தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த வட்டங்களுள் ஒன்று, தருமபுரி மாவட்டம் தமிழ்நாட்டில் வளர்ச்சி குறைந்த மாவட்டங்களுள் ஒன்று. மலைகளும் காடுகளும் கொண்ட இவ்வட்டத்து மக்களில் பெரும்பாலோர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாடுகின்றனர். கோரை, தாழை போன்றவற்றிலிருந்து பாய் பின்னல், மூங்கிற் கூடை முடைதல், கயிறு திரித்தல் போன்றவை இவ்வட்டத்தின் சிறப்புத் தொழில்களாம். இவ்வட்டத்தில் நல்ல மாம்பழங்கள் விளைகின்றன. இவ்வட்டத்தில் அரூர் (Harur) என்னும் பெயரில் ஊர் ஒன்றுமுள்ளது. பல்லாண்டுகளுக்கு முன்னர் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் சேலத்திலிருந்து பெங்களூர் செல்லும் குறுகிய இருப்புப்பாதையொன்றிருந்தது. சில ஆண்டுகளுக்கும் பின்னர்ப் பொருளாதார வளர்ச்சிக்கு உதவவில்லை எனக் கருதி அப்பாதை அகற்றப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பின்னர் 1978–ஆம் ஆண்டில் இந்திய அரசின் இருப்புப் பாதை வாரியம் மீண்டும் சேலத்தையும் பெங்களூரையும் இணைக்கும் இருப்புப் பாதையைப் போட்டுள்ளது. அரூருக்கு இருப்புப் பாதைத் தொடர்பு இல்லையென்றாலும் மொரப்பூர் இருப்புப் பாதை நிலையம் அரூருக்கு 13 கி.மீ. தொலைவில் இருக்கிறது. அரூர் வாணியாற்றங்கரையிலுள்ள சிறிய ஊர். பண்டைக் காலத்தில் இந்த ஊரை அரியூர் என்றனர். அது மருவி அரூர் என்று வழங்கி வருகிறது. 1981–ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்குப்படி அரூரின் மக்கள் தொகை 16,313 ஆகும்.