மூட்டுப் பகுதியைச் சுற்றிக் கவசம் போல் காணப் படும் நெய்க் கவசம் (Synovial Membrane) ஒரு வழுவழுப்பான நெய் போன்ற நீர்மத்தைச் சுரந்து, அசைவை எளிதாக்குவதால், இதனை மூட்டுப் பையுறைச் சவ்வு என்றும் குறிக்கலாம். இது மூட்டை அடுத்துள்ள தசை நாண்களைச் சுற்றியிருக்கும் முண்டுப்பைக்கு அருகிலுள்ள பகுதியின் மேல் உராய்வைக் குறைப்பதற்காகவும் பயன் படுகிறது. முட்டையின் வெண் கருவை ஒத்த மூட்டு நீர்மம் இக்கவசத்தால் சுரக்கவும், உட்கவரவும் படுகிறது. இது கருப் பருவத்தில் காணப் படும் நடுமென் தோல் (mesoderm) பகுதியிலிருந்து உருவாகிறது. வெளிர் நிறத்தில், வழுவழுப்பாகவும் மென்மையாகவும், பளபளப்பாகவும் உள்ள இச்சவ்வின் உட்புறம் விரல்கள் போன்ற வில்லை (villi) காணப் படும். மூட்டை அடுத்து, மடிப்புகளுள் கொழுப்புத் திசு நிறைந்து காணப் படும். இதனால், மூட்டின் அசைவின் போது ஏற்படும் வெற்றிடங்களை இக்கொழுப்பு நிறைந்த பகுதி நிரப்புகிறது. பொதுவாக, விரல் போன்ற பகுதி குறைவாகக் காணப் படும். நெய்க் கவசத்தின் உட்புறம் உட்சுவர் (intima) ஆகும். புறச் சுவர் நார், கொழுப்பு மற்றும் மீட்சித் (elastic) திசுக்களினால் ஆனது. இதில் காணப் படும் நெய்க் கவசச் செல்கள் A, B என இரு வகைப் படும். நெய்க் கவச நீர்மம், அசையும் மூட்டுப் பகுதிக்கு நெய் போன்று உதவுவதுடன், மூட்டுக் குறுக்கென்பிற்கு உணவுமளிக்கிறது. கூடுதலாக, நீர்மம் சுரந்த மூட்டைப் பாதுகாப்பதுடன், நோய் நுண்ணுயிர்களை அழிக்க உதவும் பெருவிழுங்கிச் (Macrophage) செல்களாகவும், நெய்க் கவசம் மாறுமெனக் கருதப் படுகிறது. —மா.ஜெ. ஃபிரெடரிக் ஜோசப்