அம்ரி
amri
பாகிசுதானில் டாடு மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம்.
பாகிசுதானில் டாடு மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். சிந்துவெளி நாகரிகத்திற்கும் முற்பட்ட பண்பாட்டைக் கொண்டுள்ளது இந்நகரம். 1929–ஆம் ஆண்டு முதன் முதலாகச் சிந்துப் பகுதிகளைக் கள ஆய்வு செய்த என்.சி. மசும்தார் அம்ரியில் (Amri) அரப்பா நாகரிகத்தின் தடயங்கள் இருந்த மண்மேட்டில் சோதனைக் குழிகளை வெட்டி அகழாய்வு செய்தார். இவ்வாய்வின் பயனாக அரப்பா காலத்திற்கும் முந்தைய நாகரிகத்தின் தடயங்கள் கண்டெடுக்கப்பட்டன. அந்நாகரிகம் அது முதல் ‘அம்ரி நாகரிகம்’ என வழங்கப்பட்டது. மசும்தாருக்குப் பின் சே.எம். கேசல் (J.M. Casal) என்பவர் 1959–இல் அம்ரியின் பல்வேறு இடங்களில் அகழாய்வு மேற்கொண்டார். இப்பணி 1962 வரை நடைபெற்றது. இவ்வகழாய்வு இரண்டு மண்மேடுகளில் நடைபெற்றது. இவ்வகழாய்வின் பயனாக அம்ரி நாகரிகத்து மக்கள் இங்குப் பல காலம் வாழ்ந்திருந்தமை புலனாகியது.
இங்குக் கிடைத்துள்ள தொல்பொருள்களைக் கொண்டு பின்வருமாறு காலப்பாகுபாடு செய்யலாம்.
முதல் பண்பாட்டுக் காலம் அல்லது அம்ரி நாகரிகம்
இப்பண்பாட்டுக் காலம் முழுமையும் “அம்ரி நாகரிகம்” எனப்படும். இது சிந்துவெளி நாகரிகத்திற்கு முற்பட்ட மக்கள் வாழ்ந்த காலமாகும். இக்காலப் படிவுகளில் ஒன்பது மட்டங்கள் ஒன்றன்மேல் ஒன்றாக கிடைத்துள்ளன. இக்காலத்தினை அகழ்வாராய்ச்சியாளர்கள் முதற்காலம்–அ (Period–I A), முதற்காலம்–ஆ (Period I B), முதற்காலம்–இ (Period–I C), முதற்காலம்-ஈ (Period–I D) என நான்கு துணைக் காலங்களாகப் பிரித்துள்ளனர். இக்காலத்தின் தொடக்க முதல் இறுதி வரையிலும், இரு வண்ண ஓவியங்கள் கொண்ட பானை ஓடுகள் காணப்படுகின்றன. இவை அம்ரி நாகரிகத்திற்கே உரிய சிறப்புப் பண்பாடாகும். இவ்விரு வண்ண ஓவியங்கள் கொண்ட மட்பாண்டங்களை பலுசிசுதான் பகுதியிலிருந்த மக்கள் பயன்படுத்தினர். எனவே அம்ரி நாகரிக மக்கள் பலுசிசுதானுடன் தொடர்புடையவர்கள் என அறிஞர்கள் கருதுகின்றனர். இப்பண்பாட்டு மண்ணடுக்குகளின் அடிப்பகுதியில் கிடைக்கும் பானைகள் கையால் செய்யப்பட்டவை. செங்கல்லின் செந்நிறத்தை ஒத்தவை. இப்பானை ஓடுகளின்மீது கருப்பு வண்ணத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஓவியங்கள் பெரும்பாலும் வடிவியல் உருக்கொண்டவை. முதல் பண்பாட்டு மண்ணின் மேலடுக்குகளில் காணப்படும் பானைகள் சக்கரத்தின்
அம்ரி மண்மேடு அருகில் சிந்து நதியின் தோற்றம்
உதவியுடன் செய்யப்பட்டவை. இரு வண்ண ஓவியங்களைக் கொண்டவை. அம்ரி நாகரிகத்தின் காலம் ஏறத்தாழக் கி.மு. 3700 முதல் கி.மு. 3000 வரை இங்குச் சிறந்திருந்தது.
இரண்டாவது பண்பாட்டுக் காலப் படிவுகளில் அம்ரி நாகரிகத்துத் தொல்பொருள்களும், அரப்பா காலத்திய தொல்பொருள்களும் கிடைக்கின்றன. ஆகவே இக்காலத்தினை இவ்விரு நாகரிகத்திற்கும் இடைப்பட்ட காலம் எனலாம்.
மூன்றாவது பண்பாட்டுக் காலப்படிவுகளில் அம்ரி நாகரிகத்திற்குரிய தொல்பொருள் வழக்கொழிந்து அரப்பா நாகரிகத்துச் சின்னங்களே பெரிதும் காணப்படுகின்றன. இக்காலத்தில் கிடைக்கும் ஓடுகள் மொகஞ்சதாரோ, சங்குதாரோ ஆகிய இடங்களில் கிடைக்கும் பானை ஓடுகளைப் பெரிதும் ஒத்துள்ளது. இக்காலத்தினை நான்கு துணைப் பிரிவுகளாகப் பிரிந்துள்ளனர். மூன்றாவது பண்பாட்டுக் கால மண்ணடுக்குகளில் அரப்பா நாகரிகத்திற்கே உரித்தான கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட சிவப்பு ஓடுகள் அதிகம் கிடைத்தன. சூக்கர் (Jhukar) நாகரிகத்தின் சின்னங்களும் காணப்படுகின்றன. மூன்றாவது காலப்படிவுகளில் அரப்பா நாகரிகத்தின் படிப்படியான வளர்ச்சி நிலைகளை நன்கு அறியலாம். கி.மு. 2000–க்குப் பின் அரப்பா நாகரிகம் சிறிது சிறிதாக இங்கு மறையத் தொடங்கின.
நான்காவது காலப்படிவுகளில் கிடைக்கும் தொல்பொருள்களைக் கொண்டு இக்காலப் பண்பாட்டினை, சங்கர் பண்பாடு (Jhangar Culture) என அழைக்கின்றனர். இந்நாகரிகம் அம்ரிக்கு நீண்டகால இடைவெளிக்குப்பின் வந்திருக்க வேண்டும். இந்நாகரிகத்தின் காலத்தினை ஏறத்தாழக் கி.மு. முதல் ஆயிரத்தின் இடைப்பகுதி எனக் கொள்ளலாம். சங்கர் நாகரிகத்தை அடுத்து நீண்டகால இடைவெளிக்குப் பின் இசுலாம் காலத்திய தடயங்கள் இங்குக் கிடைக்கின்றன. இது ஐந்தாவது காலப் பண்பாடாகும். ஆகவே சங்கர் நாகரிகத்திற்குப் பின் நீண்டகாலமாக, அதாவது முசுலிம்கள் காலம்வரை இவ்விடத்தை மக்கள் வாழ்விடமாகக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது.டி.த.
துணை நூல்கள்
Bridget and Raymond Allchin, “The Birth of Indian Civilization, India and Pakistan before 500 B.C.” 1968.
Casal, J.M. Fovilles, “Amri”, 2 Vol., Paris, 1964.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 442)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h28tjdvu/
தமிழ்“அம்ரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/h28tjdvu/APA
Oliyon Research. (2026). அம்ரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h28tjdvu/MLA
"அம்ரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/h28tjdvu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment