இரேவண சித்தர்
irēvaṇa cittar
கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர்.
கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர். இவர் இரேவணாத்திரியர், இரேவணாத்தியர் எனவும் வழங்கப்பெற்றார். வேளாளர் மரபில் தோன்றிய இவரது ஊர் சிதம்பரம் என்றும், பேரளம் என்றும் கூறப்படுகிறது. இவர் பேரளத்தில் பிறந்து, பின்னாளில் சிதம்பரத்தில் வாழ்ந்தவர் என்றும் சிலர் கூறுகின்றனர். சிதம்பர இரேவணசித்தர் என்பதில் சிதம்பரம் என்பது இவர்தம் தந்தையாரைக் குறிக்கும் என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர். இவர்தம் நூலில் தம்மைப் ‘புலியூர்ச் சிதம்பர ரேவண சித்தன்’ என்றும், ‘மேழித் துவசன் விளங்கிய புலியூர்வாழ் நற் சிதம்பர ரேவண சித்தன்’ என்றும் சுட்டியுன்ளார். இத்தொடர்களை ஆராய்ந்தால், இவற்றில் அமைந்துள்ள புலியூர் என்பது ஊரைக் குறிக்க, அடுத்துள்ள சிதம்பரம் என்பது தந்தை பெயரைக் குறிக்கலாம் என்னும் கருத்துப் பொருத்தமுடையதாகத் தெரிகிறது.
இவர் வடமொழி, தென்மொழிகளிற் புலமை நிரம்பியவர்; சைவ சமயத்தைச் சார்ந்தவர்; வீர சைவ சமயத்தவர் என்றும் கூறப்படுகிறார். இவர் அகராதி நிகண்டு, திருப்பட்டீச்சுரப் புராணம், திருவலஞ்சுழிப்புராணம், திருமேற்றளிப்புராணம், சிவஞானதீபம் என்னும் நூல்களை இயற்றியுள்ளார். சிவஞானதீபம், சைவ சித்தாந்த உண்மைகளைத் தெளிவுற விளக்கும் செய்யுள் நூலாகும். இவர் இயற்றிய புராணங்கள் கிடைக்கவில்லை. இவர் எழுதிய அகராதி, ‘அகராதி நிகண்டு’, ‘சூத்திர அக- ராதி’ ‘இரேவணாத்திரையர் சூத்திரம்’ என்னும் பெயர்களால் வழங்கப்பெறுகின்றது. இவர் கி.பி. 1594–ஆம் ஆண்டில் இதனை இயற்றினார் எனத் தெரிகிறது. தமிழில் அகராதி என்னும் பெயரை முதன்முதலில் உருவாக்கியவரும், அம்முறையில் அகராதி நூலினை இயற்றியவரும் இவரேயாவர். இக்கால அகராதிகளுக்கு இவரது நூல் முன்னோடியாக அமைந்துள்ளது. இந்நூலில் சொற்கள் அகரவரிசைப் படுத்தப்பட்டிருப்பதோடு, ஒரு பொருட்சொல், இரு பொருட்சொல் எனப் பொருள் பற்றியும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பத்துத் தொகுதியாக அமைந்த இந்நூலில் 3368 நூற்பாக்கள் உள்ளன எனக் கூறப்படுகிறது. எனினும் அச்சிட்ட நூலில் 3331 நூற்பாக்களே காணப்படுகின்றன. தமிழ் அகராதி வரலாற்றில் இவருடைய நூல் சிறப்பிடம் பெற்றுத் திகழ்கிறது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 251)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j5a7cjej/
தமிழ்“இரேவண சித்தர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/j5a7cjej/APA
Oliyon Research. (2026). இரேவண சித்தர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j5a7cjej/MLA
"இரேவண சித்தர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/j5a7cjej/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment