இலார்டில்
ilārṭil
ஆசுத்திரேலியாவின் மிகத் தொன்மையான பழங்குடியினருள் ஓரினத்தவர்.
ஆசுத்திரேலியாவின் மிகத் தொன்மையான பழங்குடியினருள் ஓரினத்தவர். இவர்கள் ஆசுத்திரேலியாவின் குவின்சுலாந்து மாநிலத்தின் வடக்கிலுள்ள மார்னிங்டன் தீவில் (Mornington Island) வாழ்கின்றனர். எண்ணிக்கையில் 1000க்கும் சற்றுக் குறைவான இலார்டில் (Lardil) பழங்குடியினர் மேற்கத்திய பண்பாட்டின் தாக்கத்தாலும், ஆசுத்திரேலியாவின் நகர மக்களின் தாக்கத்தாலும் பாதிக்கப்படாமலிருப்பதால் மிகத் தொன்மையான பழங்குடித் தன்மைகளை இன்றளவும் கொண்டிருக்கின்றனர். இலார்டில் பழங்குடியினர் கருமை நிறத் தோல், அலை அலையான சுருண்ட மயிர், உயர்ந்த முன் நெற்றி, பருத்த புருவங்கள், பழுப்பு நிறக் கண்கள், அகன்ற தாடை எலும்பு, அகன்ற நாசித்துவாரம், நடுத்தர உயரம் முதலான உடலமைப்புகளைக் கொண்டுள்ளனர். இவர்கள் ஆசுத்திரேலிய (Australoid) இனத்தைச் சேர்ந்தவர்களாவர்.
இலார்டில் குடிகள் முப்பது தந்தைவழிக் குலக் குழுக்களாகக் (Clan) காணப்படுகின்றனர். ஒவ்வொரு குலக் குழுவினரும் பொதுவான நிலப்பரப்பினைக் கொண்டிருக்கின்றனர். ஒருவர் மற்றவரின் பகுதியில் வேட்டையாடலாம். எனினும், வேட்டையில் கிடைத்தவற்றில் அக்கால்வழிக் குழுவினருக்கு ஒரு பகுதியைக் கொடுக்க வேண்டும். இலார்டில் குடிகளின் அடிப்படைப் பொருளாதாரம் வேட்டையாடுதலும் மீன்பிடித்தலுமாகும். ஏனைய ஆசுத்திரேலியப் பழங்குடியினரைப் போன்றே இக்குடிகளிலும் வளைதடி (Boomerang), எறி ஈட்டி (Harpoon) முதலான கருவிகள் காணப்படுகின்றன. இவர்களின் வளைதடி இருவகையானதாகும். முதல்வகை வளைதடியானது விலங்கினை அடித்தபின் மீண்டும் வேட்டையாளனிடமே வரும். இரண்டாம் வகை வளைதடி போர்ச் செயல்களில் ஈடுபடுத்துவதாகும். இவ்வித வளைதடி எதிரியை தாக்கிய பின் எறிந்தோனிடம் திரும்பாது
இலார்டில் குடிகளின் கடல் வேட்டை குறிப்பிடத்தக்கது. இவர்கள் துல்கோ (Dulho) என்னும் மீனையும் கடல் ஆமைகளையும் விசித்திரமான முறையில் பிடிக்கின்றனர். துல்கோ மீன் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மட்டுமே மார்னிங்டன் தீவின் கடற்கரையோரத்தில் காணப்படுகிறது. இம்மீன் தோன்றும் காலநிலையைப் பல்வேறு உத்திகளைக் கொண்டு கணிக்கின்றனர். வடதிசைக் காற்று பலமுடன் வீசுதல், கம்பளிப் புதர் (Wool Bush) வளரத் தொடங்குதல் முதலானவற்றை முன்னறிகுறிகளாகக் கொண்டுள்ளனர். இறுதியில் கீழ்த்திசையில் பௌர்ணமி தோன்றும் பொழுதே இம்மீன் வெளிப்படும் என்று நம்புகின்றனர். கீழ்த்திசையில் பௌர்ணமி தோன்றும் பொழுது இலார்டில் குடிகளனைவரும் ஒன்று கூடுகினறனர். பின்னர்ச் சந்திரன் தோன்றும் திசைக்கு எதிர்த் திசையில் ஈட்டிகளை நட்டுவைப்பர். தாழலை வீசும் காலத்தில் (Low tide) இம்மீன் தோன்றுவதால் இடுப்பளவு வரை கடலில் சென்று வலைவிரித்து மீனைப் பிடித்து விடுகின்றனர். பிடித்த மீனைப் பெருவிரல் நகத்தைக் கொண்டு பக்க வாட்டில் இருக்கும் துடுப்பருகே முக்கோணமாகக் கிழித்துக் கொழுப்புச் சத்தையும் முட்டைப் பையையும் எடுத்து விடுவர். பின்னர் அதை நெருப்பில் சுட்டுக் கால்வழிக் குழுக்களிடையே பகிர்ந்து கொள்வர். இம்மீனின் எலும்பை உடைத்தால் தம் குடியினருக்குத் துன்பம் நேரும் என்றும் எதிர்காலத்தில் இம்மீன் கிடைக்காது என்றும் கருதுகின்றனர்.
இலார்டில் பழங்குடிகளிடையே கடல் ஆமை வேட்டையும் குறிப்பிடத்தக்கது. ஈட்டியுடன் தயார் நிலையில் இருக்கும் இவர்கள் ஆமை முட்டையிடக் கரைவரும் பொழுது ஈட்டியைப் பாய்ச்சிக் கைப்பற்றுகின்றனர். மார்னிங்டன் தீவில் வசிக்கும் இலார்டில் பழங்குடிகள் பல கால்வழிக் குழுக்களாகப் பாகுபடுவதுடன் இலீவார்டு மக்கள் (Leward People) எனவும் வின்வார்டு (Windward) மக்கள் எனவும் பிரிக்கப்படுகின்றனர். போர்க்காலத்தில் வட பகுதியில் வாழும் இலீவார்டு மக்களும் தென் பகுதி வின்வார்டு மக்களும் வட்டார நோக்குடன் ஒருங்கிணைந்து போரிடுகின்றனர். இக்குடிகளிடையே சடங்குகளும் நடன நிகழ்ச்சிகளும் மிகுந்து காணப்படுகின்றன. ஒவ்வொரு கால்வழியினரும் நடனப் போட்டிகளையும் நடத்துவர். இயற்கைச் சூழ்நிலையாலும் இவர்கள் பழங்குடித்தன்மையில் ஆழ்ந்து உழன்று நிற்பதாலும் முதுபழங்குடியினராகவே திகழ்கின்றனர்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 376)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hcajythv/
தமிழ்“இலார்டில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/hcajythv/APA
Oliyon Research. (2026). இலார்டில். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hcajythv/MLA
"இலார்டில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/hcajythv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment