உயில்வழிக் கொடை
uyilvaḻik koṭai
உயில்வழிக் கொடை என்பது ஓர் உயிலின் வாயிலாகக் கொடுக்கப்படும் கொடை எனப்படும்.
உயில்வழிக் கொடை என்பது ஓர் உயிலின் வாயிலாகக் கொடுக்கப்படும் கொடை எனப்படும். அசைவியல் பொருளையோ அசையாப் பொருளையோ உயில்வழிக் கொடையாக (Legacy or Beques) அளிக்கலாம். குறித்துரைக்கப்பட்ட உயில்வழிக் கொடை (Specific Legacy), பொதுத் தன்மையுள்ள உயில்வழிக் கொடை (General Legacy) என இக்கொடை இரு வகைப்படும். இவையன்றி, சுட்டிக் காட்டும் உயில்வழிக் கொடை (Demonstrative Legacy) என மூன்றாம் வகை ஒன்றும் உளது.
குறித்துரைக்கப்பட்ட உயில்வழிக் கொடை 1925–ஆம் ஆண்டு இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் 142–ஆம் பிரிவில் வரையறுக்கப்பட்டுள்ளது. கொடையளிப்பவரின் சொத்தில் குறிப்பாகக் கண்டுணரத்தக்க சொத்தாகவும் முழுச் சொத்திலிருந்து தனியே வேறுபடுத்திக் காட்டக் கூடியவாறு போதுமான விளக்கம் கொண்டதாகவும் இக்கொடை அமையும். ‘என் தங்கச் சங்கிலியைத் தங்களுக்குத் தருகிறேன்’ என்று ‘அ’ என்பவர் ‘ஆ’ என்பவருக்கு உயில் எழுதி கொடுப்பது குறித்துரைக்கப்பட்ட உயில்வழிக் கொடையாகும்
பொதுத் தன்மையுள்ள உயில்வழிக் கொடை என்பது கொடையளிப்பவரின் குறிப்பிட்ட சொத்துகளிலிருந்தன்றி மொத்தச் சொத்துக்களிலிருந்து கொடுக்கப்படுவதாகும். அது அவர்தம் சொத்தின் ஒரு பாகமாகவோ அவ்வாறு இல்லாமலோ இருக்கலாம். ‘இ என்பவர் எனக்குப் பரிசாகக் கொடுத்த வைர மோதிரம்’ என்று குறிப்பிடாமல், என் ‘வைர மோதிரம்’ அல்லது ‘ஒரு குதிரை’ என்பதுபோல் பொதுத் தன்மை கொண்டதாகக் கொடையை அளித்தால், அது பொதுத் தன்மையுள்ள உயில்வழிக் கொடையாகும்.
குறித்துரைக்கப்பட்ட கொடைவழிக் கொடைப் பொருள் இல்லை என்றாலோ அது வேறு உருவமாக மாற்றப்பட்டிருந்தாலோ பொதுச் சொத்திலிருந்து உயில்வழிக் கொடையாளி ஏதும் பெற முடியாது. ஆனால், பொதுத் தன்மையுள்ள கொடையாளி சொத்து அனுமதிக்கும் வரை அதனைப் பெற உரிமை உண்டு.
உயில் எழுதியவர் (Testator) ஒரு குறிப்பிட்ட தொகையையோ குறிப்பிட்ட அளவு வேறு ஏதாவது ஒரு பொருளையோ தந்து, அது ஒரு குறிப்பிட்ட நிதியிலிருந்தோ இருப்பிலிருந்தோ பெறப்பட வேண்டும். ஒன்று உயில்வழியாகக் கொடுக்கப்படும் கொடை சுட்டிக் காட்டும் உயில்வழிக் கொடை (Demonstrative Legacy) ஆகும் என 1925–ஆம் ஆண்டு இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் 150–ஆம் பிரிவு குறிப்பிடுகிறது. ‘இ’ என்பவர் எனக்குத் தர வேண்டிய உரூ. 2000–இல் உரூ. 1000 ‘ஆ’ என்பவருக்குத் தரப்பட வேண்டும் என்று ‘அ’ என்பவர் உயில் எழுதினால் அது சுட்டிக்காட்டும் உயில்வழிக் கொடையாகும்.
உயில்வழிக் கொடையாளிக்கு ஒரு குறிப்பிட்ட சொத்தினை அளித்தால் அது குறித்துரைக்கப்பட்ட உயில்வழிக் கொடையாகும். அவ்வாறு இல்லாமல் குறிப்பிட்ட சொத்திலிருந்து அது பெறப்பட வேண்டும் என்றிருந்தால் அது சுட்டிக் காட்டும் உயில்வழிக் கொடையாகும். பொதுத் தன்மையுள்ள உயில்வழிக் கொடை போன்று நிபந்தனைகளற்று இருப்பதும், எந்தச் சொத்திலிருந்து அது பெறப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருத்தலும் இதன் சிறப்பியல்புகள் ஆகும். சார்மன் என்பார் சுட்டிக் காட்டும் உயில்வழிக் கொடையைப் பொதுத் தன்மையுள்ள உயில்வழிக் கொடையின் ஓர் உட்பிரிவாகக் கொள்ளலாம் என்று கூறுகிறார்.
ஒரு சொத்தினின்று குறித்துரைக்கப்பட்ட மற்றும் சுட்டிக் காட்டும் உயில் வழிக் கொடைகள் அளிக்கப்பட வேண்டும் என்றிருப்பின், முதலில் குறித்துரைக்கப்பட்ட உயில்வழிக் கொடையும் எஞ்சியதில் சுட்டிக் காட்டும் கொடையும் கொடுக்கப்பட வேண்டும். எஞ்சியுள்ள சொத்தில் சுட்டிக் காட்டும் உயில்வழிக் கொடையினை முழுமையாகக் கொடுக்க முடியாவிடில், உயில் எழுதிக் கொடுத்தவரின் பொதுச் சொத்திலிருந்து அது கொடுக்கப்பட வேண்டும் (பிரிவு 151).
கொடுக்கப்பட்ட உயில்வழிக் கொடைகள் சில நேரங்களில் சில காரணங்களினால் செயலுக்கு வாராமல் போவது உயில்வழிக் கொடை அழிவறுதல் (Ademption of Legacy) எனப்படும், இது 1925–ஆம் ஆண்டு இந்திய வாரிசுரிமைச் சட்டத்தின் 152 ஆம் பிரிவில் விளக்கப்பட்டுள்ளது. குறித்துரைக்கப்பட்ட கொடை உயில் எழுதியவருக்கு அவரது மறைவின் போது சொந்தமற்றுப் போகும் போதோ வேறுவிதமான சொத்தாக மாற்றப்படும்போதோ உயில்வழிக் கொடை அழிகிறது. அதாவது, உயிலின் செயற்பாட்டிலிருந்து கருப்பொருள் விலக்கப்படுவதன் காரணமாக அது செயலுக்கு வருவதில்லை.
குறித்துரைக்கப்பட்ட உயில்வழிக் கொடை மட்டுமே அழிவுறும். சுட்டியுரைக்கப்பட்ட உயில்வழிக் கொடை அழிவுறுவதில்லை. உயில்வழிக் கொடை அழிவுறுதல் பற்றிய விதிகளை 152 முதல் 166 வரையிலான பிரிவுகள் எடுத்துரைக்கின்றன. உயில்வழிக் கொடை பொதுவாக இரு வகைகளில் அழிவுறலாம். முதலாவதாக, உயில் எழுதியவரின் செயலினாலோ எண்ணத்தினாலோ அன்றி இயற்கைச் செயலினால் கெ௱டையின் கருப்பொருள் அவருக்கு உரியதாக இல்லாமல் போவதால் ஏற்படலாம். இரண்டாவதாக, உயில் எழுதியவரின் செயலினாலோ எண்ணத்தினாலோ கொடைப் பொருள் மறைவதால் ஏற்படலாம். அதாவது, சொத்தினை விற்பதன் மூலமோ வேறொருவருக்குக் கொடுத்து விடுவதன் மூலமோ இது நிகழலாம். ஆக, கொடையின் கருப்பொருள் i) இல்லாமற் போகும் போது, ii) அவருக்கு உரியதாக இல்லாமல் போகும் போது, iii) முற்றிலும் மாறுபட்ட சொத்தாக மாற்றப்படும் போது உயில்வழிக் கொடை அழிவுறுகிறது. இவ்வாறு கொடை அழிவுறுவதால் அது பகுதியாகவோ முழுமையாகவோ மறைகிறது. ஆனால், உயிலின் மற்ற எந்த வாசகங்களையும் இது பாதிப்பதில்லை.
அழிவுறுதலுக்குச் சில விலக்குகளும் உண்டு. இவை இந்திய வாரிசுரிமைச் சட்டத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 998)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gu5wuu8g/
தமிழ்“உயில்வழிக் கொடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gu5wuu8g/APA
Oliyon Research. (2026). உயில்வழிக் கொடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gu5wuu8g/MLA
"உயில்வழிக் கொடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gu5wuu8g/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment