பண்பாடு என்பது ஒரு சமுதாயத்தின் உறுப்பினர்கள் கொண்டுள்ள அறிவு, நம்பிக்கைகள், கலை, ஒழுக்கம், சட்டம், மரபுகள், நெறிமுறைகள், பழக்கம் முதலான அனைத்தின் ஒட்டு மொத்தச் சேர்மமாகும். இது ஒரு சமூதாயத்தினர் அனைவரும் கற்று ஏற்றுக் கொண்ட மரபுவழிப் பாங்காகும். இக்காலச் சமுதாயங்கள் அனைத்திலுமே சில குழுவினர் சில தனிப் பண்புகளைக் கொண்டு தாம் சார்ந்துள்ள விலகி சமூகத்தினின்று மாறுபட்டுக் காணப்படுவர். இக்குழுவினரின் பண்பாடே உட்பண்பாடு (Sub-Culture) எனப்படும். வேற்று நாட்டில் குடியுரிமை பெற்று வாழும் ஒரு நாட்டினர் தாம் குடியேற்றம் பெற்ற நாட்டினரின் பண்பாட்டையும் தம் தாய்நாட்டின் பண்பாட்டையும் ஒருங்கிணைத்து ஒரு தனிப் பாங்கோடு வாழ்வர். ஒரு சமுதாயத்தில் மேட்டுக் குடியினரும் செல்வர்களும் தனிப்பட்ட வாழ்க்கை நிலையினையும் வதிய மக்கள் தனிப்பட்ட வறுமை நிலைப் பண்பாட்டையும் (Poverty of Culture) கொண்டிருப்பர். குமரப் பருவப் பண்பாட்டில் (Adolescent Culture) அவர்களின் உடை, நடத்தை, சிந்தனை முதலான அனைத்தும் தனிப்பட்டதாக அமையும். நிறுவனங்களின் நடத்தை முறைகள் (Behaviour Patterns) அந்த நிறுவனத்திற்கு வெளியே காணக் கூடியனவாக அமையா. எடுத்துக்காட்டாக, ஒரு பள்ளியின் பண்பாடு, ஒரு தொழிற்சாலையின் பண்பாடு, இராணுவ வாழ்க்கை முதலானவை இந்த அமைப்புகளுக்கு மட்டுமே உரித்தான பண்பாட்டைக் கொண்டிருக்கும். மேற்கூறிய அனைத்து எடுத்துக்காட்டுகளுமே உட்பண்பாட்டினை விளக்குவனவாகும். இதையே மாணவர் உட்பண்பாடு (Student Sub-Culture), குமரப் பருவ உட்பண்பாடு (Adolescent Sub-Culture) எனக் கூறலாம். தான் அடங்கிய சமுதாயத்தின் பண்பாட்டினை ஏற்றுக்கொண்டு, சில தனிப்பட்ட முறையில் தன் பண்பாட்டின் தன்மையிலிருந்து விலகித் தனிப் பண்பாட்டைக் கொண்ட உட்பண்பாட்டின் தன்மைகள் சமுதாயத்தில் பல நிலைகளில் காணப்படும். சமுதாயத்தில் காணப்படும் உட்பண்பாடுகள் தொழில்கள், சமயம், நாடு, வட்டாரம் (Region), சமூக வகுப்பு, வயது, பால் (Sex) முதலானவற்றைச் சார்ந்து காணப்படுவனவாகும். உட்பண்பாடு ஒவ்வொரு சமுதாயத்திலும் காணக் கூடிய பொதுத் தன்மையாகும். எந்த ஒரு பண்பாடுமே ஒரே தன்மையுள்ள (Uniform) தனிப்பண்பாட்டைப் பெற்றிருக்கவில்லை; ஆனால், பொதுவான பண்பாட்டுக் கூறுகளையும் (Culture Traits) பண்பாட்டுத் தொகுதியையும் (Culture Complexes) உட்பண்பாட்டையும் கொண்டுள்ளது. ஒவ்வொருவரும் தம் செயல்களையும் நடத்தைகளையும் தம் சமுதா- யத்தின் ஏதாவதோர் உட்பண்பாட்டோடு ஈடுபடுத்திக் கொள்கின்றனர். ஒரு நாட்டில் குடியேற்றம் பெறுபவர்கள் குடியேறிய உட்பண்பாட்டினரோடு (Immigrant Sub–Culture) பெரும்பான்மையாக வாழ்வர். இராணுவத்தில் பணிபுரிபவரின் துணைவியர்கள் பொதுமக்களோடும் அவர்களின் வாழ்க்கைப் பங்கோடும் அவர்களின் மதிப்புகளோடும் (Civilian Values) மிகுந்த தொடர்பற்றவர்களாய் உள்ளனர். ஒவ்வொரு குழந்தையும் வயது உட்பண்பாட்டைக் (Age Sub–Culture) கடந்து வளருகின்றனர். பண்பாட்டின் பொதுத்தன்மை பல அலகுகளைக் (Units) கொண்டது. பல உட்பண்பாடுகளைக் கொண்ட பல அலகுகளின் ஒட்டுமொத்தமே பண்பாடாகும்.