பீகாரில் சரண் மாவட்டத்தில் சீராதேவி என்ற ஊரில் 3.12.1884–இல் பிறந்தார். இவர் தந்தை மகாதேவ்சகாய். இவர் பள்ளியில் கணிதத்தில் இந்தியாவில் முதலாவதாக விளங்கினார்; விளையாட்டிலும் விருப்பம் காட்டினார்; பாரசீகம், உருது, வடமொழி, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்று விளங்கினார். இந்து, இசுலாமியப் பண்பாடுகளைப் பின்பற்றினார். சப்ராவில் படிக்கும்போது, இவர் திறமையைப் பாராட்டித் தலைமை ஆசிரியர் இவரை இரட்டைத் தேர்வுக்கு உயர்த்தினார். இவர் பள்ளியிறுதித் தேர்வில் முதல் தரத்தில் தேர்ச்சியுற்றார். இராசேந்திர பிரசாத்து பதின்மூன்றாம் வயதில் திருமணம் நடைபெற்றாலும், இவர் மனைவியோடு வாழ்ந்த காலம் குறுகியதே. இவர் கல்கத்தா மாநிலக் கல்லூரியில் பயின்றார். நகரத்தின் வனப்பும் விளையாட்டுகளும் கேளிக்கைகளும் இவரைக் கவரவில்லை. மிகச் சிறந்த அறிவியல் ஆசிரியர்களான டாக்டர் செ.சி. போசு, டாக்டர் பி.சி. ராய் போன்றோர் இவர் ஆசிரியர்கள். பி.ஏ., எம்.ஏ., பி.எல். ஆகிய தேர்வுகளிலும் முதல்வராகத் தேர்ச்சி பெற்று, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சதிசு சந்திரா தோற்றுவித்த ஒரு தொண்டு நிறுவனம் (Don Society) இவரைப் பெரிதும் கவர்ந்தது. ‘பீகார் மாணவர் சங்கம்’ என்ற ஓர் அமைப்பினை 1906–ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்தியாவிலேயே மாணவர்களுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட முதல் அமைப்பு இது. இந்தியத் தேசிய காங்கிரசு தனது ஆண்டு மாநாட்டினைக் கல்கத்தாவில் (1906) கூட்டியபோது, இராசேந்திர பிரசாத்து ஒரு தொண்டராக இருந்து பணியாற்றினார். இவர் 1911–இல் காங்கிரசு இயக்கத்தில் சேர்ந்தார். இலாலா லசபதிராய், அரவிந்தர், சுரேத்திரநாத் பானர்சி, கோபால கிருட்டிண கோகலே, பண்டித மதன்மோகன் மாளவியா போன்றோர் இவரைப் பெரிதும் கவர்ந்த தலைவர்கள். இவர் அவர்களோடு பழகுவதையும் பணி புரிவதையும் பெரும் பேறாகக் கருதினார். முசாபர்பூர்க் கல்லுாரியில் 1908–ஆம் ஆண்டு ஆசிரியரானார். அரசு ஊழியம் செய்ய இவர் மனம் ஒப்பாததால், 1911–ஆம் ஆண்டு சட்டப்படிப்பில் பட்டம் பெற்ற பிறகு, கல்கத்தா உயர்நீதி மன்றத்தில் பணி புரியத் தொடங்கினார். புகழ் பெற்ற நீதிபதியான அசுடோசு முகர்சி கல்கத்தாப் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராகப் பொறுப்பேற்ற போது, இராசேந்திர பிரசாத்தைச் சட்டக் கல்லூரியில் பேராசிரியராக நியமித்தார். இவர் எம்.எல். பட்டப் படிப்பிலும் முதல் நிலையைப் பெற்றார். டாக்டர் இராசுபிகாரி போன்றோரிடம் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. கோகலே தொடங்கிய ‘இந்திய ஊழியர் சங்கத்தில்’ (Servants of India Society) இவர் உறுப்பினரானார். இந்தி மொழியைப் பரப்புவதற்கும், அதன் வளர்ச்சிக்கும் இவர் பெரிதும் பாடுபட்டார். அகில இந்திய இந்தி சாகித்திய சம்மேளனத்தின் நடவடிக்கைகளில் அக்கறை காட்டினார். பாட்னாவில் 1917–இல் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டபோது, அதன் முதல் பல்கலைக் கழகப் பேரவையிலும் ஆட்சிக் குழுவிலும் உறுப்பினராக இருந்து பணியாற்றினார். காந்தியடிககள் 1916–ஆம் ஆண்டில் காங்கிரசில் சேர்ந்தபோது, முதன்முதலாக இராசேந்திர பிரசாத்து காந்தியடிகளைப் பார்த்தார். உழவர்களுக்காகத் தொடங்கப்பட்ட புகழ்மிக்க பீகார் சம்பரான் போராட்டத்தின்போது இராசேந்திர பிரசாத்தும் காந்தியடிகளோடு இணைந்து போராடினார். இவர் 1920–இல் வழக்குரைஞர் தொழிலை விட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றுக், காந்தியடிகளின் நம்பிக்கைக்குரிய முன்னணித் தலைவர்களுள் ஒருவரானார். இரௌலட்டுச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றார். ஆங்கிலேய முறைக் கல்வியைத் தவிர்த்து, இந்தியப் பண்பாடு, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியக் குடிமக்களை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு இவர் தேசிய பல்கலைக் கழகமான பீகார் வித்தியாபீடத்தை நிறுவினார். இவர் சிறந்த பத்திரிகையாளர், பாட்னாவில் ‘தேசம்’ என்ற இந்தி வார இதழையும் ‘சர்ச் லைட்’ (Search Light) என்ற வார இருமுறை இதழையும் வெளியிட்டார். பாட்னாவில் நகராட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுச் சிறப்பாகப் பணியாற்றினார். கயாவிலுள்ள புத்தகயா ஆலய நிருவாகத்தோடு தொடர்பு கொண்டு பணியாற்றியதும், சாம்செட்பூமில் தொழிலாளர் நல இயக்கத்திற்கு வித்திட்டதும் இவர்தம் சிறப்புப் பணிகளுள் சில. ‘போர் தேவையற்றது’ என்ற தலைப்பில் 1928–ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொள்ள வியன்னா சென்றபோது, பிரிட்டன், பிரான்சு, செருமனி போன்ற ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று, இந்தியா கடைப்பிடிக்கும் ‘சத்யாக்கிரகப் போர்’ குறித்து உரையாற்றினார். ஆம்சுடர்டாமில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் பங்கேற்றார். உப்புச் சத்யாக்கிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டு அயல்நாட்டுப் பொருள்களையும் துணிகளையும் விலக்கியமையால் இவர் கைது செய்யப்பட்டு, ஆறு மாதச் சிறைத் தண்டனை பெற்றார். இவர் சிறையில் சமய, இலக்கியத் தொடர்பான நூல்களையும் அகிம்சை, சுயராச்சியம் சத்யாக்கிரகம், கல்வி, சாதி ஆகியவை குறித்து எழுதத் தேவையான நூல்களையும் படித்தார். காந்தியடிகள் ‘அரிசன சேவா சங்கம்’ தொடங்கியபோது, இராசேந்திர பிரசாத்தும் மதுரை, திருவரங்கம், ஆந்திரா, கேரளா போன்ற இடங்களுக்கெல்லாம் சென்று ஆலயத்திற்குன் அரிசனங்கள் சென்று வழிபடுவதற்கு வகை செய்தார். இராசேந்திர பிரசாத்து 1933–இல் கைது செய்யப்பட்டு, அசாரிபாக்கில் சிறை வைக்கப்பட்ட போது, உடல் நலமின்றியிருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது பீகாரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கி, பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்கு இழப்பு உண்டாக்கி, உடைமைகளுக்குச் சேதம் உண்டாக்கிற்று. இராசேந்திர பிரசாத்து விடுதலை செய்யப்பட்டார். அவர் ஆயிரக்கணக்கான தொண்டர்களைச் சேர்த்து மாநில முழுவதும் மீட்புப் பணியிலும், மறுவாழ்வுப் பணியிலும் ஈடுபடுத்தினார் நாடெங்கிலும் இருந்து வந்த உதவிகளைக் கொண்டு அரிய பணிகளை இராசேந்திர பிரசாத்துத் தலைமையில் அனைவரும் ஆற்றினர். இராசேந்திர பிரசாத்து தம்மை நாட்டிற்கு ஒப்படைத்து விட்டதால் குடும்பத்தின் பொருளாதார நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. கடன் சுமை மிகுதியானது. சம்னாலால் பசாசு, கன்சியாம் தாசு, பிர்லா போன்றோர் இவருடைய சொத்துகளை, வாங்கிக், கடன்கள் அனைத்தையும் தீர்த்தனர். இராசேந்திர பிரசாத்து பம்பாயில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரசு மாநாட்டிற்குத் தலைமை வகித்தார். இவர் 1935–இல் தமிழ்நாடு வந்து காங்கிரசை வலுவுறச் செய்தார். அபுல் கலாம் ஆசாத்தோடு அசாம் சென்று அங்குக் காங்கிரசு அரசு அமைய உதவினார். இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் கப்பல் கட்டும் தளத்திற்கு இவர் அடிக்கல் நாட்டினார். இவர் 1942–இல் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்றதால் பங்கிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். காங்கிரசு (1946) அமைச்சரவையில் உணவு அமைச்சராக இவர் பெறுப்பேற்றார்; இந்திய அரசியல் நிருணயசபைத் தலைவராகப் பணிபுரிந்தார். இந்தியா 1950 சனவரி 26–இல் குடியரசான போது, இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இராசேந்திர பிரசாத்து தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இரு தேர்தல்களில் அப்பதவிக்கு இவரே தேர்ந்தெடுக்கப்பட்டு 1962 வரை பணிபுரிந்தார். இந்தியாவின் உயரிய விருதாகிய ‘பாரத ரத்னா’ 1962–இல் இவருக்கு வழங்கப்பட்டது. இவர் பீகாரிலுள்ள சதாக ஆசிரமத்தில் 1.3.1963–இல் காலமானார். அறிவு, ஆற்றல், இன்சொல், ஈகை, பணிவு, உயர்ந்த நோக்கு, ஊக்கம், எளிமை, தியாகம், தொண்டு போன்ற பல நல்ல குணங்களின் மொத்த உருவம் இராசேந்திர பிரசாத்து. இவர் இந்திய விடுதலைக்காகவும் அதன் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு வகைகளில் அருந்தொண்டாற்றியவர். இர.ந.