அரசாங்க வரவு–செலவுத் திட்டமே (Govt. Budget) அரசின் கொள்கையை விளக்கும் சிறந்த ஆவணமாக அமைந்துள்ளது. இந்தியாவின் வரவு–செலவுத் திட்டம், ஐந்தாண்டுப் பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஓர் உறுதுணையான கருவியாக உதவுகிறது. திட்டங்களின் அளவையும் கொள்கைகளையும் பின்பற்றி வரவு–செலவுத் திட்டங்கள் அமைக்கப்படுகின்றன. அனைத்திற்கும் அடிப்படை சமூக–பொருளாதார முன்னேற்றக் கொள்கையேயாகும். பின்தங்கிய நிலையிலுள்ள இந்தியாவில் பொருளாதாரம் விரைந்து வளர்ச்சியடைதல் வேண்டும். இந்த நூற்றாண்டின் முற்பகுதி வரை, ஒரு சிறந்த வரவு–செலவுத் திட்டம் என்பது மிகக் குறைவான வரிப் பளுவையும் அதற்கொப்பக் குறைந்த செலவினங்களையும் கொண்டதாக அமையவேண்டும் என்று எண்ணப்பட்டது. மேற்சொன்ன கருத்துக்கு மாறாக 1930–ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரசாங்கச் செலவினங்களின் அளவும் வரி விகிதங்களும் வரி விதிக்கும் அளவும் பெருமளவுக்கு மிகுந்துள்ளன. இந்தியாவில் மத்திய அரசும் எல்லா மாநில அரசுகளும் ஒரே வகையான வரவு செலவுத் திட்ட முறையினைப் பின்பற்றுகின்றன; நாடு தன்னுரிமை பெற்ற பின்பு அரசாங்க வரவு–செலவுத் திட்டங்களின் அளவு ஆண்டுதோறும் விரிவடைந்து வருகிறது. மக்களாட்சி முறை பின்பற்றப்படுவதால் ஆக்கநல அரசின் பல்வேறு பணிகள் விரிவடைந்துள்ளன. ஐந்தாண்டுத் திட்டப் பணிகள் ஆண்டுதோறும் வளர்ந்துகொண்டே வருகின்றன. ஆகையால், நாட்டின் அரசாங்க வரவு - செலவுத் திட்டங்களின் விரிவடையும் போக்கு, சமூக, பொருளாதார முன்னேற்றப் போக்கினையே காட்டுவதாக உள்ளது. முந்தைய ஆண்டின் வரவு–செலவுத் திட்டத்தோடு ஓரளவிற்கேனும் ஒத்த நிலையில், வருகின்ற ஆண்டின் வரவு செலவுத் திட்டம் அமைதல் வேண்டும் என்பதும் ஒரு நல்ல கோட்பாடே (Principle). வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதால் நிதி அளவையில் ஒருமைப்பாடு இருக்க வழி இல்லை. ஆனால், ஒப்பிட்டுப் பார்க்க வழி செய்யும் வகையில் இனங்களில் ஒருமைப்பாடு இருக்கலாம். வரவு–செலவுத் திட்டத்தில் நெகிழ்வுத் தன்மை (Flexibility) இருத்தல் வேண்டும். ஒரு வரையறுக்கப்பட்ட அளவு வரை, ஒரு துறைக்கு ஒதுக்கிய பணத்தை இன்றியமையாத தேவை ஏற்பட்டால் வேறு துறைகளுக்கு மாற்றிச் செலவிடும் அதிகாரம் நிருவாகத்தினருக்குத் தரப்படல் வேண்டும் என்பதும் ஒரு கோட்பாடு ஆகும். வரவு–செலவுத் திட்டத்தினை முறையாகச் செயற்படுத்துவது நிருவாகத்தின் தலையாய கடமையாகும். செயற்பாட்டில் தவறுகளோ குறைகளோ ஏற்பட்டால் தொடர்புடைய அலுவலர்கள் அதற்கான பொறுப்பேற்க வேண்டும். மதிப்பீடுகள் (Estimates) முடிந்த அளவிற்கு உண்மையாக (Accurate) இருத்தல் வேண்டும். குத்துமதிப்பு மதிப்பீடுகள் (Rough Estimates) வரவு–செலவுத் திட்டத்திற்கு எந்த வகையிலும் ஏற்புடையவை அல்ல. நுட்பமாக மதிப்பீடு செய்யப்படாத கூறுகள், வரவு–செலவுத் திட்டத்தின் உருவ அமைப்பினையே கெடுக்கும். செயற்படுத்த முடியாத வேலைத் திட்டத்தினை உருவாக்குவதில் உண்மையும் நடைமுறையில் இயலுந்தன்மையும் போற்றப்படுதல் வேண்டும். வரவு–செலவுத் திட்டங்கள், தெளிவான வகையில் (Clarity) பொது மக்களும் புரிந்து கொள்ளும் முறையில் வெளியிடப் படவேண்டும். பிறிதொரு கோட்பாடு கால வரம்பினைக் குறித்ததாகும். வரவு–செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள பணத்தினைக் குறிப்பிட்ட ஓராண்டுக் காலத்திற்குள் செலவிடுதல் வேண்டும். அவ்வாறு செலவிடப்படவில்லையானால் அப்பணத்தினைப் பின்னர்ப் பயன்படுத்த முடியாது. அது காலங்கடந்த, கெடுத் தீர்ந்த (Lapsed) தொகையாகிவிடும். நாடாளுமன்ற அல்லது சட்டமன்றத்தின் முன் வைக்கப்படும் வரை, வரவு–செலவுத்திட்டம் மறையான (Secret) ஆவணமாகும். மன்றத்தில் வெளியான பிறகு, பொது மக்களும் அதனை அறிந்து பயன் பெறுமாறு செயற்படத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மக்களாட்சி முறை பின்பற்றப்படும் நாடுகளில் இது தலைசிறந்த கோட்பாடாக அமையும். குறிப்பிட்ட ஓராண்டில் அரசின் வரவுகளும் செலவுகளும் சமமாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்ட வரவு–செலவுத் திட்டம், “சமநிலையுடைய வரவு–செலவுத் திட்டம்” என்று சொல்லப்படும். அவ்வாறு அமையாதவை “சமநிலை அற்ற வரவு–செலவுத் திட்டங்களாகும்”. திட்டத்தில் செலவினங்களைவிட வரவினங்கள் மிகுதியாக இருந்தால் அத்திட்டம் “உபரி வரவு–செலவுத் திட்டம்” என்று சொல்லப்படும். வரவு-செலவுத் திட்டங்கள் வரவும் செலவும் சமநிலை உடையனவாக இருத்தல் வேண்டும் என்ற கருத்து, இப்பொழுது பொருளாதார நிதியியல் வல்லுநர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. ஆனால், 20–ஆம் முன் நுற்றாண்டிற்கு பொருளாதார வல்லுநர்கள், பெரும்பாலும் சமநிலை உடைய வரவு-செலவுத் திட்டங்களே நல்லவை என்றும், அவ்வாறு இல்லாதிருந்தால் அரசு விரைவில் வரவும் செலவும் சமநிலை அடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். இரிக்கார்டோ, மில், மால்தசு ஆகியோர் இக்கருத்தினையே வலியுறுத்தினர். இன்றும் இலட்சு (Lutz) என்பவர், சமநிலைத் திட்டத்தின் தேவையினைப் போற்றுபவராக இருக்கிறார் ஆனால், பெரும்பாலும் இக்காலப் பொருளாதாரப்-பேரறிஞர்கள். குறிப்பாக, கீன்சீன் (Keynes) கருத்தைச் சார்ந்தவர்கள், வரவு–செலவுத் திட்டம் சமநிலை உள்ளதாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும், நாட்டின் பொருளாதார நலத்தினையும் மேம்பாட்டினையும் கருத்தில் கொண்டு, பற்றாக்குறை வரவு–செலவுத் திட்டங்களை மேற்கொள்வது தேவையானது என்றும் கூறுகிறார்கள். பேராசிரியர் ஆல்வின் ஏன்சன் (Alvin Hansen), பேராசிரியர் கிக்சு (Hicks), பேராசிரியர் தால்டன் (Dalton) ஆகியோர் இவர்களுள் குறிப்பிடத்தக்க சிலராவர். பொருளியல் வல்லுநர்களுள் சிலர், அரசின் எல்லா வரவுகளும் செலவுகளும் சமநிலை உடையனவாக இருத்தல் வேண்டும் என்று சொல்லாமல், குறிப்பிட்ட சில வரவுகளும் செலவுகளும் மட்டும் சமமாக இருந்தால் போதும் என்ற ஒரு கருத்தினையும் கூறுகிறார்கள். மரபு வழிப் பொருளாதாரச் சிந்தனையாளர்களின் கருத்து, மக்களாட்சி மலர்ந்து ஆக்கநல அரசு அமைய ஏற்புடையதாக இல்லை. அரசின் வரவு–செலவுத் திட்டம் சமநிலையில் இருக்க வேண்டுமா, வேண்டாமா என்ற விவாதம் நீண்ட காலமாக நடைபெற்று வருவதாகும். கூர்ந்து நோக்கும் போது, தொடர்புடைய நிதி ஆண்டில், அரசின் பொதுக் கடன் தேவையற்ற பெருஞ்சுமையாக இல்லாதிருந்தால், உருவாக்கப்படும் வரவு–செலவுத் திட்டம் பற்றாக்குறைத் திட்டமாக இருந்தாலும், அதனால் நாட்டிற்குத் தீங்கில்லை என்று தெளியலாம். மேலும், ஓராண்டு என்ற கணக்கிற்கு உண்மையில் எவ்விதப் புனிதத்தன்மையும் இல்லையென்றே சொல்லலாம். காலச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளாமல், அரசு தனது வரவு– செலவுத் திட்டத்தினை ஒவ்வோராண்டும் சமநிலைப்படுத்த வேண்டும் என்பது ஒரு தவறான வாதமாகும். ஓர் ஆண்டு என்பது கணக்கு? அது ஒரு மாதமாகவோ ஒரு வாரமாகவோ ஒரு மணி நேரமாகவோ கூட இருக்கலாம். பொதுவாகப் பார்க்குமிடத்து, இக்காலவரம்பு, நீண்ட காலமாக இருப்பது நல்லது என்று தெரிகிறது. அத்தகைய ஒரு நீண்ட காலத்தில் அரசின் வரவு–செலவுத் திட்டம் சமநிலை பெறுவது போதுமானதாகும். அது ஒவ்வோராண்டும் சமநிலைப்பட வேண்டிய தேவையில்லை. ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளின் கணக்குகளிலிருந்து தெரியவரும். நிதிப் பற்றாக்குறை, அரசின் நிதி நொடிப்பினைக் காட்டுவதாக எடுத்துக் கொள்ளமுடியாது. ஆகவே, ஆக்க நல அரசு ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் பற்றாக்குறை வரவு–செலவுத் திட்டத்தினை மேற்கொள்ளலாம். ஆனால், கவனிக்கப்பட வேண்டியது, நிதிப் பற்றாக்குறை மிகப் பேரளவில் இருக்கக் கூடாது என்பது தான். எச்.எச். அசுகுத் (H.H. Asquith) என்ற பொருளாதார நிபுணர் கூறியுள்ளது போல, அரசு தனது வரவு செலவுத் திட்டத்தினை ஓராண்டுக்கு என்று இல்லாமல் பல ஆண்டுகள் சேர்ந்த ஒரு கால அளவுக்கு (A term of years) உருவாக்குதல் வேண்டும். ஓராண்டு வரவு–செலவுத் திட்டம் என்பது, ஏதோ தன்னளவில் தனித்து நிற்கும் திட்டமன்று. அது அரசின் ஒருங்கிணைந்த நிதிக் கொள்கையின் ஓர் அங்கமேயாகும். நலப் பொருளாதாரம் (Welfare Economy) சார்ந்த நிதிக்கொள்கையினைப் பின்பற்றும் அரசுகள், தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பற்றாக்குறை வரவு–செலவுத் திட்டத்தினை உருவாக்குதல் தவறாகாது. ஆக்கநலம் பேணும் அரசு மேற்கொள்ளும் பல நலத் திட்டங்கள் ஓராண்டிற்கு மேற்பட்ட காலப் பகுதியினை உடையனவாக உள்ளன. கல்வி, பொதுப் பணிகள் நாட்டின் பாதுகாப்புப் போன்றவற்றிற்கான செலவினங்கள் ஆண்டுதோறும் தொடரும் செலவினங்களாகும் (Recurring Expenditure). இத்தகைய செலவினங்கள் தொடரும் செலவுத் திட்டங்கள் (Recurring Budgets) எனப்படும். இவையன்றிப் பிற நீண்ட காலப் பொருளாதாரத் திட்டச் செலவுகள், அரசு, வணிக நிறுவனங்களைச் செயற்படுத்தும் செலவுகள், போக்குவரத்துச் செலவுகள் முதலியன “நீண்ட கால வரவு செலவுத் திட்டங்களின்” (Long–term Budgets) கீழ்வரும். இத்தகைய கருத்துகள் பல்லாண்டுகளாகப் பல நாடுகளில் பேசப்பட்டு வந்த போதிலும், இப்பொழுது பெரும்பாலும் உலகின் எல்லா நாடுகளிலும் ஓராண்டிற்கான “ஆண்டு வரவு–செலவுத் திட்டங்களே” (Annual Budgets) நடைமுறையில் உள்ளன. நமது நாட்டில் அரசின வரவு–செலவுத் திட்டங்கள், இப்பொழுது ஐந்தாண்டு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றும் கருவிகளாகத் தக்க முறையில் செயற்படுகின்றன. சமநிலையற்ற அரசாங்க வரவு–செலவுத் திட்டங்கள் பண வீக்கத்திற்கு வழிகோலும் என்று பொதுவாகச் சொல்லுவதற்கில்லை. அத்தகைய ஒரு நிலையில் தனது நிதிப்பற்றாக் குறையினை ஈடுகட்ட, அரசு பணத்தாளினை (Currency Note) அச்சிடும் தேவை ஏற்படலாம். மற்றும், நாட்டின் மைய வங்கியிடமிருந்து (Central Bank) அரசு கடன் வாங்கும் போதும் ஏற்படலாம். ஆதலின், நிதிப்பற்றாக் குறையினை இயல்பான முறையில் பெறப்படும் கடன்கள் மூலமாகவும் அரசின் சொத்துகளை விற்பதன் மூலமாகவும் ஈடுகட்டும்போது பணவீக்கம் ஏற்படாது. அரசாங்க வரவு–செலவுத் திட்டங்களில் ஏற்படும் நிதிப்பற்றாக் குறையினைப் “பண வாட்டக் கொள்கை” (Deflationary Policy)யைப் பின்பற்றுவதன் மூலமாகவோ ‘நாணய மதிப்பின் மீட்டுயர்வு’ (Reflationary Policy) கொள்கையினைப் பின்பற்றுவதன் மூலமாகவோ போக்கலாம். பணவாட்டக் கொள்கை, செலவினங்களைக் குறைத்து வரவினங்களைப் பெருக்கும். இக்கொள்கையினால் விலைவாசிகளின் வீழ்ச்சி ஏற்படும். நாணய மதிப்பின் மீட்டுயர்வுக் கொள்கையைப் பின்பற்றும்பொழுது விலைவாசிகளின் ஏற்றத்தினால், வாணிகமும் தொழிலும் மிகுதியும் வளரும். அதனால், அரசின் வரவினங்களும் பெருகும். பணவாட்டக் கொள்கையினைப் பின்பற்றுவதால், பல இடர்ப்பாடுகள் ஏற்படலாம். இக்கொள்கையினால் விலைவாசிகளின் வீழ்ச்சி தொடர்ந்து ஏற்படலாம். அது தனிப்பட்டவர்களின் வரவு–செலவுத் திட்டங்களைத் தாக்கும். பொது மக்களிடையே இக்கொள்கைக்கு எதிர்ப்பும் கிளம்பும். ஆனால், நாணய மதிப்பின் மீட்டுயர்வுக் கொள்கை பொருளாதார விரிவாக்கக் (Expansionist Policy) கொள்கையாகும். இக்கொள்கையைப் பின்பற்றுவதால் விலைவாசிகள் ஏற்றமுறும். நாணயப் புழக்கமும் பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும். ஆகையால் பொருளாதாரத்தினைக் கட்டுப்படுத்தும் கொள்கையினைவிட (Restrictionist Policy) விரிவாக்கம் செய்யும் கொள்கையே நலம் பயப்பதாகக் கருதப்படுகின்றது. அரசாங்க வரவு–செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினங்களை ஏற்கும் பொழுது, கருதப்பட வேண்டிய ஓர் அடிப்படைக் கோட்பாட்டினையும் குறிப்பிடுதல் வேண்டும். குறிப்பிட்ட மூலதனச் செலவினால் ஏற்படும் சொத்து ஒரு சில ஆண்டுகளே நிலைக்கக்கூடியதாக இருக்குமானால். பெற்ற கடனையும், உரிய வட்டியையும் அந்தச் சொத்தின் ஆயுட் காலத்துக்குள் ஆண்டுத் தவணைகளில் செலுத்தி வர வகை செய்யவேண்டும். இனி வரும் தலைமுறையினருக்கும் பயன்தரும் சொத்து ஒன்றை ஏற்படுத்தும்போது, அதன் முழுப் பளுவையும் இந்தத் தலைமுறையினர் மீதே சுமத்தக்கூடாது. அரசாங்க வரவு–செலவுத் திட்டக் கோட்பாடுகள் பல்லாண்டுகளாக அரசினராலும், உள்ளாட்சியினராலும், அறக்கட்டளைகளாலும், தனிப்பட்டவர்களாலும், தத்தம் அலுவல்களில் வெற்றியுடன் பின்பற்றப்பட்டவையாகும். அறம் வழுவாப் பொருளியல் பேரறிஞரான திருவள்ளுவரின் திருக்குறளிலும் அத்தகைய அடிப்படையான கோட்பாடுகள் பல அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன.தே.ந. துணை நூல்கள் Dr. Hugh, Dalton., “Principles of Public Finance”, Allied Publishers, New Delhi, 1978. Hicks, Ursula, K., “Development Finances: Planning and Control”, Clarendon Press, Oxford, 1965. Joseph L. Hebert, Ed., “Experiences in Zero–Base Budgeting”, PBI (a Petrocell Book), New York, 1977. Raja J. Chelliah., “Fiscal Policy in Underdeveloped Countries with Special Reference to India”, George Allen and Unwin (India) Private Ltd, Bombay, 1976.