள இந்நூலின் இடையிடையே, ஆழ்வார்களின் பாசுரங்களில் வரும் அடிகளையும் தொடர்களையும், வான்மீகி இராமாயணம், பாரதம், கீதை, விட்டுணு புராணம் முதலிய நூல்களில் உள்ள அடிகளையும் தொடர்களையும் எடுத்தாண்டுள்ளார். இந்நூல் மணிப்பிரவாள நடையில் அமைந்ததாகும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 925)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j5sk4py9/
தமிழ்“அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/j5sk4py9/APA
Oliyon Research. (2026). அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j5sk4py9/MLA
"அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/j5sk4py9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment