கடினமான பொருளால் சிரை அடைக்கப்படும் போது, குருதி ஓட்டம் தடைப்பட்டு, அதற்குக் கீழ் உள்ள சிரைகள் சுருண்டும், நெளிந்தும், வீங்கியும் காணப்படும். சில சமயங்களில் தசை அழுகுதலும் ஏற்பட வாய்ப்புண்டு. காரணங்கள். சிரையில் குருதி உறைவு, அழற்சியாலோ, உயிரிகளாலோ ஏற்படும். கால்சியம் கலப்பதால், உறைதல் கடினமாகி, கல் நிலை அடைகிறது. இந்நோய், குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்பட வாய்ப்புண்டு. மருத்துவ முறை. இந்நோய் சாதாரணமாக கால் சிரைகளிலேயே வரும். ஆகையால், காலை உயரமாகத் தூக்கி வைத்துக் கொண்டு படுக்க வேண்டும். சிரை அழற்சியும், தசை அழுகுதலும் வாராமல் தடுக்க, உயிர் எதிர் மருந்துகளை ஊசி மூலமாகவோ, வாய் வழியாகவோ செலுத்த வேண்டும். வலி இருந்தால், வலி போக்கும் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். இந்நோய் பெருஞ் சிரையிலோ, சிறு சிரையிலோ ஏற்படின், அறுவை மூலம் கல்லை எடுக்க வேண்டும். —சொ. நடராசன்