அரசியலும் முறைமையும்
araciyalum muṟaimaiyum
மனிதனை மனிதனாக்கி வாழ்விப்பது மக்கள் சமுதாயமே.
மனிதனை மனிதனாக்கி வாழ்விப்பது மக்கள் சமுதாயமே. சமுதாயமே மக்கள் வாழ்வு சிறப்படைவதற்கு அரசாங்கமெனும் அமைப்பை நிறுவுகிறது; அது நன்கு செயல்படச் சட்டங்களையும் நீதிமுறைகளையும் உருவாக்குகிறது. இத்தகைய ஒரு சமுதாய அமைப்பை எல்லோரும் விரும்பி ஏற்றுக்கொண்டு வாழ்வதை ‘அரசியல் வாழ்வு’ எனக் கூறலாம். சமூக வாழ்வில் அரசியல் இணைந்தும் இயைந்தும் இருக்கிறது.
இந்திய அரசியல் வரலாறு ஏறத்தாழக் கி.மு. 2000 ஆண்டு அளவில் தொடங்குகிறதெனலாம். ஆனால் இதற்கும் பல நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட வேதகால அரசியலைப் பற்றியும் தெரிந்து கொள்ளச் சான்றுகள் கிடைக்கின்றன. அரசனின் கடமை மக்க- ளைக் காப்பது மட்டுமன்றி அவர்கள் வாழ்வை வளங் கொண்டதாக அமைப்பதுமாகும் என்று வேத சம்கிதைகள் கூறுகின்றன. அக்கால அரசாங்கம் பிராமணரைத் துணைக்கொண்ட சத்திரிய அரசாங்கமெனும் கருத்தை வேதங்களிலிருந்து அறியலாம். அரசனின் பாதி புரோகிதரென அயிதரேய பிராமணம் குறிப்பிடுவதிலிருந்து பிராமணரில்லாது அரசனால் நடத்தப்படும் அரசு முறையற்றதென ஒதுக்கப்பட்டிருக்கலாம்.
அரசன் அறநெறி நின்று ஆள்பவனாக இருக்க வேண்டுமென்னும் கருத்தினை வேதங்கள், சாத்திரங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள் ஆகியன கூறுகின்றன. இந்நூல்களெல்லாம், சமயம் தழுவிய அரசியல் தருமத்தை வரையறுத்ததுடன் அதையே அரசன் கடைப்பிடித்து ஒழுக வேண்டுமென்றும் வலியுறுத்தின.
அரசன் தண்டம் எனப்படும் நீதி முறையினால் அல்லவை கடிந்து, நல்லவை பெருக்கி, ஒழுங்கினை நிலைநிறுத்திச் சோர்வின்றிச் செயற்படுபவனாக இருத்தல் வேண்டும். இவ்வாறு அறத்திற்கு இசைவாகச் செங்கோலோச்சுவதே அரசனின் தலையாய கடமையாகும். இதையே ‘இராசதருமம்’ என்ற வட சொல்லும் ‘இறைமுறை’ என்னும் தமிழ்ச் சொல்லும் உணர்த்துகின்றன. அரசன் கொடுங்கோலனாய் இருப்பானாயின் செல்வத்தையும் நாட்டு மக்களையும் ஒருங்கே இழப்பான் என்று திருக்குறள் கூறுகிறது. தனக்கென உள்ள தருமத்தை மேற்கொள்வது மட்டுமன்றி மக்கள் தத்தம் சுய தருமத்தைக் கொண்டொழுகுமாறு செய்வதும் அரசனின் இன்றியமையாத கடமையாக இருந்து வந்தது. அரசன் அறவழி நின்றும் இறைமுறை பிழையாதும் ஆட்சி செய்தலே முறையான அரசியலெனும் கருத்தை இவற்றினின்றும் அறிய முடிகிறது.
வேத காலத்திற்குப் பின்பு அரசியலில் சில மாறுதல்கள் நிகழ்ந்திருப்பதை ஆய்வுகள் சுட்டுகின்றன. மக்களுக்குப் பாதுகாப்புத் தர இயலாத நிலையிலும் சமூகத்தில் பல வகுப்பினரை ஒன்றாக்க முயலும் நேரத்திலும் அரசனை முறையற்ற ஆட்சியாளன் எனப்பழித்து அவனுக்கு எதிராக மக்கள் புரட்சி செய்யலாமென்று மகாபாரதம் கூறுகிறது. வருணப் பிரிவுகள் கொண்ட சமுதாயமே முறையானதென்று சுட்டப்படுதலால் அரசன் அதை நிலைநிறுத்தும் பொறுப்புக்குள்ளாயினான். ஆனால், இதற்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின் வந்த கிரேக்க அரசியல் அறிஞர் அரிசுடாட்டில் (கி.மு. 384–322) எந்த அரசும் வகுப்புகளைக் கொண்டதாக இருக்கக்கூடாது என்றும், அப்படி இருந்தால் ஏதாவது ஒரு வகுப்பினர் தாம் நன்மை பெறுவர் என்றும் விளக்கி, பிரிவற்ற சமுதாயமே உண்மையான சமுதாயமென்னும் தம் கோட்பாட்டை நிலைநாட்டினார். அரசியலில் புரட்சிகள் ஏற்படுவது இயற்கையே என்றும் நல்முறைகளைக் கையாண்டு அவற்றைத் தவிர்ப்பதே அரசின் கடமை என்றும் கூறுகிறார்.
மௌரியர் காலத்தவரான கௌடில்யர் தம் நூலான அர்த்த சாத்திரத்தில் “உலக நிகழ்ச்சியை விரும்பும் அரசன் எப்போதும் தண்டத்தைச் செலுத்துவதில் முயற்சியுடையவனாதல் வேண்டுமெனத் தெரிவிக்கிறார்”. தருமத்தைவிட அரசியலுக்கு மிகுதியான முதன்மை கொடுக்கும் இவர், நாட்டு நலனுக்காக அறமற்ற செயல்களையும் அரசன் செய்யலாம் என்று குறிப்பிடுவதிலிருந்து அரசியலுக்கு அத்தகைய செயல்கள் முறையானவை என்று காட்டியுள்ளார். இவரின் இக்கருத்து இந்திய அரசியல் சிந்தனை வளர்ச்சியில் ஒரு திருப்பத்தைக் காட்டுகிறதெனலாம். அரசன் மக்கள் தலைவனாக இருந்தாலும் அளவற்ற அதிகாரம் அவனுக்கில்லை என்பதையும், அவனை எதிர்த்துப் புரட்சிசெய்ய மக்களுக்கு உரிமை இல்லை என்பதையும் எடுத்துரைக்கிறார். இவர் காட்டும் இவ்வரசியல் கோட்பாடுகளிலிருந்து இவருக்குப் பின்வந்த காமாந்தகர் வேறுபடுகிறார். அவர் தம் நூலான காமாந்தகீயத்தில் அரசனை அதிக உரிமை பெற்றவனாக, எல்லையற்ற அதிகாரம் கொண்டவனாகக் காட்டுகிறார். அவர்தம் அரசியல் சிந்தனைப்படி இவையே அரசியல் முறைமை என விளங்கிக் கொள்ளலாம்.
மற்றுமோர் அரசியல் நூலான சுக்கிரநீதி, சட்டம் தருமத்தைத் தழுவியே இருக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது. ஆதலால் அறநெறிப்படி அமையாத அரசியல் சட்டம் முறையற்றதென்பதை இந்நூல் வெளிப்படுத்துகிறது. மேலும் இது அரசன் கொடுங்கோலனாயின் அவனை எதிர்த்துப் புரட்சி செய்யும் உரிமையை மக்கள் பெற்றவர்களாவார்கள் எனும் முறைமையையும் அரசியலில் உருவாக்கித் தருகிறது.
தரும சாத்திரங்களில் மனுதரும சாத்திரம் புகழ் பெற்றதாக விளங்குகிறது. மகாபாரதம் குறிப்பிடுவதைப் போலவே மனுவும் வருணாசிரம தருமத்தைக் காப்பது அரசனின் கடமை என்கிறார். அப்படி அவன் செய்யானாயின் அரசியலில் முறை பிறழ்ந்தானென்று எண்ணுதற்கு இடமுண்டு. மேலும் தன் மனம் போனபடி அரசன் அதிகாரம் செலுத்துபவனாக இருந்தால், தானே அழிந்துபடுவான் என்றுணர்ந்து இச்செயலை அரசியலுக்கு முறையற்ற தாக்குகிறார் மனு.
குப்தர்கள் கால நூல் எனக் கருதப்படும் யாக்ஞவல்கிய சுமிருதியில், புனிதச் சட்டமானது பெரும்- பாலோரின் வெறுப்புக்கு உள்ளாகும்போது அதை அவர்களுக்கு இணக்கமாக அரசர் மாற்றியமைக்க வேண்டுமென்பது குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் மதச்சட்டமும் மதச்சார்பற்ற பொதுச்சட்டமும் தனித்தனியே பிரிக்கப்பட்டு விளக்கப்படுகின்றன. சமயக் கொள்கைகள் அரசியல் சட்டத்திற்கு அடிப்படையாக அமைதல் கூடாது எனும் கருத்தை இந்நூல் வழியே காணமுடிகிறது. இதையே சிசிரோ (கி.மு. 106–43) எனும் உரோமானிய அரசியல் அறிஞர், அரசியல் கருத்துகளைத் தெரிவிக்கும்போதும் சட்டங்களை அமைக்கும்போதும் இயற்கை, பகுத்தறிவு ஆகிய இரண்டின் அடிப்படையில் அவை அமையவேண்டுமென வலியுறுத்துகிறார். அறநூல்களை அடிப்படையாக வைத்தே அரசியற் சட்டங்கள் அமைய வேண்டுமெனும் பண்டைய முறையினின்று விலகிச் செல்வது, இவர்களின் முற்போக்குச் சிந்தனையைக் காட்டுகிறது.
தமிழ்நாட்டின் தொன்மை அரசியலையும் அதன் முறைமை நிலையையும் சங்க இலக்கியங்கள் விளக்குகின்றன. அரசனுக்குப் பின் அவன் தலை மகன் முடி சூடி ஆட்சிப் பொறுப்பேற்கும் உரிமை பெற்றிருந்தான். இதையே சிலப்பதிகாரத்தில் “முறை முதல் கட்டில்” எனக் குறிப்பிடுகின்றார் இளங்கோ அடிகள். ஆனால் அரிசுடாட்டில் ‘கற்பனை அரசு’ பற்றிக் கூறும்போது ஒரு நாட்டிலுள்ள மக்கள் தோழமையின் அடிப்படையில் ஒன்றாகச் சேர்ந்து ஓர் அரசை அமைப்பார்களேயானால், அதுவே அரசுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்கிறார். இதன் வாயிலாகக் கிரேக்க நகர அரசுகள் எல்லாவற்றிற்கும் ஒரே அரசாங்கம் தேவை எனும் கருத்தை வெளியிடுகிறார். இதனால் வழி வழியாகத் தொடர்ந்து வரும் மன்னராட்சி அமைப்பை அவர் விரும்பவில்லை என்றே கருத வேண்டியுள்ளது. இவர் அடியொற்றி வந்த கிரேக்க அரசியல் அறிஞர் பொலிபியசு (கி.மு. 204–122) நல்ல அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் மன்னர் ஆட்சி, உயர்குடி ஆட்சி, மக்கள் ஆட்சி ஆகிய மூன்று முறைகளிலும் உள்ள நல்ல கருத்துகளை ஏற்றுக் கொண்டு ஒரு கூட்டு அரசியல் முறையை அமைப்பதே நலம் என்றுரைக்கிறார்.
சங்க கால அரசியல் அமைப்பு அரசனை முதலாகக் கொண்டிருந்தது. “மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம்” என்று புறநானூறு குறிக்கிறது. மன்னன் மக்களுக்கு உயிரெனப் போற்றப்படுதலால், தாய் தன் குழந்தைகளை வளர்ப்பதுபோல் அரசன் மக்களைப் பாதுகாக்க வேண்டுமென்பதை மற்றொரு புறநானூற்றுப் பாடல் கூறுகிறது (5). அரசர்கள் இத்தகைய பண்பு நலன்களைப் பெற்றிருந்ததனால் தான் அவர்களின் வரலாற்று நிகழ்வுகளைப் புலவர்கள் தங்கள் கவிதைகளில் வடித்து மகிழ்ந்தனரென்று சொல்வது மிகையாகாது. பண்பாளனான அரசனே நீதிநெறி நின்று மக்களைக் காக்க முடியும் எனும் அரசியல் நெறிமுறை இங்குத் தெளிவாக விளக்கப்படுகிறது.
அரசன் அந்தணர்களை வணங்க வேண்டுமென்று புறநானூறு (6) கூறுகிறது. மேலும் அவன் அறநூல் நெறிநின்று நீதி வழுவாது ஆட்சி செய்யும் செங்கோலனாக இருக்க வேண்டும். இத்தகைய அரசனே மக்களுக்கு இறைவனென வைக்கப்படுவான் என்று திருக்குறள் கூறுகிறது (388). முனிவரின் தவமும் பெண்ணின் கற்பும் பருவகாலங்களின் பொய்யாமையும் அரசனின் நீதி தழுவிய ஆட்சியைப் பொறுத்தே அமைகின்றன என்பதைச் சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. நீதிநெறி நின்று ஆளும் அரசன் முறை தப்பினால் நீதியை மறுபடியும் நிலைநாட்ட எவ்வகைத் தியாகத்தையும் செய்வானென்பதை மனு நீதிச்சோழன், பாண்டியன் நெடுஞ்செழியன் ஆகியோரின் அறச் செயல்களினின்றும் அறியலாம். நீதியெனும் நன்னெறியே அரசனுக்கு உயிர்நாடி; அதுவே அரசியலில் முறையானதென்பது சங்க கால அரசியற் கொள்கையாகும்.
அரசியல், சமயத் தொடர்புடையதாக இருத்தல் முறையானதாகுமா எனும் கேள்விக்கு இருவேறு கருத்துக்கள் நிலவி வந்ததை வரலாறு சுட்டுகிறது. வேத காலத்திலும் அதற்குப் பிறகும் தமிழக வரலாற்றில் சங்க காலம் நீங்கலாக, ஏனைய காலங்களில் அரசியல் அமைப்புக்குச் சமயம் அடித்தளமாகவே இருந்து வந்ததை நூல்கள் வாயிலாக அறிய முடிகிறது. இதிலிருந்து சமயச் சார்புடைய அரசியலே முறையானதென்பது உணர்த்தப்படுகிறது என்பதில் ஐயமில்லை. இந்திய சமுதாயம் தொன்று தொட்டுச் சமயத்தில் மூழ்கித் திளைத்து வருவதால் அரசியலுக்கு அது துணையாக நின்றது. இத்தகைய அரசியலைத்தான் மக்கள் முறையானதென்று ஏற்றுக் கொண்டார்கள். மன்னராட்சி முடியும் மட்டும் இந்நிலை நீடித்து வந்தது. ஆனால் ஐரோப்பிய அரசியலில் பண்டைக் காலந்தொட்டு மன்னராட்சியின் இறுதிவரை இந்நிலை ஒரே சீராக இருந்ததென்று சொல்லமுடியாது. கிரேக்க நாட்டு அரசியல் அறிஞரான பிளேட்டோவின் (Plato, கி.மு. 427–347) ‘கற்பனை அரசியல்’ கோட்பாடு சமயத்தின் அடிப்படையில் அமைந்ததாகவே இருக்கிறது. ஆனால் அவர் மாணாக்கரான அரிசுடாட்டில் நன்னெறியிலிருந்தும் சமயத்திலிருந்தும் அரசியலைப் பிரிக்க வேண்டுமென வலியுறுத்தினார். சமய அடிப்படையில் அரசியல் தோன்றியதாக இவர் கூறவில்லை. கி.பி. 13–ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செயின்டு தாமசு அக்யூனாசு எனும் சிசிலி நாட்டவர், நாடாள்பவர் எவராயினும் திருச்சபையின் உதவியும் ஒத்துழைப்பும் இன்றிச் செவ்வனே ஆட்சி செய்ய இயலாதென்றார். ஆனால் இவருக்குப் பின் கி.பி. 14,15,16–ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தாந்தே (இத்தாலி), சான் விக்ளிப் (பிரிட்டன்), மாக்கிய வெல்லி (இத்தாலி) ஆகிய அரசியல் அறிஞர்கள், சமயம் அரசியலில் தலையிடுதல் கூடாது எனும் கருத்துடையவர்களாகவே இருந்தனர். சமயச் சீர்திருத்தத்திற்குப் பின் சமயத்தினின்றும் அரசியல் வேறாகப் பிரிக்கப்பட்ட நிலையை வரலாற்றுச் சான்றுகள் கொண்டு அறியலாம். இவ்வாறு இருவேறு கோட்பாடுகள் இருந்தாலும், சமயச் சார்பற்ற அரசே பிற்காலத்தில் பல அரசியல் சிந்தனையாளர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. ஆகையால் அத்தகைய அரசே முறையானதென மக்களால் விரும்பப்படுவது, அவ்வறிஞர்கள் வாயிலாக வெளிப்படுகிறது.கோ.க.
துணை நூல்கள்
நடராசன், பெ., “அரசியல் கோட்பாடுகள்”, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1973.
பரதன், ம., “பழங்கால இந்தியாவில் அரசியல் சிந்தனையும் ஆட்சி முறையும்”, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1977.
Appadorai, A., “The Substance of Politics”, Oxford University Press, Madras, 1978.
Subramanian, N., “Sangam Polity”, Asia Publishing House, Bombay, 1966.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 721)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hsknxgeg/
தமிழ்“அரசியலும் முறைமையும்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/hsknxgeg/APA
Oliyon Research. (2026). அரசியலும் முறைமையும். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hsknxgeg/MLA
"அரசியலும் முறைமையும்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/hsknxgeg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment