இலங்கை
ilaṅkai
தெற்கு ஆசியாவிலுள்ளதொரு சுதந்திர நாடு.
தெற்கு ஆசியாவிலுள்ளதொரு சுதந்திர நாடு. இது ஒரு தீவு. இதனைச் சிரிலங்கா (SriLanka) என்பர். இது இந்தியக் குடியரசின் தென் கோடியில் அமைந்துள்ளது. இது 1972–ஆம் ஆண்டில் குடியரசாயிற்று.
இலங்கையை மன்னார் வளைகுடாவும் பாக்சு நீர்ப்பிரிவும் இந்தியாவினின்றும் பிரிக்கின்றன. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள இந்நாடு கிழக்கில் வங்காள விரிகுடாவின் பாகத்தையும் கொண்டுள்ளது.
இலங்கை
இலங்கைத் தீவின் பரப்பு 65,610 ச.கி.மீ. ஆகும். மக்கள்தொகை 1,52,50,000 (1982–ஆம் ஆண்டு மதிப்பீடு). இந்நாட்டு மக்கள் பெரும்பாலும் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மத்தியப் பகுதியில் உயர்ந்த மலைகள் உள்ளன. அவை இயற்கை எழிலுக்கு எடுத்துக்காட்டானவை. மலைத்தொடர்கள் ஏறத்தாழ 2700 மீட்டர் உயரமுடையவை. இம்மலைத்தொடர்களின் கிழக்கு, தெற்கு, மேற்கு விளிம்புகளில் குறுகிய கடற்கரைச் சமவெளியைக் காணலாம். வடபகுதியில் பரந்த தாழ்நிலங்கள் உள்ளன. மத்திய மலைப்பகுதிகளிலிருந்து ஆறுகள் அனைத்துத் திக்குகளிலும் பாய்ந்து ஓடி கடலைச் சென்றடைகின்றன.
இலங்கை உலக நடுக்கோட்டிற்கு அண்மையிலுள்ளதால் இதன் தட்பவெப்பநிலை வெப்பமண்டலத்தைச் சார்ந்ததாக உள்ளது. தாழ்நிலப் பகுதிகளில் ஆண்டு முழுவதும் வெப்பம் மிகுந்து காணப்படு- கிறது. வடக்கில் வெப்பநிலை 100° ‘பாரன்கீட்டு’ வரை உயரும். இலங்கை மழைக்குப் பெரும்பாலும் பருவக் காற்றுக்களையே நம்பியுள்ளது. வடகிழக்குப் பருவக்காற்று இலங்கைக்குப் போதுமான மழையைக் கொடுக்கிறது. தென்மேற்குப் பருவ மழையாலும் இத்தீவு பயன்பெறுவதுண்டு.
பொருளாதாரம்
இலங்கையின் பொருளாதாரம் வேளாண்மையின் அடிப்படையில் அமைந்துள்ளது. பணப் பயிர்களான தேயிலை, தேங்காய், இரப்பர் போன்றவை ஏற்றுமதிக்கு ஏற்றவை. எனவே, ஏற்றுமதிக்கேற்ற பொருள்களை உற்பத்தி செய்வதில் இந்நாடு கருத்தாகவுள்ளது. மேற்கூறிய மூன்று பணப் பயிர்களின் விளைச்சலில் ஏறத்தாழ 90 விழுக்காடு ஏற்றுமதியாகின்றன. கோகோ, காபி, இலவங்கப்பட்டை, ஏலம், மிளகு, கிராம்பு, சாதிக்காய், புகையிலை போன்றவையும் ஏற்றுமதியாகின்றன. நெல், பழவகைகள், காய்கறிகள் போன்றவை உள்ளூர்த் தேவைகளுக்கு ஏற்ப விளைவிக்கப்படுகின்றன. அமார்பசு கிராபைட்டு (Amorphous Graphite) என்னும் கனிம உற்பத்தியில் இலங்கை உலகிலேயே முதன்மையான இடத்தைப் பெறுகிறது. இதன் தொடர்பான தொழிலே சிறப்பாக இந்நாட்டில் நடைபெறுகிறது. இந்நாட்டில் கிடைக்கும் இரும்புத்தாதுவைப் பயன்படுத்த முயற்சிகள் நடைபெறவில்லை. வேளாண்மைப் பொருள்களைப் பதப்படுத்தும் தொழில்களின் மையமாகவே இந்நாட்டின் தொழில்கள் உள்ளன. தேயிலை, இரப்பர், கொப்பரை போன்ற பணப்பயிர்கள் இவற்றில் சிறப்பானவையாகும். நுகர்வோருக்குப் பயன்படும் பல்வேறு பொருள்களையும் இங்கு உற்பத்தி செய்கிறார்கள்.
கொழும்பு மாநகரம் இலங்கையின் தலைநகர். இலங்கை நாட்டின் அனைத்து இருப்புப் பாதைத் தொடர்களும் பெரும்பாலான சாலைகளும் கொழும்பில் முடிவடைகின்றன. கொழும்புத் (Columbo) துறைமுகத்தின் வழியாகவே பெரும்பாலான அயல்நாட்டு வாணிகம் நடைபெறுகிறது. சிரீலங்காவின் மக்கள்தொகையில் ஏறத்தாழ 69 விழுக்காடு மக்கள் சிங்களவர்கள்; அவர்கள் ஈனயான புத்தசமயத்தைச் சார்த்தவர்கள். இந்து சமயத்தைச் சார்ந்த தமிழர் ஏறத்தாழ 23 விழுக்காடு மக்கள். எஞ்சியோர் மூர் இன முசுலிம்கள், யூரேசியர்கள், தச்சியர் (The Dutch), போர்ச்சுகீசியத் தொடர்பால் தோன்றியவர்கள் ஆகியோராவர்.
சிங்களமொழி ஆட்சிமொழியாகும், தமிழ் இரண்டாம் மொழியாகும். ஆங்கிலமொழி பரவலாகப் பேசப்படுகிறது. பல்கலைக்கழக மட்டம் வரை கல்வி இலவசம். இந்நாட்டில் படித்தவர் 80 விழுக்காடு மக்களாவர்.
இலங்கைக்கடற்கரை
வரலாறு
தமிழ்நாட்டு மக்கள் இலங்கையை ஈழம் என்றனர். வட மொழியில் இதனைச் சிங்களத் தீவம் என்றார்கள். கிரேக்கரும் உரோமானியரும். ‘தாப்ரோபரனே’ என்றனர். தாமிரபரணி என்பது இதன் பொருள். போர்ச்சுகீசியர் இதனைச் சைலோன் என்றமையால் அதிலிருந்து சிலோன் (Ceylon) என்ற சொல் தோன்றியது. வேடர்கள் (Veddar) என்னும் மக்களே இலங்கையின் பழங்குடிகள். இன்றும் ஏறத்தாழ 3000 வேடர்கள் மலைப்பகுதிகளில் வாழ்கிறார்கள். இலங்கையில் மக்கள் குடியேறிக் கட்டுப்பாடான சமூக வாழ்க்கையை, கி.மு. 6–ஆம் நூற்றாண்டில் தொடங்கியதற்கான சான்றுகள் உள்ளன. இராமாயணக்கதை இந்திய–இலங்கை உறவினைச் சுட்டிக் காட்டுகிறது. வட இந்தியாவிலிருந்து வந்த இந்திய–ஆரிய இனத்தைச் சார்ந்த பழங்குடிமக்கள் இலங்கையின் வடக்கு நடுச் சமவெளிகளிலும், தென்கிழக்குக் கடற்கரையிலும் குடியேறினர். இம்மக்கள் அடுத்த நூற்றாண்டில் இலங்கை வாழ் மக்களுடன் உறவு கொண்டு சிங்கள மக்களாக உருவாயினர்; வட இந்தியாவிலுள்ள வங்கத்தினின்றும் வந்த விசயன் என்பானே இலங்கையின் முதல் அரசனென இலங்கை நூல்கள் கூறுகின்றன. இந்திய–ஆரியப் பேச்சு மொழியுடன் கலந்த சிங்களமொழியும் உருவாக்கப்பட்டது. வேளாண்மையின் அடிப்படையில் எழுந்த அரசியலமைப்பினையும் இவர்கள் உருவாக்கியதுடன், இலங்கையில் வடக்கு நடுப்பகுதியில் ஆற்றுப் பாசன வெளிகளில் தம் நாகரிகத்தையும் நிலைநாட்டினர். அக்காலத்தில் அநுராதபுரம் இவர்களின் தலைநகரமாய்த் திகழ்ந்தது.
இரப்பர்ப் பால் எடுத்தல்
சிங்கள மக்களுக்குப் புத்த சமயத்துடன் நெருங்கிய தொடர்பேற்பட்டு, கி.மு. 3–ஆம் நூற்றாண்டில் பௌத்தர்களாகச் சமயம் மாறியதும் இவ்விணக்கம் மேலும் வலுவடைந்தது. மௌரியப் பேரரசர் அசோகர் பௌத்த சமயத் துறவிகளை அனுப்பிய வரலாற்றைக் கல்வெட்டுகள் புலப்படுத்துகின்றன. சிங்கள மன்னரான தேவனாம்பிய திசா (Devanampia Tissa) என்பவரே முதன் முதலாகப் புத்த சமயத்தை ஏற்றுக் கொண்டவராவர். சிறிது காலத்திற்குள் அனைத்துச் சிங்களவரும் புத்த சமயத்தை மேற்கொண்டனர். புத்த சமயமே சிங்கள மக்களின் நாட்டுச் சமயமாகி அரசர்களின் அரவணைப்பினையும் பொதுமக்களின் ஆதரவினையும் பெற்றது. துட்டகாமனு என்னும் அரசன் கி.மு. 2–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவன். அவன் பல பௌத்தத் தூபிகளை நிறுவினான்.
சிங்களவருக்கும் தென் இந்தியாலில் வாழ்ந்த தமிழர்களுக்கும் இலங்கையில் குடியேற்றங்கள் தொடங்கிய பண்டைக் காலத்திலிருந்தே தொடர்பு ஏற்பட்டது. தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே ஒருசில தமிழ்க் குடியேற்றங்களும் படையெடுப்புகளும் தொடக்க காலத்திலேயே ஏற்பட்டிருந்தபோதிலும், பெரும் எண்ணிக்கையிலான தமிழர் குடியேற்றங்கள் கி.பி. 10–ஆம் நூற்றாண்டு வரை தோன்றவில்லை எனலாம். இடைப்பட்ட காலத்தில் சிங்களவருக்கும் தமிழர் அரசுகளுக்குமிடையே மிக நெருக்கமான அரசியல், பண்பாட்டுத் தொடர்புகள் நிலவின.
தேயிலை பறித்தல்
புத்தர் சிற்பம் – பொலனருவை, இலங்கை
தமிழ் இலக்கியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் தமிழ்நாட்டுச் சேரமன்னரான செங்குட்டுவனுக்கும் இலங்கை மன்னர் முதலாம் கயவாகு என்பாருக்கும் இருந்த உறவு வெளிப்படுகிறது. பத்தினித் தேவிக்குக் கோயில் எடுத்தபோது சேர மன்னனின் அழைப்பினை ஏற்று முதலாம் கயவாகு வந்த செய்தி குறிக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தைக் கணிக்க இச்சந்திப்புப் பயன்படுகிறது.
பின்னர், வட இந்தியாவை ஆண்ட குப்த மன்னர்களுள் ஒருவரான சமுத்திரகுப்தனின் உதவியை மேகவருணன் என்னும் இலங்கையரசன் பெற்றதை வரலாறு காட்டுகிறது. பொலனருவைக்கு அண்மையிலுள்ள சிகிரியா மலையில் இன்றும் 16 ஓவியங்கள் மலைப்பகுதியின் சாரலில் தீட்டப்பட்டுள்ளதைக் கண்டு களிக்கலாம். இவ்வோவியங்களுக்கும் கி.பி. 5–ஆம் நூற்றாண்டில் அசந்தாவின் சில குகைகளுக்குள் தீட்டப்பெற்றுள்ள வண்ண ஓவியங்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள். அந்த நூற்றாண்டிலேயே இந்தியாவுக்கு வருகைபுரிந்த சீனப்பயணிகளுள் ஒருவரான பாகியான் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நடைபெற்ற கடல் வாணிகத்தைப் பற்றித் தம் குறிப்புகளில் எழுதி வைத்துள்ளார்.
பல்லவ மன்னரான முதலாம் நரசிம்மவருமன் இருமுறை கடற்படைகளின் உதவியால் மானவருமன் என்பானை இலங்கை அரியணையில் அமர்த்தினார் என்றும், இப்படையெடுப்புகள் மாமல்லபுரத்திலிருந்து நிகழ்ந்தன வென்றும் யுவான் சுவாங்கு என்னும் பிறிதொரு சீனப்பயணி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையும் சோழப் பேரரசர்களும்
முதலாம் பராந்தகச் சோழ மன்னர் கி.பி. 10–ஆம் நூற்றாண்டில் இலங்கையின்மீது படையெடுத்தாலும் வெற்றி பெறவில்லை. பின்னர், இராசராச சோழன் எட்டுத் திக்குகளிலும் படையெடுத்து ஈழ மண்டலத்தைக் கைப்பற்றினான். தஞ்சாவூர்ப்பெரிய கோவிலைக் கட்டிய இராசராசன் இலங்கையிலிருந்து பல சிற்றூர்களை அக்கோயிலுக்கு மானியமாக வழங்கினான் என்னும் குறிப்பைத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறும். இராசராசன் காலத்தில் அரசனாக இலங்கையை ஆண்டவன் ஐந்தாம் மகிந்தன் என்பதும், அவனே முதலாம் இராசேந்திர சோழனின் ஆட்சிக்காலத்திலும் இலங்கையை ஆண்டான் என்பதும் வரலாற்றால் அறியக் கிடக்கின்றன. மகாவம்சம் என்னும் சிங்கள நூல் இராசராசனின் படையெடுப்பைக் குறிப்பிடவில்லை. இராசராசனின் படையெடுப்பால் இலங்கையின் தொன்மையான தலைநகராயிருந்த அநுராதபுரம் அழிக்கப்பட்டதென்றும், பொலனருவை (Polannaruwa) சோழர்களின் தலைநகராக்கப்பட்டதென்றும் வரலாறு கூறுகிறது. இலங்கையின் வடபகுதி இராசராசனால் கைப்பற்றப்பட்டதாக வரலாற்றாசிரியர் கூறுவர்.
முதவாம் இராசேந்திர சோழன் ஈழமண்டலம் முழுவதையும் வென்றமையை அவருடைய கல்வெட்டுகளிலிருந்து அறியலாம். ஈழமண்டலப் படையெடுப்பு இராசேந்திரன் முடிசூட்டிக் கொண்ட ஐந்தாம் ஆண்டில் (கி.பி. 1017–18) நிகழ்ந்தது. இராசேந்திரன் இலங்கை முழுவதையும் கைப்பற்றியதுடன் இலங்கை அரசனின் மணிமகுடத்தையும், அவனுடைய அரசியார்களின் மணிமகுடங்களையும் கொண்டு வந்தான் என்பதும் சொல்லப்படுகிறது. இராசேந்திர சோழன் இலங்கையைப் பெரும்படையின் உதவியால் வென்றதையும் அதன் பகுதிகளைக் கைப்பற்றியதையும் அரசனின் மணிமகுடம், அரசியார் மணி மகுடம், அரசனின் மகள், செல்வம் ஆகிய அனைத்தையும் கவர்ந்து கொண்டதையும் கரந்தைச் செப்பேடுகள் செப்புகின்றன.
இராசேந்திரனின் மகனான இராசாதிராசனின் காலத்திலும் இலங்கையுடன் போர் மூண்டதாகவும், பின்னர் வந்த வீரராசேந்திரன் காலத்திலும் சோழர்களுக்கும் இலங்கைக்கும் போர் நிகழ்ந்ததாகவும் தெரிகிறது. ஆனால், முதலாம் குலோத்துங்க சோழனின் ஆட்சிக்காலத்தில் விசயபாகு என்னும் இலங்கை இளவரசன் இலங்கையின் சுதந்திரத்தை நிலைநாட்டினான். பின்னர் வந்த பராக்கிரம பாகுவின் ஆட்சிக் காலத்தில் சோழர்களின் ஆட்சி நலியத் தொடங்கியது. பராக்கிரமபாகு தென்னிந்தியாவின் மீது படையெடுத்தான் என்றும் வரலாறு கூறும்.
இலங்கையை மீட்ட சிங்கள் மன்னர்கள் சீரிய பண்பாட்டை உருவாக்கி நிலைநாட்டினர். நெல் உற்பத்தியைப் பெருக்க நீர்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றினர். பொலனருவைக்கண்மையில் பராக்கிரமபாகுவின் பெயரால் பெரும் ஏரியொன்றை வெட்டி நீரைத் தேக்கிப் பாசன வசதியைப் பெருக்கும் திட்டத்தை உருவாக்கினர். இதனை இன்றும் ‘பராக்கிரமபாகு சமுத்திரம்’ என்பர்.
சிங்கள அரசர்கள் புத்த சமயத்திற்குப் பேராதரவு நல்கினார்கள். புத்த சமயத்தைப் பரப்ப இவ்வரசர்கள் பெருந் தொகைகளைச் செலவிட்டனர். பல பௌத்த மடங்கள் கட்டப்பட்டன. அவற்றுள் துறவிகள் தங்கிப் பாலி, வடமொழி, சிங்களமொழி போன்ற மொழிகளில் புத்தசமயத் தத்துவத்தையும், சமய சித்தாந்தங்களையும் கற்றுத் தேர்ந்தனர். இம்மடங்களுக்கு அரசர்கள் பெருமளவில் மானியங்களைக் கொடுத்ததுடன் புத்த சமயக் கோயில்களையும், வழிபாட்டுத் தலங்களையும் அமைத்தார்கள். புத்த சமயத்தின் புகழ் ஓங்கி வளரலாயிற்று. மீண்டும் அநுராதபுரமும் பொலனருவையும் புத்தசமயப் பெருமையங்களாயின. தெற்காசியாவில் புத்த சமயத்தைப் பரப்பும் பணியில் இந்நகரங்கள் அருந்தொண்டாற்றின. இந்நகரங்கள் சுமத்திரா, சாவா (Java), பர்மா, தாய்லாந்து போன்ற பகுதிகளிலிருந்த புத்த சமயக் கழகங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டன. ஒவ்வொரு சிற்றூரிலும் விகாரங்கள் அமைக்கப்பட்டன. புத்த சமயத் துறவிகளுக்கு இவ்விகாரங்களில் வழிபாட்டுத் தலம், சமய விளக்கம் செய்ய மண்டபம், வாழுமிடம் போன்றவையும் அமைக்கப்பட்டன. புத்த சமயத் துறவிகள் நல்லாசிரியர்களாகவும், அறங் காவலர்களாகவும் இருந்து பொதுமக்களுக்கு வழிகாட்டினர்; பலர் அரசர்களின் அறிவுரையாளர்களாயும், புத்தசமயத்தைக் காக்கும் காவலர்களாயும் விளங்கினர்.
சிங்களவர்களின் பண்பாடு கி.பி. 13–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நலிவடையத் தொடங்கியது. தென் இந்தியாவிலிருந்து அடிக்கடி தாக்குதல்கள் கி.பி. 11–ஆம் நூற்றாண்டிலிருந்து நிகழ்ந்தன. சோழமன்னர்கள் இலங்கைத் தீவு முழுவதையும் கைப்பற்றித் தம் பேரரசுப் பகுதியாக்கிக் கொண்டனர். கி.பி. 11–ஆம் நூற்றாண்டின் இறுதியில் சிங்களவர் தம் ஆட்சியை மீட்டனரெனினும், தென் இந்தியப் படையெடுப்புகள் தொடர்ந்து நிகழ்ந்தமையால் நாட்டின் வருமானம் வீணாயிற்று. தென் இந்தியப் படையெடுப்பாளர்கள் இலங்கையிலேயே குடியேறி, சிங்கள அரசிளங்குமரிகளை மணந்துகொண்டு நிலையாகத் தங்கலாயினர். அரண்மனையில் அவர்களின் செல்வாக்கும் வலிமையும் ஓங்கியிருந்தமையால், அரியணையைக் கைப்பற்றி ஆட்சியையே தம் கட்டுப்பாட்டின்கீழ்க் கொணர்ந்தனர். சிங்களவர்கள் தெற்கிலும் தென்மேற்கிலும், தாம் குடியேறிய பகுதிகளில் சிறுசிறு அரசியல் மையங்களை நிலைநாட்டிக் கொண்டனர். தலைநகரங்களும் அடிக்கடி மாறலாயின. குருணகேலா (Kurunagale), கம்போலா (Campola), இரயிகாமா (Rayigama), கோட்டி (Katte), கண்டி (Kandy) போன்ற நகரங்கள் தலைநகரங்களாயின. வடக்கில் தமிழர்கள் தம் சொந்த அரசினை, கி.பி. 14–ஆம் நூற்றாண்டில் நிலைநாட்டினர். அங்கு ஆட்சி செய்யத் தொடங்கிய அரச மரபினர் தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள். யாழ்ப்பாணம் (Jaffna) அவர்களின் தலைநகராயிற்று.
அரசியலில் ஏற்பட்ட கொந்தளிப்புகளும், நிலையற்ற தன்மைகளும் வடக்கு, நடுச் சமவெளிகளில் நடைபெற்ற வேளாண்மை முறையை மிகுதியும் பாதித்தன. நீர்ப்பாசனத் திட்டங்களைத் தூர் எடுத்துப் பழுதுபார்த்துக் காப்பாற்றும் அளவுக்கு அரசு திறனற்றதாய்க் காணப்பட்டது. அடிக்கடி நடைபெற்ற போர்களாலும் இத்திட்டங்கள் நாசமாக்கப்பட்டன. இதன் விளைவாகச் சமவெளிகளுக்குப் போதுமான பாசனவசதி குறைந்தமையால் உற்பத்தியும் நலிவடையலாயிற்று. வாழும் வகை தேடிய இலங்கைவாழ் மக்கள் தாம் வாழ்ந்த பகுதிகளை விட்டு, மழைபெறும் பகுதிகளான தெற்கிலும், தென்மேற்கிலும் குடியேறலாயினர். இரு நூற்றாண்டுகளுக்குள், செழுமையால் வளங்கொழித்த வடபாகத்து வயல்கள் காடுகளாக மாறின; நீர் தேங்கிக் கிடந்த சதுப்பு நிலங்கள் நோய் பரப்பும் களங்களாயின.
சிங்களவர்கள் பருவக்காற்று மழையைப் பெறும் தென்பாகத்திலும், தென்மேற்குப் பகுதியிலும், நடு மேட்டு நிலங்களிலும் குடியேறி வாழ்ந்தனர். இப்பகுதிகளில் நிலவிய தட்பவெப்பநிலை, நிலவியல் போன்றவை வடக்கு நடுச்சமவெளிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தன. எனவே, வேறு வகையான சாகுபடி முறைகளைக் கைக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. நெல் சாகுபடி தொடர்ந்து செய்யப்பட்டாலும், அதுமுந்தைய நிலையைப் போன்று உற்பத்தி செய்யப்பட முடியவில்லை. ஏனைய உணவுப் பயிர்களையும் பயிரிட்டு நெல் விளைச்சலை ஈடுகட்டலாயினர். இத்தருணத்தில் நடைபெற்ற வேளாண்மை உயிர்வாழப் போதுமான அளவில் தான் இருந்தது. வாணிகம் அரசமரபினரின் முற்றுரிமையாய் இருந்தது. ஏனெனில், அதன்மூலம் தான் அவர்களுக்குத் தேவையான வருமானம் வந்தது. அப்போது இலவங்கப் பட்டை, மிளகு, ஏலம் போன்ற நறுமணப் பொருள்கள் வாணிகப் பொருள்களாயின. அவ்வாணிகத்தை, முன்னின்று நடத்திய அராபியர்கள் நேரடியாக அரசு அலுவலர்களுடன் செய்து கொண்டனர்.
வலிமை குறைந்த அரசாட்சியாலும், வறுமையால் வாட்டமுற்ற மக்களாலும், பண்பாட்டு மரபுகளைக் காக்கும் திறன் குறைந்தமையால், பண்பாட்டுத் துறையில் சாதனைகள் மிகவும் குறைந்து மெலிந்தன. சமய நிறுவனங்களுக்கு முன்னர் வெகுவாக வழங்கிய மானியத்தைப் போன்று அரசர்களால் அப்போது மானியம் வழங்க இயலவில்லை. புத்தசமயம் தொடர்ந்து மக்களால் போற்றப்பட்டாலும், அக்கால கட்டத்தில் எழுப்பப் பெற்ற வழிபாட்டு இடங்கள் முந்தைய காலத்தைப் போன்று பெரியவையாக அமையவில்லை. புத்த சமய வழி- பாடு இந்து சமயத்தின் தாக்கத்திற்காளாகியது. சிங்கள மொழியும் இலக்கியமும் தமிழ்மொழியின் செல்வாக்கிற்கு ஆட்படலாயின. இலங்கையின் வட பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் இந்துசமயம் வலுவாக நிலைநாட்டப்படலாயிற்று. இப்பகுதிகளில் தான் இந்தியாவிலிருந்து வந்த மக்கள் குடியேறி வாழ்ந்தனர். இந்து சமயக் கோயில்கள் கட்டப்பட்டதுடன், பார்ப்பனக் குருக்கள் சமயச் சடங்குகளை நிறைவேற்றுவான் வேண்டித் தென் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டனர்.
இலங்கையில் முதன்முதலாகக் காலடி வைத்த அந்நியர் போர்ச்சுகீசியரேயாவர். அவர்கள் கி.பி. 1505 ஆம் ஆண்டில் கொழும்பில் கரையிறங்கினார்கள்; இலங்கையின் வாணிகச் சிறப்பையும் அது அமைந்துள்ள இடத்தின் மதிப்பையும் உணர்ந்தார்கள், போர்ச்சுகீசியர் சிங்கள அரசருடன் கி.பி. 1518–ஆம் ஆண்டில் கோட்டியில் (Kotte) உடன்படிக்கை செய்துகொண்டார்கள். கோட்டி அரசு சிதறும் நிலையிலிருந்ததாலும், உள்நாட்டுப் போர்களாலும் இலங்கையில் நிலவிய அரசியல் சூழ்நிலை தங்களுக்குத் துணையாக இருப்பதை அறிந்த போர்ச்சுகீசியர் மேற்குக் கடற்கரையில் தம் அரசியல் அதிகாரத்தை விரிவாக்கிக் கொண்டனர். தங்களிடம் இருந்த உயர்ந்த கப்பற்படை, இராணுவ நுட்பங்கள் போன்றவற்றின் துணையால் போர்ச்சுகீசியர், சிங்களவர்களின் எதிர்ப்பை முறியடித்துவிட்டு அவர்களின் அரசை கி.பி. 1597–ஆம் ஆண்டு தம் அரசுடன் இணைத்துக் கொண்டனர். கண்டி ஒன்றில் மட்டும் சிங்களவர்களின் சுதந்திர ஆட்சி நிலவியது. கண்டியையும் கவர்ந்துகொள்ளப் போர்ச்சுகீசியர் கி.பி. 17–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சில முயற்சிகளைச் செய்தனர்; மத்திய மேட்டு நிலங்களிலும் தம் ஆட்சியைப் பரப்ப முயன்றனர். ஆனால், இம்முயற்சியில், அவர்கள் தோற்றார்கள். கண்டியின் அமைப்பும் கண்டி சிங்கள மன்னரின் எதிர்ப்பும் இம்முயற்சியைத் தோற்கடித்தன. ஆனால், கி.பி. 1619–ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலிருந்த தமிழர் அரசைப் போர்ச்சுகீசியர் கைப்பற்றிக் கொண்டனர். எனவே, மத்திய மேட்டு நிலங்களையும், கிழக்குக் கடற்கரையிலிருந்த சில பகுதிகளையும் தவிர்த்து, இலங்கையின் ஏனைய பகுதிகள் போர்ச்சுகீசியரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன.
போர்ச்சுகீசியர் கோவாவைத் தம் தலைமையிடமாகக் கொண்டு அரசப் பேராளர் ஒருவரின் மூலம் ஆட்சி செய்தனர். இலங்கையைக் கோவாவின் அரசப் பேராளருக்குக் கட்டுப்பட்ட இராணுவ அதிகாரி ஒருவர் ஆண்டுவந்தார். போர்ச்சுகீசிய அலுவலர்கள் பெரும்பதவிகளில் அமர்த்தப்பட்டனர். தாழ்நிலைப் பணிகளுக்குச் சிங்களவரும் தமிழரும் அமர்த்தப்பட்டார்கள். அவர்கள் போர்ச்சுகீசியரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களாயிருத்தல் வேண்டும். சிங்களவர் நிலமானிய அமைப்பு முறையில் ஆட்சி செய்த அமைப்பினைப் போர்ச்சுகீசியர்கள் ஏற்றுக்கொண்டதுடன், வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளவும் அதனைப் பயன்படுத்திக்கொண்டனர். சாதிமுறையையும் அவர்கள் காத்தனர். சாதிகள் அரசுக்குச் செலுத்த வேண்டிய கடமைகளும் வரையறுக்கப்பட்டன. இலவங்கப் பட்டை, யானை போன்றவற்றின் வாணிகம் அரசின் முற்றுரிமையாக்கப்பட்டன. போர்ச்சுகீசியர் மிளகு, பாக்குக்கொட்டை வாணிகத்தில் கண்ணுங்கருத்துமாய்க் கவனம் செலுத்தினர்.
போர்ச்சுகீசியரின் ஆட்சியில் கத்தோலிக்கர்களின் சமயக் கொள்கைப் பரப்பு மிகுதியாக இருந்தது. பிரான்சிசுகன், ‘செசுயூட்டு’, ‘தொமினிகள்’, ‘அகசுடீனியர்’ போன்ற கத்தோலிக்க இயக்கங்கள் இலங்கையில் நிலைநாட்டப்பட்டன. போர்ச்சுகீசிய நிருவாகம் அவர்களுக்குத் தேவையான பொருளுதவியைச் செய்தது. பௌத்த, இந்து சமயங்களின் கோயில் நிலங்கள் பறிக்கப்பட்டுக் கத்தோலிக்கப் பாதிரிகளுக்குக் கொடுக்கப்பட்டன. சிங்கள நிலக்கிழார்கள் கிறித்தவர்களாக மதம் மாற்றப்பட்டுப், போர்ச்சுகீசியப் பெயர்களை ஞானத்தானத்திற்குப் பின்னர்ச் சூட்டிக் கொண்டனர். மேற்கு, வடக்குக் கடற்கரைகளில் வாழ்ந்த பரதவ இனத்தவர் அனைவரும் மதமாற்றம் செய்யப்பட்டனர். கத்தோலிக்கத் திருச்சபைகளும் பள்ளிகளும் ஆங்காங்கே தோற்றுவிக்கப்பட்டன. மேல் சாதிக்காரர்கள் போர்ச்சுகீசிய மொழியைப் பயன்படுத்துவதில் திறமைமிக்கவர்களாயினர்.
தச்சியக்கிழக்கிந்திய வாணிகக் குழுவினர் கி.பி. 17–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இலங்கையில் இலவங்கப்பட்டை வாணிகத்தில் அக்கறை காட்டினர். இலங்கை உலகப் படத்தில் அமைந்திருந்த முறையும் அவர்களைக் கவர்ந்திழுத்தது. தச்சியர் கி.பி. 1638–ஆம் ஆண்டில் கண்டி அரசருடன் உடன்படிக்கை செய்துகொண்டு, போர்ச்சுகீசியரை இலங்கையை விட்டு விரட்ட உறுதிபூண்டனர். அடுத்தடுத்து கி.பி. 1638க்கும் 1658க்கும் இடையில் நிகழ்ந்த கடற் சண்டைகளாலும், இராணுவ மோதல்களாலும் கண்டி அரசர்களின் உறுதுணையாலும் போர்ச்சுகீசியர் வசமிருந்த அனைத்துப் பகுதிகளையும் தச்சியர் வென்றனர். போர்ச்சுகீசியர் விரட்டப்பட்டபோதிலும், விரைவில் தச்சியரும் கண்டியரும் தாம் வென்ற பகுதிகள் குறித்துச் சச்சரவிட்டுக் கொண்டனர், கடற்கரைப் பகுதிகளில் தம் ஆட்சியை நிலைநாட்டத் தச்சியர் (The Dutch) முயன்றனர். கண்டியர் மலைப் பகுதிகளிலேயே நிலைக்க வேண்டியவராயினர்.
தச்சியர் இலங்கையை ஆளுநர் ஒருவர் மூலமும், கொழும்பில் தங்கி வாழ்ந்த குழுவொன்றின் மூலமும் ஆண்டனர். சாவாவின் தலைநகரான பட்டேவியாவில் இருந்த அரசப் பேராளருக்கும் அவருடைய நிருவாகக் குழுவுக்கும் இலங்கையின் நிருவாகம் கட்டுப்படுத்தப்பட்டது. ஆசியாவில் தச்சுப் பேரரசின் தலைமையிடம் பட்டேவியா (Batavia) வேயாகும். யாழ்ப்பாணத்திலும் (Jaffna) காலி (Galle)யிலும் இருந்துகொண்டு படைத்தலைவர்கள் முறையே வடபகுதியையும் தென் பகுதியையும் ஆட்சி செய்தனர். அவர்கள் ஆளுநருக்குக் கட்டுப்பட்டவர்கள். போர்ச்சுகீசியர்களைப் போன்று தச்சியரும் பெரும் பொறுப்புகளைத் தச்சியருக்கும் தாழ்நிலைப் பதவிகளைச் சிங்களவருக்கும் தமிழருக்கும் கொடுத்தனர். அவர்கள் தச்சியரின் நம்பிக்கைக்கு உரியவர்களாயிருத்தல் வேண்டும். நிலமானியத்திலும், அதன் அடிப்படையில் எழுந்த பணியமைப்புகளிலும் தச்சியரும் போர்ச்சுகீசியரையே பின்பற்றினர். தம் வாணிகத்தைப் பெருக்கிக் கொள்ள, எந்தெந்தச் சாதி மக்கள் பயன்படுவரோ அவரவர்களைப் பயன்படுத்திக் கொண்டனர். பல வாணிகப் பொருள்களின் முற்றுரிமையைத் தம்மகத்தே கொண்டு இலங்கையின் வாணிகம் முழுவதையும் தம் கட்டுப்பாட்டிற்குள் இருந்த துறைமுகங்களின் வழியாகவே இயக்கினர். இவ்வகையாகத் தொன்றுதொட்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே நிகழ்ந்த வாணிகத்தில் குறுக்கிடவே, வாணிகம் நலிந்ததால் இலங்கை பற்றாக்குறை நாடாக மாறியது. தச்சியர் காப்பித் தோட்டங்களை ஏற்படுத்திப் பணப் பயிர்களுக்கு ஊக்கமளித்தனர். மேலும், மிளகு, இலவங்கப்பட்டை, ஏலம் போன்ற பொருள்களும் விளைவிக்கப்பட்டன.
தச்சியர் இலங்கையில் நன்கு உருவாக்கப்பெற்ற நீதிமுறையை நிலைநாட்டினர். அவர்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், காலி போன்ற இடங்களில் மூன்று தலைமை நீதிமன்றங்களை அமைத்தனர். சிற்றூர்களில் வாழும் மக்களின் உள்ளூர் வழக்குகளை விசாரிக்க ‘இலாண்டு ராடு’ (Land Raad) எனப்படும் கிராமப்புற நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. உரோமானிய–தச்சியச் சட்டம் புகுத்தப்பட்டது. தமிழர் சட்டங்கள் தொகுக்கப்பட்டன. இச்சட்டங்கள் வடக்குப் பகுதியிலிருந்த நீதிமன்றங்களில் பயன்படுத்தப்பட்டன. தச்சியர் மறுப்புரையாளர் (Protestant) சமயத்தைப் புகுத்தினர். போர்ச்சுகீசியரால் நிலைநாட்டப் பெற்றிருந்த கத்தோலிக்கத் திருச்சபைகள் மறுப்புரையாளர் திருச்சபைகளாக மாற்றப்பட்டன. இத்திருச்சபைகள் சிங்கள மொழியிலும், தமிழிலும் தொடக்கக் கல்வியைப் போதித்தன.
தச்சியரையடுத்து ஆங்கிலேயர் இலங்கைக்கு வந்தனர். ஆங்கிலக் கிழக்கிந்திய வாணிகக்குழு கி.பி. 1796–ஆம் ஆண்டு இலங்கையின் கடல் வாணிகத்தைக் கைப்பற்றியது. இத்தருணத்தில் ஐரோப்பாவில் பிரெஞ்சுப் புரட்சியால் தோன்றிய போர்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. சென்னையிலிருந்து கொண்டு வணிகக் குழுவின் நிருவாகத்தை நடத்தி வந்த ஆங்கில அலுவலர்கள், இலங்கை வாழ் சிங்களவரைத் தாறுமாறாக நடத்தியதுடன் மரபுவழியாக இயங்கிவந்த இயக்கங்களையும் மதிக்கத் தவறினார்கள். எனவே, ஆங்கிலேயர் இலங்கையைக் கிழக்கிந்திய வணிகக் குழுவின் நிருவாகத்திலிருந்து விடுவித்து, ஆங்கில அரசின் நேரடி ஆட்சியை, கி.பி. 1802–ஆம் ஆண்டில் நிலைநாட்டினர். இலங்கை, இங்கிலாந்துப் பேரரசின் நேராட்சிப் பகுதியாக (Crown Colony) ஆகியது. ஆங்கிலேயர்கள் கண்டி அரசரையும் கவிழ்த்துவிட்டு கி.பி. 1818–ஆம் ஆண்டளவில் கண்டிப் பகுதியையும் தம் அரசுடன் இணைத்துக் கொண்டனர். அதனால், இலங்கைத் தீவு முழுதும் மேலைநாட்டு அயலாராட்சியின் கீழ் வந்தது. ஆங்கிலேயர் பல சீர்திருத்தங்களைச் செய்தனர். இலங்கை முழுவதும் செய்திப் போக்குவரத்து வசதிகள் பெருகின. நாடு முழுவதிலும் ஒரே நிருவாக அமைப்பு நாட்டப்பெற்றது. தொண்டின் அடிப்படையில் நிலை நாட்டப்பெற்றிருந்த மானிய முறைகளும், அனைத்து முற்றுரிமைகளும், பொருள்களின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்திய அனைத்துத் தடைகளும், மக்கள் போக்குவரத்தைக் கட்டுப்படுத்திய தடைகளும் நீக்கப்பட்டன. இதன் விளைவாக ஆங்கிலேயர் இலங்கையில் முதலீடு செய்ய நல்வாய்ப்புகள் கிட்டின. தொழில் முனைவோருக்கு நிலம் மிகுந்த அளவில் வழங்கப்பட்டது. பணப் பயிர்களை விளைவிக்க கி.பி. 1830–ஆம் ஆண்டு முதல் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன. இலங்கையின் மத்திய மேட்டு நிலப்பகுதிகள் இத்தகைய பணப்பயிர்களை விளைவிக்கும் தோட்டங்களாக்கப்பட்டன. தொடக்கத்தில் காப்பியும் பின்னர்த் தேயிலையும் இரப்பரும் பயிராக்கப்பட்டன. இத்தகைய தோட்டங்களில் சிங்களவர் கூலிவேலை செய்ய விரும்பாதவர்களாய் இருந்தமையால், தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் தென்னிந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டனர். தேயிலை, இரப்பர் உற்பத்தி கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் இலங்கையின் சிறப்பான ஏற்றுமதிப் பொருள்களாயின. பின்னர்த் தேங்காயும், கொப்பரையும் கூட ஏற்றுமதிப் பொருள்களாயின. தோட்டத் தொழில் பெருக்கத்தினால் போக்குவரத்து, வங்கி, துறைமுகம் ஆகியவை வளர்ச்சிபெற்றன.
கோல்புரூக்குக் குழு (Colebrooke Commission) கி.பி. 1833–ஆம் ஆண்டில் பல முற்போக்குச் சீர் திருத்தங்களுக்கு வழிவகுத்தது. அவற்றுள் சிறப்பாகக் கருதப்படுவது இலங்கைக்கென தனித்ததொரு சட்டமன்றத்தையும், நிருவாகக் குழுவையும் ஏற்படுத்தியதுதான். ஆங்கிலக் கல்லியும் புகுத்தப்பட்டது. ஆங்கிலம் கற்ற சிங்களவர் சீரிய அமைப்புகளை உருவாக்கிக் கொண்டு செல்வாக்குப் பெற்றவர்களாகி அரசியலையும் பாதிக்கும் வண்ணம் செயற்பட்டார்கள், அத்தகையோர் சட்டமன்ற மேலவைக்கும், தல ஆட்சி அமைப்புகளுக்கும் நியமனம் பெற்று அரசு அதிகாரத்தைப் பங்கு போட்டுக் கொண்டனர். சட்டமன்றத் தேர்தல் இலங்கையில் 1920–ஆம் ஆண்டிலும், பிரதிநிதித்துவ அரசு 1924–இலும் செயற்படத் தொடங்கின. சட்டமன்றத்தின் பெரும்பாலான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையும் தொடங்கப்பட்டது. வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்னும் முறை 1931–ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது. தான்மோர் (Danmore) பிரபுவின் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புத் திட்டத்தின்படி ஓரளவு தன்னாட்சியும் வழங்கப்பட்டது. உள்நாட்டு விவகாரங்களைக் கட்டுப்படுத்தி ஆட்சி நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் குழுவொன்று நிருவாகத்தைக் கண்காணிக்கவும் செய்தது. ஆளுநர் அனைத்து நிருவாகங்களுக்கும் பொறுப்பேற்றார். நிதி, சட்டம், உள்ளாட்சி (Civil Service) போன்ற துறைகளைப் பொறுப்பாகக் கவனிகக மூன்று ஆங்கில அலுவலர்கள் அமர்த்தப்பட்டனர்.
தேசியத் தலைவர்களுக்கும், ஆங்கில அரசுப் பேராளர்களுக்குமிடையே அரசியலமைப்பினை மாற்ற நேர்ந்த காலங்களில் எல்லாம் நல்லுறவும் இணக்கமும் ஏற்பட்டமையால், சுதந்திரத்திற்காகப் பேரியக்கம் ஒன்றும் இலங்கையில் தோன்றவில்லை. எனினும், இலங்கை மக்கள் 1919–ஆம் ஆண்டில் இலங்கைத் தேசிய காங்கிரசு (Ceylon National Congress) என்னும் இயக்கத்தை நிறுவினர். ஆனால், சில ஆண்டுகளிலேயே இவ்வியக்கம் மறைந்து போய்விட்டது; சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்குமிடையே எழுந்த மனக்கசப்புத்தான் இதற்குக் காரணம். தான்மோர் அரசியல் அமைப்புத் திட்டம் நன்றாகச் செயற்பட்டதாலும், இலங்கை அமைச்சர்கள் இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்துக்குக் கொடுத்த ஒத்துழைப்பாலும், இலங்கை சுதந்திரத்திற்குத் தகுதியானதென ஆங்கிலேயர் எண்ணினர். இரண்டாம் உலகப் போரின் முடிவில் இலங்கை அரசியல் தலைவர்களும் சுதந்திரம் வேண்டுமெனக் கோரினர். உள் நாட்டில் முழுமையான தன்னாட்சியை வழங்கலாம் என 1945–ஆம் ஆண்டில் கூட்டப்பெற்ற அரசியலமைப்புக் குழுவின் பரிந்துரையின்பேரில், பாதுகாப்புத் துறை, வெளிநாட்டுறவுத்துறை நீங்கலாக – ஏனையவை இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டன. மேற்கூறப்பட்ட இருதுறைகளையும் ஆங்கில அரசே கவனித்துக் கொண்டது, விரைவில் இத்தடைகளும் நீக்கப்பெற்று 1947–ஆம் ஆண்டு இலங்கைச் சுதந்திரச் சட்டத்தின்படி இலங்கை சுதந்திர தொமினியனாக்கப்பட்டது. பின்னர், 1948–பிப்பிரவரி 4–ஆம் நாள் இலங்கை காமன்வெல்த்து நாடுகளுள் ஒன்றானது.
இலங்கையின் சுதந்திர அரசியலமைப்பு இங்கிலாந்து அரசியல் அமைப்பை எடுத்துக்காட்டாகக் கொண்டது. நாட்டின் தலைவராக அரசப் பேராளர் பெயரளவுக்குப் பொறுப்பேற்றார். அரசுப் பேராளர் இங்கிலாந்து அரசரால் நியமிக்கப் பெற்றார். நிருவாக அதிகாரம் தலைமை அமைச்சரிடமும், அவருடைய அமைச்சரவையினரிடமும் ஒப்படைக்கப்பட்டது. தலைமை அமைச்சரும், அமைச்சர்களும் ஈரவைச் சட்டமன்றத்திற்குப் பொறுப்பானவர்கள்.
தான் இசுடீபன் சேனநாயகே (Don Stephen Senanayake) என்பார் முதல் தலைமை அமைச்சரானார். பல்வேறு வகுப்புகளின் தலைவர்களையும், நலன்களையும் கருத்திற்கொண்டு சேனநாயகே ஐக்கிய தேசிய கட்சியை (United National Party) உருவாக்கினார். முற்போக்குக் கருத்துகளின் அடிப்படையில் இக்கட்சிக்கு ஒரு திட்டம் ஏற்படுத்திக் கொடுத்தார். தான் சேனநாயகே 1952–இல் காலமானதும், அவர் தம் மகன் தட்லி சேனநாயகே (Dudley Senanayake) தலைமை அமைச்சரானார். இரண்டாண்டுகளுக்குப் பின்னர் அவர் பதவி விலகினார். அவர்தம் நெருங்கிய உறவினரான சர் சான் கொத்தலவேலா (Sir John Kotelawela) என்பார் தலைமை அமைச்சரானார். அரசியல் பொருளாதார அதிகாரங்கள், ஆங்கிலம் கற்ற முதலாளித்துவ முனைவோர், நிலக்கிழார்கள் போன்ற சிறு குழுவொன்றிடம் இருந்தன. இலங்கா சம சமாசக் கட்சியும் (Lanka Sama Samaja Party), பொதுவுடைமைக் கட்சியும் எதிர்க்கட்சிகளாயின. சாலமொன் வெசுட்டு இரிட்சுவே தியசு பண்டாரநாயகே (Solomon West Ridgeway Dias Bandaranaike) தல ஆட்சி அமைச்சராயிருந்தவர் பதவியைத் துறந்துவிட்டு புதுக் கட்சியொன்றை 1951–ஆம் ஆண்டில் உருவாக்கினார். இதனைச் சிரீலங்கா சுதந்திரக் கட்சி [Sri Lanka Freedom Party-SBFP] என்பர். இக்கட்சி நாற்றுக்கு நூறு தேசிய வாதிகளின்கட்சி; பரம்பரைப் பண்பாட்டைப் பேணி இலங்கையின் அரசியலிலும் பண்பாட்டு வாழ்விலும் இருந்த மேலை நாட்டுச் செல்வாக்கை ஒழிக்க வேண்டுமென இக்கட்சி பாடுபட்டது. இக்கட்சி 1956–ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றுக் கூட்டணி அமைச்சரவையொன்றை நிலைநாட்டியது. பண்டார நாயகே தலைமை அமைச்சரானார். இக்கூட்டணி அரசினை மக்கள் ஐக்கிய முன்னணி என்றனர்.
மக்கள் ஐக்கிய முன்னணி பல சீர்திருத்தங்களைச் செய்தது. ஆங்கிலத்திற்கு மாறாகச் சிங்கள மொழி ஆட்சிமொழியாக்கப்பட்டது. புத்த சமய–சிங்களப் பண்பாட்டு நடவடிக்கைகளுக்கு இவ்வமைச்சரவை பேராதரவு நல்கியது. பேருந்துப் போக்குவரத்தும், கொழும்புத்துறைமுகமும் நாட்டுடைமையாக்கப்பட்டன.
மக்கள் ஐக்கிய முன்னணியின் சிங்களமொழி ஒன்றே ஆட்சிமொழி என்னும் கொள்கையைத் தமிழர்கள் வன்மையாக எதிர்த்தனர். தமிழர்கள் கூட்டாட்சிக் கட்சி (Federal Party)யை உருவாக்கித் தமிழுக்கும் ஆட்சிமொழித் தகுதியைக் கொடுக்க வேண்டுமெனக் கிளர்ச்சி செய்தனர். இதனால், 1958–இல் வகுப்புக் கலவரம் மூண்டது. தொழிலாளர் நெருக்கடியும் புத்த சமயத்தார்களிடையே ஏற்பட்ட மோதலும் பண்டாரநாயகேவின் கொலையில் முடிவுற்றன.
தகாநாயகே (Dahanayake) என்பார் தலைமை அமைச்சரானார். அடுத்து வந்த தேர்தலில் தட்லி சேனநாயகே வெற்றிபெற்றுத் தனிப் பெருங்கட்சியின் தலைவரானார். மீண்டும் சில மாதங்களில் வந்த தேர்தலில் பண்டார நாயகேவின் மனைவி திருமதி சிரிவாமோ பண்டாரநாயகே தலைமை அமைச்சரானார். பொதுவுடைமைக் கட்சியுடன் திருமதி பண்டாரநாயகே கொண்டிருந்த உறவினால் கட்சியில் பிளவேற்பட்டது. மீண்டும் 1965–இல் நடைபெற்ற தேர்தலில் தட்லி சேனநாயகே பெரும் வெற்றி பெற்றுத் தலைமை அமைச்சரானார். தமிழுக்கும் தமிழருக்கும் இவர் காட்டிய ஆதரவால் குழப்பம் அடங்கிய சூழ்நிலை தோன்றியது. சிரீலங்கா சுதந்திரக் கட்சியும், மார்க்சியக் கட்சியும் ஒன்றாக இணைந்து ஐக்கிய இடதுசாரி முன்னணியை (United Left Front–ULF) உருவாக்கின. மீண்டும் திருமதி பண்டார நாயகே 1970–இல் தலைமை அமைச்சரானார்.
திருமதி பண்டாரநாயகே பல சீர்திருத்தங்களைக் கொணர்ந்தார். நிலச் சீர்திருத்தங்கள் 1972–இல் கொண்டுவரப்பட்டன. அயல்நாட்டினருக்குச் சொந்தமாயிருந்த தோட்டத் தொழில்களை 1975–இல் இவர் நாட்டுடைமையாக்கினார். புதிய அரசியல் அமைப்புத் திட்டம் ஒன்று 1972–மே மாதம் 22–ஆம் நாள் செயற்பட்டபோது சிரீலங்கா சமதருமக் குடியரசு நாடாகியது (Socialist Republic of Sri Lanka). திருமதி பண்டாரநாயகே தலைமை அமைச்சரானார். கடைசி அரசப் பேராளராயிருந்த கோபல்லவா (William Gopallawa) என்பார் குடியரசுத் தலைவரானார்.
கூட்டணித் தலைவர்களுக்கிடையே மூண்ட கருத்து வேறுபாடுகளினால், கட்சி பிளவுற்றது. பெரும்பான்மை பலத்தை இழந்த திருமதி பண்டார நாயகே 1977–சூலை மாதத்தில் தேர்தலுக்கு ஆணையிட்டார். பின்னர் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி (UNO) பெரும்பான்மையான இடங்களை வென்று கைக்கொண்டது. அரசியல் அமைப்புச் சட்டம் 1977 அக்டோபரில் திருத்தப் பெற்று, குடியரசுத் தலைவரே நிருவாகத் துறையின் தலைவராகவும், நாட்டின் தலைவராகவும் இருக்க வேண்டும் என்று முடிவாயிற்று. சூலியசு செயவர்த்தனே (Julius Jayawardene) என்பார் இப்புதிய பொறுப்பை 1978 பிப்பிரவரி மாதத்தில் ஐக்கிய தேசிய கட்சிபின் தலைவர் என்ற பொறுப்புடன் ஆறு ஆண்டுக் காலத்திற்கு ஏற்றுள்ளார்.
இலங்கைத் தமிழர் சிக்கல்
தமிழர்கள் பெரும்பான்மையாகவுள்ள வடக்கு, கிழக்கு மாநிலங்களை இணைத்துத் தனித்தமிழ் ஈழம் வேண்டுமென்னும் கோரிக்கையால் இலங்கையில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது. இந்திய அரசு தமிழர் இனச் சிக்கலைத் தீர்க்க அரும்பாடுபட்டு வருகிறது. சிரீலங்கா இராணுவத்திற்கும், ஈழ விடுதலைப் புலிகள் என்னும் தமிழர் அமைப்புக்குமிடையே தொடர்ந்து மோதல்கள் நீடித்து வருகின்றன.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 306)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hh7ggdd4/
தமிழ்“இலங்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/hh7ggdd4/APA
Oliyon Research. (2026). இலங்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hh7ggdd4/MLA
"இலங்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/hh7ggdd4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment