உபதேச வெண்பா என்னும் நூல் திருவாவடுதுறை ஆதீனத்தின் மூன்றாம் பட்டத்தில் வீற்றிருந்த அம்பலவாண தேசிகர் என்பவரால் இயற்றப் பெற்றது. இவர் காலம் கி.பி. 15–ஆம் நூற்றாண்டு. திருவாவடுதுறை ஆதீனத்திற்குத் தனியாகவே பண்டார சாத்திரம் என்று பதினான்கு நூல்கள் உள்ளன. அவற்றுள் தசகாரியம், சன்மார்க்க சித்தியார் முதலிய பத்து நூல்களை இந்த ஆசிரியரே இயற்றியுள்ளார். அத்தொகுப்பினுள் இந்நூல் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. இந்நூல் மனம் தூயராகிச் சரியை, கிரியை, யோகங்களிற் படிந்து ஞரனம் கடைப்பிடிக்கும் முறை பற்றிக் கூறுவதாகும். ‘துடிதுடித்தோடும் மனத்தினை நிறுத்தித் தூயதாக் கண்டு அவண் தவத்துத் தொன்னெறி நின்று சுரர்க்கு அரிதாகும் சோதியன் ஞானத்தை வழங்கல் துகளறும் உபதேசத்து வெண்பாவாம்’ என்று இந்நூலைப் பற்றிச் சான்றோர் ஒருவர் கூறிய கருத்து இதன் பெருமையைத் தெற்றென விளக்கும். இந்நூல் 43 வெண்பாக்களாலாகியது. நூலினிறுதியிலுள்ள இரண்டு பாக்கள் இந்நூலைப் பற்றியனவாக அமைந்துள்ளன. பாக்கள் யாவும் சைவ சித்தாந்தத் தனிச் சிறப்பு, குருவின் பெருமை, தீக்கையின் விசேடம், சரியை, கிரியை, யோகம், ஞானச் சிறப்பியல்புகள், முத்திநெறி அடையும்வழி முதலியவை பற்றிக் கூறும் சிறப்பு வாய்ந்தவை. ஞானம் பரஞானம், அபரஞானம் என இருவகைப்படும். நூலறிவால் பெறப்படும் உலகியலறிவு அபரஞானம் என்றும், இறையறிவு பரஞானம் என்றும் சொல்லப் பெறும். பரஞானம் பெற முயல்வோர் அருளாளர் அருளிய ஞான நூல்களை நன்கு கற்க வேண்டும். அன்றியும், தக்க குரு ஒருவரை நாடிச் சென்று தீக்கை பெற வேண்டும். தீக்கை என்பது ஒருவனிடமுள்ள பல்வகைக் குற்றங்களையும் போக்கி நல்லாறு செலுத்தும் முறையாகும். பின்னர்த் தான் படித்தவற்றையும் குருவின் உபதேசங்களையும் மனத்துட் கொண்டு இறைவனைத் தியானித்து அவனருள் பெற முனைய வேண்டும். அதில் இடைவிடா முயற்சியின் பயனால் சிறந்த இன்ப அனுபவம் கிட்டும். இவ்வாறு இம்மூன்று படி முறைகளினால் உயர்ந்து, பின் நிட்டை கூடினால் அது இறையனுபவத்திற்குத் தக்க வழிகாட்டும். முத்திநிலை கிட்ட வேண்டும் எனில், உண்மையான வேட்கை வேண்டும். இன்றேல், அது வாய்க்காது என்றும், தேகத்தைப் பற்றியே கருதி அதனை ஓம்புவதையே பொருளாக் கொள்ளாது நன்மார்க்கம் சார்ந்து அறிவைப் பயன்படுத்தி முழுமுதற் பொருளாய அவனைத் தோய்தலே பேரின்பசுகம் ஆகும் என்றும் இன்னோரன்ன பல சிறப்பியல்புகளையும் விளக்கும் நூலாக விளங்குவது இவ்வுபதேச வெண்பாவாகும். இந்நூலை இயற்றிய அம்பலவாண தேசிகர் திருவாவடுதுறையில் சமாதியுற்றார். இரா.ச.