இந்தியாவின் நேராட்சிப் பகுதிகளுள் ஒன்று. இந்திய ஒன்றியம் 22 மாநிலங்களாகவும் ஒன்பது நேராட்சிப் பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்பது நேராட்சிப் பகுதிகளுள் ஒன்றுதான் இலட்சத் தீவுகள். இருப்பிடம் இலட்சத் தீவுகள், அரபிக்கடலில் கேரளாவின் மேற்குக்கரையில் அமைந்துள்ள 27 தீவுகளின் கூட்டமாகும். இங்குள்ள தீவுகளுள் பதினேழு தீவுகளில் மட்டிலுமே மக்கள் வாழ்கிறார்கள். இலட்சத் தீவுகளின் மக்கள் தொகை 40,249 (1981). இதன் தலைநகரம் கவரட்டி; இங்குச் சட்டமன்றம் கிடையாது. மக்களின் பேச்சு மொழி மலையாளம். மொத்தப் பரப்பு 32 ச.கி.மீ. வடகோடியில் உள்ளது அமின்திவி (Amindivi) தீவாகும். ஏனைய தீவுகளை இலட்சத் தீவுகள் என்பர். இதில் மினிகாய் (Minicoy) தீவும் அடங்கும். அந்தராத்துத் (Androth) தீவு இவற்றுள் ஒன்று. இதன் பரப்பளவு 4.8 ச.கி.மீ. இதுதான் கேரளாவிற்கு அண்மையிலுள்ளது. இந்தியாவின் நேராட்சிப் பகுதியான இது கேரளாவின் உயர்நீதி மன்றத்தின் கண்காணிப்பிலுள்ளது. இலட்சத் தீவுகளின் சிறப்பான வேளாண்மைப் பயிராகக் கருதப்படுவது தென்னைதான். இதைத் தவிரப் பால்பண்ணைத் தொழிலும் கோழிப்பண்ணைத் தொழிலும் இங்கு நடைபெறும் பிற தொழில்களாகும். மீன்பிடித்தல் மக்களின் சிறப்பான தொழிலாகும். துனா, சுறா போன்ற மீன் வகைகள் இத்தீவுகளையடுத்துள்ள கடல்களில் மிகுதியாகக் கிடைக்கின்றன. இந்தியாவிலேயே மீன் உற்பத்தியில் இத்தீவுகள் முதலிடம் வகிக்கின்றன. கயிறு திரித்தல், கயிற்று நெசவு போன்ற தொழில்களும் சிறப்பானவை. நார் உரித்தல் தொழிலைக் கொண்ட இரு ஆலைகளும், நூல் நூற்பு ஆலையொன்றும் இங்குள்ளன. வாசுகோட காமா என்னும் போர்ச்சுகீசிய மாலுமி இத்தீவுகளை கி.பி. 1498–ஆம் ஆண்டில் கண்டுபிடித்து, அங்குப் போர்த்துகீசிய ஆட்சியையும் நிலைநாட்டினார். இது கி.பி. 1545 வரை நீடித்தது, பின்னர் அங்குள்ள மக்கள் போர்ச்சுகீசிய ஆட்சியை எதிர்த்துக் கலகம் செய்தார்கள். அதனால், இத்தீவுகள் கண்ணனூர் அரசரின் ஆளுகைக்குள்ளாயின. சீரங்கப் பட்டண உடன்படிக்கை கி.பி. 1792–இல் எற்பட்டது. அதன்படி இத்தீவுகளின் தென்பகுதி மாப்பிள்ளை தலைவர் ஒருவரின் ஆட்சியின்கீழ் வந்தது. அவர் ஒவ்வோராண்டும் ஆங்கிலேயருக்குக் கப்பம் கட்டவேண்டுமென்றும் முடிவாயிற்று. எஞ்சிய தீவுகள் ஆங்கிலேயர் வசமாயின. தென் பகுதித் தீவுகளும் கி.பி. 1877–ஆம் ஆண்டிலிருந்து ஆங்கிலேயர் கைவசம் வந்தன. இந்நிலை 1956–ஆம் ஆண்டு வரை நீடித்தது. இலட்சத் தீவுகள் அனைத்தும் 1956–இலிருத்து இந்திய ஒன்றியத்தின் நேராட்சிப் பகுதிகளாயின. தானிய வகைகள், பருப்பு, வாழை, காய்கறிகள் போன்றவை இங்கு விளைகின்றன. கொப்பரைத் தேங்காயைத் தந்து கேரளாவில் அரிசியைப் பெறுகின்றனர். இலட்சத் தீவுகளுள் கவரட்டி (Kavaratti), மினிகாய் (Minicoy), கில்ட்டன் (Kiltan), செட்லத்து (Chetlat), அகாத்தி (Agatti), அந்தராத்து (Androth), கல்பேனி (Kalpeni), அமினி (Amini), கடமட்டு (Kadmat) என்பன குறிப்பிடத்தக்கவை. இலக்கத்தீவு, மினிகாய், அமின்திவித் தீவுகள் என்னும் பெயர், 1973–ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நாளன்று இலட்சத் தீவுகள் என்று மாற்றப்பட்டது. அரசு திருத்தியமைத்த ஆண்டான 1956 அக்டோபர் வரை இவை சென்னை மாநிலத்தின் பகுதியாக இருந்தன. இலட்சத் தீவுகள் 1956 நவம்பர் முதல் நாளன்று, இந்திய ஒன்றியத்தின் தனிப் பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.