சுதந்திர இந்தியாவின் இரண்டாம் தலைமை அமைச்சர். உருசிய நாட்டைச் சார்ந்த தாசுகண்டில் (Tashkent) பாகிசுத்தானுடன் அமைதி உடன்படிக்கை செய்து கொண்ட நாளில் மாரடைப்பால் உயிர் துறந்தவர். இலால்பகதூர் சாத்திரி இலால்பகதூர் சாத்திரி (Lal Bahadur Shastri) 1904–ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2–ஆம் நாள் உத்தரப் பிரதேசம் மொகல்சராய் (Mughalsarai) என்னுமிடத்தில் பிறந்தார். இந்த ஊர் வட இந்தியாவில் இருக்கும் பெரும் இருப்புப்பாதைச் சந்திப்புகளுள் ஒன்று. இவ்வூர் வாரணாசிக்கு 12 கி.மீ. தொலைவில் உள்ளது. சாத்திரி காயசுத்தர் என்னும் பிராமணரல்லாதார் வகுப்பொன்றில் பிறந்தார். காந்தியடிகள் பிறந்த அக்டோபர் 2–இல் இவர் பிறந்தது குறிப்பிடத்தக்கது. பள்ளி இறுதிவரை படித்ததும், இவர் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் 1921–ஆம் ஆண்டு பங்கு கொண்டு சிறை சென்றார். சிறையிலிருந்து விடுதலையானதும் காசி வித்தியாபீடம் என்னும் கல்வி நிலையத்தில் மீண்டும் மாணவராகிப் பட்டம் பெற்றார். பட்டம் பெற்றதும் தொடர்ந்து தேசிய அரசியலில் குதித்தார். மக்கள் ஊழியர் கழகம் (Servants of People Society) என்னும் தொண்டு இயக்கத்தில் சேர்ந்து நாட்டுப் பணியில் ஈடுபட்டார் இணல் பகதூர் சாத்திரி. சாத்திரியின் நேர்மையையும் ஆக்கப்பணியையும் உத்தரப் பிரதேச மக்கள் பெரிதும் பாராட்டினர். அதன் பயனாக இவர் உத்தரப்பிரதேசக் காங்கிரசுக் குழுவின் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உத்தரப் பிரதேசச் சட்டமன்றத்தின் உறுப்பினராக இவர் 1937–ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பெற்றார்; 1947–ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தின் உள்துறை–போக்குவரத்துத் துறை அமைச்சரானார். அனைத்திந்தியத் தேசிய காங்கிரசு இயக்கத்தின் பொதுச் செயலாளராக இலால்பகதூர் சாத்திரி 1951–ஆம் ஆண்டிலும், அடுத்த ஆண்டில் இந்திய நாடாளுமன்ற மேலவையின் (Rajya Sabha) உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய அமைச்சரவையில் பண்டித சவகர்லால் நேருவின் தலைமையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இவர் நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டைச் சார்ந்த அரியலூர் என்னுமிடத்தில் நேர்ந்த இருப்புப்பாதை இடர் ஒன்றில் பலர் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிர்துறந்தனர். அந்த இடருக்குத் தாமே பொறுப்பேற்று இலால்பகதூர் சாத்திரி தம் பதவியிலிருந்து விலகினார். மீண்டும் சாத்திரி இந்தியாவின் உள்துறை அமைச்சராக்கப்பட்டார். ஆனால், காமராசர் திட்டத்தின்படி இவர் பதவியைத் துறந்தார். துறைப் பொறுப்பில்லா அலமச்சராக 1964–ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதத்தில் மீண்டும் அமைச்சராக்கப்பட்டார். அப்போது இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்தவர் பண்டித சவகர்லால் நேரு. பண்டித நேரு 1964–ஆம் ஆண்டு மே மாதம் 27–ஆம் நாள் காலமானார். அவரையடுத்து இலால்பகதூர் சாத்திரி இந்தியாவின் தலைமை அமைச்சரானார். இப்பதவியை இவர் தாம் இறக்கும் காலம் வரை வகித்தார். இலால் பகதூர் சாத்திரி தலைமை அமைச்சராகப் பதவி வகித்தபோது 1965–ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் பாகிசுத்தானுக்கும் இடையே போர் மூண்டது. அப்போது பாகிசுத்தானின் அதிபராயிருந்த அயூப்கான் என்பார் பஞ்சக்கச்ச வேட்டி கட்டிய இந்தியாவின் தலைமை அமைச்சரான இவரைத் தரக்குறைவாகத் தாக்கிப்பேசினார். போரில் பாகிசுத்தானே வெற்றிபெறப் போவதாக அயுப்கான் கனவு கண்டார். ஆனால், 1965–ஆம் ஆண்டுப் போரில் இந்தியப் படையினர் பாகிசுத்தானை எதிர்த்துத் தாக்கி இச்சோகில் கால்வாய் வரை பாகிசுத்தான் பகுதிகளைப் பிடித்துக் கொண்டனர். இப்போரில் இந்தியா பெரும் வெற்றிகண்டது. பாதுகாப்புப் போருக்கு மாறாகப் பாகிசுத்தானை எதிர்த்துத் தாக்கும் இராணுவ முறையை இந்தியா கடைப்பிடித்தது. உலக நாடுகள் வற்புறுத்தியதன் காரணமாக இந்தியா போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டது. இந்தியா–பாகிசுத்தான் உடன்படிக்கை 1966–ஆம் ஆண்டு சனவரி மாதம் 10–ஆம் நாள் சோவியத்து ஒன்றியத்தைச் சேர்ந்த தாசுகண்டு என்னும் மாநகரில் உருசியாவின் தலைமையில் நடைபெற்றது. இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதுடன், போருக்கு முன்னர் இருந்த இடங்களை அவரவருக்குத் திருப்பிக் கொடுப்பதெனவும் இவ்வுடன்படிக்கை உறுதி செய்தது. இந்தியா–பாகிசுத்தான் உடன்படிக்கை கையெழுத்தான சில மணிக்குள் இந்தியாவின் தலைமை அமைச்சர் இலால்பகதூர் சாத்திரி 1966–ஆம் ஆண்டு சனவரி மாதம் 10-ஆம் நாள் நள்ளிரவில் தாசுகண்டில் தாம் தங்கியிருந்த மாளிகையில் மாரடைப்பால் காலமானார். நல்லொழுக்கம், நேர்மை, தன்னலமற்ற தேசபத்தி போன்ற குணங்களின் இருப்பிடமான இலால்பகதூர் சாத்திரிக்கு இந்திய அரசு, அவர் மறைந்த பின்னர், ‘பாரத இரத்தினம்’ என்னும் விருது கொடுத்துப் பாராட்டியது. அரி கிருட்டிண சாத்திரி என்பார் இலால்பகதூர் சாத்திரியின் மகன், சாத்திரியின் துணைவியார் இன்றும் வாழ்ந்து வருகிறார்.