இது கூபகத்தில் உள்ள உறுப்பாகும். கழிவு மண்டலத்தின் பகுதியான இது அகட்டிணையத்தின் (pubic symphysis) நேர் பின் புறமாக அமைந்துள்ளது. சிறுநீர்ச் சேமிப்புப் பகுதியாகச் செயல்படும் சிறுநீர்ப் பைக்கு, சிறுநீரகத்தினின்று நீர் நாளங்கள் வழியாகச் சிறுநீர் வந்து சேர்கிறது. அங்கிருந்து அவ்வப்போது நீர்ப் புறக் குழல் மூலமாக நீர் வெளியேற்றப்படுகிறது. மனிதச் சிறுநீர்ப்பை (urinary bladder) சராசரியாக 500—700 மி.லி. கொள்ளளவு கொண்டது. ஆண், பெண் இரு பாலாரிலும் சிறுநீர்ப் பைக்கு முன் பக்சுத்தில் அகட்டெலும்புகள் உள்ளன. சிறுநீர்ப் பைக்குப் பின்பக்கத்தில் ஆண்களில் மலக் குடலும் பெண்களில் கருப்பையும் உள்ளன. சிறுநீர்ப் பையின் பகுதிகள். சிறுநீர்ப் பையின் பகுதிகள் சிறுநீரால் முழுதும் நிறைந்திருக்கும் நீர்ப் பையில் தெளிவுறத் தெரியும். அகன்ற பின் பகுதி, அடிவாரம் (base) எனப்படும்; அதற்கு நேர் எதிரான கூர் முனையைக் கொண்ட முன் பகுதி, உச்சி (apex) எனப்படும்; சிறுநீர்ப் பையின் குறுகிய கீழ்ப் பகுதி நீர்ப்பைக் கழுத்து (bladder neck) எனப்படும்; அடிவாரத்திற்கும், உச்சிக்கும் இடையுள்ள பகுதியே உடலம் (body) ஆகும். அடிவாரம், மலக் குடல் அல்லது கருப்பை யோனிக்கு அருகேயுள்ள பகுதியாகும். ஆண்களில், மலக் குடலுக்கும் ,அடிவாரத்திற்கும் இடையேயுள்ள இணைப்புத் திசு, குடல் நீர்ப்பைப் பட்டிகை (rectovesical fascia) என்றும், பெண்களில் கருப்பைக்கும், அடிவாரத்திற்கும் இடையுள்ள இணைப்புத் திசு கருவக நீர்ப் பைப் பட்டிகை (uterovesical fascia) என்றும் பெயர் பெறுகின்றன. நீர்ப் பையின் மேற்பரப்பில் விரிந்திருக்கும் உதரவுறை (peritoneum)அங்கிருந்து மலக் குடலுக்கோ, கருப் பை யோனிக்கோ செல்லும், அவ்வாறு வீச்சடையும் மோட்டுப் படலகங்கள் குடல் நீர்ப் பை மடிப்பு, கருவக நீர்ப் பை மடிப்பு எனப்படும். இவற்றால் ஏற்படும் பை போன்ற அமைப்புகள், குடல் நீர்ப் பைக் குழியம் என்றும், கருவக நீர்ப் பைக் குழியம் என்றும் பெயர் பெறும். சிறுநீர்ப் பையின் உச்சி, வயிற்று முன் சுவரின் பின் பரப்பையொட்டி, அகட்டிணையத்தின் அருகில் அமைந்துள்ளது. உச்சியினின்று நார்ப் பட்டையொன்று வயிற்று முன் சுவரின் பின் பரப்பில் படர்ந்து, உந்தியை நோக்கிப் போகும். இதுவே மைய உந்திப் பந்தகம் (ligament) ஆகும், நீர்ப் பை உடலத்தின் குறுகிய கீழ்ப் பகுதி நீர்ப் பைக் கழுத்து ஆகும். இதனின்று தொடங்கும் சிறுநீர்ப் புறக் குழல் சிறுநீரை வெளியேற்றும் பாதையாகப் பயன்படுகிறது. சிறுநீர்ப் பையின் பரப்புகள். சிறுநீர்ப் பை மொத்தம் ஐந்து பரப்புகளைக் கொண்டிருக்கும். இவை முன் பரப்பு, பின் பரப்பு, மேற்பரப்பு, இரு கீழ்ப் பக்கப் பரப்புகள் ஆகும். முன் பரப்பு, அகட்டிணையத்தை அடுத்து அதற்குப் பின்புறமாக இருப்பது, இப்பரப்பிற்கும் அகட்டிணையத்திற்கும் நடுவே இணைப்புத் திசு பரவிக் கிடக்கும். அகட்டுப் பின் பட்டிகை அல்லது நீர்ப் பைமுன் பட்டிகை எனப்படும் இத்திசுக் கூறுகளுக்கு இடையிடையே கொழுப்புத் திசு, சிறு சிறு தொகுப்புகளாகத் திரண்டு கிடக்கும். இவற்றுக்கு அகட்டுப் பின் கொழுப்புக் கதுப்புகள் எனப் பெயர். மேற்பரப்பு, மோட்டுப் படலத்தால் மூடப்பட்டுள்ளது. இப்பரப்பிற்கு மேலாகச் சிறு குடல் பல வளையங்களாகப் படர்ந்து கிடக்கும். பெண்களில், கருப்பைக்கு நீர்ப் பை மேற்பரப்போடு தொடர்பேற்படுகிறது. பின் பரப்பு என்பது அடிவாரப் பகுதியையே குறிக்கும். கீழ்ப்பக்க வெளிப் பரப்புகள் (inferolateralsurfaces) பக்கத்திற்கு ஒன்றாக, இரண்டு உள்ளன. இவை முன் புறமாக அகட்டெலும்புகளை நோக்கியவாறு உள்ளன. சிறுநீர் நிறைந்திருக்கும் தறுவாயில், நீர்ப் பையின் பரப்புகள் மேற்கூறியவாறு இருப்பதில்லை. சிறுநீர் நிறைந்து அதன் உருவம் பெருகப் பெருக, நீர்ப் பை ஒரு முட்டை வடிவத்தைப் பெறுகிறது. அப்போது, அதன் பரப்புகள் ஒன்றுக்கொன்று இணைந்து, தம் தனித் தன்மையை இழக்கின்றன. சிறுநீர்ப் பையின் உள்தோற்றம். நீர்ப் பையின் சிலேட்டுமப் படலம், அதன் உட்பரப்பில் சில மடிப்புகளைத் தோற்றுவிக்கும், சிலேட்டுமப் படலமும், தசைப் படலமும் ஆங்காங்கே இணைப்புத் திசு நார்களால் இணைக்கப்பட்டுள்ளமையால், சிலேட்டுமம் தசைப் படலத்தினின்று தனியாக அசைய, இம்மடிப்புகள் தோன்றுகின்றன. ஆனால், அடிவாரத்தின் உட்பரப்பில் இத்தகு சுருக்கங்களோ, மடிப்புகளோ எப்போதும் இருப்பதில்லை. முக்கோண வடிவிலுள்ள இவ்விடத்தில் சிலேட்டுமப் படலம் நேரிடையாகத் தசையுறையின் மீது ஒட்டிப் படர்ந்துள்ளது; இங்கு, புறச் சிலேட்டுமப் படலம் இல்லை. இந்த நீர்ப் பை மேல் முக்கோணப் பகுதியின் இரு முனைகளிலும் சிறுநீர் நாளங்கள் திறக்கின்றன. கீழ் முனையில் சிறுநீர்ப் புறக் குழல் தொடங்குகிறது, சிறுநீர் நாளங்களின் துளைகளை இணைத்துக் கொண்டு முக்கோண மேல் மட்டத்தில் ஒரு திட்டு உள்ளது. இதுவே இடை நாளப் பதுக்கையாகும். நாளத் துளையின் பக்கவாட்டில் தொடரும் இத்திட்டின் பகுதி, நாள மடிப்பு எனப்படும். சிறுநீர்ப் பை நுண்ணமைப்பு. சிறுநீர்ப் பையின் சுவர் நான்கு அடுக்குகளால் ஆனது, உள்ளிருந்து வெளியாக இவை சிலேட்டும உறை, புறச் சிலேட்டும உறை, தசையுறை, நீரிய உறை (serous coat) எனப்படும். சிலேட்டும உறை, திரி நிலைப் படுக்கையத்தால் ஆனது. சுருங்கிய நீர்ப் பையில் சிலேட்டுமம் பல மடிப்புகளைக் கொண்டிருக்கும், விரிந்த நிலையில், கொள்ளளவு அதிகமாக ஆக, இம்மடிப்புகள் விரிந்து இடம் கொடுக்கின்றன. அப்போது, சிலேட்டும உறை வழவழப்பாகக் காணப்படும், தசையுறை மூன்றடுக்குகளைப் பெற்றிருக்கும். புறவடுக்கு நீள் தசை தார்களையும், இடையடுக்கு வட்டத் தசை நார்களையும், அகவடுக்கு மீள், நீள் தசை நார்களையும் கொண்டவை. இவை யாவுமே வழுக்குந் தசைகள் (smooth muscles) ஆகும். சுருக்கத்தால், நீர்ப் பையை அழுத்திச் சிறுநீர் வெளியேற்றத்தில் உதவுவதால், நீர்ப்பைத் தசை நீக்கி (detrusor) எனப்படும். இடையடுக்கின் வட்டத் தசை நார்கள், நீர்ப் பைக் கழுத்துப் பகுதியில் திரண்டு புறக் குழல் உட்புழையைச் சுற்றித் தசை வளையத்தைத் தோற்றுவிக்கின்றன, இதுவே நீர்த் துளைச் சுருக்கியாகும், —சுதா சேஷய்யன் நூலோதி. R. Kanagasuntheram. et.al., Anatomy Regional, Functional and Clinical, First Edition, P.G. Publishers, New Delhi, 1987.