இலவசச் சட்ட உதவி
ilavacac caṭṭa utavi
மனித இனம் தோன்றிப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆயின.
மனித இனம் தோன்றிப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆயின. மனிதன் தோன்றிய காலத்தில் மக்கள் நாகரிகமற்ற முறையில் விலங்குகளோடு விலங்காகக் காட்டு மிராண்டிகளாக வாழ்ந்தார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கைத் தேவைகளுக்காகத் தங்களுக்குள் போட்டியும் போராட்டமுமாக வாழ்ந்து வந்தார்கள்.
மக்கள் நாகரிகம் அடைய அடையப் பலரும் கூடி வாழ்கிற சமாதான வாழ்வுக் கொள்கை இடம் பெறலாயிற்று. மன்னர்களாலும் கொடுங்கோலர்களாலும் ஆளப்பட்டு வந்த இந்தியர், தமக்கென ஒரு மக்களாட்சி–குடியரசு நாடாகப் பாரத நாட்டை உருவாக்கிக் கொண்டுள்ளனர். இந்த நாட்டின் அரசியல் அமைப்பு டாக்டர் அம்பேத்கர், சர் அல்லாடி கிருட்டிணசாமி போன்ற சட்ட வல்லுநர்களாலும், தன்னலம் கருதாப் பெரும் தலைவர்களாலும் உருவாக்கப்பட்டது.
இந்திய அரசியல் அமைப்பின் 14–ஆம் பிரிவு ‘சட்டத்தின் முன்னால் அனைவரும் சமம்’ என்று கூறுகிறது. மக்களின் வாழ்க்கைக்கும், தனி மனிதச் சுதந்திரத்திற்கும் பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை என்று 21–ஆம் பிரிவு கூறுகிறது.
மக்களுக்காக மக்களால் ஆளப்படும் இந்த மக்கள் அரசாங்கம் தனியொரு மனிதனுக்கு மேலே கூறப்பட்ட அடிப்படை உரிமைகளைத் தருவதாகச் சொன்னால் மட்டும் போதாது; அவர்கள் அவற்றை அடையும் வகையில் செயற்படுத்துவதோடு, சட்டம் சார்ந்த ஒழுங்கைக் கட்டிக் காப்பதும் இன்றியமையாததாகும். மக்கள்பால் எழும் சமுதாய, சமயப் பிரச்சினைகளும், ஏனைய பிரச்சினைகளும் தீர்தற்கு அவர்கள் சட்டத்தின் உதவியை நாடித் தங்கள் உரிமைகளைப் பெறவும், அடைந்திட்ட உடைமைகளைப் பாதுகாக்கவும் வேண்டிய நிலை இன்றியமையாததாகும். நீதிமன்றம் செல்ல இயலாத நிலையில், வறுமையின் பிடியில் சிக்கி உழல்வோர் தங்களின் நியாயமான உரிமைகளையும் உடைமைகளையும் இழந்து நின்ற அவல நிலை இப்போது நீக்கப்பட்டுள்ளது.
இந்திய நாட்டின் மிக உயர்ந்த நீதி அமைப்பான உச்ச நீதி மன்றத்தின் நீதிபதிகளான பி.என். பகவதி, வி.ஆர். கிருட்டிணய்யர், ஓ. சின்னப்பரெட்டி ஆகியோர் தம்முடைய தீர்ப்புரைகளில் அரசியல் அமைப்பு மக்களுக்கு வழங்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அடிப்படை உரிமைகளை அடையச் செய்ய அரசு ஆவன செய்ய வேண்டுமென அடிக்கடி எடுத்துரைத்து வந்தார்கள். அதன் விளைவாக அரசியல் அமைப்பின் 39–ஆம் பிரிவில், 39–அ என்ற புதிய விதி சேர்க்கப்பட்டுள்ளது. இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் சமநீதியும் சம உரிமையும் கிடைக்கச் செய்ய வேண்டியது அரசின் கடமை. ஆதலால், பொருளியல் முறையிலும் மற்ற வகைகளிலும் பின்தங்கியுள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவசச் சட்ட உதவி அளித்திட வேண்டும் என்பது அப்புதிய விதியாகும். கைது செய்யப்பட்டு, உயிர் மற்றும் தனி மனித சுதந்திரத்தை இழக்கும் அபாயத்தில் உள்ள எந்த ஏழையும் அரசியலமைப்புச் சட்டம் ‘39–அ’–இன்படி மட்டுமன்றி, 14–ஆம் பிரிவின்படியும் இலவசச் சட்ட உதவி (Free Legal Aid) பெறுதல் ஓர் அடிப்படை உரிமையாகும்.
சட்டமென்பது சமூக நல்வாழ்விற்காக அதன் இயைபில் பொது அல்லது தனி மனித உரிமைகள், கடமைகள், கட்டுப்பாடுகள் ஆகியவை குறித்து, காலப்போக்கில் தேவைக்கு ஏற்ப விதிகளை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்துவது. ஆகையால் சட்டம் ஒவ்வொரு தனி மனிதனை மட்டுமன்றிச் சமுதாயம், நாடு, வாழ்க்கை, நன்மை, தீமை, முயற்சி, வளர்ச்சி போன்றவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாக இருக்கிறது. எனவே, சட்டமும் அதன் தேவைகளும் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்று வருகின்றன. அவ்வளர்ச்சியில் பல புதிய திருப்பங்கள், முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள், நுண்ணிய ஆய்வுகள் முதலியன பொதிந்து கிடக்கின்றன.
அரசியல் அமைப்பு 39–அ விதிப்படி இலவசச் சட்ட உதவிக் கழகம் 1977–ஆம் ஆண்டு ஏப்பிரல், திங்களில் இந்தியா முழுவதும் தோற்றுவிக்கப்பட்டுத் திறம்படச் செயல்புரிந்து வருகின்றது. தமிழ்நாட்டுக்கெனத் தனியாக இலவசச் சட்ட உதவிக்கழகம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தன்னாட்சி பெற்ற நிறுவனம் ஆகும். மாநில ஆளுநர் இக்கழகத்தின் தலைவர் ஆவார். உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சிறப்பு ஆதரவாளர். சட்ட அமைச்சர் ஓர் ஆதரவாளர். செயற்குழுவில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருவர் முறையே தலைவர், துணைத் தலைவர் ஆக இருக்கின்றனர். பதவியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் ஆலோசகராகவும் உள்ளார். மற்றத் துறைகளின் தலைவர்கள் பதவிவழி உறுப்பினராகவும் இருக்கின்றனர்.
இலவசச் சட்ட உதவிக் கழகத்தின் நிதி உதவியைத் தமிழக அரசே முற்றிலும் ஏற்றுக் கொண்டிருக்கிறது ஏழைகளுக்காக வழக்காடவும், எதிர் வாதிடவும், மற்றும் அவர்களுக்கு ஏற்படும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவும் தக்க ஆலோசனை நல்கிடவும் வழக்கறிஞர்களுக்கு உரிய ஊதியத்தை அரசு அளித்து வருகிறது. கழகம் வைத்திருக்கும் வழக்கறிஞர் பட்டியலில் அனுபவ முதிர்ச்சி பெற்ற வழக்கறிஞர்களும் அங்கம் வகிக்கின்றனர். வழக்குகளின் தகுதிக்கேற்ப அவர்கள் அமர்த்தப்படுகின்றனர்; திறம்பட வாதிடுகின்றனர். மேலும், இக்கழகம் சமாதானத்தையே அடிப்படையாகக் கொண்டது.
இலவசச் சட்ட உதவிக் கழகத்தின் குறிக்கோள்
அ) வறியவர்களுக்குச் சட்ட உதவியும் ஆலோசனையும் கூறுவது.
ஆ) சமூகத்தில் இயலாத நிலையில் இருப்பவர்களுக்கு, மைய, மாநில அரசுகளால் நேரடியாகவும் அவற்றின் உதவியாலும் நடைமுறையில் உதவுவதற்காக வகுக்கப்பட்டிருக்கும் பல்வேறு திட்டங்களைப் பற்றி அறிமுகம் செய்து, அவற்றின் பயனை அவர்கள் அடையும்படிச் செய்தல். இதேபோல் ஏனைய பொது மக்களின் நலனுக்காகவும், எல்லாப் பிரிவினர்க்காகவும் வகுக்கப்பட்ட திட்டங்களைப் பற்றி அவர்களுக்கு அறிவுரை கூறிப் பயனடையச் செய்தல்.
இ) சமூகத்தில் தாழ்த்தப்பட்ட, நிலையில் இருப்பவர்களுக்கு அறிவுரை கூறுதல், குறிப்பாகப் பல்வேறு சட்டங்களினால் அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய உரிமைகளையும் நன்மைகளையும் அவர்கள் அறிந்து கொள்ளும்படியாகச் செய்தல்.
ஈ) தமிழக மக்களிடையே சட்ட அறிவைப் பரப்புதல்.
உ) சமூகத்தில் மிகவும் தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் முன்னேற்றத்திற்காக நடைமுறையில் இருக்கும் சட்டங்களை, குறிப்பாக வேளாண்மைச் சீர்திருத்தங்கள், மிகக் குறைந்த அளவு ஊதிய விகிதங்கள், தொழிலாளர் நலன், உழவர்கள் நலன், பெண்–சிறுவர்கள் நலன், கொத்தடிமை ஒழிப்பு, கிராமப்புறக் கடன்சுமைக் குறைப்பு, சமூகப் பொருளாதார இனஉரிமைச் சீர்திருத்தங்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்ட சட்டங்களைப் பற்றிப் பிரச்சாரம் செய்தலும் அவசியமான நிலையில் தக்க சட்ட உதவி செய்தலும்.
ஊ) நீதிமன்றம் செல்லுமுன் ஏற்படும் செலவினங்களைக் கட்டுப்படுத்தல் வேண்டி முறையான சமரச முயற்சிகளை மேற்கொண்டு, அவர்களுக்கு முறையானதும் ஆக்கபூர்வமானதுமான உரிமைகளையோ உடைமைகளையோ அடையும் வண்ணம் செய்தல்.
சாதனைகள்
சென்ற எட்டு ஆண்டுகளில் இலவசச் சட்ட உதவி மற்றும் ஆலோசனைக் கழகம் இல்லாதோர்க்கும் இயலாதோர்க்கும் சட்ட உதவி அளித்து, அவர்களும் சமநீதியைப் பெற உதவி புரிந்துள்ளது. குறிப்பாக, அபலைப் பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், திக்கற்றோர், ஊனமுற்றோர், ஆதி திராவிடர்கள், மலைவாழ் மக்கள், இராணுவத்தில் பணி புரிவோரின் குடும்பத்தினர் நலன் மற்றும் ஏழை எளியோர்களுக்குக் கீழ்க்காணும் காணும் உதவி அளித்துள்ளது.
அ) உரிமையியல் மன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்களில் வழக்குகளை நடத்துதல்
1) ஏழை எளிய மக்கள் உரிமை இயல் நீதிமன்றங்கள், உரிமை தீர்ப்பாயங்கள் முன்பு வழக்குகளைத் தொடரவும் தொடரப்பட்ட வழக்குகளில் எதிர் வழக்குரைக்கவும் அவ்வழக்கில் ஏற்பட்ட தீர்ப்பைத் திருத்துவதற்காகவோ மாற்றுவதற்காகவோ மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கும் அல்லது அதைச் சீராய்வு செய்வதற்கும் அவர்களுக்கு உதவியளித்துள்ளது. இதுகாறும் மாநில உயர்நீதிமன்றம், இந்திய உச்ச நீதிமன்றம் வரை ஏழை எளியோர்களுக்காக வழக்குத் தொடர்ந்துள்ளது.
2) கணவன்மாரால் கைவிடப்பட்ட பெண்கள், வரதட்சணைக்காகக் கொடுமைப்படுத்தப்பட்டோர், நிலம், வீடு, வீட்டு வாடகைப் பிரச்சினைகளால் பரதிக்கப்பட்டோர் ஆகியோர் இக்கழகத்தின் உதவியால் உரிமையியல் நீதிமன்றங்களின் முன்பு வழக்குத் தொடர்ந்து நன்மையடைந்துள்ளார்கள்.
3) நில உச்சவரம்புச் சட்டத்தின்கீழ்ப் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு உபரி நில ஒதுக்கீட்டில் எழுந்த தகராறில் இக்குழு நல்ல உதவி செய்துள்ளது.
4) நில உச்சவரம்பிற்கு மிகையாக உள்ள உபரி நிலம் ஒப்படைக்கப்பட்டவர்கள் தொடர்புடைய வழக்குகளில் அதிகாரம் பெற்ற அதிகாரி பிறப்பித்த உத்தரவை எதிர்த்தோ வருவாய் அதிகாரி பிறப்பித்த நில ஒப்படை ஆணையை எதிர்த்தோ மேல் முறையீடுகள் அல்லது மறுவிசாரணை மனுக்கள் அல்வது நீதிப்பேராணைகள் தொடரப்பட்டிருப்பின், அரசு அந்த வழக்கில் பிரதிவாதியாக இருந்து பிரச்சனைக்குரிய ஆணை சரியே என்று வாதிட வேண்டுமென்றும், மேலும் நிலம் ஒப்படைக்கப்பட்டவரும் அவ்வழக்கில் ஒரு கட்சிக்காரராக ஆக்கப்படவேண்டுமென்றும், அவர்களுக்கு இக்கழகம் உதவி அளிக்கும் என்றும் அரசுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளது.
5) மேற்கண்ட கருத்தினை அரசு முழுமையாக ஏற்று, சிறப்பு ஆணையர் மற்றும் நிலச் சீர்திருத்த ஆணையர், தம்கீழ்ப் பணிபுரியும் அதிகாரிகளுக்குக் தகுந்த அறிவுரை வழங்குமாறு ஆணை பிறப்பித்துள்ளது.
6) இக்கழகம் ஏழை, எளிய மக்கள் தங்கள் வழக்குகளை நீதிமன்றங்களுக்குக் கொண்டு போவதற்குமுன் இரு தரப்பினரையும் வரவழைத்து, பட்டியலில் உள்ள அனுபவமும் ஆற்றலும் கொண்ட அறிவார்ந்த வழக்கறிஞர்களைக் கொண்டு அவர்களுக்குத் தக்க ஆலோசனை கூறி, இரு தரப்பினர்க்கும் ஏற்றாற்போன்று சமரசம் செய்து பெரும்பாலான வழக்குகளைத் தீர்த்து வைக்கின்றது. இதனால், மக்களுக்கு நீதிமன்றத்திற்கு அலையவேண்டிய நேரமும் பணமும் மிச்சமாகின்றன. வழக்காடுபவர்களிடையே சுமுகமான உறவு நீடிக்கிறது. இது இக்கழகத்தின் செயற்பாட்டில் சிறப்புக் கூறாகும்.
7) நீதிமன்றத்தில் தீர்ப்புக் காலம் நீடித்தால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் எப்போதும் ஏழை மக்களாகத்தான் இருக்கிறார்கள். ஆகவே, தமிழக அரசு இக்கழகத்தின் உதவி பெற்றவர்களின் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து முதலில் விசாரிக்க வேண்டுமென்றும், இது போன்ற வழக்குகளில் காரணமின்றி வாய்தா கேட்டுக் காலத்தை நீட்டித்து, ஏழை, எளிய மக்களை அலைக்கழிக்காதவாறு உடனடியாக நடத்தி முடிக்குமாறும் அரசு நீதிமன்றங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. நீதிமன்றங்களும் அவ்வேண்டுகோளுக்கு இணங்க வழக்குகளை விரைவில் தீர்ப்புச் செய்து வருகின்றன.
8) வழக்கறிஞரை வைத்து வாதிட இயலாத நிலையில் உள்ள ஏழை, எளிய மக்கள் தயங்காமல் இக்கழகத்தின் உதவியை நாடலாம்.
ஆ) அதிகாரிகளிடமிருந்து தக்க பரிகாரங்களை அடைதல்
1) முதியோர்கள், விதவைகள், ஊனமுற்றோர் போன்றவர்களிடமிருந்து வரும் மனுக்களை ஏற்றுப் பரிந்துரை செய்து அவர்களுக்கு உதவித் தொகை கிடைக்கச் செய்துள்ளது.
2) ஓய்வு பெற்ற அரசுப் பணியாளர்கள் அல்லது அவர்கள் குடும்பத்தினருக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வுத் தொகை, பணிக்கொடைத் தொகை (Gratuity), சேமிப்புத் தொகை போன்றவை உரிய காலத்தில் கிடைக்குமாறு மாநிலக் கணக்கு ஆய்வுத் தலைவருடன் (Accountant General) தொடர்பு கொண்டு விரைவில் பணம் பட்டுவாடா செய்யப்படும்படியாக உதவியுள்ளது, மற்றும் காவல்துறை, கல்வித்துறை மூலம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டியவற்றிற்கும் முயன்று மக்களுக்குத் தக்க உதவி செய்துள்ளது. பிற வங்கிகளிடமிருந்து தொழிலைத் தொடங்கவும் கால் நடைகளை வாங்கி வளர்க்கவும், ஏழை எளிய மக்களுக்குக் கடன் உதவி அளிக்கப் பரிந்துரை செய்துள்ளது.
இ. பேருந்து வாகன விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவி
1. சாலை விபத்துகள் தமிழகத்தில் குறிப்பாக மற்ற மாநிலங்களைவிட அதிகமாக உள்ளது. ஏழை மக்கள்தாம் அதிகமாக இவ்விபத்துக்களுக்கு உள்ளாகிறார்கள். விபத்தினால் இறந்தவர் குடும்பத்திற்கு அல்லது ஊனம் அடைந்தோர்க்கு இழப்பீடு பெறச் சட்டத்தில் வழி வகுக்கப்பட்டுள்ளது. குற்றம் சாராப் பொறுப்பு (No Fault Liability) – இன்கீழ் விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ. 15,000/– (ரூபாய் பதினைந்தாயிரம்) உம், நிரந்தர ஊனமுற்றோருக்கு ரூ. 7,500/– (ரூபாய் ஏழாயிரத்து ஐந்நூறு) உம் தீர்ப்பாயங்கள் கொடுக்கின்றன. ஆனால் இழப்பிட்டுத் தொகையைப் பெறுவதில் ஏழை, எளியவர்கட்கு இருக்கும் சிக்கல்களைப் பயன்படுத்திக் கொண்டு, முழு இழப்பீட்டுத் தொகையும் அவர்கள் கைக்கு எட்டாதவாறு இடைத் தரகர்களும், தன்னலக்காரர்களும் தலையிடுகின்றனர். இந்த அவல நிலையைத் தடுக்கும் வகையில் சட்ட உதவிக் கழகம் தீர்ப்பாயங்களை அணுகித் தீர்ப்பாயத்தின் நீதிபதிகள், இழப்பீட்டுப் பணத்தை உயிர் நீத்தோரின் குடும்பத்தினருக்கு நேரில் பட்டுவாடா செய்யவும், அவ்வாறு செய்யும் பொழுது உயிரிழந்தவரின் சிறு குழந்தைகளின் நலனைக் காக்கும் பொருட்டு இழப்பீட்டுத் தொகையில் ஒரு கணிசமான பகுதியை வங்கிகளில் ஒரு குறிப்பிட்ட கால வரம்பிற்கு வைப்பீடு செய்யும்படியாகவும் கேட்டுக்கொள்கிறது. தீர்ப்பாயங்களும் ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு அவ்வாறு இழப்பீட்டுத் தொகையைப் பட்டுவாடா செய்து வருகின்றன.
2. வாகனங்கள் இடித்துவிட்டு ஓடும் வழக்குகளில் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியாமற் போவதாலும், ஈட்டுத் தொகைக்காக நீதிமன்றத்திற்குச் செல்லக் கட்சிக்காரருக்கு இடையூறாக இருப்பதாலும், அந்த வழக்குகளுக்கும், குற்றம் சாராப் பொறுப்பின்கீழ் விபத்தில் இறந்தோருக்கும், நிரந்தரமாக உடல் உறுப்பு இழந்தோருக்கும் இழப்பீடு வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்துமாறு அரசுக்குக் கழகம் பரிந்துரை செய்தது. போக்குவரத்து ஆணையரும் அக்கருத்துக்கு ஒப்புதல் அளித்ததன் பேரில் அரசு அப்பரிந்துரையை ஏற்று அத்திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது.
3) பேருந்து விபத்துகளில் உயிர் இழந்தோர், காயமுற்றோர்க்கு இழப்பீடு வேண்டி பேருந்து விபத்துக்கோருமுரிமைத் தீர்ப்பாயங்கள் முன்பு வழக்குகளைத் தொடர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் பேருந்து வாகன விபத்துத் தீர்ப்பாயங்கள் இழப்பீட்டுத் தொகையாக ரூ. 3,01,59,289.72–ஐ இறந்நோர் குடும்பத்திற்கும் காயமுற்றோர்க்கும் அளித்துள்ளது.
4) தீர்ப்பாயங்களில் கோருரிமை மனுக்கள் விரைவில் தாக்கல் செய்யப்பட்டு விபத்துக்குள்ளானவர்களும், அவர்கள் குடும்பங்களும், இழப்பீட்டுத் தொகையை விரைவில் அடைய வேண்டும் என்ற நோக்குடன், இக்கழக இயக்குநர், புலனாய்வு காவல்துறை இயக்குநரை விபத்துப் பற்றிய விவரங்களை உடனடியாக அண்மையிலுள்ள சட்ட உதவிக்குழுவிற்கு அனுப்பி வைக்க, அவர்களுடைய சார்நிலை அதிகாரிகளைப் பணிக்குமாறு கேட்டுக் கொண்டார். போக்குவரத்துப் புலனாய்வு காவல்துறை இயக்குநரும் அவ்வேண்டுகோளை ஏற்று, எல்லா மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர்களுக்கும், சென்னைக் காவல்துறை ஆணையருக்கும் விபத்தின் முழு விவரங்களையும் அருகில் உள்ள இலவசச் சட்ட உதவிக் குழுவிற்கு அனுப்ப வேண்டுமென ஆணை பிறப்பித்துள்ளார்.
5) இவ்வாணையின்படி காவல்துறை அதிகாரிகள் விபத்து பற்றிய தகவல்களை அண்மையில் உள்ள குழுவிற்கு அனுப்பி வைக்கின்றனர். விவரங்கள் கிடைத்தவுடன், அக்குழு தக்க மேல் நடவடிக்கைகளை எடுத்துப் பட்டியலில் உள்ள வழக்கறிஞர்கள் மூலம் தீர்ப்பாயங்களில் கால தாமதமின்றி உரிமை மனுக்களைத் தாக்கல் செய்கின்றது.
ஈ. பிற விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவி
தொழிற்சாலைகளில் பணிபுரியும் காலங்களில் விபத்துகள் ஏற்படின், அவைகளில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நிருவாகத்திடம் இழப்பீடு பெறவும், பேரிடர் விளைவிக்கக்கூடிய தொழில்களான கழிவுநீர்ப் பெருங்குழாய்களில் பணிபுரியும் நக- ராட்சி மன்றப் பணியாளர்கள் விபத்தில் இறப்பினும், வயல்களில் பூச்சிக் கொல்லி மருந்துகளையும் இரசாயனப் பொருள்களையும் தெளிக்கும் தொழிலாளர்கள் அவ்விதம் பணிபுரியும்போது பாம்பு, சரமண்டலம் போன்ற நச்சு உயிரினங்களால் தீண்டப்பட்டு இறப்பினும், அவர்கள் எல்லோரும் பொதுநிதியிலிருந்து நிதி உதவி பெறவும், பாசனக் கிணறுகளைத் தோண்டும் அல்லது ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், பனை, தென்னை மரங்களில் கள் இறக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் ஆகியவர்கள் விபத்துக்குள்ளாகி உயிர் துறப்பினும், மின் சக்தியால் எவரேனும் தாக்குண்டு விபத்தில் இறப்பினும், அவர்கள் எல்லோரும் அரசாங்கத்தால் தரப்படும் இழப்பீட்டுத் தொகையைப் பெறவும், அதில் ஏதும் காலதாமதம் அல்லது சட்டச் சிக்கல்கள் ஏற்பட்டால் இக்குழு தொடர்புடைய அலுவலகங்கள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றை அணுகி, அவற்றை விரைவாகப் பெறவும் வழிவகை செய்கிறது.
உ. தொழிலாளர்கள் சட்டப்படி பெற வேண்டிய உரிமைகளை அடைய உதவி செய்தல்
1) தொழிலாளர்களுக்குக் குறைந்த அளவுக் கூலி நிருணயச் சட்டப்படி கூலி கொடுக்காத பணியாண்மையாளர்களிடமிருந்து அவர்கள் முறையான கூலி பெறவும், தகுந்த காரணமின்றி வேலை நீக்கம் செய்யப்பட்டு வேலையில்லாமல் இன்னலுறும் தொழிலாளர்கள் வழக்குகளை நடத்தவும், மீண்டும் அவர்களை வேலையில் அமர்த்தவும், பணி நீக்கம் செய்யப்பட்டிருந்த காலத்தில் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஊதியம், பஞ்சப்படி ஆகியவற்றை முறையே பெறவும் தக்க ஏற்பாடுகளைச் செய்து தருகிறது.
ஏழை உழவர்கள், நிலமற்றோர் போன்றோர் பெரும் செல்வர்களின் பிடியில் சிக்கித் துன்புற்று, சட்டத்தின் பலன் அவர்களுக்குக் கிடைக்காதவாறு இருட்டடிப்புச் செய்யப்படும் சூழ்நிலைகளைக் களைந்து, அவர்கள் ஆவன பெறவும், அவர்களின் நியாயமான உரிமைகள் பறிக்கப்படா வண்ணம் சட்டத்தின் துணைக்கொண்டு அவர்களைக் காத்து அவர்கள் மேம்பாட்டிற்கு ஏற்ற வழிவகைகளையும் உடனுக்குடன் செய்தும் தருகிறது. கடன் சுமையிலிருந்தும் ஒரு நிலவுடைமையாளரின் கட்டாயக் கெடுபிடி வசூல்களிலிருந்தும் ஏழை உழவர்களை மீட்டு, அவர்கள் நிம்மதியாக வாழ வழி செய்கிறது.
2) தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படும் பொழுது பணியாண்மையர் மூன்று மாத முன் அறிவிப்புக் கொடுக்க வேண்டும். தவறின் மூன்று மாத ஊதியமும் தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய சேம நிதி, பணிக்கொடை முதலியனவும் கொடுத்தல் வேண்டும். இவை கொடுக்கப்படாத போது, இக்கழகம் இவற்றிற்காகவும் தொழிலாளர் தம் வேலைக்கு உத்திரவாதம் பெற்றுத்தரவும் முன் வருகிறது.
ஊ) பெண்கள் மண வாழ்வு உரிமை–குழந்தைப் பாதுகாப்பு உரிமை முதலியன
1) மண வாழ்வு உரிமைகளுக்கு நேர்ந்த தீங்கிற்குத் தீர்வழி வேண்டும் வழக்குகள், குழந்தைகள் காப்புப் பொறுப்பைப் பெறக்கோரும் உரிமை வழக்குகளில் கணவன் மனைவி இருவரையும் நேரில் வரவழைத்து, பட்டியலிலுள்ள வழக்கறிஞர்களைக் கொண்டு அறிவுரை வழங்கி முறையான உடன்பாடு செய்து, பிணக்குகளைத் தீர்த்து அவர்களை ஒன்று சேர்த்து வைத்து, அவர்கள் மீண்டும் நல்வாழ்வு வாழ இக்கழகம் வகை செய்கிறது. உடன்பாட்டிற்கு அவர்கள் இணங்காவிடில் நீதி மன்றங்களை அணுகி, அவர்களின் உரிமைகளுக்குத் தீர்வு காண உதவி செய்கிறது.
2) ஆதரவற்ற குழந்தைகள், கட்டுக்கடங்காத குழந்தைகள் தொடர்பாகப் பெற்றவர்களோ மற்ற உறவினர்களோ இக்கழகத்தின் உதவியை நாடும் பொழுது, அச்சிறார்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, இளைஞர் நீதிமன்றங்களின் மூலம் அவர்களைச் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி, அங்கு அவர்களுக்கு ஒரு கைத்தொழிலைப் பயிற்றுவிக்கச் செய்து, அவர்களை வருங்கால நற்குடிமக்களாக்குகிறது. குற்றம் செய்த இளஞ்சிறார்கள் சீர்திருத்தப் பள்ளியில் தண்டனைக் காலத்தை அனுபவிக்கும் பொழுது குடும்ப நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களைக் காப்பு விடுப்பில் வெளிக்கொணர்ந்து, அவர்களின் குடும்பத்தினரிடம் அவர்களை ஒப்புவித்து மறுவாழ்வு அளிக்கிறது.
3) இக்கழகம் பெண்களை நீதிபதிகளாகக் கொண்ட குடும்ப நல நீதிமன்றங்களை அமைத்து, மணவிலக்கு, வாழ்க்கைப் பொருளுதவி, குழந்தைகளுக்குக் காப்பாளர் போன்ற பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகாண வேண்டும் என்றும் அவ்வழக்குகள் நீதிபதியின் தனி அறையில் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவ்வழக்குகளில் தீர்வுகாண அம்மன்ற நீதிபதிக்கு உளநோய் மருத்துவரையும் மனித சமுதாய வளர்ச்சி இயல்பு–சட்டங்கள் ஆகியவை பற்றிய ஆய்வாளர்களையும் (Sociologists), வட்டார அமைப்புகளையும் தொடர்பு கொள்ள அதிகாரம் அளிக்க வேண்டும் என்றும் அரசுக்குப் பரிந்துரை செய்தது. அரசும் அவ்வேண்டுகோளை ஏற்றுக் குடும்ப நல நீதிமன்றங்களை அமைக்க ஆணை பிறப்பித்துள்ளது.
எ) கைது செய்யப்பட்டவர்களுக்குக் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து மேலமை நீதிமன்றங்களில் மேல் முறையீட்டுக்காலம் வரையில் உதவி
1) சிலர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுக் கைது செய்யப்படுகின்றனர். சிலர் குற்றச் செயலில் ஈடுபடாதிருந்தும் ஐயத்தின் பொருட்டுக் காவல் துறையினரால் கைது செய்து காவலில் வைக்கப்படுகின்றனர். இக்கழகத்தின் பட்டியலிலுள்ள வழக்கறிஞர்கள் சிறைச்சாலைக்கு அடிக்கடி சென்று, அவ்வாறு காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களின் முழு விவரங்களையும் அறிந்து, அவர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று, குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அம்மனுக்களைத் தாக்கல் செய்து, உடனடியாக அவர்களைப் பொறுப்படைவில் வெளிக்கொணர நடவடிக்கைகள் எடுக்கின்றனர். அவ்வாறு பிணையில் எடுக்கப்பட்டவர்தம் வழக்குகளைத் தொடர்ந்து நடத்தி அவர்களுக்கு உதவி செய்கின்றனர். தண்டனை விதிக்கப்பட்டால் அதன்பேரில், தக்க வழக்குகளில் மேல்முறையீடு செய்யவும் இக்கழகம் தொடர்ந்து உதவி செய்கிறது.
2) அமர்வு நீதிமன்றங்களால் மட்டுமே விசாரிக்கப்படும் வழக்குகளான கொலைக்குற்றம், கொலை செய்ய முயற்சி, வன்புணர்ச்சி போன்ற குற்றமுறு செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு, அமர்வு நீதிபதிகளின் வேண்டுகோளின்படியும் பிற குற்றங்களுக்குக் குற்றவியல் நடுவர்களின் வேண்டுகோளின் படியும் அவர்களுக்காக வழக்காடவும் அவர்களது கட்சியினை எடுத்து வாதிடத் திறமைபெற்ற வழக்கறிஞர்களை அமர்த்தி, வழக்குகளை நடத்தவும் இக்கழகம் உதவி புரிகிறது.
3) பெண்கள் ஐயத்தின் பேரில் கைது செய்யப்பட்டுக் காவற் சிறையில் காவலில் வைக்கப்படும்பொழுது அவர்கள் பெண் காவலர்களின் பாதுகாப்பில் இருக்க வேண்டுமென்றும், அவர்கள் பெண் காவலர்களின் துணை கொண்டுதான் விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும், அவர்கள் தனிச் சிறைகளில் வைக்கப்பட வேண்டும் என்றும் காவல்துறையினரை இக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
4) இக்கழகம் சீர்திருத்தப்பள்ளி, மகளிர் மறுவாழ்வு இல்லம் முதலிய அமைப்புகளுக்குப் பட்டியலில் உள்ள ஆண், பெண் வழக்கறிஞர்களைச் சான்றிதழோடு அனுப்பி, அங்குள்ள ஆண், பெண் இருபாலாரான கைதிகளுக்குத் தக்க சட்ட உதவியும் ஆலோசனையும் கூறி வருகிறது.
5) இலவசச் சட்ட உதவிக்கழகம் குற்ற இயல் நடைமுறை விதித்தொகுப்புப் பிரிவு 41 (அ)–இன் கீழ் ஐயத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களைச் சிறையில் வைப்பதும், அவர்களின் மீது நன்னடத்தை நடவடிக்கைகள் எடுப்பதும் குற்றஇயல் நடைமுறைச் சட்டம் 167–ஆம் பிரிவுக்குப் புறம்பானது என்பதைச் சகன்னாத்து–எதிர்–தமிழக அரசு என்ற வழக்கில் உயர் நீதிமன்ற கவனத்திற்குக் கொணர்ந்து, அவ்வாறு உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பையும் பெற்றுள்ளது.
6) மேற்கண்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாகச் சிறையில் விசாரணையின்றிக் காவலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை கணிசமான அளவிற்குக் குறைந்து வருகிறது. மேலும் இதன் பொருட்டு அரசுக்கு ஏற்படும் செலவினங்களும் குறைந்து வருகின்றன.
எ) கைதிகளுக்குக் குற்றத் தீர்ப்பு அன்னியில் மற்றப் பிரச்சினைகளுக்கு உதவி
1) பெரும்பாலான கைதிகள் குடும்பத் தலைவராகவும், அவர்களது வருவாய் ஒன்றனையே நம்பிக் குடும்பம் நடந்து வருவதாலும், தலைவனை இழந்து குடும்பம் அலைகடல் துரும்பென அவதியுறும் சூழ்நிலைகளில் அதனைத் தவிர்த்திட வேண்டிய உதவிகள் நல்கிடவும், துயர்களைக் களைந்திடவும் நல்ல முனைப்போடு இக்கழகம் செயலாற்றி வருகிறது.
2) குடும்பத் தலைவர் சிறைத்தண்டனை பெற்றிருக்கும் காலத்தில் அவர் வீட்டில் இல்லாததைப் பயன்படுத்திக்கொண்டு, மற்றவர்கள் அவரின் உடைமைகளைக் கவர்ந்து கொள்ள முயற்சி செய்கின்றனர். அக்குடும்புத்தினர் இக்கழகத்தின் உதவியை நாடும் பொழுது அவர்களுக்குத் தக்க ஆலோசனை கூறி அவர்களது உடைமையைப் பாதுகாக்க உதவியளித்து வருகிறது.
ஐ) பிற உதவிகள்
பெண்கள், ஆதி திராவிடர்கள், மலை வாழ் மக்கள், இராணுவத்தில் பணிபுரிவோரின் குடும்பத்தினர் மற்றும் ஏழை எளிய மக்கள் ஆகியவர்களுக்கு முன்னுரிமை அளித்து உதவி செய்து வருகிறது.
இலவசச் சட்ட உதவிக் கழகத்தின் குறிக்கோள்களைச் செயற்படுத்துவதில் ஏற்படும் இடர்களைப் போக்கவும், திட்டத்தை விரிவுபடுத்தவும், இக்கழகத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் தமிழக அரசுக்கு விவரித்துரைத்து, அரசின் ஆணையைப் பெற்று ஏழை, எளிய மக்கள் சம நீதியைப் பெற ஆவன செய்து வருகிறார்கள். துணைத் தலைவர், அமெரிக்க ஐக்கியக் குடியேற்ற நாடுகள் போன்ற அயல் நாடுகளுக்குச் சென்று, அங்குள்ள வழக்கு- ளுக்குத் தீர்வு காணும் முறைகளை அறிந்து நம் நாட்டிற்கு ஏற்றாற்போல் செயற்படுத்தத் திட்டங்களை வகுத்துத் தருகிறார்.
இலவசச் சட்ட உதவி மற்றும் ஆலோசனைக் கழகம் தமிழகம் முழுவதும் 152 குழுக்களை அமைத்துச் செயற்பட்டு வருகின்றது. மக்கள் இக்கழகத்தின் குறிக்கோள்களையும் நோக்கங்களையும் நன்கு புரிந்து கொள்ளும்படியாக இக்கழகம், சிற்றூர்களுக்குச் சென்று சட்ட உதவி முகாம்களை நடத்தி வருகிறது. இக்கழகத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகிறார்கள்.
கடந்த எட்டு ஆண்டுகளாக இக்கழகம் வாழ்வில் நலிந்தோர், துயருற்றோர், துன்பமடைந்தோர், வெறுத்து ஒதுக்கப்பட்டோர், வாழ்வில் இன்னலுற்றோர் ஆகியவர்களுக்கு எல்லாம் இனம், மொழி, வேறுபாடின்றி ஆதரவோடு அவர்களை அரவணைத்து அவர்கள் துயர் நீங்கி மேம்பாடு அடைய வேண்டும், பீடு நடை போட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளைக் கடமையாகக் கொண்டு சீரிய தொண்டாற்றி வருகிறது. இந்திய நாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க நாட்டுச் சட்டக் கல்லூரிப் பேராசிரியர் மேரிகேலண்டரும், தென் கொரிய நாட்டுச் சட்டப் பேரறிஞர் தாய்–எங்–லியும் இக்கழகத்தின் தொண்டினையும், செயல் முறைகளையும் அணுகு முறைகளையும் பாராட்டிச் சென்றுள்ளனர். இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.என். பகவதி இலவசச் சட்ட உதவிக் கழகம் மற்ற மாநிலங்களைவிடத் தமிழகத்தில் ஏழை எளிய மக்கட்குச் சிறந்த தொண்டு ஆற்றி வருகிறது என்று அண்மையில் பாராட்டியுள்ளார்.
தமிழக அரசு நிதி மற்றும் எல்லாவிதமான உதவிகளையும் இக்கழகத்திற்கு அளித்து வருகிறது. அரசின் பல்வேறு துறையிலும் உள்ள அரசு அதிகாரிகளும் தங்கள் சீரிய ஒத்துழைப்பை நல்குகின்றனர். வி.என்.இரா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 346)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gtmph7f5/
தமிழ்“இலவசச் சட்ட உதவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gtmph7f5/APA
Oliyon Research. (2026). இலவசச் சட்ட உதவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gtmph7f5/MLA
"இலவசச் சட்ட உதவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gtmph7f5/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment