கதிர் வீச்சினைக் கண்டறியப் பயன் படும் ஒரு கருவி படிக எண்ணியாகும். உயர்ந்த மின் தடை எண் உள்ள ஒரு படிகம், இதில் உணர் நுட்பமுள்ள பொருளாகப் பயன் படுகிறது. 4–100 சதுர மில்லி மீட்டர் பரப்பும் 0.5–2 கி.மீ. தடிமனும் உள்ள மென் படலங்களாகப் படிகங்கள் உருவாக்கப் படுகின்றன.கதிர் வீச்சினால் வெளியிடப் படும் மின்னூட்டங்களை ஏற்க, ஏறத் தாழ 10⁴ வோல்ட்/செ.மீ. அளவுள்ள மின் புலம் பயன் படுகிறது. படிக எண்ணி (Crystal counter), சந்தி எண்ணி ஆகிய இரு வகை எண்ணிகளும் ஒரே வகையானவை. சந்தி எண்ணியில் எதிர்ச் சார்பு பெற்ற சந்தி ஓர் உயர் மின் தடை எண் உள்ள அழிப்புப் பகுதியை ஏற்படுத்துகிறது. அதே சமயத்தில், எதிர்ச் சார்பு (reverse bias) மின்னூட்டத்தைச் சேகரிக்கும் உயர்ந்த மின் புலத்தையும் கொடுக்கிறது. படிக எண்ணியில் உயர்ந்த மின் தடை எண் அடிப்படை படிகப் பொருளிலிருந்தே கிடைக்கிறது. வைரம், வெள்ளி, குளோரைடு, சிங்க் சல்ஃபைடு, தால்லியம் அயோடைடு, தால்லியம் குளோரைடு, காட்மியம் டெல்லூரைடு, மெர்க்குரிக் அயோடைடு, ஆகிய இரண்டு படிகங்களும் மிகவும் சிறந்தவை. சிலிக்கன் அல்லது ஜெர்மானியத்தை விட, அவை காமாக் கதிர்களை நன்கு உட்கவர்கின்றன. மேலும் அவை மிக அகலமான பட்டை இடைவெளி உடையவை. காட்மியம் டெல்லூரைடின் பட்டை அகலம் 1.45 எலெக்ட்ரான் வோல்ட், மெர்க்குரிக் அயோடைடிற்கு 2.15 எலெக்ட்ரான் வோல்ட் ஆகும். பட்டை அகலம் மிகுதியாக இருந்தால், கசிவு மின்னோட்டம் குறைக்கப் பட்டு, அறை வெப்ப நிலையில், காமாக் கதிர்களை மிக அதிகப் பகு திறனுடன் கண்டறிய இயலும். ஒரு படிக எண்ணியின் அடிப்படை மின் சுற்றினைப் படம் விளக்குகிறது. மின்னேற்றம் பெற்ற ஒரு துகள் படிகத்தினுள் நுழையும் போது, அது எலெக்ட்ரான் நேர் மின் துளைகளைத் தோற்றுவிப்பதன் மூலம், தன் ஆற்றலை இழக்கிறது. படிகத்தினுள் வரும் காமாக் கதிர், படிகத்தின் அணுவுடன் வினை புரிகிறது. இந்த வினை ஒளி மின் விளைவு காம்ப்டன் விளைவு அல்லது இரட்டைத் துகளாக்கம் (pair production) ஆகிய ஏதாவது ஒன்றாக இருக்கலாம். இவ்வினையைப் பொறுத்து, காமாக் கதிர், அதனுடைய ஆற்றல் முழுவதையுமோ, ஒரு பகுதியையோ, ஓர் எலெக்ட்ரானுக்கு அல்லது ஓர் எலெக்ட்ரான்–பாசிட்ரான் இரட்டைக்குக் கொடுக்கும். இவ்வாறு ஏற்படுத்தப் படும் மின்னேற்றம் பெற்ற துகள்கள், அவற்றின் பங்கிற்கு எலெக்ட்ரான்–நேர் மின் துளை இரட்டைத் துகள்களைத் தோற்றுவித்து விட்டு, ஆற்றலை இழக்கின்றன. இவ்வாறு தோற்றுவிக்கப் படும் எலெக்ட்ரான்–நேர்மின் துளைத் துகள்கள் எண்ணிக்கை படிகத்தில் வந்தடைந்த ஆற்றலுக்கு, நேர் விகிதத்தில் இருக்கும். படிகத்தில் ஓர் எலெக்ட்ரான்–நேர்மின் துளை இரட்டை தோற்றுவிக்கப் படும் போது, அந்த எலெக்ட்ரானும், நேர் மின் துளையும், மின் முனைகளில் சம அளவு எதிர் மின்னூட்டங்களைத் தூண்டுகின்றன. எலெக்ட்ரான், நேர் மின் முனையை நோக்கி நகரும் போது, அது அந்த மின் முனையின் மீது தூண்டும் நேர் மின்னூட்டம் சீராக அதிகரிக்கிறது. செயலுறு பெருக்கி, பின்னூட்ட மின் தேக்கி வழியே, இந்த மின்னூட்டத்தைக் கொடுக்கிறது. இந்த மின் தேக்கி படத்தில் காட்டியுள்ளது போல் மின்னூட்டம் பெறுகிறது. ஏற்பி மின்வாய் மீதான நேர் மின்னூட்டம் பெரும மதிப்பை அடைந்து, எலெக்ட்ரான் ஏற்கப் படும் போது, அம்மின்னூட்டம் அழிக்கப் படுகிறது. அதே சமயத்தில், நேர் (மின் துளை ஏற்கும் மின் முனை மீது ஓர் எதிர்) மின்னூட்டத்தைத் தூண்டுகிறது. நேர் மின் துளை எதிர் மின் முனைக்குச் செல்லும் போது, இந்த மின்னூட்டம் சீராகச் சுழி நிலையை அடைகிறது. செயலுறு பெருக்கியிலிருந்து, நேர் மின்னூட்டம் செலுத்துவதன் மூலம், ஏற்பி மின் முனை மீது குறைந்து செல்லும் எதிர் மின்னூட்டத்திற்கு ஈடு செய்யப் படுகிறது. இதனால், மின்னூட்ட மின் தேக்கியில் மேலும் அதிகமான நேர் மின்னூட்டம் தோன்றுகிறது. கருவியின் வரம்பும், மேம்பாடும். நேர் மின்னேற்றம் மற்றும் எதிர் மின்னேற்றம் பெற்றுள்ள இரு வகை ஊர்தி மின்னூட்டங்களும் ஏற்கப் படும் போதுதான், மின்னூட்ட மின் தேக்கியில், இவற்றுள் ஒரு வகை மின்னூட்டத்திற்குச் சமமான மின்னூட்டம் தோன்றுகிறது. இவ்வாறு, இரு வகை ஊர்திகளையும் ஏற்க வேண்டி இருப்பது படிகத்தின் செயல்பாட்டைக் கடினமாக்குகிறது. அதாவது, இரு வகை ஊர்தி மின்னூட்டங்களும், படிகத்தின் வழியே சமமாக இயங்கும் நிலையில் படிகம் இருக்க வேண்டும். அப்போதுதான், படிகத்திற்குக் கொடுக்கப் பட்ட ஆற்றலுக்கு நேர் விகிதத்திலான வெளியீட்டு மின்னூட்டச் சைகை கிடைக்கும். அவ்வாறு, இரு வகை ஊர்தி மின்னூட்டங்களும் படிகத்தின் வழியே சமமாக இயங்கவில்லை எனில், வெளியீட்டு மின்னூட்டச் சைகை படிகத்திற்குக் கொடுக்கப் பட்ட, மின்னூட்டம் மற்றும் அவ்வாறு கொடுக்கப் பட்ட இடம் ஆகியவற்றால் தீர்மானிக்கப் படுகிறது. அந்நிலை யில், காட்மியம் டெல்லூரைடு, மெர்க்குரிக் அயோடைடு ஆகியவற்றின் மூலம் பெறப் படும் பகு திறன் (1) முழு அளவில் மின்னூட்டத்தை ஏற்க இயலாமை (2) உயர்ந்த கசிவு மின்னோட்டத்தினால் ஏற்படும் பேரிரைச்சல் (3) முன் பெருக்கி அமைப்பில் எலெக்ட்ரானியல் இரைச்சல் (4) மின்னூட்ட உற்பத்தியினை வரையறுக்கும் காரணிகள் ஆகியவற்றால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு உட்பட்டதாகி விடுகிறது. முழு அளவில் மின்னூட்டத்தை ஏற்க, ஏற்கும் மின் புலச் செறிவை, அதிகமாக்கினால் கசிவு மின்னோட்ட இரைச்சலும் மிகுதியாகிறது. முழு அளவில், மின்னூட்டத்தை ஏற்கும் ஆற்றலை அதிகரிக்க மேற்கொள்ளப் படும் மற்ற முறைகளில் சில (1) மின்னூட்டத் துடிப்பை வகைப் படுத்துதல். இயங்கும் ஊர்தி மின்னூட்டங்களில் (இவ்வகையில் எலெக்ட்ரான்களின்) எண்ணிக்கை மதிப்பிற்கு நேர் விகிதத்தில் உள்ள ஒரு துடிப்பை இது கொடுக்கிறது. (2) மிகச் சிறந்த பகு திறனை கொடுக்கும் புள்ளியைப்படிகத்தில் ஆராய்ந்து, அறுதியிடல் (3) எதிர் மின் முனைக்கு அருகில் குறைந்த ஆற்றல் உள்ள எக்ஸ் கதிர்களைச் செலுத்துதல், எலெக்ட்ரான்–நேர் மின் துளை இரட்டைகள் இந்த மின் முனைக்கு, மிக அருகில் தோற்றுவிக்கப் படுகின்றன. இந்த நேர் மின் துளைகள் சிக்கிக் கொள்வதால்தான், மின்னூட்டம் முழு அளவில் ஏற்கப் படுவதில்லை. அவ்வாறு சிக்கிக் கொள்ளும் நேர் மின் துளைகள் எதிர் மின் முனைத்கு மிக அருகில் இருப்பதால், மொத்த மின்னூட்டத் துடிப்பிற்கு அவற்றின் பங்கு மிகச் சிறியதாகி விடுகிறது. உணர் கருவியைக் குளிர்வித்தல், சார்பு மின்னழுத்தத்தைத் துடிப்பு மின்னழுத்தமாகக் கொடுத்தல், நிற மாலைகளை முதல் 20 நொடிகளுக்கு மட்டும் பதிவு செய்தல், படிகத்தை அகச் சிவப்பு ஒளியினால் ஒளியூட்டுதல் ஆகிய முறைகள் இக்கருவியின் செயல் திறனை மேம்படுத்தப் பயன் படுத்தப் படும் பிற வழிகள் ஆகும். படிக எண்ணிகளை நடைமுறையில் பயன் படுத்தும் போது, இம்முறைகள் அனைத்தும் பின்பற்றப் பட முடியாதவையாக இருக்கலாம். இருப்பினும், அவை சிறந்த வழிகள்தாம். படிகங்களை உருவாக்கும் முறைகளில் முன்னேற்றம் ஏற்படும் போது, படிகங்களின் தூய்மை, படிகத் தன்மையை அடைவதில் முழுமை ஆகிய பண்புகள் மிகவும் சிறப்படையும். இவற்றுடன், உணர் கருவிகளை அமைப்பதிலும் முன்னேற்றம் ஏற்படும் போது, ஜெர்மானியம் படிகத்திற்கு இணையான பகு திறனைக் கொடுக்கும் திறமையைப் படிக எண்ணிகள் அடையும். —ப. தர்மலிங்கம்