நூற்பும், நெசவும் இன்றி இழையை, நேரடியாகத் துணியாக மாற்றித் தயாரிக்கப் படும் நெய்யாத் துணி (Non-woven fabric) என்றும், உருவாக்கப் பட்ட துணி (formed fabric) என்றும் குறிப்பிடப்படும். பொருள்களின் ஆய்வுக்கான அமெரிக்க நிறுவனம் (American Society for Testing Materials–ASTM) நெய்யாத் துணிக்குரிய வரையறையை எந்திர வழியிலோ, வேதி மாற்றம் வாயிலாகவோ, சூடேற்றியோ, தக்க கரைப்பானைப் பயன்படுத்தியோ, இவ்வழி முறைகளை இணைத்துப் பயன்படுத்தியோ, இழைகளை ஒன்றோடொன்று ஒட்டி அல்லது பின்னிப் பிணைத்து உருவாக்கப் படும் துணி நெய்யாத் துணி ஆகும் என வரையறுத்துள்ளது. 1930 இல் சில நெசவாலைகள் கழிவுப் பருத்தி இழைகளை நேரடியாகத் துணியாக்க முயன்ற போது, நெய்யாத் துணியின் வரலாறு தொடங்கியது. இரண்டாம் உலகப் போரின் போது, பெருமளவில் தயாரிப்பு தோற்றுவிக்கப் பட்டது. நெய்யாத் துணிகளின் தயாரிப்பு முறைகளும், சீர் செய்தலும் இழைகளின் தன்மை, இழைகளை அடுக்கும் முறை, பாலி எஸ்ட்டர், அக்ரிலிக், பாலி புரோப்பிலீன், பாலி எத்திலீன் எனப் பல வகை இழைகளும், இவற்றின் கலப்பினங்களும், கலவைகளும் இதற்குப் பயன் படுத்தப் படும். வெட்டிழை நீளம் 2–150 மி.மீ. இருக்கலாம். இத்துறையில் பயனாகும் இழைகளின் நுண்மை, பொதுவாக 1.5–6 டெனியர் இருக்கும். அறுவை மருத்துவம், தொழிலகப் பயன்களுக்கான துணிகளை உருவாக்க 5 மைக்ரோ டெனியர் வரை சன்னமான இழைகள் கூடப் பயன் படுகின்றன. நெய்யாத் துணி உருவாக்கத்தில் முதற் கட்டமாக வலையமைப்பு (web formation) நிகழ்த்தப் படுகிறது. இதில் இணையாக வைக்கப் பட்ட வலை (parallel laid web), குறுக்காக வைக்கப் பட்ட வலை (cross laid web), சீரின்றி வைக்கப் பட்ட வலை (random laid web), விரைவாகத் தெளிக்கப் படும் முறை (high velocity spray), காற்றினால் அமைக்கப் படும் வலை (air laid web), ஈர அமைப்பு வலை (wet-lay web) ஆகியவை அடங்கும். இணை வலை. நீட்டும் எந்திரத்தின் (carding machine) வழியே செலுத்தப் படும் இழை இணைப் பொருமையில் (parallel alignment) அமர்த்தப் படுகின்றது. மேன்மேலும், இவ்வாறு அடுக்கப் படுவதால், வேண்டிய அளவுக்குக் கடிமனாக வலை உருவாகிறது. இத்துணியின் நீள வாட்ட வலிவு கூடுதலாகவும், குறுக்கு வாட்ட வலிவு குறைவாகவும் இருக்கும். குறுக்கு வலை. நீட்டும் எந்திரத்திலிருந்து வெளி வரும் நேரிழை அடுத்தடுத்த அடுக்குகளில் குறுக்காக அமைந்திருக்குமாறு நெறிப் படுத்தப் படுகின்றது. இத்துணியின் இழு வலிமை அனைத்துத் திசைகளிலும் சமமாக இருக்கும். சீரற்ற வலை. உதிரி இழையைக் காற்றினால் ஊதி ஒரு சுழலும், துளை மிகுந்த உருளையின் மீது செலுத்தினால், உருளையினுள் நிலவும் வெற்றிடம் இழையை, உருளையின் மீது ஒட்டுமாறு செய்கிறது. இதன் விளைவாக, ஒரு கனமான வலைப் பின்னல் (matte) உருவாகிறது. இதனை, ஓர் உள் வாங்கி (licker-in) அல்லது பற்கள் பொருத்தப் பட்ட சுழலும் உருளை மீது செலுத்தி வலையைப் பிரித்து, இங்கு தோன்றும் துகள்களை, மற்றொரு வெற்றிட உருளை மீது செலுத்தினால், திசைச் சீரற்ற, ஆனால், பொதுச் சீரான வலை கிட்டும். இவ்வலைகளின் எடையும் சீராக இருக்கும். தெளித்தல் வழி வலை. இலையை ஒரு வாரின் (belt) மீது தெளித்துச் சீரற்ற வலையைத் தோற்றுவிக்க வேண்டும். பின்பு, வெப்பமும், அழுத்தமும் உயர்த்தப் பட்டு இழை உருக்கப் படுகின்றது. இதனால், இழைகள் நன்கு இணைகின்றன. இவ்வுத்தி வெப்பத்தால், இளக வல்ல இழை வகைகளுக்கு நன்கு பொருந்தும். காற்றூது வழி வலை. நீட்டும் (நேராக்கும்) எந்திரம் அல்லது இழை புரியிலிருந்து உயர் விரைவு காற்றோட்டத்தினால் இழை இழுக்கப்பட்டு, ஒரு நகரும் திரையின் மீது பாய்ச்சப் படுகிறது. இழை அமைப்பு, ஒருங்கிணைப்பு ஆகியவற்றைக் கட்டுப் படுத்துவதற்கு வெற்றிட அமைப்புகளும், அழி சட்டங்களும் (grids) உள்ளன. இவற்றின் பயனாகக் கோடு, பனிக் கட்டி வடிவம் ஆகியவற்றைக் கொண்ட துணியை உருவாக்கலாம். ஈர (வழி முறை) வலை. இழையை வேதிப் பொருள்களுடன் கலந்து, கலவையை அடிப்பானின் மூலமும், கலக்கி மூலமும் செலுத்திக் காகிதக் கூழ் (pulp) போன்று செய்து, ஒரு வலைத் திரையின் மீது இட வேண்டும். மிகையான ஈரம் அகற்றப் பட்டு, உருவாகும் வலை அமுக்கப் படுகிறது. நெய்யாத் துணி உருவாக்கத்தின் இரண்டாம் கட்டமாக, வலையிலுள்ள இழைகள் வேதி முறையில் பிணைக்கப் படுகின்றன. ரெசின் பிணைப்பு (resin bonding). நீர்ம உறிஞ்சு தன்மை கொண்ட இழைகளாலான வலையாக இருப்பின், இவ்வலையைத் தக்க ஒட்டுவிப்பியைக் கொண்டு, நிறையுற்றதாக்க வேண்டும். தெளித்தல், அச்சிடல், ஒற்றுதல், அமிழ்த்துதல் எனப் பல வழி முறைகள் இதற்குப் பயனாகின்றன. பின்பு, இரண்டு உருளைகளுக்கு இடையே செலுத்தி, அழுத்தி, மிகையான நீர்மத்தைப் பிழிந்தெடுக்க வேண்டும். இறுதியாக, உலர்த்தப் பட்ட வலையை ஏறத் தாழ 200°Cக்குச் சூடேற்றிப் பதப்படுத்த வேண்டும். ரப்பர் பால் நுரை வழிப் பிணைப்பு (latex foam bonding). ரப்பர் பாலை வலை மீது தெளிக்கலாம் அல்லது சுழலும் சல்லடைகளினூடே செலுத்தலாம். எளிதில் வெடித்து விடும் நுரை தோன்றினால், விளையும் துணி விறைப்பாகவும், நிலையான நுரை தோன்றினால், உருவாகும் துணி நெகிழ்வுற்றதாகவும் இருக்கும். ஊன் பசைப் பிணைப்பு (Gelatin bonding). செல்லுலோஸ் வழிப் பொருளான BAR இழையை வெட்டிழை வடிவில் வலையின் கூறான இழையுடன் கலந்து, நீரிலிட்டால், BAR இழைகள் படிக உருவற்ற திண்மக் கூழாக மாறி, வலையின் முதன்மை இழைகளின் குறுக்கீட்டுப் பகுதிகளில் வீழ் படிகின்றன. இதன் பின்பு, இவ்வலை அழுக்கப் பட்டு உலர்த்தப் படுகிறது. வெப்பத்தால் இளக்கிப் பிணைத்தல் (Thermoplastic bonding) . வெப்பத்தால் இளகாத அல்லது உயர் உருகு நிலை கொண்ட, வெப்பத்தால் இளக வல்ல இழையாலான வலையுடன் எளிதில் உருக வல்ல இழையைக் கலக்கலாம். பின்பு, இவ்வலையை உருளை அழுத்தத்திற்குட் படுத்தியோ, புடைப்புருவேற்றியோ துணியாக்கலாம். உருளைகளுக்கிடையே அழுத்தும் போது, வலையுடன் கலக்கப் படும் இளக வல்ல நெகிழியின் உருகு நிலைக்குச் சூடேற்ற வேண்டும். அப்போது, இளக வல்ல இழை உருகிப் பிணைப்பை உருவாக்குகிறது. நூற்புப் பிணைப்பு (spun bonding). இழை வலை, ஒரு நகரும் திரை அல்லது வாரின் மீது படிவிக்கப் பட்டு, பின்பு இயல்பிய, இயைபிய முறைகளில் பிணைக்கப் படுகிறது. இது நீர்மப் பல படியிலிருந்து துணி வரை செல்லும் தொடர்ச்சியான செயல் முறையாகும். இதனைச் செயல் படுத்துவதற்கு, நான்கு உத்திகள் உள்ளன. ஒரு வழி முறையில் துணை முகப்பிலிருந்து நீளிழை இழுக்கப் பட்டு, ஒரு நகரும் திரையின் மீது படிவிக்கப் படுகிறது. இதனால், பெறப் படும் வலையை முன் முனை ஊசிகளால் குத்தி, ஒரு படித்தான துணியை உருவாக்கலாம். ஊசியின் தன்மை, ஊசி எய்தும் ஆழம், இழை வகை, இழையின் குறுக்களவு ஆகியவற்றைச் சரி வர அமைத்து, துணியின் தடிமன், வலிமை மற்றும் அடர்த்தியைத் தக்க நிலையில் நிறுவலாம். இரண்டாம் வழி முறையில் துளை முகப்பிலிருந்து நீளிழைகளைக் காற்றோட்டத்தினால் இழுத்து, ஒரு திரை மீது சீரின்றித் தெளிக்க வேண்டும். வெப்பமும், அழுத்தமும் மேலிட்ட நிலையில், இவ்வலையை இரண்டு உருளைகளுக்கிடையே அமுக்கினால், பிணைப்புத் தோன்றும். மூன்றாம் உத்தியில், சுழலும் துளை முகப்பு வழியே நகரும் வாரின் மீது பரப்பப் படுகிறது. இவ்விழைகளின் மீது ஒரு வேதிப் பிணைப்புப் பொருளைத் தெளித்துப் பதனிடுவர். வலையமைவுக்காக விழும் இழைகளில் மின்னேற்றத்தைத் தோற்றுவித்து, அவற்றின் பரவலையும் ஒருங்கிணைப்பையும் கட்டுப்படுத்தலாம். ஒரே வலையில் இரு வேறு பல படிகளைப் பிழிந்து வார்க்கலாம் (extruded) அல்லது இழைகளை அலைவுறுத்தலாம் (Crimping) அல்லது விஸ்கோஸ் ரேயான் இழையைப் பயன் படுத்தலாம். இவை போன்று பல நுண் திருத்தங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. நூற்பிணைப்பு முறையில் தயாரிக்கப் பட்ட துணிகளுக்கு ரீமே, டைவக், டைபார் , செரெக்ஸ் போன்ற வணிகச் சின்னங்கள் உள்ளன. இவை முறையே பாலி எஸ்ட்டர், பாலி எத்திலீன், பாலி புரோப்பிலீன், நைலான் ஆகிய இழைகளினாலான நெய்யாத் துணிகள். நூற்புச் சரிகை வகைப் பிணைப்பு (spun laced bonding) என்னும் முறையில், காற்றால் ஊதித் தெளிக்கப் படும் இழைகள் ஒரு குறிப்பிட்ட கோள வடிவில் திரையின் மீது அமர்கின்றன. இதனால், சித்திர வேலைப்பாடுகள் மிகுந்த துணி உருவாகும். பாலி எஸ்டர் , நைலான் ஆகியன இம்முறைக்கு ஏற்றவை. உருக்கிப் பிணைத்தல் (Melting). ஈரிழைக் கோவைகளை (bicomponent composite fabrics) ஒன்றுக்குள் ஒன்றாகவோ, அடுத்தடுத்தோ அமையுமாறு பிழிந்து வார்க்கலாம். கவனமாகச் சூடேற்றினால், எளிதில் உருகும் கூறு இழை உருகி, ஏனைய இழைகளுக்கிடையே பிணைப்பைத் தோற்றுவிக்கிறது. இக்கட்டத்திற்கு முன்பாகச் சுரண்டிக் கிளறும் (Napping) முறையைச் செயல் படுத்தினால், போர்வை, ஜமக்காளம் போன்ற துணிகளைக் கூடத் தயாரிக்கலாம். உடலுள் பிணைப்பு (autogenic bonding). செயற்கை இழையாலான ஒரு வலை மீது தகுந்த கரைப்பானைத் தெளித்தால், இழை கரைந்து மென்மையாகும். கரைந்த பகுதி, கரையாத இழைப் பகுதிகளை ஒட்டுவிக்கும். தக்க தருணத்தில், கரைப்பானை ஆவியாக்கி வெளியேற்றினால், பிணைப்புற்ற வலை கிடைக்கும். கதிர் வீச்சு வகைப் பிணைப்பு (radiation bonding). நிறைவுறாத பாலி எஸ்ட்டரையும், ஓரளவு ஒருங்கமைந்த பாலி எஸ்ட்டரையும் கொண்ட வலையை ஒரு குறுக்குப் பிணைப்பூட்டும் வேதிப் பொருளுடன் கலந்து, எலெக்ட்ரான் கற்றைக் கதிர் வீச்சுக்குட் படுத்தினால், குறுக்குப் பிணைப்புகள் தோன்றி, நீளிழைகள் பிணைகின்றன. கோவைப் பிணைப்பு (Composite bonding). இதில் இரு வகை உள்ளன. ஸ்கிரிம் வலிவூட்டப்பட்ட பொருள் (SRM) எனும் அமைப்பில், இழை வலைகள் உடுக்கை அமைப்புற்ற (Sandwich) நைலானாலான ஸ்கிரிம் உள்ளுறையின் மீது சுற்றப் பட்டுள்ளன. திசு–இழைத் தகடு (Tissue fibre laminate–TFL) எனும் தயாரிப்பில், திசுக்களாலான வலையைக் குறைந்த முறுக்கேற்றப்பட்ட நீள் ரேயான் நூல்களின் மீது அச்சிடல் பிணைப்புத் தோற்றுவிக்கப் படுகிறது. இரு வகைத் துணிகளும், ஒரு முறை மட்டுமே பயன் படுத்த வல்ல அறுவை மருத்துவ வகைத் துணிகளாகப் பயனாகின்றன. தைத்துப் பிணைத்தல் (Stitch through bonding). ஏடு நிலைக்குட்படுத்தப் பட்ட வலைகளை, வெப்பத்தால் இளகும் நெகிழி நூல்களைக் கொண்டு தைத்துச் சூடேற்றினால், நூல் இளகி, சுருங்கி வலையமைப்பை ஒட்டுவித்துப் பிணைக்கிறது. அச்சு வகை ஓட்டுவிப்பு (printed adhesive bonding). இளக வல்ல ஒட்டுவிப்பியாலான கோலத்தை, ஒரு வாரின் மீது அச்சிட்டு, அதன் மீது நீளிழை வலையை அல்லது நேராக்கப் பட்ட (carded) வெட்டிழையைப் பரப்ப வேண்டும். ஒட்டுவிப்பி ஓரளவு பதனிடப் பட்ட நிலையில் வாரிலிருந்து விடுபட்டு, வலையின் மீது ஒட்டும். இவ்வலையைச் சூடாக்கினால், ஒட்டுவிப்பி இளகிச் சுருங்குகிறது. இவ்வாறு, ஒன்றிணைந்த ஒட்டுவிப்பி அடுக்கு ஒரு தாங்கு திரையாகி, இழைகள் யாவற்றையும் மேல் நோக்கி நிற்குமாறு செய்கிறது. அடுக்கின் கோல அமைப்பும், யாப்பும் பதிக்கப் பட்ட ஒட்டுவிப்பியின் கோல அமைப்பைப் பொறுத்திருக்கும். இறுதியாக, துணியைச் சூடேற்றி வடிவமைக்கலாம். இவ்வழி முறையில் சிறு திருத்தங்களைப் புகுத்துவற்கு இழையின் தன்மை, வலையின் ஒருங்கமைப்பு, ஒட்டுவிப்புப் பாணி, ஒட்டும் இழையின் எண்ணிக்கை ஒன்றிணைதல் விகிதம் ஆகிய காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஊசிப் பொத்தல் முறை (needle punching). இழை வலைகளை முன் முனை கொண்ட ஊசிகளால் குத்துகையில், இழைகள் சிடுக்குறுகின்றன (entangled). ஊசிகளை மீண்டும் வெளியே எடுக்கும் போது, இச்சிடுக்குகள் கூடுதலாகின்றன. ஊசிகளின் எண்ணிக்கை, அவற்றின் முனையிலுள்ள முள்களின் வடிவமைப்பு, ஊசிகளைப் புகுத்தும் கோணம், ஊசி உட்புகும் ஆழம், இழை வகை ஆகியவற்றைப் பொறுத்து நெய்யாத் துணியின் இயல்பு உருவாகும். நெய்யாத் துணியைச் சீர் செய்தல். சாயந் தோய்த்தல், அச்சிடுதல், மேன்மையேற்றம், உருளை அழுத்தம் எனப் பல சீர் செய்தல் முறைகள் இவ்வகைத் துணிகளுக்கு ஏற்றவையாகும். சிறப்பியல்பு. ஒரு நெய்யாத் துணியின் தன்மை அதன் தயாரிப்புக் கட்டத்தில் நிலவிய துணையலகுகளைப் பொறுத்ததாகும். எனவே, இத்தன்மை அகன்ற வரம்புக்குட் பட்டது. தோற்றத்தில், இத்துணி காகிதத்தைப் போன்றோ, பின்னல் கம்பளியைப் போன்றோ, மிக அரிதாக நெசவுத் துணி போன்றோ இருக்கும். திசுக் காகிதத்தைப் போன்று மெலிதாகவோ, அட்டையைப் போன்று தடித்தோ, தயாரிக்கப் படலாம். குறை ஆடிமை (translucence) அல்லது முழு ஆடிமை (transparancy) பெறப் படலாம். நுண் துளைமையிலும் (porosity) பரந்த வரம்பு உள்ளது. துவளுமை (drapability) ,நீள் வலிமை ஆகியன நெய்யாத் துணியில் குறைந்த அளவிலேயே இடம் பெறுகின்றன. இவை பெரும்பாலும் உலர் சலவைக்கே ஏற்றவை. நெய்யாத் துணிகளுக்குக் குறிப்பிட்ட பயனுக்கான தன்மைகளைப் புகுத்தலாம். எடுத்துக் காட்டாக, சில வகைச் சிறு துவாலை (diaper) நெய்யாத் துணியாலான இரு வேறு அடுக்கைக் கொண்டது. மேலடுக்கில், நனைப்பூட்டியால் நிரப்பப் பட்ட பாலிஎஸ்ட்டர் துணி இடம் பெறுகின்றது. இது விரைவாக நீர்மம் புகுந்து வடிவதற்கு உதவுகிறது. பக்க வாட்டில் உறிஞ்சப்படுதல் மிகச் சிறிதளவே நிகழ்கிறது. உள்ளடுக்கில் நீர்மத்தை உறிஞ்ச வல்ல ரேயான் உள்ளது. அறுவை மருத்துவர் அணியும் முகமூடி தயாரிப்பதற்கு மெல்லிய, எளிதில் வடி கட்ட வல்ல நெய்யாத் துணி பயனாகிறது. இதன் இழைகளின் நுண்மை மைக்ரோ டெனியர் அளவில் இருக்கும். பனிச் சறுக்கு விளையாட்டு வீரர் அணியும் உடையை மைக்ரோ டெனியர் இழைகளாலான தடித்த, மென் தோலையொத்த (fluffy) வெப்பம் காக்கும் நெய்யாத் துணி கொண்டு தயாரிக்கலாம். நெய்யாத் துணியைப் பயன் முறை அடிப்படையில் நீடித்து உழைப்பது, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தத் தக்கது என இரு பிரிவாக வகைப் படுத்தலாம். முதல் வகையைக் குல்லாய் இடைச் செருகல் ஏடு, அறை கலன் உறை, கம்பள விரிப்பு அடித் தளம், வடி கட்டி, வெப்பக் காப்பீட்டு அமைப்பு ஆகியவற்றுக்கும், இரண்டாம் வகையை மகளிர் சுகாதாரத் துண்டு, அறுவை மருத்துவ, தொழிலக வகை முகமூடி, வைப்புக் கட்டு, தூசிச் சேகரிப்பான் ஆகியவற்றுக்கும் பயன் படுத்தலாம். —மே.ரா. பாலசுப்பிரமணியன் துணை நூல். B.P Corbman, Textiles-Fibre to Fabric, Sixth Edition, McGraw–Hill Kogakusha Ltd., Singapore, 1985.