அதிகாரப் பொருளாதாரம்
atikārap poruḷātāram
அதிகாரப் பொருளாதாரம் என்பது அரசியல் தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் அவரது முழு ஆதிக்கத்தில் இயங்கும் ஒரு பொருளாதார அமைப்பாகும்.
அதிகாரப் பொருளாதாரம் என்பது அரசியல் தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் அவரது முழு ஆதிக்கத்தில் இயங்கும் ஒரு பொருளாதார அமைப்பாகும். இந்த அமைப்பில் அடங்கும் பொருளாதார நடவடிக்கைகளான உற்பத்தி நுகர்ச்சி (Consumption), விலை வரையறை, வேலைப் பாகுபாடு, உற்பத்தியான பொருள்களைப் பகிர்ந்தளிக்கும் முறை, கூலி வரையறை, சேமிப்பு, முதலீடு ஆகிய அனைத்தும் அரசியல் தலைமையாளரின் ஆணைப்படி இயங்கும். அதிகாரப் பொருளாதார அமைப்பில் அரசியல் தலைமையாளர், அதன் நண்பராகவும் தத்துவ ஞானியாகவும் வழிகாட்டியாகவும் காணப்படுவார். இதில் தலைமை ஆளுநர் முழுப் பொறுப்பையும் ஏற்று, மக்களின் பொருளாதார நலனுக்காகப் பாடுபடக் கூடியவராக இருப்பார்.
அதிகாரப் பொருளாதாரம் (Authoritarian Economy) அண்மைக் காலத்தில் தோன்றியது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை மக்களாட்சி அரசியல் அமைப்பின் கீழ் தனியார் முயற்சியில் இயங்கும் முதலாளித்துவப் பொருளாதார அமைப்புதான் உலகம் முழுவதும் இருந்து வந்தது. இந்த அமைப்பின் கீழ் அனைத்துப், பொருளாதார நடவடிக்கைகளும் தனியார் ஆதாயத்திற்காகத் தனியாரால் மேற்கொள்ளப்பட்டன. அரசு தலையிடாக் கொள்கையை (Laissez Faire) நம்பியதால், பொருளாதார அமைப்பைத் தனியாரிடம் விட்டு வைத்திருந்தது. ஆனால், இரண்டு உலகப் போர்களும் உலகப் பொருளாதார மந்தமும், முதலாளித்துவப் பொருளாதாரத்தின் அழிவுகளையும் திறமையின்மையையும் காட்டின.
இரு உலகப் போர்களும் பல நாடுகளின் பொருளாதார அமைப்புகளைப் பெரிதும் சீர்குலையச் செய்தன. மக்கள் வீடுகளை இழந்தனர்; நகரங்கள் தரைமட்டமாக்கப்பட்டன; பண்ணைகளும் தொழிற்சாலைகளும் அழிக்கப்பட்டன; உற்பத்தி விரைவாகக் குறைந்தது; உணவுப் பற்றாக்குறை நாட்டைப் பீடித்தது; வேலையின்மையும் மறுமையும் தலைவிரித்தாடின; விலைவாசிகளும் குதிரை வேகத்தில் உயர்ந்தன. போரில் வெற்றி பெற்ற நாடுகளுக்கு அளிக்க வேண்டிய தொகையின் சுமை மேலோங்கியது. இப்போர்களுக்குப் பின் உருவாகிய சிக்கல்களை முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு எவ்வகையிலும் தீர்க்க முடியாது என்று தெளிவாகத் தெரிந்தவுடன், அரசின் தலையீடு பொருளாதாரத் துறையில் மிகுந்தது.
போரினால் நலிவுற்ற நாடுகளுக்கு 1930–ஆம் ஆண்டில் உலகில் ஏற்பட்ட பெரும் பொருளாதார மந்தம் மேலும் ஒரு பெரும் தடையாக அமைந்தது. உற்பத்தி சுணக்கமுற்று, மீண்டும் வேலையின்மையும் வறுமையும் மிகுந்து காணப்பட்டன. இலட்சக் கணக்காண மக்கள் உணவும் உடையும் இன்றி நலிவுற்ற போது கோதுமை, காப்பி, பருத்தி முதலியவை கடலில் வீசப்பட்டும் எரிக்கப்பட்டும் வீணாயின. உள்நாட்டுப் பொருள்களின் விலைகள், முதலீட்டு மதிப்பு ஆகியவை வீழ்ச்சியடைந்து உலகமெங்கும் தேக்க நிலை காணப்பட்டது.
இவ்விரு நிகழ்ச்சிகளின் விளைவாக மக்களின் துன்பமும் துயரமும் அலை அலையாக மேலோங்கின. இவ்விளைவுகள் ஒவ்வொரு மனிதனின் மனத்திலும் நாளேடுகளின் முதல் பக்கங்களிலும் பெரிதாகத் தோன்றின. மக்களிடையே வெறுப்பு மிகுந்துவிட்ட காலத்தில் பொருளாதார மறுமலர்ச்சிக்கு வழிகாட்டும் ஒரு மீட்பன் (Saviour) தேவைப்பட்டான். அது மீட்பு அரசியல் மனிதன் (Homo Politicus) என்ற வடிவில் உருவெடுத்தது. மக்களின் ஒப்புதல் அவனுக்குக் கிடைத்தது, எனவே, அரசியல் மனிதனின் ஆதிக்கம் எங்கும் நிறைந்திருந்தது. இந்நிலையில்தான் அரசியல் மனிதன், பொருளாதார அமைப்பைக் கட்டுப்படுத்தி அனைத்தையும் தனது அதிகாரத்தின்கீழ் கொணர்ந்தான்.
இவ்வதிகாரம் தழுவிய பொருளாதார அமைப்பு ஒரு நாட்டில் போர்க் காலங்களில் தோன்றி அமைதிக் காலங்களில் மறைந்து விடுவதில்லை. அமைதிக் காலங்களிலும் இப்பொருளாதார அமைப்பு இருக்கக் கூடும். பொதுவாக, வல்லாட்சி நாடுகளில் எல்லாம் அதிகாரப் பொருளாதாரம் அமைக்கப்படுவது வழக்கம். சோவியத்து உருசியா, சீனா, செருமனி, இத்தாலி, சூடான், பாகிசுதான், பர்மா, வியட்நாம், அர்செண்டைனா, துருக்கி, அங்கேரி, செக்கோசுலோவேகியா, யூகோசுலோவேகியா, எகிப்து, தான்சானியா, இலிபியா, நைசீரியா ஆகிய நாடுகள் இத்தகைய பொருளாதார அமைப்பை அவற்றின் வரலாற்றில் ஏதேனும் ஒரு காலத்தில் பெற்றிருந்தன.
அதிகாரப் பொருளாதாரத்தின் சிறப்புக் கூறுகள்
பொருளாதாரத்தின் மீது அதிகாரம் செலுத்தும் நிருவாகத்தின் தன்மையைப் பொறுத்து, அதிகாரப் பொருளாதாரம் மூன்று வகையாக அமையலாம். ஒன்று, சோவியத்து உருசியா, சீனா போன்ற நாடுகளில் உள்ளது போல் ஒரு கட்சியின் அதிகாரம். இவ்வதிகாரப் பொருளாதாரத்திற்கு அதிகார சமத்துவப் பொருளாதாரம் (Authoritarian Socialism) என்பது பெயர். மற்றொன்று, செருமனியில் அதிகாரம் செலுத்திய இட்லர், இத்தாலியின் முசோலினி போன்றவர்களின் தனி மனித ஆதிக்கம் பெற்ற பொருளாதாரம். இது, அதிகாரம் தழுவிய தனியார் முயற்சிப் பொருளாதாரம் (Authoritarian Free Enterprise System) என்று அழைக்கப்பட்டது. மூன்றாவதாக, பாகிசுதானின் அயூப்கான், சியா (zia) போன்ற படைத் தலைவர்களின் ஆட்சிக்குட்பட்ட அதிகாரம். இம்முறைக்குப் படைவலி முதலாளித்துவ அமைப்பு (Military–Based Capitalist Economy) என்பது பெயர். இம்மூன்று அமைப்புகளுக்குள்ளும் பல வகைகளில் ஒற்றுமை இருப்பதால், இவை அனைத்தும் அதிகாரப் பொருளாதாரம் என்றே அழைக்கப்படுகின்றன.
அதிகாரச் சமதரும அமைப்பில், பொருள் உற்பத்திக்கு மூலமான நிலம், காடுகள், சுரங்கங்கள், பள்ளிகள், வங்கிகள் மற்ற வளங்கள் அனைத்தும் அரசின் பொதுவுடைமையாக இருக்கும். தனியாருக்குச் சொத்துரிமை இவ்வமைப்பில் இல்லையாதலின், தனியார் சுரண்டல் ஏற்பட வழியில்லை. இப்பொருளாதாரத்தின் உற்பத்தி, ஆதாயத்தையோ தனி மனிதன் நலனைக் கருதியோ அமையாது. உற்பத்தி என்பது மக்களுக்காக, மக்கள் நலன் கருதி, மக்கள் அனைவராலும் மேற்கொள்ளப்படும்.
ஆனால், மற்ற இரு அதிகாரப் பொருளாதார அமைப்புகளிலும் முதலாளித்துவத்தின் வெளித் தோற்றம் மட்டும் காக்கப்படும். இங்கே, உற்பத்திக் காரணிகள் தனியாரிடம் இருக்க அனுமதிக்கப்படுகின்றன. சில முக்கியத் தொழிற்சாலைகள் கூட நாட்டுடைமையாக்கப்படுவதில்லை. எனவே, தனியார் தொழில் முயற்சி, பொருளாதாரத்தில் காணப்படுவது போல உற்பத்தியாகும் சமூக வருமானம், தனியார்களாலேயே வாரம், கூலி, வட்டி, ஆதாயம் என்ற முறையில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. ஆயினும், இப்பொருளாதாரத்தில் காணப்படும் கொடூரமான அதிகாரக் கட்டுப்பாடானது, தனியார் தொழில் முயற்சிகளையும் அதனால் ஆதாயம் பெறுதலையும் பெரிதும் பாதித்துவிடுகிறது. ஆகவே, இத்தகைய பொருளாதாரத்தில் பெயரளவில்தான் முதலாளித்துவக் கூறுகள் காணப்படுகின்றனவே தவிர, உண்மையில் அவை அழிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, அயூப்கான் பாகிசுதானில் பொறுப்பேற்றபோது பொருள்களின் விலையிலும் ஆதாயத்தின் மேலும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார். நிலச் சீர்திருத்தங்களைக் கடுமையாக மேற்கொண்டதன் மூலம் தனியாரிடம் நில உடைமை குவிந்திருப்பதைக் கட்டுப்படுத்தினார். செருமனியின் அதிகாரப் பொருளாதார அமைப்பில் தனியார் சொத்துரிமை எந்நேரத்திலும் அரசால் பறிமுதல் செய்யப்படக்கூடிய நிலை இருந்தது, தனியார் தங்கள் சொத்துகளை எவ்விதம் அனுபவிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டைக் கூட அரசு விதித்தது. ஒவ்வொரு தனியார் நிறுவனமும் அரசின் பங்கேற்புடன், அரசால் கட்டுப்படுத்தப்பட்ட பொது நிறுவனமாகவே (Public Trust) இயங்கியது. சுருங்கக் கூறின், செருமனியின் ஒவ்வொரு தனித் தொழில் நிறுவனத்திலும் அரசு ஒரு கூட்டாளியாக (Partner) இருந்தது. இட்லர் பதவிக்கு வந்தபோது தனியார் உற்பத்தி அனைத்தும் அவரது மையக் குழுவிடம் இருந்ததால், தனியார் சொத்துரிமைக்கு (Private Ownership) உதட்டளவு மதிப்புதான் இருந்தது.
உற்பத்திக் காரணிகள் அரசின் ஆளுகைக்குக் கீழ் இருப்பதால் அவற்றைச் சிறந்த முறையில் பங்கிட்டு வல்லாட்சியாளரின் (Dictator) சமூக, பொருளாதாரக் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்குப் பொருளாதாரத்தில் ஓர் அமைப்புத் தேவைப்படுகிறது. அந்த அமைப்பு மையத் திட்டக்குழு என்ற பெயரில் செயற்- படுகிறது (Central Planning Board) அனைத்துப் பொருளாதார முடிவுகளையும் இக்குழு திட்டங்களாக வகுக்கும். இக்குழுவின் திட்டங்களுக்கும் வகுக்கப்பட்ட குறிக்கோள்களுக்கும் ஏற்பத் தொழில் முயற்சி மேற்கொள்வோர் பொருள் உற்பத்தியில் ஈடுபடுவர். எனவே, அதிகாரம் தழுவிய பொருளாதாரம் என்பது எப்போதும் மையத் திட்டமிட்ட அதிகாரப் பொருளாதாரமாகவே (Centrally Planned Command Economy) விளங்கும். ஆனால், உலகிலுள்ள திட்டமிட்ட பொருளாதாரம் (Planned Economy) அனைத்தும் அதிகாரப் பொருளாதாரமாக இருக்குமென்பதில்லை.
இத்தகைய திட்டமிடப்பட்ட அதிகாரப் பொருளாதாரத்தில் விலைச் செயற்பாட்டின் (Price Mechanism) பெருமை குறைந்து காணப்படும். பொதுவாக அங்காடி விலை, பொருள்களின் தேவையாலும் (Demand) பொருள்களின் அளிப்பாலும் (Supply) வரையறுக்கப்படும். ஆனால், இவை அதிகாரப் பொருளாதாரத்தில் தனித்து இயங்குவதற்கு மறுக்கப்படுவதுடன், பொருள்களின் விலைகளையும் திட்டக்குழுவே தீர்மானிக்கும். இங்கு மேற்கொள்ளப்படும் விலை முறையானது அதிகார விலைமுறை எனப்படும் (Authoritarian Price System). திட்ட அதிகாரிகள் பொதுமக்களின் விருப்ப அளவுகோலுக்கு (Scale of Preference) ஏற்பவும் பொருளாதார முன்னேற்றத் தேவைகளுக்கு ஏற்பவும் விலைகளை உறுதி செய்வர். ஆனால், உறுதி செய்யப்பட்ட விலை மறுபடியும் அலுவலர்களால் மாற்றப்படாதவரை ஒரே நிலையில் இருக்கும். எனவே அதிகாரப் பொருளாதாரத்தில் விலைவாசிகள் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப உற்பத்தி முறை இயங்காது. இதனைக் கருத்தில் கொண்டுதான், சில பொருளியல் அறிஞர்கள், அதிகாரப் பொருளாதாரம் விலைக் கருவியின் உதவியின்றியே தங்கு தடையில்லாமல் செயற்பட முடியும் என்று கூறுகின்றனர். இருப்பினும், கீழ்க்காணும் காரணங்களுக்காக, அதிகாரப் பொருளாதாரத்திலும் விலைக்கருவியின் பங்கு இன்றியமையாததாகிறது. (1) பொருளாதாரத்தில் இயங்கும் ஒவ்வொரு தொழில் நிறுவனமும் மற்ற நிறுவனத்தின் பொருள்களை வாங்குவதற்கு மாற்று விலைமுறை (Transfer Price) தேவைப்படுகிறது. (2) பல்வேறு இயற்பியல் அளவுகளைக் (Physical Units) கொண்ட பண்டங்களை ஒரு முடிவான அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு விலை தேவைப்படுகிறது. (3) உற்பத்தி முறைகளில் மேற்கொள்ளப்படும் செலவினங்களை ஆய்ந்து, மிகக் குறைந்த செலவினம் கொண்ட ஆனால், நிறைந்த பயன் தருகிற உற்பத்தி முறையைச் செயற்படுத்துவதற்கு விலை சிறந்த கருவியாகிறது. ஆனால், மேற் கூறியது போல் முக்கிய முடிவுகளும் வளங்களின் பங்கீடும் (Allocation of Resources) இவ்விலைகளைப் பொறுத்து அமையா. எனவே, அதிகாரப் பொருளாதாரத்தில் பணத்தின் செயற்பாடு குறைந்தே காணப்படும். அது கணக்கின் அலகாகவே (Unit of Account) இருக்கும். நிருவாக நிறுவனங்களுக்குள் ஏற்படும் அனைத்து நடவடிக்கைகளும் காசோலைகளின் (Cheque) மூலமாகத்தான் நிகழும்.
அதிகாரப் பொருளாதாரத்தில், விலைக் கருவியின் பங்கு குறைந்து காணப்படுவதால் ஆதாயம் கட்டுப்படுத்தப்பட்டும் கட்டுப்படுத்தப்படாமலும் இருக்கும். மேலும், உழைப்போர் கூலிகளில் ஏற்றத் தாழ்வு குறைந்தே காணப்படும். இக்காரணங்களால் வருமானமும் செல்வமும் ஒரு சிலரிடையே குவிந்து, பொருளாதார ஏற்றத் தாழ்வு (Economic inequality) குறைந்தே காணப்படுகிறது. பொருளாதாரச் சமநிலை, சம உரிமை, சமவாய்ப்பு ஆகியவை நிறைந்து காணப்படும். பெரும்பாலும், ‘திறமைக்கேற்ப உழைத்துத் தேவைக்கேற்பப் பெறுதல்’ என்ற கொள்கை இப்பொருளாதாரத்தில் காணப்படும்.
ஆனால், அதிகாரப் பொருளாதாரத்தில் தனி மனித உரிமை பெரிதும் கட்டுப்படுத்தப்படும் அல்லது அழிக்கப்படும். பொதுவாக, நாட்டின் அரசியல் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான முயற்சியில் தனி மனித விருப்புகள் தடையாக இருப்பது அனுமதிக்கப்படுவதில்லை. முதலாளித்துவப் பொருளாதார அமைப்பில் அரசனாகக் கருதப்படும் ஒரு நுகர்வோன் அதிகாரப் பொருளாதாரத்தில், ஏறக்குறைய ஓர் அடிமையாகக் காணப்படுகிறான். அவன் என்ன உட்கொள்ள வேண்டும், எத்துணி உடுத்த வேண்டும், எவ்வகை வீட்டில் வசிக்க வேண்டும் என்ற அனைத்தையும் அரசே முடிவு செய்கிறது. அரசால் முடிவு செய்யப்பட்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களில் எவற்றையேனும் வாங்கிக் கொள்ள நுகர்வோருக்கு முழு உரிமை உண்டு. அதிகாரச் சமநிலைப் பொருளாதாரத்தில் அனைத்துப் பொருள்களும் பங்கீட்டுப் பண்டசாலைகள் (Ration Shops) மூலமாகவே பிரித்தளிக்கப்படும். ஆகவே, பொருள்களின் பங்கீடு அரசால் முடிவு செய்யப்படும். ஆனால், மற்ற இரு அமைப்புகளிலும் பொருள்கள், தனியார் கடைகளில் அரசு விலைக்கு அளிக்கப்படும்.
இதுபோன்றே தொழிலாளர் வேலைவாய்ப்பும் அவர்களின் விருப்பத்திற்கிணங்க அமையாது. கூலியின் ஏற்ற இறக்கத்திற்குத் தக்கவாறு இடம்பெயர முடியாது. அரசாங்கம் வரையறை செய்யும் தொழில்களுள் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளத் தொழிலாளருக்கு உரிமை அளிக்கப்படும். பெரும்பாலும், தொழிலாளர் திட்ட ஆணைக்கேற்றவாறே செயல்படவேண்டும். திட்டங்களின் குறிக்கோள்களை அடை- வதற்கேற்றவாது தொழில் முறை வகுக்கப்பட்டுக் கூலிகள் உறுதி செய்யப்படும். தொழிலாளர்களோ அவர்களை வேலைக்கு ஏற்றுக்கொள்ளும் தொழில் நிறுவனங்களோ இத்தொழில்முறைக் கட்டுப்பாட்டை எதிர்க்க முடியாது. எடுத்துக்காட்டாக, செருமனியில் 1935–இல் தொழிலாளர் பதிவேடு (Labour Register) ஒன்று உருவாக்கப்பட்டுத் தொழிலாளர் தகுதி, தொழிற் பயிற்சி, தேர்ச்சி ஆகியவை தொடர்பான விவரங்கள் அதில் கொடுக்கப்பட்டன. அப்பதிவேட்டை ஒவ்வொரு தொழிலாளியும் வேலையளிப்போரிடம் வேலையில் சேரும்போது கொடுத்திட வேண்டும். வேலையளிப்போர் ஒரு சில நேரங்களில் அப்பதிவேட்டைத் திருப்பிக் கொடுக்க மறுப்பதன் மூலம் ஒரு தொழிலாளியை அதே தொழிலில் தொடர்ந்து இருக்கச் செய்து விடலாம். ஆகவே, தொழிலாளி தான் விரும்பும் வேலைக்குச் செல்ல முடியாது. பதிவேடுகளின் துணையோடு அரசு, தன் திட்டங்களை நிறைவேற்றிடத் தேவைப்படும் தகுதியான தொழிலாளர்களைத் தேவைப்படும் தொழில் துறையில் தனித்தனியாகவோ கூட்டமாகவோ ஈடுபடுத்தியது.
அதிகாரப் பொருளாதாரத்தில் சேமிப்பதற்கான உரிமை அளிக்கப்பட்டாலும் தனி மனிதன் சேமிப்புக் குறைவாகவே காணப்படும். இப்பொருளாதாரத்தில் தனி மனிதன் வருமானம் குறைவாக இருப்பதும் அரசின் விரிந்த சமூகப் பாதுகாப்பு இருப்பதுமே இதற்குக் காரணங்களாகும். முதலீட்டு முடிவுகள் மையமாக எடுக்கப்படுவதால், தனியார் முதலீடு சமநிலைச் சமுதாய அதிகாரப் பொருளாதாரத்தில் இராது. மற்ற அதிகாரப் பொருளாதார அமைப்புகளில் தனியார் முதலீட்டு உரிமை அரசின் உற்பத்தித் திட்டங்களுக்கேற்ப அரசின் ஆணையுடன் அமையும்.
அதிகாரப் பொருளாதாரத்தின் குறிக்கோள்கள்
முழுமையான சமுதாயக் கண்காணிப்பை அதிகாரப் பொருளாதாரம் ஒன்றினால்தான் பெறமுடியும் என்பதே இதன் குறிக்கோள். இக்குறிக்கோள் சமயத்திற்கேற்றவாறு ஒரு நாட்டுக்குள்ளும், நாட்டுக்கு நாடும் வேறுபடும். அதிகாரம் தழுவிய பொருளாதாரத்தின் பொதுவான குறிக்கோள்கள் வருமாறு;
போர்த் கொடுமையால் மிகவும் பாதிக்கப்பட்ட பொருளாதாரங்களின் சிறப்பு மிக்க குறிக்கோள் நாட்டுப் பாதுகாப்பாகும். எடுத்துக்காட்டாக, முதல் உலகப் போரில் சீரழிவுக்கு ஆளான மேற்குச் செருமனி, தன் பொருளாதார வளங்களை நாட்டின் படைபலத்தைப் பெருக்கப் பயன்படுத்தியது. இட்லர் தன் போர் முயற்சியில் சொன்னது இதுவே; “ஐரோப்பாவிலே தலைசிறந்தவர்களாக விளங்கப் பிறந்தவர்கள் செருமானிய மக்கள்; வன்முறையின் மூலமே எதனையும் சாதிக்க முடியும்; நான் செருமானிய மக்களை ஓநாய்க் கூட்டங்களாக உருவாக்க விரும்புகிறேன்; செருமனி ஒரு நாடு அன்று; அது நாட்டுருவில் உள்ள ஒரு படைவீடு”. இத்தகைய தேசியப் பாதுகாப்பு செருமனியில் முன்னுரிமை பெற்றது போல, துருக்கி நாட்டுக் கமால் பாட்சாவும் “ஐரோப்பாவின் நோயாளி” என்ற அவமதிப்பைப் போக்குவதே துருக்கி நாட்டு அதிகாரம் தழுவிய பொருளாதாரத்தின் முக்கிய நோக்கமாகக் கொண்டார். இத்தாலி, மறுமுறையும் உரோமாபுரிப் பேரரசை நிறுவவும் இத்தாலியை வலிமைமிக்க நாடாக மாற்றிடவும் தன் அதிகாரம் தழுவிய பொருளாதாரத்தைப் பயன்படுத்தியது. பின்னர், சோவியத்து உருசியாவும் இதே பாதையைப் பின்பற்றி உருசியாவை வலிமை மிகுந்ததாக்க முயன்றது. ஆகவே, அதிகாரம் தழுவிய பொருளாதாரத்தின் நோக்கம் குறுகிய நாட்டுப்பற்றை வளர்த்துத் தத்தம் நாட்டுப் படைபலத்தைப் பெருக்க வேண்டும் என்பதாகும். உற்பத்தி, நுகர்வு, முதலீடு ஆகிய அனைத்தும் இக்குறிக்கோளை அடைவதற்காகவே முடுக்கிவிடப்பட்டன. மற்ற நோக்கங்கள் அனைத்தும் இரண்டாந்தர நோக்கங்களாகக் கருதப்பட்டன.
அதிகாரம் தழுவிய பொருளாதாரம், தனியார் தொழில் முயற்சி, முதலாளித்துவம் சார்ந்த பொருளாதாரத்தினால் ஏற்படும் அழிவுகள் ஆகியவற்றைத் தடுத்து நிறுத்துவதைக் குறிக்கோளாகக் கொண்டது. முதலாளித்துவ அங்காடி விலைகளின் மாற்றங்களால் நேரும் பொருளாதார மந்தம் (Economic Depression) முற்றுரிமைகள் (Monopolies), ஏற்றத்தாழ்வுகள், முதலாளித்துவச் சுரண்டல்கள் ஆகியவற்றைக் களைவதை நோக்கமாகக் கொண்டு அதிகாரம் தழுவிய பொருளாதாரம் இயங்கும்.
இதுபோலவே, விலையேற்றம் அல்லது பணவீக்கம் (Inflation) என்ற கடும் சிக்கலையும் தீர்ப்பது ஒரு குறிக்கோளாகும். விலையேற்றம் என்பது எல்லாப் பகுதியினரையும் பாதிக்கத் தக்கது. ஆயினும், குறிப்பிட்ட வருமானமுள்ளவர், ஏழைத் தொழிலாளர், வேளாண்மைக் கூலிகள் ஆகியோர் இச்சிக்கலால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். செருமனி 1923-இல் கடுமையான விலையேற்றத்தால் பாதிக்கப்பட்ட போது, மக்கள் ஓரிணை மிதியடி வாங்க ஒருவண்டிக் காகித நோட்டுகளைக் கொண்டு செல்ல வேண்டிய நிலைமையிருந்தது. பணத்தின் மதிப்பு வீழ்ச்சியுற்று மக்களிடையே மதிப்பற்றுப்போன காரணத்தால், செருமானியர் காகிதப் பணத்தைச் சுருட்டாகப் (Cigar) பயன்படுத்தினர்.
இப்பொருளாதாரத்தின் மற்ற குறிக்கோள்களாவன: (1) விரைவான தொழில் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் (2) தொழில்- களைத் தகுந்த இடங்களில் மாற்றியமைத்தல் (3) வேளாண்மையில் புதிய உத்திகளைக் கையாளுதல், தரத்தை உயர்த்துதல் (4) விபத்து நேரிடின் உதவித்தொகை, ஓய்வூதியம் வழங்குதல், (5) பொருளாதாரத் தன்னிறைவு காணுதல்.
அதிகாரப் பொருளாதாரத்தின் குறிக்கோள்களை வளமைப் பங்கீட்டின் மூலம் அடையும் முறை
மேற்கூறிய குறிக்கோள்களை அடைவதற்கு நாட்டின் வளங்கள் நல்ல முறையில் பயன்படுத்தப் பெறல் வேண்டும். நாட்டின் வளங்களைப் பங்கிட்டு, அவற்றின் மூலம் உச்ச விளைவுகளை ஏற்படுத்துவது தலைமையாட்சியாளரின் முதன்மை நோக்கமாக இருக்கவேண்டும். இச்சிக்கலைத் தீர்க்கும்போது, முதலில் தலைமை ஆட்சியாளர் பொது நோக்கங்களை வகுப்பார். பிறகு அவர் மையத் திட்டக் குழுவிடம் ஒப்படைப்பார். திட்டக்குழு, நுகர்வுப் பொருள்கள் (Consumer Goods), மூலதனப் பொருள்கள் (Capital Goods) ஆகியவற்றின் தேவைகளை அறிந்து அவற்றின் உற்பத்தியைப் பற்றியும் தேவைப்படும் உற்பத்திக் காரணிகளைப் பற்றியும் அறிந்து, தற்போதைய எதிர்கால உற்பத்திக் காரணிகளின் அளிப்போடு (Supply) ஒப்பிட்டு ஒரு நீண்டகாலத் திட்டத்தைத் தீட்டும். ஆனால், செய்முறையை எளிமைப்படுத்துவதற்காக நீண்ட காலத் திட்டங்கள், வல்லுநர்களின் உதவி கொண்டு குறுகிய காலத் திட்டங்களாக மாற்றியமைக்கப்படும். இத்திட்டங்களின் இடைக்கால உற்பத்தி இலக்குகள் உறுதிசெய்யப்பட்டுத் தொழிற்சாலைகளின் நிருவாகிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். நிருவாகிகள் உள்ளீடு, வெளியீடு உற்பத்தி உறவுகளை (Input-Output Relations) அறிந்தவர்கள். அவர்கள் திட்டக்குழுவினால் அனுப்பப்படும் குறியீடுகளை மதிப்பிட்ட பின், அவற்றின் வாய்ப்புக் கூறுகள் தொடர்பான அறிவுரைகளைத் திட்டக்குழுவிற்குத் திருப்பி அனுப்புவர். இவ்வறிவுரைகளின் அடிப்படையில் திட்டக்குழு இறுதித் திட்டத்தை உருவாக்கும். இத்திட்டங்கள் ஏற்புடையதாயின், அவை அலுவலக உற்பத்தித் திட்டங்களாக மாறுகின்றன. திட்டத்தின் விரிவான உற்பத்தி இலக்குகள் கட்டாய அறிவுரைகளாக மாறுகின்றன. உண்மையில் அவை ஆணைகளாக (Commands) இருப்பதால், அவற்றைச் சிறந்த முறையில் நிறைவேற்றுவது ஒவ்வொருவரின் கடமையாகிறது. பின்னர், மையத் திட்டக்குழு திட்டங்களின் குறியீடுகள் எவ்வாறு எட்டப்படுகின்றன என்பதைக் கூர்ந்து கவனித்து எங்கெங்குச் சமமின்மை (Imbalances) ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் அதனை நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் தேவையான உற்பத்திக் கருவிகளைப் பெறுவதற்கான வாங்கும் திறன் வழங்கப்படும். இத்திறன் தொழில் நுட்பத்தைக் கொண்டும் திட்டப் பங்களவைக் (Plan Quota) கொண்டும் உறுதி செய்யப்படும். வாங்கும் திறன் (Purchasing Power) உதவிகொண்டு ஒவ்வொரு தொழில் நிறுவனமும் உற்பத்திக் காரணிகளை அமர்த்தித் தம் உற்பத்தியைத் தொடங்க வேண்டும். ஆனால், தங்கள் முயற்சியில் ஒரு முக்கியக் கருத்தை மனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, உற்பத்திப் பண்டங்களை மிகக் குறைந்த செலவில் உருவாக்க வேண்டும். நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பண்டங்களுக்கு விலையைத் திட்டக்குழு முன்னதாகவே வரையறை செய்துவிடுகிறது. அந்த விலையோடு நிறுவனத்தின் இறுதிநிலைச் செலவு (Marginal Cost) சமமாகும்போது, அந்நிறுவனத்தின் சராசரிச் செலவு (Average Cost) தனது குறைந்த அளவை எட்டும். அந்த அளவு வரும்வரை ஒவ்வொரு நிறுவனமும் தனது உற்பத்தியைப் பெருக்க வேண்டும். எனவே, இவ்வமைப்பில் செயல்படும் அரசுத் தொழில் நிருவாகிகள் ஏறக்குறைய நிறைவுப் போட்டியில் காணப்படும் தனி நிறுவனங்களைப் போலவே நடந்துகொள்ள வேண்டியிருக்கும். எவ்வாறு ஒரு நிருவாகி, தன் பண்டங்களைக் குறைந்த சராசரிச் செலவில் உற்பத்தி செய்கிறார் என்பதைப் பின்வரும் நிறைவுப் போட்டி விளக்கப் படத்தின் மூலம் உணர்த்தலாம்.
அதிகாரப் பொருளாதாரம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் OX என்ற படுகிடைக்கோடு உற்பத்தியைக் காட்டுகிறது. OY என்ற செங்குத்துக்கோடு பண்டத்தின் விலையையும் செலவையும் காட்டுகிறது. PR என்ற படுகிடைக்கோடு உற்பத்தியின் எல்லா நிலையிலும் விலை ஒன்றே என்பதைக் காட்டுகிறது. இவ்விலை, திட்டக் குழுவினால் முடிவு செய்யப்படுவதால் இதனை மாற்றுவதற்குத் தொழில் நிருவாகிக்கு உரிமையில்லை. தொழிற்சாலையின் உற்பத்திச் செலவுகள், ATC என்ற சராசரி மொத்தச் செலவு வளைகோட்டின் மூலமாகவும், MC என்ற இறுதிநிலைச் செலவு வளை- கோட்டின் மூலமாகவும் காட்டப்பட்டுள்ளன. OM என்ற உற்பத்தி நிகழும்போது, பண்டத்தின் சராசரிச் செலவு மிகக் குறைந்த அளவை எட்டுகிறது. அந்த உற்பத்தியில் இறுதிநிலைச் செலவும் சராசரிச் செலவும் சமப்படுகிறது. உற்பத்தியின் இந்நிலையே உகந்த அளவு உற்பத்தி (Optimum Output) எனப்படுகிறது. உற்பத்தி அளவும் ஏறக்குறைய திட்டக்குழு வரையறுத்த உற்பத்தியாகவே இருக்கும். பொருள்களை விற்பதன்மூலம் கிடைக்கும் வருமானத்தின் துணை கொண்டு ஒவ்வொரு தொழில் நிறுவனமும் தனது பணநெகிழ்வுத் தன்மையைப் (Liquidity) பாதுகாத்துக் கொள்ளும். அரசு வங்கி எல்லா நிறுவனங்களின் வரவு செலவுக் கணக்குகளைத் தன்னகத்தே வைத்திருப்பதனால், நிறுவனங்கள் அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட வாங்கும் திறனைத் திட்டக் குறிக்கோளுக்காகப் பயன்படுத்தி உள்ளனவா? இல்லையா என்பதைக் கண்காணிக்க இயலும்.
இரண்டாம் சிக்கலான காரணி விகிதங்களையும் (Factor Proportions) குழுவே தீர்மானிக்கும், தொழிற் சிறப்புக்குத் தக்கவாறு உழைப்பு மிகுதியாகத் தேவைப்பட்டு எந்திரங்கள் குறைவாகத் தேவைப்பட்டால், அதற்கேற்ப விகிதங்கள் முடிவு செய்யப்படும். எப்படியிருப்பினும், தொழிலாளர்களுக்குத் தீங்கு ஏற்படா வகையில் புதிய நுட்பங்களைப் பயன்படுத்தி அதிகாரப் பொருளாதாரத்தில் உற்பத்தி பெருக்கப்படும். மூன்றாவது, இறுதியான மூலதனக் குவிப்புப் பற்றியும் திட்டக் குழுவே முடிவு செய்யும். நுகர்வின் அளவைக் குறைப்பதன் மூலம் நாட்டின் முதலீட்டைப் பெருக்குவதற்கான மூலதனக் குவிப்பை (Capital Accumulation) குழு வலியுறுத்தலாம். நுகர்வைக் குறைப்பதற்கு, நுகர்வுப் பொருள்களின் விலையை உயர்த்தலாம். அதற்காக விற்பனைப் புரள் வரியை (Turn-over Tax) மக்கள் மீது சுமத்தலாம். இதன் மூலம் அரசு பெறும் தொகை எதிர்கால முதலீட்டிற்காக ஒதுக்கப்படும்.
தொழிற்சாலைகளிடையே இருக்க வேண்டிய சமநிலை அமையக் குழுவே முடிவு செய்கிறது. தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் உற்பத்திக் காரணிகளின் அளவு, அவற்றாலான உற்பத்தியின் அளவு ஆகியவை குறித்துப் புள்ளி விவரங்கள் முதலில் திரட்டப்படும். அவ்விவரங்களின் அடிப்படையில் ஒவ்வொரு தொழிற்சாலையின் கையிருப்பும் கணக்கிடப்படும். இக்கையிருப்பின் உதவியால் எந்தெந்தத் தொழிற்சாலைக்கு எவ்வளவு உற்பத்திக் காரணிகள் அல்லது உற்பத்தி தேவைப்படும் என்ற நிலையறிந்து, அனைத்துத் தொழிற்சாலைகளின் சமநிலை கொணரப்படும். நாட்டின் வருமானத்தை எவ்வகையில் பகிர்ந்தளிப்பது என்பதைத் தீர்மானிக்க வேண்டிய பொறுப்பும் மையக் குழுவிடம் ஒப்படைக்கப்படும். இப்பொருளாதாரத்தில் தனியார் உடைமை ஒடுக்கப்படுவதால் வட்டி, ஆதாயம், வாரம் என்ற வருவாய்கள் (பயன்கள்) மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சமநிலைப் பொருளாதாரத்தில் இவ்வெகுமதிகள் தோன்றா. வருமானம், கூலியாகி உழைக்கும் இனத்திற்குப் போக மீதம் அரசின் எதிர்கால முதலீட்டிற்காக வைத்துக் கொள்ளப்படும். எனவே, தனியார் பொருளாதாரத்தில் காணப்படுவது போல வருமானம் பிரித்தளிக்கப்படாது.
அதிகாரப் பொருளாதாரம் மனிதனால், மனிதத் தேவைக்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பாகும். எனவே, அவற்றில் நிறைகளும் குறைகளும் இருப்பது இயற்கையே. இவ்வமைப்பு, எங்கெங்கு நிலை பெற்றிருக்கிறதோ அங்கெல்லாம் வறுமையில் வாடும் மக்களுக்கு நல்வாழ்வை அளிக்க முன்வருகிறது. இது எல்லாத் தரப்பு மக்களின் நலனையும் காக்கும் ஓர் அமைப்பாகும். பொதுமக்களின் நலம், ‘ஒவ்வொருவரும் ஒவ்வொருவரது நலத்திற்காக’ என்ற உன்னத அடிப்படையில் இயங்குகிறது. எனவே, எளிய மனிதனுக்கு இவ்வமைப்பு ஒரு நற்பேறாக அமைகிறது. பல பேரரசுகள் இந்த அமைப்பின் மூலமாகத்தான் தங்களது அரசியல் கூட்டமைப்பையே உருவாக்கியுள்ளன. எடுத்துக்காட்டாக, முதல் உலகப் போரில் அவமானப்படுத்தப்பட்ட செருமனி, இரண்டாம் உலகப் போரில் தலைநிமிர்ந்து நின்று உலகிற்கே ஓர் அறைகூவல் விடுத்தது. அதுபோன்றே, பாகிசுதான் பொருளாதாரம் இராணுவ ஆட்சிக்கு வந்த பின்னரே தன் பொருளாதார மறுமலர்ச்சியை எட்டியது. அயூப்கான் ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகளை (1958–1968) பாகிசுதானின் சீரமைப்புப் பத்தாண்டுகள் என்றும், இந்தக் காலத்தில்தான் பாகிசுதானில் ஒரு பொருளாதார அற்புதம் நிகழ்ந்தது என்றும் அறிஞர் கூறுகின்றனர். பாகிசுதானின் நேசிய வருமானமும் முன்பு இருந்த இரண்டு விழுக்காட்டைவிட 5.4 விழுக்காடாக உயர்ந்தது. சோவியத்து உருசியா, சீனா ஆகிய நாடுகளின் அரசியல் சிறப்புக்கு அவர்கள் ஏற்படுத்திக் கொண்ட அதிகாரப் பொருளாதார முறையே முக்கியக்காரணமாகும்.
இருப்பினும், இந்த அமைப்பின் நீண்ட நாள் விளைவுகள் ஒரு கேள்விக் குறியாகத்தான் உள்ளது. இந்த அமைப்பு பெரும்பாலும் அச்சம், பாதுகாப்பின்மை ஆகியவற்றின் பயனாகத்தான் ஏற்பட்டது. அது ஒரு நெருக்கடி காலச் சித்தாந்தம் மட்டும்தான். அந்த நேரத்தில் மக்கள் தங்களின் அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுத்து, நாட்டின் நலனுக்காகப் பாடுபடுவது இயற்கை. ஆனால், இத்தியாகத்தை மக்கள் நீண்ட நாட்களுக்குச் செய்வார்களா? என்- பதே இந்தப் பொருளாதாரத்தின் வெற்றியைக் குலைக்கக் கூடும். மேலும், அதிகாரங்கள் ஒருவரிடம் குவிந்திருப்பதால், அவருடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் நாட்டில் பஞ்சத்தையோ போரையோ உண்டாக்கலாம். மேலும், திட்டமிடுவதில் பல சிக்கல்கள் உள்ளன. எனவே, அதிகாரப் பொருளாதாரம் சிறந்ததா? இல்லையா என்ற கேள்வி கொள்கைச் சிக்கல் உடையதாகும்.எம். இரா.
துணை நூல்கள்
Dickinson, H.D., “Economics of Socialism”, Oxford University Press, New York, 1939.
Gustav Stoeper, “German Economy 1870–1940”, Reynal and Hitch Cock, New York, 1940.
Halm, G.N., “Economic Systems: A Comparative Analysis”, Oxford and I.B.M. Publishing Company, Calcutta, 1978.
Maurice Dobb, “Soviet Economic Development: Since 1917”, International Publishers, New York, 1948.
Schumpeter J.A., “Capitalism, Socialism & Democracy”, Harper and Row Publishers, New York, 1942.
William N. Loucks, “Comparative Economic Systems”, Harper and Row Publishers, New York, 1965.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 350)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j2dskz2z/
தமிழ்“அதிகாரப் பொருளாதாரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/j2dskz2z/APA
Oliyon Research. (2026). அதிகாரப் பொருளாதாரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/j2dskz2z/MLA
"அதிகாரப் பொருளாதாரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/j2dskz2z/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment