இலங்கையில் கல்வி
ilaṅkaiyil kalvi
ஆசிய நாடுகளுக்குள் இலங்கையில் தான் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மிகுதியாக உள்ளனர்.
ஆசிய நாடுகளுக்குள் இலங்கையில் தான் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மிகுதியாக உள்ளனர். இந்நாட்டில் இவர்களின் விழுக்காடு அறுபதிலிருந்து என்பதுவரை உள்ளது. இதற்குக் காரணம், இந்நாட்டில் நல்ல பள்ளிகளும், கல்வியின் மீது மக்களுக்கு இருக்கும் பேராவலும் ஆகும்.
இலங்கையில், தொடக்கப்பள்ளிகளும் உயர்நிலைப் பள்ளிகளும் சேர்ந்து ஏறக்குறையப் பத்தாயிரம் உள்ளன. இப்பள்ளிகளில் ஏறத்தாழ இரண்டரை மிலியன் மாணவர்கள் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். மொத்தம் ஓர் இலட்சம் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஐந்து வயது முதல் பதினான்கு வயது வரையில் உள்ள இலங்கை நாட்டுக் குழந்தைகளுக்குக் கல்வி கட்டாயமாகவும் இலவசமாகவும் கற்பிக்கப்படுகிறது. இந்நாட்டில் கல்வி அமைச்சகமே, பள்ளிக் கல்விப் பொறுப்பை ஏற்று நடத்துகிறது. பள்ளியை நிருவகிப்பதில் அந்தந்த வட்டாரங்களில் உள்ள அறிவுரைக் குழுக்கள், கல்வி அமைச்சகத்துக்குத் துணையாக உள்ளன.
இலங்கையில் தொடக்கப்பள்ளிக் கல்வி என்பது முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையிலுள்ள சுல்வியினைக் குறிக்கிறது. இந்நாட்டில் பதினான்கு வயது வரையில் மாணவர்கள் தொடக்கப்பள்ளிக் கல்வி பெறுகின்றனர். இக்கல்வியை முடித்தபின், மாணவர்கள் நான்காண்டுக் காலம் நீடிக்கும் உயர்நிலைப் பள்ளிகளில் அல்லது இலங்கைத் தொழிற் கல்லூரியில் சேருகின்றனர். ஆங்கில அரசு விட்டுச் சென்ற கல்வி முறையே இலங்கையில் பெரும்பாலும் நிலவிவருகிறது. பள்ளிகளில் பாட அறிவுக்கு மிகுந்த முதலிடம் தரப்படுவதால், உயர்நிலைப் பள்ளிக் கல்வி மிக்க அளவில் அலுவலர்களை மட்டும் உருவாக்குவதோடு நின்றுவிடுகிறது. மாணவர்களிடம் தொழிற்பயிற்சிக்குச் சிறிதளவே ஊக்கமளிக்கப்படுகிறது. ஆதலால், தொழிற்பயிற்சி பெற்றவர்கள் இங்கு மிகக் குறைவு. இந்நாட்டிலுள்ள பல பணிகளுக்குத் தொழிற்பயிற்சி பெற்றவர்களின் தேவை மிகுந்துள்ளது.
இலங்கையில் இருந்த நான்கு பல்கலைக் கழகங்களையும் கட்டுப்பெட்டி (Katubedde) நகரில் இருந்த ஒரு தொழில் நுட்பவியல் கல்லூரியையும் இணைத்து, 1972-ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இப்பல்கலைக் கழகம் கண்டி நகருக்கு அருகே உள்ள பேராதினியாவில் அமைந்துள்ளது. இங்குக் கீழைநாட்டுக் கல்வி, கலையியல், கல்வியியல், கால்நடை மருத்துவம், நூலகவியல், சட்டவியல், வேளாண்மை, அறிவியல், மருத்துவம், பல்மருத்துவம், பொறியியல் ஆகிய பாடத்துறைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
கொழும்பு நகருக்கு அருகில் இரண்டு பிரவீணாப் பள்ளிகள் (Pirivenas) உள்ளன. இவற்றின் தலையாய பணி, பௌத்த சமயத்தில் பயிற்சியளித்துத் துறவிகளை உருவாக்குதல் ஆகும். இவ்விரண்டு பள்ளிகளுக்கும் 1959–இல் பல்கலைக் கழக நிலை (University Status) நல்கப்பட்டது. அவை வித்தியாலங்காராப் பல்கலைக் கழகம் (Vidyalankara University), வித்தியோதயாப் கழகம் (Vidyodaya University) எனச் சொல்லப்படுகின்றன. இவையிரண்டும் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் பிரிவுகளாகச் செயற்பட்டு வருகின்றன. இவற்றில் தத்துவம், பௌத்த சமயம், மொழி, கலை, அறிவியல் ஆகியனவும் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இலங்கைப் பல்கலைக் கழகச் சட்டப் புலத்திற்குத் (Faculty of Law) தொடர்பேதுமின்றி, கொழும்பு நகரில் ஒரு சட்டக்கல்லூரி தனித்துச் செயற்பட்டு வருகிறது. இக்கல்லூரியில், உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிய விழைபவர்கள் மட்டும் பயின்று தகுதி பெறுகின்றனர். கொழும்பு நகரில் உள்ள இலங்கைத் தொழில் நுட்பக் கல்லூரியில் பொறியியல், தொழிற்கல்வி, வணிகவியல் ஆகிய துறைகள் உள. ஆனால், இக்கல்லூரியில் தரப்படும் கல்வியின் தரம், பல்கலைக் கழகத் தரத்தைவிடச் சற்றுக் குறைந்த அளவிலேயே உள்ளது.
ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளும் பள்ளிகளில் பயிற்று மொழியாக உள்ளன. உயர்கல்வியிலும் இம்மொழிகளே பயிற்று மொழியாக உள்ளன. சில பாடத்துறைகளுக்கு ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக உள்ளதால், பல்கலைக் கழக அளவில் மாணவர்கள் திறம்படப் பயில்வதற்கு இடையூறாக உள்ளது. எனவே, தமிழ், சிங்களம், ஆகிய மொழி வழியே பள்ளியில் கல்வி பயின்ற மாணவர்கள், உயர்கல்வியில் தரப்படும் ஆங்கில மொழியைப் புரிந்துகொள்ள இயலாமல், பாடங்களில் தோல்வி அடைகின்றனர்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 316)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h9kt755q/
தமிழ்“இலங்கையில் கல்வி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/h9kt755q/APA
Oliyon Research. (2026). இலங்கையில் கல்வி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h9kt755q/MLA
"இலங்கையில் கல்வி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/h9kt755q/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment