இதன் வேறு பெயர்கள் இந்திர நீலப் பாஹினியா, சிவப்பு மந்தாரை, கருஞ்சிவப்பு மந்தாரை, மந்தாரை, காட்டுக் கருங்காலி, செம்பூவாத்தி, நீலத் திருவாத்தி, பெரிய திருவாத்தி என்பன. செம்மந்தாரையின் தாவரப் பெயர் பாஹினியா பர்புரியா (Bauhinea purpurea). இதற்கு பா. ட்ரையாண்ட்ரா (B.triandra) என்னும் பெயரும் உண்டு. இந்தியாவில், இமய மலை அடிவாரத்தில் 1200 மீ. உயரம் வரை தானே வளரும், பசுமை மாறாத மரங்களுள் இதுவும் ஒன்று. தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இம்மரத்தை விரும்பி வளர்க்கின்றனர். சண்டிகார் நகரில் சாலை ஓரங்களில் அழகுக்காக, விரும்பி வளர்க்கப்படுகிறது. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> வளரியல்பு. இம்மரம் 15 மீ. உயரம் வளரும். சிறு கிளைகள் முண்டு முடிச்சுகளுடன் காணப்படும். இலைகள் கால் நடைகளின் குளம்புகளைப் போல் பிளந்திருக்கும். சில சமயங்களில், குளம்பு போன்ற கதுப்புகள் ஒன்றன் மீது ஒன்றாக இருக்கும். இலைகள் நீள் சதுர வடிவானவை; 11–13 நரம்புகள் இருக்கும்; கீழ்ப் பகுதியில் சடை போன்றிருக்கும்; ஓரம் முழுமை- யானது. நுனி மழுங்கியோ, சற்றுக் கூர்மையாகவோ இருக்கும். இலைக் காம்பு 3 செ.மீ. நீளமானது. இலையடிச் செதில்கள் முக்கோண வடிவமுள்ளவை. மஞ்சரி, கொப்புகளின் நுனியிலோ, இலைக் கக்கங்களிலோ ரெசீமாகவோ, கதிராகவோ 15 செ.மீ. நீளத்தில் இருக்கும். மஞ்சரிக் காம்பு தடிப்பாக 5 செ.மீ. நீளத்தில் இருக்கும். பூவடிச் சிதல்கள், முட்டை வடிவானவை; 4 செ.மீ. அளவுள்ளவை. மொட்டுகள் குறுகியும், தலை கீழ் முட்டை வடிவிலும், முனை மழுங்கியும் இருக்கும். பூக்கள் செப்டம்பர் மாதத்தில் மிகுதியாகப் பூக்கும். இதன் நுனி, இரண்டாகப் பிளவுற்றிருக்கும். அல்லி இதழ்கள் ஐந்தும், ரோஜா அல்லது இளஞ் சிவப்பு, நீலங் கலந்த சிவப்பு நிறத்தில் ஒரே மாதிரியாக இருக்கின்றன. இவை தலை கீழ் முட்டை வடிவில் 3.5 X 1.5 செ.மீ. காணப்படும். மகரந்தக் கேசரங்கள் ஐந்து. மகரந்தத் தாள் 2.5 செ.மீ. நீளமானது. சூல்கள் பல. சூலகத் தண்டு 1 செ.மீ. நீளமானது. சூலக முடி உருண்டையானது. நெற்றுகள் நீள் சதுரமானவை; தட்டையானவை. காம்பருகின் பகுதி குறுகியிருக்கும். நெற்றின் நுனி கொம்பு போல் வளைந்திருக்கும். ஒவ்வொரு கருஞ் சிவப்பு நிற நெற்றிலும், 10 முட்டை வடிவ விதைகள் இருக்கும். பயன்கள். இம்மரத்தை அழகுக்காகச் சாலை ஓரங்களிலும், தோட்டங்களிலும் வளர்ப்பதுண்டு. மரக் கட்டை சாம்பல் கலந்த பழுப்பு நிறமுடையது. காற்றில் உலர்ந்த மரக் கட்டை ஒரு கன அடி 16.3 கி.கி. எடையுடன் இருக்கும். இதனைத் தண்டு துளைப்பான், கறையான் ஆகியன பாதிக்கலாம். இம்மரத்தை வேளாண் கருவிகள், அளவுப் படி (scantling), தோணி மரம் போன்ற கட்டுமான வேலைகளுக்குப் பயன்படுத்தலாம். விதையில் 15% எண்ணெய் அடங்கியுள்ளது. பட்டையில் டானின் அடங்கியுள்ளது. இதன் பட்டை, தோல் பதனிடவும், சாயம் தயாரிக்கவும் பயன்படுகிறது. மரத்தைக் கட்டடம் கட்டுவதற்குப் பயன்படுத்தலாம். இதன் மரக் கட்டை ஓரளவே உறுதியாக இருக்கும். இலைகளைக் கால்நடைகளுக்குத் தீவனமாகத் தரலாம். தேனீக்கள் மகரந்தத்தையும், தேனையும் சேகரிக்க இம்மரத்தைத் தேடி வருகின்றன. இம்மரத்தின் பூ, பட்டை முதலியவை மருந்துக்கு உதவுகின்றன. வேர்ப் பட்டை, நச்சுத் தன்மை கொண்டது. இம்மரப் பட்டைக் குடி நீர் வயிற்றுப் போக்குக்கு உதவுகிறது. பட்டை, வேர், பூ ஆகியவற்றை அரிசிக் கஞ்சியில் அரைத்துத் தடவக் கொப்புளம் பழுத்துக் குணம் உண்டாகும். பட்டைக் குடி நீரைக் கொண்டு, அழுகிய புண்களைக் கழுவலாம். பட்டையைச் சுக்குத் தூளுடன் சேர்த்துக் கழுநீர் விட்டரைத்துக் கண்ட மாலைக்குப் பூசலாம். பட்டையுடன், வேலம் பட்டை, மாதுளம் பூ ஆகியவற்றைச் சேர்த்துக் குடி நீரிலிட்டு வாய்க் கொப்பளித்து வர, வாய் நீரூறல், தொண்டைப் புண் முதலியவை நீங்கும். பூக்களுக்கு மலத்தை இளக்கும் குணமுண்டு. காய்ந்த பூ மொட்டுகளைச் செரியாமைப் பேதிக்கும், பூச்சிகளைக் கொல்வதற்கும் பயன்படுத்தலாம். பூ மொட்டுகளைக் குடி நீரிலிட்டுத் தர, இருமல், குருதிப் போக்கு, பெரும்பாடு ஆகியன நீங்கும். கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும் எண்ணெயிலும் இது சேர்க்கப்படுகிறது. —கோ.அர்ச்சுணன்