நூற்பு முறையைத் தக்கவாறு திருத்தியமைத்து, வனப்பு மிக்க துணிகளை உருவாக்கக் கூடிய நூல்களைப் பெறலாம். இவை சிற்ப நூல்கள் (novelty or decorative yarns) எனப்படும். நூற்பு முறையில் முறுக்கேற்றத்தின் அளவை மாற்றியும், வெவ்வேறு குறுக்களவுகள் கொண்ட நூல்களை ஒரு சேர முறுக்கியும், பல வகை யாப்பு விளைவுகளைப் புகுத்தலாம். கலக்கப்படும் நூல்கள் ஒவ்வொன்றிலும், முறுக்கேற்ற அளவு வெவ்வேறாக இருக்கும். சமமாக (eveness) நூற்கப்படும் வழி முறையில் பெறப்பட்ட சீர்மையுற்ற நூல்களை விடச் சிற்ப நூல்கள் திடத் தன்மையைக் (durability) குறைவாகப் பெற்றுள்ளன. முண்டு நூல்கள் (slub yarns). அலங்கார அமைப்புகளை நுகர்வோர் விரும்புவதால், சிறிதளவு மட்டுமே இழுவைக்கு (drawing) உட்படுத்தப்பட்ட நூல்களைத் தயாரிக்கும் முறை புகழ் பெற்றுள்ளது. முண்டு நூல்கள் எனப்படும் இவை மென்மையான, முறுக்கப்படாத பகுதிகளை ஆங்காங்கே பெற்றிருக்கும். பெரும்பாலான பகுதிகள் கரடு முரடாகவும், சற்றே முறுக்கேற்றப்பட்டும் இருக்கும். முழுமையற்ற நூற்பு முறையால் தோன்றும் ஒழுங்கு குலைவு இங்கு தென்படும். இந்நூல்களைக் கொண்டு போலி லினன் துணியைத் தயாரிக்கலாம். சாந்தங் எனும் துணியில் இச்சிற்ப நூல்கள் ஊடு நூல்களாக நெளி மேடுகளைத் தோற்றுவிக்கின்றன. டுவீட் (tweed) துணியிலும் இந்நூல் பயன்படுகிறது. செதில் நூல்கள் (flake yarns). இணைப்பு நூல்களுக்கிடையே, ஆங்காங்கே மென்மையான தடித்த நூல் கொத்துகளைப் புகுத்த வேண்டும். இவை வீட்டு நூற்பு அமைப்புகளில் பயனாகின்றன. சுருள் நூல்கள் (spiral yarns). ஒரு சன்னமான நூலைச் சுற்றிக் கரடுமுரடான நூலால் சுருள் தோற்றுவிக்கப்படுகிறது. தடித்த நூலுக்கு ஒரு தளர்ந்த முறுக்கு அளிக்கப்பட்டுச் சன்ன நூலின் உள்ளுறை (core) மீது சுற்றப்படுகிறது; சன்ன நூல் தீவிரமாக முறுக்கப்படுகிறது. இந்நூலை வேற்று மைய நூல் (eccentric yarn) எனவும் கூறுவர். லாஸ்டெஸ் என்ற வணிகப் பெயர் கொண்ட சிற்ப நூலில் உள்ளுறை நூல் ரப்பராகவும், வெளி நூல் பருத்தி, ரேயான்களாகவும் அமைக்கப்படும். ரடினே நூல்கள். சுருள் நூல் வகையிலிருந்து சற்றே வேறுபட்ட நூலான இது முற்றிலும் மாறுபட்ட தயாரிப்பு முறை கொண்டது. வெளி நூல் உள்ளுறை நூலின் மீது சுருள் வடிவாகச் சுற்றப்படும் போது, ஒழுங்கான இடைவெளியில் வெளி நூலால் ஒரு நீள் வளையம் தோற்றுவிக்கப்படுகிறது. இதனால், வெளி நூல் அதன் மீதே நெளிவாகப் படிகிறது. இந்நெளிவு கலையாமல் இருப்பதற்கு, மூன்றாம் நூலொன்று பிணைப்பாகப் பயன்படுத்தப் படுகிறது. வெளி நூலை முறுக்கிய திசைக்கு எதிர்த் திசையில் இணைப்பு நூல் முறுக்கப்படுகிறது. ரடினே (Ratine) நூலின் மேற்பரப்பில் தோன்றும் வளையங்கள் அந்நூலுக்கு ஒரு தொய்வில்லாத முரட்டுத் தோற்றத்தைத் தருகின்றன. முதன்மையான இழைகளுக்கும், அவற்றின் கலப்பினங்களுக்கும் இந்நூற்பு முறை தக்கதாகும். போகிள், நீள் வளைய அல்லது சுருட்டை நூல்கள். மென்மையான இந்நூல்கள், பின்னல் வகைத் துணிகளின் தயாரிப்பில் உதவுகின்றன. காராகூல் எனும் துணி இவ்வகைக்கு எடுத்துக்காட்டாகும். புடைப்பு, சிறு குமிழ், முடிச்சு அல்லது புள்ளி நூல். வெளிச் சுற்று நூலை, உள்ளக நூலின் ஒரு குறுகிய நீளத்திலேயே மீண்டும், மீண்டும் சுற்றி முறுக்கினால், நூலின் நீளத்தில் ஒழுங்கான இடைவெளிகளில் புடைப்புகள் தோன்றக் கூடும். இதில் பல வகை மாற்றங்களைப் புகுத்தலாம். வெவ்வேறு நிறம் கொண்ட இரு வெளி நூல்களைப் பயன்படுத்தி, புடைப்புகளை விரும்பத் தக்க இடைவெளியில் அமைத்து, நூலின் மீது இரு நிறங்களும் மாறி மாறிக் குறிப்பிட்ட இடைவெளிகளில் தோன்றுமாறு செய்யலாம். ரடினே நூலைப் போன்றே இங்கும் மூன்றாம் நூலைப் பிணைப்பு நூலாகப் பயன்படுத்தலாம். செனைல் நூல்கள் (chenile yarns). பிரெஞ்சு மொழியில் செனைல் என்றால், கம்பளிப் பூச்சி அல்லது எரிபுழு என்று பொருள். இந்நூல் கம்பளிப் பூச்சியின் புறப் பரப்பின் தோற்றத்தைக் கொண்டுள்ளமையால், இப்பெயர் வழங்கப்படுகிறது. உள்ளகத்தில் இரு நூல்களை ஒன்றாக முறுக்கி, இவற்றால் மெல்ல முறுக்கப்பட்ட வெளி நூல் கற்றைகளை உள்ளக நூலின் நீள்வாக்கில் இருத்தி வைத்தால், வெல்வெட்டைப் போன்ற வழவழப்பான சிற்ப நூல் கிடைக்கும். செனைல் நூல் தயாரிப்பதற்கான வழக்கமான முறையில் மென்மையான, முறுக்கப்பட்ட நூலை நிரப்பு நூலாகப் பயன்படுத்தி, லினோ நெசவு வாயிலாகத் துணியை உருவாக்க வேண்டும். பாவு நூல்கள் 3—7 மி.மீ. இடைவெளியில் அமைந்திருக்- கின்றன. பாவுகளுக்கு இடையே துணி குறுகிய பட்டைகளாகப் பிரிந்துள்ளமை தெரிய வரும். பாவு முறுக்குகளுக்கிடையே சிக்கியுள்ள நிரப்பு நூல்கள் தூசுப் படலமாகத் தோற்றமளிக்கின்றன. 1977 இல் இவ்வகை நூல் தயாரிப்புக்கு எந்திர முறை கண்டு பிடிக்கப்பட்டது; பருத்தி, கம்பளி, செயற்கைப் பட்டு, நைலான், பாலி எஸ்ட்டர் ஆகிய இழைகள் யாவுமே செனைல் நூல் தயாரிப்புக்கு ஏற்றனவாகும். இந்நூலால் உருவாக்கப்படும் துணிகளை ஆடை, படுக்கை விரிப்பு, திரைச் சீலை ஆகியவற்றின் தயாரிப்புக்குப் பயன்படுத்தலாம். மென்மையான இத்துணிகள் எளிதில் தேய்மானமுறுகின்றன. யாப்புடை நூலகளையும் (textured yarns) சிற்ப நூல்களாகக் கருதலாம். ஏனெனில், நூலின் புறப் பரப்பில் அழகூட்டும் அமைப்புகளை நிறுவுவதற்கு யாப்பு ஏற்றம் பயன்படுகிறது. —மே. ரா. பாலசுப்பிரமணியன் நூலோதி. B.P. Corbman, Textiles—fibre to fabric, Sixth Edition, McGraw-Hill Book Company, Singapore, 1985.