மனிதர்களுக்குத் தனித்தன்மை உண்டு; அவர்கள் வாழ்க்கையின் பயன்மதிப்புகளையும் அவற்றின் பொருளையும் அறிவதற்கு விரும்புகின்றனர்; தன்னிறைவையும் சுதந்திரத்தையும் நாடுகின்றனர் என்பன இதன் அடிப்படைக் கொள்கைகள் ஆகும். இக்கொள்கைகள் மனித இனநல உளவியலை (Humanistic Psychology) ஒத்திருக்கின்றன. சமூக, அறிவியல், அரசியல், அதிகார வளர்ச்சிகளினால் மனிதனின் தனித்தன்மை பெரிதும் கட்டுப்படுத்தப்படுகின்றது என்று இருத்தல்நிலை உளவியலார் கருதுகின்றனர். அ. வாழ்க்கையும் அதன் உட்பொருளும் மனிதத் தன்மையை இழக்கச் செய்யும் திறன்களாகச் சமூகக் கட்டுப்பாடுகளும் அறிவியல் வளர்ச்சியும் அமைந்துவிடக் கூடும் என்பதே இருத்தல் நிலை உளவியலின் (Existential Psychology) மையக் கருத்தாகும். மனிதனின் அக அனுபவங்களின் அடிப்படையில் எழும் சிக்கல்களைத் தீர்வு செய்வதற்கு அறிவியல் வளர்ச்சி பயன்படாது என்றும் இருத்தல் நிலையினர் கருதுகின்றனர். பொருளமைந்த வாழ்க்கையினை வாழ்தலே மனிதனின் குறிக்கோளாகும். இத்தகைய வாழ்க்கையில் அவன் சமூகத்திற்குப் பயன்படும் செயல்களைச் செய்தல் வேண்டும். இருத்தல்நிலை உளவியலாரின் அடிப்படைக் கருத்துகள், எய்டகர் (Heidegger), சாசுபர்சு (Jaspers), கீர்க்கெகார்டு (Kierkegaard), சாத்தர் (Satre) போன்ற ஐரோப்பியத் தத்துவ அறிஞர்களின் கருத்துகளினின்றும், பால்தில்லிக்கு (Paul Tillich) போன்ற சமயச் சிந்தனையாளரின் கருத்துகளினின்றும் தோன்றியவை ஆகும். இலாங்கு (Laing R.D.), மே (May, Rollo) ஆகியோர் இருந்தல் உளவியலார்களுள் சிலர். உலகில் நாம் தோன்றுவது நம் விருப்பப்படி நிகழ்வதன்று. நம் பிறப்பில் நமக்கு அதிகாரம் இல்லை. நம் பிறப்பை நாமே கட்டுப்படுத்த முடியாது. ஆனால், பிறந்தபின் நம் வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக் கொள்கிறோம் என்பதில் நமக்குப் பெரும் பங்கு உண்டு என்பது இருத்தல் நிலை உளவியலின் அடிப்படைக் கருத்துகளுள் ஒன்று ஆகும். எடுத்துக்காட்டாக, இன்றைய இளந்தலைமுறையினருள் ஒருவன் தலைமுறை இடைவெளி காரணமாகத் தம் பெற்றோருடனோ வேறு பெரியவர்களுடனோ கருத்து வேறுபாடு கொள்ள, அதன் காரணமாக எதிர்ப்பு மனப்பான்மை அவனிடம் தோன்றினால், அவன் நீவிர் என்னைப்பற்றிக் கூறும் குற்றச்சாட்டுகள் எல்லாம் நன்றே. ஆனால், நான் பிறக்க வேண்டும் என்று விரும்பவில்லையே என்று சலித்- துக் கொள்வதைக் கேட்கிறோம். இருத்தல் நிலை உளவியலார் இத்தகைய சொல்லாடலின் உட்கருத்தை எதிர்க்கின்றனர். இளையோன் விரும்பியிருந்தாலும் விரும்பியிராவிட்டாலும் அவன் இவ்வுலகில் இப்பொழுது இருப்பது உண்மை. தன்னுடைய இருத்தலைப் (Existence) பயனுடையதாக்குவது அவன் பொறுப்பாகும். எவ்வகையான வாழ்க்கையை வாழ்கிறான் என்பது அவனைப் பொறுத்தே இருக்கிறது. அது பொருளற்ற, அழிவு நோக்கமைந்த வாழ்க்கையா? பொருள் பொதிந்த ஆக்கவழியமைந்த வாழ்க்கையா? என்பது அவன் கையில் இருக்கிறது. இக்காலத்தில் சமூக மாற்றங்களின் காரணமாக மரபு வழியமைந்த பயன் மதிப்புகளும் நம்பிக்கைளும் எதிர்க்கப்படுகின்றன. இத்தகைய சமூகத்தில் தனி மனிதன் தன் வாழ்க்கையைப் பொருளமைந்ததாக அமைப்பது எளிதன்று. இன்றைய சமூகத்தில் மனிதர்கள் தம் வாழ்க்கையின் பயன்மதிப்புகளை உணர்வதிலும் தம் வாழ்க்கையைப் பொருளமைந்ததாக அமைத்துக் கொள்வதிலும் பல உளச்சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் பல மனவெழுச்சிப் போராட்டங்களையும் உளமுரண்பாடுகளையும் ஆன்மிக அழுத்தங்களையும் அனுபவிக்க நேரிடுகின்றது. இந்தப் போராட்டங்களுக்கு நாம் இரு அணுகுமுறைகளில் தீர்வு காணலாம். ஒன்று, தன்னிறைவு தேடி அவற்றை விட்டொழித்துச் சமூகத்தில் பெரும்பான்மையினருடன் கண்மூடித்தனமாக இணைந்து, நம்மைச் சூழ்ந்த குழுவினருடன் நாம் ஒன்றிவாழ்தல். மற்றது, நம் வாழ்க்கையின் உட்பொருளை நாமே மறுமுறை திறனாய்வு செய்து, புதிய வரையறைகளைக் கண்டுபிடித்தல். இவ்விரண்டு அணுகுமுறைகளுள் பதற்ற நிலை மனக்குலைவு போன்ற கோளாறுகளுக்குக் காரணமாக அமையலாம் என்று கருதப்படுறது. ஆ. தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு, சுதந்திரம், வீரம் நம் வாழ்க்கையின் பயன்மதிப்புகள் நம் வாழ்க்கை முறையின் மீது பெரும் செல்வாக்குக் கண்டுள்ளன. ஆதலின், நம் பயன்மதிப்புகள் நம் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. ஆதலின், நம் வாழ்க்கைக்கு நாமே காரணம் என்று கூறிவிடலாம். சார்த்துரே இதனை, ‘என் தேர்ந்தெடுப்புகளே நான்’ என்று விளக்குகிறார். எத்தகைய மனிதனாக இருக்க வேண்டும் என்று தேர்ந்தெடுப்பதில் நாம் முழுச்சுதந்திரம் உள்ளவர்களாக இருக்கிறோம். நம் வாழ்க்கைக்கு நாமே சிற்பிகள் ஆகின்றோம். இதனை மாரிசு (Morris) என்னும் உளவியல் அறிஞர் பின்வருமாறு விளக்குகிறார். 1. நான் தேர்ந்தெடுப்பவனாகவே இருக்கிறேன். தேர்ந்தெடுப்பதை என் வாழ்க்கை முழுவதும் நான் தவிர்க்க முடியாதவனாக இருக்கிறேன். 2. என் வாழ்க்கையின் இலக்குகளை அமைத்துக் கொள்வதில் எனக்கு முழுச் சுதந்திரம் இருப்பதால், நான் கட்டுப்பாடற்றவனாக இருக்கிறேன். என் தேர்ந்தெடுப்புகள் என் வாழ்க்கையை நான் எவ்வாறு வாழ்கிறேன் என்பதைத் தெரிவிக்கின்றன. 3. என் தேர்ந்தெடுப்புகளுக்கு நானே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டியவனாக இருக்கிறேன். ஆதலின், நான் ஒரு பொறுப்புடையவனாக இருக்கிறேன். தேர்ந்தெடுக்கும் பொறுப்புகளும் அவற்றையொட்டிய சிக்கல்களும் வாழ்க்கையில் பல நேரங்களில் சுமையாகிவிடுகின்றன. சிக்கலான சூழ்நிலைகளில் நிறைவு தரும் பயன்மதிப்பு எது என்று கண்டுபிடிப்பது கடினமான செயலாகும். இதற்கு மிகுந்த மனவலிமையும் தளராமையும் தேவைப்படும். இக்காரணங்களினால் நம் வாழ்க்கையை நாமே தேர்ந்தெடுப்பதற்கும், அமைத்துக் கொள்வதற்கும் நமக்கு இருக்கும் சுதந்திரம் ஒரே நேரத்தில் நம்முடைய இன்னலாகவும் மாண்பாகவும் அமைந்துவிடுகிறது. சிலர் இத்தகைய சுதந்திரத்தை விரும்புவதில்லை. தன்னிறைவு அடைவதற்காகத் தாமே சுதந்திரமாக இயங்காமல், சமூகக் குழு அல்லது சமய அமைப்புப் போன்ற ஏதேனும் ஒன்று தமக்கு அறிவுரை கூறி வழிகாட்டவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இத்தகைய சார்புநிலை காரணமாக இவர்கள் தம் வாழ்க்கையில் தன்னிறைவும் சுதந்திரமும் இழந்து விட்டதை உணர்ந்து கொண்டால் அதற்காக எவரையும் பொறுப்பாக்கிவிட முடியாது. ஏனென்றால், தன்னுடைய சுதந்திரத்திலிருந்து தானே விடுதலை பெறுவதும், தன்னுடைய பொறுப்பிலிருந்து விலகிச் கொள்வதும் வாழ்க்கையின் மீது நம்பிக்கையின்மையைக் குறிப்பனவாகும். இ. பொருள், பயன்மதிப்புகள், கடப்பாடுகள் தம் வாழ்க்கைககு நிறைவு தரும் பயன்மதிப்புகளை உணர்ந்து, அவற்றின் வழித் தம் வாழ்க்கையைச் செலுத்துதலைப் பொருளறி விழைவு (Will–to–meaning) என்று இருத்தல் நிலை உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதுவும் கடினமான செயலாகும். ஏனெனில், பொருள் பொதிந்தனவாக ஒருவரால் கருதப்படும் பயன்மதிப்புகள் வேறொருவருக்குப் பொருளற்றனவாக இருக்கக்கூடும். ஆதலின், ஒவ்வொருவரும் தத்தம் வாழ்க்கைக்கு உரிய பயன்மதிப்புகளையும், அவற்றுடன் தொடர்பு கொண்ட வாழ்க்கை முறைகளையும் தெளிந்துணர்தல் வேண்டும். இருத்தல்நிலை உளவியலின் இத்தகைய கருத்து, சமூக அறநெறிக் கோட்பாடுகளை எதிர்ப்பதாகத் தோன்றலாம். மனிதர்களின் பயன்மதிப்புகளிடையே பெரும் வேறுபாடுகள் இருந்தால், அத்தகைய நிலை சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் இடையூறாக இருக்கும். இயல்பு நிலை வாழ்க்கையைப் பயனுடைய முறையில் வாழ்பவர்களின் பயன்மதிப்புகளிடையே பெரும் வேறுபாடுகள் இருக்கமாட்டா என்பதே இருத்தல்நிலை உளவியலின் முடிவு. இருத்தல் நிலைக் கொள்கை கடப்பாடுகளுக்குச் சிறப்பிடம் தருகிறது. வாழ்க்கையிலிருந்து நாம் எதை அடைய முடியும் என்பது தம் தலையாய குறிக்கோள் அன்று. நாம் வாழ்க்கைக்கு எதனைக் கொடுக்க முடியும் என்பதே நம் குறிக்கோளாகும். சமூகத்திற்குப் பயனுடைய குறிக்கோள்களும் தேர்ந்தெடுப்புகளும் நம் வாழ்க்கையில் அமைந்திருந்தால்தான் நாம் தன்னிறைவு அடைய முடியும். ஈ) இருத்தல் நிலைவழிப் பதற்றமும் ஒன்றுமிலாமையை எதிர்நோக்குதலும் இலாமை என்பது இருத்தல் நிலை உளவியலின் கருத்துகளுள் ஒன்றாகும். இலாமையின் இறுதி வடிவம் இறப்பு ஆகும். மனிதர்கள் மட்டுமே மரணத்தின் முழுமையான உணர்வுடன் வாழ்கின்றனர். வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் நாம் சாவு என்னும் இறுதிக்கட்டத்தின் அல்லது அழிவின் ஓரமாகவே சென்றுகொண்டிருக்கிறோம். இந்த உணர்வே இருத்தல் என்னும் நிலையின் முழுப் பொருளையும் நமக்கு உணர்த்துகிறது. இவ்வுணர்வு நம் வாழ்க்கைக்குப் புதிய பரிமாணத்தையும் கொடுக்கிறது. சாவு, இலாமை, அழிவு ஆகிய நிலைமைகள் பற்றிய உணர்வே ‘இருத்தல்’ நிலைப் பதற்றத்திற்குக் காரணமாகிறது. இருத்தல் நிலைப் பதற்றம் (Existential Anxiety) என்பது நாம் தன்னிறைவடைந்த, பொருளமைந்த வாழ்க்கையினை வாழ்கிறோமா என்ற கவலையை மிகுதியாக ஏற்படுத்தும் உளநிலையாகும். வாழ்வதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும். வாய்ப்பினை வீணாக்கி விடாமல், அழிவுக்கு வெற்றி கிட்டாதவாறு பொருளுடைத்தாகிய வாழ்க்கையை வாழ்வதே இத்தகைய பதற்றத்தை அகற்றும் வழியாகும். நரம்புவழி உள நோயாளிகளுக்கு (Neurotics) இருத்தல் நிலை உளவழி மருத்துவம் செய்வோரும் இத்தகைய உணர்வினை நோயாளிகளின் உள்ளத்தில் தோற்றுவிக்கின்றனர். இத்தகைய அணுகுமுறையில் செய்யப்படும் உளவழி மருத்துவம் இருத்தல் நிலை உளவழிமருத்துவம் (Existential Therapy) என்று குறிப்பிடப்படுகிறது. கே.வி.கா. துணை நூல் Buckley. W., Modern Systems Research for the Behavioural Scientist, Aldine, Chicago, 1968.